என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
- சூர்ய மூர்த்தியின் மனு குறித்து 4 வாரங்களில் முடிவெடுக்க தேர்தல் ஆணையத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
- ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் கருத்துக்களையும் கேட்க வேண்டும்.
திண்டுக்கல்லைச் சேர்ந்த சூர்யமூர்த்தி தாக்கல் செய்துள்ள மனுவில், அதிமுகவின் உள்கட்சி விவகாரம் தொடர்பாகவும், கட்சி சட்டதிட்டங்களுக்கு விரோதமாக செயல்பட்டது தொடர்பாகவும் தேர்தல் ஆணையத்துக்கு 2017 முதல் 2022 ம் ஆண்டு வரை புகார்கள் அளித்துள்ளதாகக் குறிப்பிட்டு உள்ளார்.
உள்கட்சி விவகாரம் உள்ளிட்ட பிரச்சனை தொடர்பாக தாக்கல் செய்திருக்கும் உரிமையியல் வழக்குகள் முடிவுக்கு வரும் வரை அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கக்கூடாது என தேர்தல் ஆணையத்துக்கு அளித்த மனுவுக்கு எந்த பதிலும் அளிக்கவில்லை எனவும் மனுவில் தெரிவித்து இருந்தார்.
தனது மனு மீது விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுத்து இருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை சென்னை ஐகோர்ட்டில் இன்று நடைபெற்றது.
அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சூர்ய மூர்த்தியின் மனு தொடர்பாக அதிமுகவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு பதில் கிடைக்கப் பெற்றதாக கூறினார். இது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
ஓ.பன்னீர்செல்வம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த விவகாரத்தில் தங்கள் தரப்புக்கு நோட்டீஸ் அளிக்கப்படவில்லை எனவும் தங்களது தரப்பையும் கேட்ட பின்னரே முடிவெடுக்க உத்தரவிட வேண்டுமெனவும் கோரிக்கை வைத்தார்.
இதனையடுத்து, சூர்ய மூர்த்தியின் மனு குறித்து 4 வாரங்களில் முடிவெடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் கருத்துக்களையும் கேட்க வேண்டுமெனவும் உத்தரவிட்டனர்.
- ஜெ.ஜெ.நகர் போலீசாரால் தனியார் கல்லூரி மாணவர்கள் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- ஆன்லைனில் கஞ்சா வாங்கி பயன்படுத்தியது மட்டுமில்லாமல் விற்பனையில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.
சென்னை:
மெத்தம்பெட்டமைன் மற்றும் மேஜிக் காளானை பயன்படுத்தியது தொடர்பாக நடிகர் மன்சூர் அலிகான் மகன் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அலிகான் துக்ளக், சேது ஷாயி, முகமது ரியாஸ் அலி, பைசல் அகமது உள்ளிட்ட 4 பேரிடமும் இரண்டாவது நாளாக திருமங்கலம் காவல்நிலையத்தில் வைத்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
2019-ம் ஆண்டு நடிகர் மன்சூலின் அலிகான் இயக்கத்தில் உருவான படத்தில் அலிகான் துக்ளக் கதாநாயகனாக நடித்துள்ளார். இதனிடையே கடந்த மாதம் 3-ந்தேதி போலீசாரால் கைதுசெய்யப்பட்ட கார்த்திகேயன் என்பவரிடம் இருந்து ஆன்லைனில் கஞ்சா வாங்கி பயன்படுத்தியது மட்டுமில்லாமல் விற்பனையில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் நேற்றும் மேஜிக் காளான், மெத்தம்பெட்டமைன் உள்ளிட்ட போதைப் பொருட்களை அலிகான் துக்ளக் பயன்படுத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஏற்கனவே ஜெ.ஜெ.நகர் போலீசாரால் தனியார் கல்லூரி மாணவர்கள் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் நடைபெற்ற விசாரணையில் ஆன்லைனில் கஞ்சா பயன்படுத்தி வந்ததோடு அதிக விலைக்கு விற்பனைக்கு செய்து வந்ததாக தெரியவந்தது.
இதனிடையே கைதானவர்களுக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அலிகான் துக்ளக் கஞ்சா பயன்படுத்தி உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கைதானவர்களிடம் 2-வது நாளாக விசாரணை நடைபெற்றது. இதனை தொடர்ந்து அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
- கருவறைக்குள் சுமார் 30 நிமிடத்துக்கும் மேல் சோதனை நடத்தப்பட்டது.
- தரிசனத்துக்கு காத்திருந்த பக்தர்களுக்கு சுமார் 40 நிமிடம் தடை விதிக்கப்பட்டது.
பழனி:
அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதிலுமிருந்து பக்தர்கள் நாள்தோறும் வருகை தருகின்றனர்.
இங்குள்ள கருவறையில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு போகரால் உருவாக்கப்பட்ட நவபாஷாண சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு பக்தர்களால் வணங்கப்படுகிறது. இது பழனி மலை முருகனின் தனிச்சிறப்பாகும்.
நவபாஷாண சிலை குறித்து பல்வேறு சர்ச்சையான கருத்துகள் வெளிவந்த நிலையில் சிலையின் உறுதிதன்மை குறித்து ஆய்வு செய்ய சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை சார்பில் சிறப்புக்குழுவை அமைக்க உத்தரவிட்டது.
அதன்படி ஓய்வு பெற்ற நீதிபதி பொன் காளியப்பன் தலைமையில் ஐ.ஐ.டி. குழுவினர் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். அதன்படி இன்று பழனி கோவிலுக்கு வந்த முன்னாள் நீதிபதி பொன் காளியப்பன், ஸ்தபதி தட்சிணாமூர்த்தி கொண்ட குழுவினர் இது குறித்து தேவஸ்தான நிர்வாகிகளிடம் எடுத்துக் கூறினர்.
இதனைத் தொடர்ந்து கால பூஜைகளுக்கு பின்பு சிறப்பு யாகம் நடத்தப்பட்டு அந்தக்குழுவினர் கருவறைக்குள் சென்று சோதனை நடத்தினர். கருவறைக்குள் சுமார் 30 நிமிடத்துக்கும் மேல் சோதனை நடத்தப்பட்டது.
இதனால் தரிசனத்துக்கு காத்திருந்த பக்தர்களுக்கு சுமார் 40 நிமிடம் தடை விதிக்கப்பட்டது. சோதனை முடிந்த பிறகு அதிகாரிகள் தங்களது அறிக்கையை தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கருவறைக்குள் நவ பாஷாண சிலையை அதிகாரிகள் ஆய்வு செய்த சம்பவம் பக்தர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
- அதிக வெள்ள பாதிப்பு உள்ள பள்ளியின் தலைமை ஆசிரியர்கள், கல்வி அலுவலர்களிடம் ஆலோசித்து வருகிறோம்.
- பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு புதிய புத்தகங்கள், நோட்டுகள் விரைவில் வழங்கப்படும்.
தமிழகத்தில் 10ம், 11ம், 12ம் வகுப்புகளுக்கு வரும் டிசம்பர் 2ம் தேதி முதல் 6-ம் தேதிக்குள் செய்முறைத் தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டு இருந்தது.
ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழ்நாட்டில் கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் அதிகனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் அந்த மாவட்டங்களும் வெள்ளத்தில் மிதக்கின்றன.
இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது:
* டிசம்பர் மாதத்தில் நடைபெற இருந்த செய்முறை தேர்வு மழை பாதிப்பு காரணமாக ஜனவரி மாதம் நடத்தப்படும்.
* அதிக வெள்ள பாதிப்பு உள்ள பள்ளியின் தலைமை ஆசிரியர்கள், கல்வி அலுவலர்களிடம் ஆலோசித்து வருகிறோம்.
* தலைமையாசிரியர் அலுவலகம், சான்றிதழ் வைத்திருக்கும் அறைகள் தரைதளத்தில் இருந்தால் முதல் தளத்திற்கு மாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.
* டிசம்பரில் நடத்த திட்டமிட்டுள்ள அரையாண்டு தேர்வு, மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நீர் தேங்கியிருப்பின் ஜனவரியில் நடத்தப்படும்.
* பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு புதிய புத்தகங்கள், நோட்டுகள் விரைவில் வழங்கப்படும் என்று கூறினார்.
- கோலாலம்பூர் சேவையில் 3.4 லட்சம் பயணிகளை கையாண்டு 3-வது இடத்தை திருச்சி பிடித்தது.
- கூடுதல் விமான சேவையால் பயணிகள் எண்ணிக்கை ஆண்டுக்கு 1 மில்லியன் அதிகரிக்கக்கூடும் என விமான நிலைய வட்டாரத்தில் கூறப்படுகிறது.
திருச்சி:
திருச்சி விமான நிலையத்தில் இருந்து, தற்போது மலேசியா, சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்துக்கு வாரம் 62 விமானங்கள் இயக்கப்படுகிறது. பெரிய அளவிலான விமானங்கள் இயக்க போதிய ரன்வே இல்லாத போதும், அதிக விமான சேவைகளை அளித்து, பயணிகள் சேவையில் முக்கிய பங்காற்றி வருகிறது.
கடந்த 2023-24 நிதியாண்டில், சிங்கப்பூருக்கான பயணிகள் போக்குவரத்தில் இந்திய விமான நிலையங்களில் 5.5 லட்சம் பயணிகள் கையாண்டு 4-வது இடமும், கோலாலம்பூர் சேவையில் 3.4 லட்சம் பயணிகளை கையாண்டு 3-வது இடத்தை திருச்சி பிடித்தது.
டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு, கொல்கத்தா ஆகிய 5 மெட்ரோ விமான நிலையங்கள் தென்கிழக்கு ஆசியாவுடனான பயணிகள் போக்குவரத்தில் திருச்சியை விட அதிக அளவில் பயணிகள் போக்குவரத்தை கையாண்டுள்ளன.
இந்த நிலையில், திருச்சி-மலேசியா சேவையில் பயணிகளிடம் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், ஏர் ஏசியா, மலிண்டோ விமான நிறுவனங்கள் கூடுதல் சேவை அளிக்க முன்வந்துள்ளன.
அதன்படி, நாளை (5ம் தேதி) முதல் வாரத்துக்கு கூடுதலாக ஏர் ஏசியா 3 சேவை, மலிண்டோ 7 சேவை என மலேசியாவுக்கு 10 சேவைகளை இயக்க உள்ளன. இதன் மூலம் தென்கிழக்காசிய நாடுகளுக்கான சேவையில், மெட்ரோ அல்லாத விமான நிலையங்களில் திருச்சி முதலிடம் என்கிற (72 சேவைகள்) பெருமையை பெற்றுள்ளது.
கூடுதல் விமான சேவையால் பயணிகள் எண்ணிக்கை ஆண்டுக்கு 1 மில்லியன் அதிகரிக்கக்கூடும் என விமான நிலைய வட்டாரத்தில் கூறப்படுகிறது.
திருச்சி-மஸ்கட் இடையே வாரந்தோறும் புதன்கிழமை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் சேவை அளித்து வருகிறது. வரும் ஜனவரி மாதம் 6-ம் தேதி முதல் கூடுதலாக திங்கள் கிழமைகளிலும் இயக்கப்படவுள்ளது. இதேபோல தம்மாம் இடையே ஜன 2-ம் தேதி முதல் வியாழக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை என வாரம் 2 சேவை அளிக்கப்படவுள்ளது. இதற்கான முன்பதிவினை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் தொடங்கியுள்ளது.
இதன் தொடர்ச்சியாக பக்ரைன், ரியாத், ஜித்தா ஆகிய வளைகுடா நகரங்களுக்கு விமான சேவை அளிக்க வேண்டும் என பயணிகள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.
- கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் குமுளி, சத்திரம், புல்மேடு, எருமேலி, முக்குழி, சபரிமலை பாதைகளில் பக்தர்கள் செல்ல தற்காலிக தடை விதிக்கப்பட்டது.
- பத்தினம்திட்டா மாவட்டத்தில் மழை குறைந்துள்ள போதிலும் கடும் குளிர் வாட்டி வருகிறது.
கூடலூர்:
கேரள மாநிலத்தில் 4 மாவட்டங்களுக்கு நவம்பர் 30-ந் தேதி முதல் நேற்று வரை கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதனால் அவ்வப்போது கனமழையும், சாரல் மழையும் பெய்து வந்தது.
சபரிமலை ஐயப்பன் கோவில் அமைந்துள்ள பத்தினம்திட்டா மாவட்டத்திலும் கனமழை பெய்து பம்பையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பக்தர்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. நேற்று மாலை முதல் மழையின் தீவிரம் படிப்படியாக குறையத் தொடங்கியது. இதனால் பக்தர்கள் எவ்வித சிரமமின்றி சாமி தரிசனம் செய்து திரும்பினர்.
கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் குமுளி, சத்திரம், புல்மேடு, எருமேலி, முக்குழி, சபரிமலை பாதைகளில் பக்தர்கள் செல்ல தற்காலிக தடை விதிக்கப்பட்டது. இதனால் கடந்த 2ந் தேதி முதல் இந்த பாதையில் பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. தற்போது கனமழை குறைந்துள்ளதால் 2 நாட்களுக்கு பிறகு புல்மேடு பாதையில் பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டது. கடந்த 2 நாட்களாக புல்மேடு பாதையில் பயணம் செய்வதற்காக சத்திரம் வந்த நூற்றுக்கணக்கான பக்தர்களை கேரள அரசு போக்குவரத்துக்கழக பஸ்கள் மூலம் பம்பைக்கு அழைத்துச் சென்றனர்.
தற்போது மண்டல பூஜையின்போது ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்படும் சமயத்தில் அதனை எதிர்கொள்ள தேசிய பேரிடர் நிவாரணப்ப டையினர் அடங்கிய சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. மழை குறித்து முன் அறிவிப்பு வந்ததும் பம்பையில் செய்ய வேண்டிய அனைத்து ஏற்பாடுகளும் செய்து போலீஸ், தீயணைப்புத்துறை மற்றும் பேரிடர் நிவாரண படையினர் தயாராக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 2 நாட்களுக்கு பிறகு புல்மேடு பாதையில் இன்று காலை முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டதால் ஆர்வத்துடன் அதில் பயணம் செய்தனர்.
பத்தினம்திட்டா மாவட்டத்தில் மழை குறைந்துள்ள போதிலும் கடும் குளிர் வாட்டி வருகிறது. இதனால் பக்தர்களை பாதுகாக்க தேவசம்போர்டு சார்பில் சுக்கு உள்ளிட்ட மூலிகை கலந்த குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. நடைபந்தல், சன்னிதானத்தில் வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு இந்த மூலிகை குடிநீர் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. கடும் குளிர் மற்றும் பனியால் பக்தர்களின் உடல்நலம் பாதிக்காமல் இருக்கவும், புத்துணர்வு ஏற்படவும் மூலிகை குடிநீர் வழங்கப்படுவதாக கோவில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- தொடர் மழை காரணமாக கிருஷ்ணகிரி பழைய பேட்டையில் உள்ள கிருஷ்ணகிரி மலையில் இருந்து இன்று காலை திடீரென்று ராட்சத பாறை சரிந்து விழுந்தது.
- பாறை சுவற்றின் மீது மோதி நின்றதால் அதிர்ஷ்வடசமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி:
ஃபெஞ்சல் புயல் காரணமாக கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் கனமழை கொட்டியது. இதனால் ஊத்தங்கரையில் ஏரி நிரம்பி வழிந்து ஊருக்குள் தண்ணீர் புகுந்ததால் 50-க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஆற்றில் அடித்து செல்லப்பபட்டன. 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் துண்டிக்கப்பட்டது.
இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று சாரல் மழை பெய்தது. ஆங்காங்கே மழை நீர் சாலைகளில் தேங்கி நின்றது.
தொடர் மழை காரணமாக கிருஷ்ணகிரி பழைய பேட்டையில் உள்ள கிருஷ்ணகிரி மலையில் இருந்து இன்று காலை திடீரென்று ராட்சத பாறை சரிந்து விழுந்தது.
இந்த பாறை அடிவாரத்தில் உள்ள மேல்தெருவில் தெருவில் வசித்து வருபவர் வெங்கடாசலம் என்பவர் வீட்டின் சுற்றுசுவர் மீது விழுந்தது. அதிர்ஷ்டவசமாக அந்த பாறை வெங்கடாசலத்தின் வீட்டின் பின்புறமுள்ள சுற்றுசுவர் மீதும், அந்த சுவரின் அருகில் இருந்த மற்றொரு பாறைமீது மோதி தடுத்து நின்றதால், வீட்டில் வெங்கடாசலத்தின் மனைவி மற்றும் 2 குழந்தைகள் உயிர் தப்பினர்.
மேலும், அந்த மேல் தெருவில் 20-க்கும் மேற்பட்டோர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அவர்களும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
பாறை உருண்டு விழுந்தபோது பயங்கர சத்தம் கேட்டதால் வெங்கடாசலம் குடும்பத்தினர், அந்த பகுதியில் வசித்து வந்த பொதுமக்களும் வீட்டுகளை விட்டு வெளியேறி ஓடி வந்தனர்.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் தாசில்தார் வளர்மதி, போலீஸ் துணை சூப்பிரண்டு முரளி மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மலையில் இருந்து சரிந்து விழுந்த பாறையை பார்வையிட்டனர்.
இதுகுறித்து அதிகாரிகள், மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக மலையில் இருந்து இந்த ராட்சத பாறை உருண்டு வந்து விழுந்துள்ளது என்பது தெரியவந்தது. இந்த ராட்சத பாறையை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும் என்று கூறினர்.
இதைத்தொடர்ந்து அடிவார பகுதிகளில் வசித்து வரும் பொதுமக்களையும், அவர்களது உடைமைகளையும் பத்திரமாக மீட்பு பணிகளில் கிருஷ்ணகிரி போலீசார், தீயணைப்பு துறையினர், மாவட்ட பேரிடர் மீட்பு பணி குழுவினர் ஆகியோர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், அடிவார பகுதியில் 20-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருவதால், அவர்களது குடியிருப்புகளுக்கு இடையே விழுந்த ராட்சத பாறையை எவ்வாறு அகற்றுவது என்பது குறித்து மாவட்ட நிர்வாகத்தினர் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இந்த பாறை மேலும் உருண்டு விழுந்து சாலை வரை வந்திருந்தால் அடுத்தடுத்து உள்ள 20-க்கும் மேற்பட்ட வீடுகளில் வசிக்கும் பொதுமக்கள் உடல் நசுங்கி பலியாகி இருப்பார்கள். அந்த பாறை சுவற்றின் மீது மோதி நின்றதால் அதிர்ஷ்வடசமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலையில் பெய்த கனமழையால் மண்சரிவு ஏற்பட்டு வீடு புதைந்ததில் அங்கு வசித்து வந்த 7 பேரின் உடல்கள் நேற்று மீட்கப்பட்டுள்ள நிலையில் தற்போது கிருஷ்ணகிரியில் பாறை உருண்டு விழுந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வருகை தரும் உதயநிதி ஸ்டாலினை தடபுடலாக வரவேற்க, தி.மு.க.வினர் பல்வேறு முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
- உதயநிதி தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு பகுதிகளை நேரில் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
கிருஷ்ணகிரி:
தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஸ்டாலின் தருமபுரி, கிருஷ்ணகிரி வருகை, வெள்ள பாதிப்புகளால் ரத்ததானது.
தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை (5-ந் தேதி) கிருஷ்ணகிரி அருகே நடக்கும், தி.மு.க.வினர் இல்ல நிகழ்ச்சிகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்க வருவதாக இருந்தது. இதற்காக அவரை வரவேற்று, கிருஷ்ணகிரி மாவட்ட தி.மு.க.வினர் பேனர்கள், கொடி கம்பங்களுடன், சுவர் விளம்பரங்களை எழுதினர்.
உதயநிதி ஸ்டாலின் நிகழ்ச்சியை தயார் செய்யும் பணியில், அரசு அலுவலர்களும் ஈடுபட்டு, அரசு சார்பில் முடிவுற்ற பணிகள், நடந்து வரும் பணிகள் குறித்து அறிக்கைகளும் கேட்கப்பட்டு இருந்தன.
தமிழக துணை முதலமைச்சராக பொறுப்பேற்று முதன்முதலில், கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வருகை தரும் உதயநிதி ஸ்டாலினை தடபுடலாக வரவேற்க, தி.மு.க.வினர் பல்வேறு முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இந்நிலையில் 'ஃபெஞ்சல்' புயலால், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கடந்த, 4 நாளாக மழை பெய்து கடும் சேதம் ஏற்பட்டது. துணை முதலமைச்சர் உதயநிதி நேற்று முன்தினம் தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு பகுதிகளை நேரில் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மீட்பு பணிகள், வெள்ள பாதிப்புகளை கணக்கிடும் பணி, நிவாரணம் குறித்து அறிக்கைகள் சமர்பிக்கும் பணிகளில், அரசு அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை, கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கும், நாளை மறுநாள் (6-ந் தேதி) தருமபுரி மாவட்டத்திற்கும் வருகை தந்து நலத்திட்ட உதவிகள் வழங்க வாய்ப்பில்லை எனவும், பின்னர் அந்த நிகழ்ச்சிகள் நடத்தப்படலாம் எனவும், அதிகாரிகள் தெரிவித்தனர்.
- வாகனங்களில் முகப்பு விளக்கை எரியவிட்டபடி ஓட்டிச் செல்கின்றனர்.
- அடிக்கடி மின் தடை ஏற்படுவதால் தொலை தொடர்பு சேவையும் பாதிக்கப்பட்டு வருகிறது
கொடைக்கானல்:
கொடைக்கானலில் கடந்த சில நாட்களாகவே மிதமான மழை மற்றும் கனமழை பெய்து வருகிறது. 2 நாட்களாக அவ்வப்போது திடீரென கடும் பனிமூட்டம் நிலவி வந்தது. இந்நிலையில் இன்று அதிகாலை முதலே கடும் பனிமூட்டத்துடன் கூடிய சாரல் மழை பெய்து வருகிறது.
எதிரே யார் வருகிறார்கள் என்பது கூட தெரியாத அளவிற்கு பனிமூட்டம் சூழ்ந்துள்ளது. இதனால் இரு சக்கர வாகனம் முதல் நான்கு சக்கர வாகனம் என அனைத்து வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்குவதில் கடுமையான சிரமத்திற்கு உள்ளாகினர்.
வாகனங்களில் முகப்பு விளக்கை எரியவிட்டபடி ஓட்டிச் செல்கின்றனர். பல்வேறு தனியார் பள்ளிகள் விடுமுறை அறிவித்த நிலையில் அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்காததால் மாணவ-மாணவிகள் ஏமாற்றமடைந்தனர். பள்ளிக்கு செல்வதா வேண்டாமா என அரசு நிர்வாகம் மாணவ- மாணவிகளை குழப்பத்திற்கு உள்ளாக்கியுள்ளது. 8 மணி வரை அரசு பள்ளி நிர்வாகம் சார்பில் எந்த அறிவிப்பும் வராததால் மாணவ-மாணவிகள் கடும் அவதிக்கு மத்தியில் பள்ளிக்கு புறப்பட்டு சென்றனர்.
உள்ளூர் அரசு துறை சார்ந்த அதிகாரிகள் முன்னதாகவே எந்த அறிவிப்பையும் மாவட்ட நிர்வாகத்திற்கு வழங்காததால் மாவட்ட நிர்வாகம் விடுமுறை அறிவிப்பதில் தாமதம் காட்டியது.
அதிகாலை முதலே மின்சாரமும் இல்லை கடும் பனிமூட்டத்துடன் சாரல் மழையும் இருந்து வந்ததால் பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் மிகுந்த சிரமம் அடைந்தனர்.
அடிக்கடி மின் தடை ஏற்படுவதால் தொலை தொடர்பு சேவையும் பாதிக்கப்பட்டு வருகிறது. இதேபோல் மலைகிராமங்களிலும் தொடர்ந்து சாரல் மழை பெய்ததால் விவசாய பணிகள் பாதிக்கப்பட்டது.
- யானை வாகனம், காமதேனு வாகனம், வெள்ளிக் குதிரை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி எழுந்தருளி வீதிஉலா காட்சி நடைபெறுகிறது.
- தங்கமயில் வாகனத்தில் சுவாமி வீதிஉலா நிகழ்ச்சியும், தீபக்காட்சியும் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.
சுவாமிமலை:
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே சுவாமிமலையில் சுவாமிநாத சுவாமி கோவில் உள்ளது. இக்கோவில் முருகனின் அறுபடை வீடுகளில் 4-ம் படை வீடாகும். இக்கோவிலில் ஆண்டுதோறும் திருக்கார்த்திகை திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
அதன்படி, இந்த ஆண்டு திருவிழா இன்று (புதன்கிழமை) இரவு 7 மணிக்கு அணுக்ஞை, விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கி, நாளை (வியாழக்கிழமை) காலை கொடியேற்றம் நடக்கிறது.
தொடர்ந்து, விநாயகர், வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணியர் பரிவாரங்களுடன் மலைக்கோவிலில் இருந்து உற்சவ மண்டபம் எழுந்தருளல் நிகழ்ச்சியும், இரவு யாகசாலை பூஜை, சுவாமி வீதிஉலா திக் பந்தனம் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.
அதனைத் தொடர்ந்து, 8 நாட்கள் படிச்சட்டத்தில், ஆட்டுக்கிடா வாகனம், பஞ்சமூர்த்திகள் சப்பரம், யானை வாகனம், காமதேனு வாகனம், வெள்ளிக் குதிரை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி எழுந்தருளி வீதிஉலா காட்சி நடைபெறுகிறது.
முக்கிய நிகழ்வான திருக்கார்த்திகை தினத்தன்று (13-ந்தேதி) காலை 9 மணிக்கு தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும், இரவு 9 மணிக்கு தங்கமயில் வாகனத்தில் சுவாமி வீதிஉலா நிகழ்ச்சியும், தீபக்காட்சியும் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.
பின்னர், 14-ந்தேதி படிச்சட்டத்தில் சுப்பிரமணிய சுவாமி புறப்பட்டு காவிரியில் தீர்த்தவாரியும், இரவு அவளோ அவரோஹணம் படிச்சட்டத்தில் சுவாமி புறப்பாடும், 15-ந்தேதி இரவு வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி யதாஸ்தானம் சேர்தல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
விழா ஏற்பாடுகளை கோவிலின் இந்து சமய அறநிலை துறை இணை ஆணையர் சிவகுமார், துணை ஆணையர் உமாதேவி மற்றும் கண்காணிப்பாளர்கள், கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
- பாறைகளும் அடுத்தடுத்து வீட்டின் மீது விழுந்தன.
- 5 பேரின் உடல்கள் நேற்று முன்தினம் மீட்கப்பட்டன.
திருவண்ணாமலையில் ஃபெஞ்சல் புயல் காரணமாக 2 நாட்களுக்கும் மேலாக இடைவிடாது பலத்த மழை பெய்தது. இந்த மழையானது, மலையையே அசைக்கும் அளவுக்கு வெளுத்து வாங்கியது.
இந்த நிலையில் அண்ணாமலையார் என பக்தர்களால் அழைக்கப்படும் மலையில் வ.உ.சி.நகர் பகுதிக்கு மேலே உள்ள ராட்சத பாறைகள் திடீரென பயங்கர சத்தத்துடன் உருண்டு கீழ்நோக்கி வந்தன.
அதன் காரணமாக பாறைக்கு கீழே உள்ள மண் பெயர்ந்து அருவிபோல ஆக்ரோஷமாக வ.உ.சி.நகர் வீடுகளை நோக்கி பொலபொலவென சரிந்ததில் 2 வீடுகளுக்குள் புகுந்து அந்த வீடுகளே மண்ணுக்குள் புதைந்தன. அதுமட்டுமின்றி அத்துடன் பாறைகளும் அடுத்தடுத்து வீட்டின் மீது விழுந்தன
அப்போது ஒரு வீட்டில் இருந்தவர்கள் வெளியேறி விட்டனர். மற்றொரு வீடு கண் இமைக்கும் நேரத்தில் மண் சரிவில் சிக்கியது.
இந்த மண் சரிவில் புதைந்து 7 பேர் பரிதாபமாக இறந்தனர். 5 பேரின் உடல்கள் நேற்று முன்தினம் மீட்கப்பட்டன. மீதமுள்ள 2 பேரின் உடல்கள் நேற்று மீட்கப்பட்டது.
பிரேத பரிசோதனை நிறைவடைந்த பின்னர் நேற்று இரவு 7 பேரின் உடல்களும் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இறந்தவர்களின் உடல்களை கண்ட அவர்களது உறவினர்கள் கதறி அழுதனர். அது காண்போர் அனைவரின் கண்களையும் கலங்க செய்தது.
இந்நிலையில் மண் சரிவில் உயிரிழந்த 7 பேரின் உடலுக்கு அமைச்சர் எ.வ.வேலு, துணை சபாநாயகர் பிச்சாண்டி அஞ்சலி செலுத்தினர்.
7 பேரின் உடலை பார்த்து அமைச்சர் எ.வ.வேலு கண் கலங்கினார். உயிரிழந்த 7 பேரின் உறவினர்களுக்கு அவர் ஆறுதல் கூறினார்.
- சங்கி என்றால் தமிழில் நண்பன் என்று பொருள் வருகிறது.
- எல்லா மாநில முதலமைச்சர் மீதும் அமலாக்கத்துறை ரெய்டு வருது.
சென்னை:
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது:-
ரஜினி எப்படி சங்கியானார்... பா.ஜ.க.வின் தலைவரா இல்ல அமைச்சரா இல்ல... அவர் சொன்னாரா நான் ஆர்.எஸ்.எஸ்.னு. இந்த நாட்டிலேயே மிக உயர்ந்த சூப்பர் ஸ்டார் ஒருத்தர் இருக்கார். எங்க ஐயா நல்லக்கண்ணு. எங்களுக்கு அப்பா போல. அவரும் நானும் நாலு மணி நேரம் உட்கார்ந்து பேசினோம். அதற்கான காணொலியும் இருக்கு படமும் இருக்கு. ஒரே போராட்டத்தில் ரெண்டு பேரும் சேர்ந்து போராடினது இருக்கு. அந்த சந்திப்பை எல்லாம் ஏதோ அரசியல் பேசி இருக்கார்கள் ஏதோ அதெல்லாம் நீங்க பேசலையே...
உண்மையிலேயே துளசிதாசர் அந்த ராமாயணத்தை இந்தியில் மொழிபெயர்க்கும் போது ராமனுடைய நண்பன் அனுமான்னு சொல்றதுக்கு சங்கிங்கிற வார்த்தைய பயன்படுத்தி இருக்கார். சங்கி என்றால் தமிழில் நண்பன் என்று பொருள் வருகிறது. திராவிடன் என்றால் என்ன பொருள் வருகிறது?
தம்பி விஜயும் மோடியும் சந்தித்தார்கள். ஏன் நீங்க அவர சங்கின்னு சொல்லல.
எல்லா மாநில முதலமைச்சர் மீதும் அமலாக்கத்துறை ரெய்டு வருது. ஜார்க்கண்ட் முதலமைச்சர், அரவிந்த் கெஜ்ரிவால், மீது அமலாக்கத்துறை ரெய்டு வருது. இந்த மாநிலத்தின் முதலமைச்சர் மற்றும் அவர் குடும்பத்தார் மீது எந்த ரெய்டும் வர மாட்டேங்குது ஏன்?
சமத்துவம், சமூக நீதி எல்லாம் வெற்று வார்த்தை. நடந்த ஒரு உண்மையே சொன்னா உடனே அதிமுகவுக்கு ஆதரவா இருக்கீங்களா.. உடனே மாறுபாடுகிறார் , வேறுபடுகிறார் என்று ஏதாவது சொல்வது...
கொள்கையில் முரண் உள்ளது. அண்ணன்- தம்பி பாசம் வேறு.. அரசியலுக்கு வருவது வேறு. சேவை செய்யுங்க.. வேணும்னா செய்யுங்க. இப்ப எங்க ஐயோ விஜயகாந்தோட நாங்க முரண்பட்டோமா.. ஊழலை ஒழிக்கிறேன். வறுமையை ஒழிக்கிறேன் என்று சொன்னார். முடிஞ்சி போச்சு..
இவ்வாறு அவர் பேசினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்