என் மலர்
ஆன்மிகம்
- யாக பூஜைகளுக்காக கோவில் மண்டபத்தில் 73 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
- வருகிற 1-ந்தேதி மாலை 4.35 மணிக்கு மேல் முதற்கால யாக வேள்வி தொடங்குகிறது.
கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடைசியாக கடந்த 18.3.2013 அன்று கும்பாபிஷேகம் நடந்தது.
12 ஆண்டுகளுக்கு பின்பு மீண்டும் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த இந்து சமய அறநிலையத்துறை முடிவு செய்து நிதி ஒதுக்கப்பட்டு திருப்பணிகள் நடந்து வந்தன.
திருப்பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து வருகிற 4-ந்தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. இதற்கான விழா இன்று மாலை தொடங்குகிறது. மாலை 6 மணிக்கு மேல் விநாயகர் வழிபாடு, கிராமசாந்தி பூஜை ஆகியவை நடக்கிறது.
நாளை (31-ந்தேதி) காலை 9 மணி முதல் மதியம் 12 மணிக்குள் மூத்த பிள்ளையார் வழிபாடு, நவகோள் வேள்வி, திருமகள் வழிபாடு, விமான கலசங்கள் நிறுவுதல் உள்ளிட்ட பூஜைகள் நடக்கின்றன.
யாக பூஜைகளுக்காக கோவில் மண்டபத்தில் 73 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. வருகிற 1-ந்தேதி மாலை 4.35 மணிக்கு மேல் முதற்கால யாக வேள்வி தொடங்குகிறது.
அன்று முளைப்பாலிகை இடுதல், கங்கணம் கட்டுதல், கும்ப அலங்காரம், இறை சக்தியை திருக்குடங்களுக்கு எழுந்தருளச் செய்தல், மூலாலயத்தில் இருந்து யாகாலயத்துக்கு திருக்குடங்கள் எழுந்தருளுதல் உள்ளிட்டவை நடக்கின்றன.
2-ந் தேதி காலை 2-ம் கால யாக வேள்வி, மாலை 3-ம் கால யாகவேள்வி, 3-ந் தேதி காலை 4-ம் காலயாக வேள்வி, மாலை 5-ம் கால யாகவேள்வி, 4-ந் தேதி காலை 4.30 மணிக்கு ஆறுமுகனுக்கு 6-ம் கால யாகவேள்வி உள்ளிட்டவை நடைபெற உள்ளன.
தொடர்ந்து அன்று காலை 6 மணி முதல் 6.45 மணிக்குள் பரிவார மூர்த்திகளுக்கு திருக்குட நன்னீராட்டு பெருவிழா நடைபெற உள்ளது. காலை 8.30 மணிக்கு மருதாசல மூர்த்தி விமானம், ஆதிமூலவர் விமானம், ராஜகோபுரம், கொடிமரம், பரிவார விமானங்கள் அனைத்துக்கும் சமகால திருக்குட நன்னீராட்டு பெருவிழா நடைபெறுகிறது.
காலை 9.05 மணிக்கு ஆதிமூலவர், விநாயகர், மருதாசலமூர்த்தி, பட்டீசுவரர், மரகதாம்பிகை, வீரபாகு, கரிவரதராஜ பெருமாள், சண்டிகேசுவரர் ஆகியோருக்கு சமகால திருக்குட நன்னீராட்டு விழா நடக்கிறது. மாலை 4.30 மணிக்கு மகா அபிஷேகமும், தொடர்ந்து மாலை 5.30 மணிக்கு வள்ளி தெய்வானை உடனமர் சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாணம், திருவீதி உலா, பிரசாதம் வழங்குதல் ஆகியவை நடைபெற உள்ளன.
கும்பாபிஷேகத்தை ஒட்டி ராஜகோபுரத்தின் மீது 8 அடி உயரம், 6 அடி அகலத்தில் ஓம் என்ற எழுத்தும், அதன் மீது 24 அடி உயரம், 8 அடி அகலத்தில் வேல் வடிவமும் எல்.இ.டி.யால் தயாரித்து பொருத்தப்பட்டு உள்ளது.
விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளும், அறங்காவலர் குழுவினரும் செய்து வருகிறார்கள். அதிகாரிகள் கூறுகையில் கோவில் வளாகத்தில் உள்ள சன்னதிகளின் மண்டபங்கள் மீது சுமார் 750 பேரும், வாகனம் நிறுத்தும் இடங்கள் உள்ளிட்ட பிற இடங்களில் நின்று கும்பாபிஷேகம் காண 1,500 பேரும் அனுமதிக்கப்படுவர்.
மலைப்பாதையில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. யாக சாலை பூஜைகள் 50 சதவீதம் தமிழ் மொழியிலும், 50 சதவீதம் வழக்கமான முறையிலும் நடத்தப்படும். பக்தர்களின் வசதிக்காக படியில் மண்டபம் பகுதி உள்ளிட்ட இடங்களில் பசுமைப்பந்தல் அமைக்கப்பட்டு உள்ளது. குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது என்றனர்.
- நான்கு திசைகளிலும் வாசல்களை கொண்டிருந்தாலும், வடக்கு வாசலைத் தவிர மற்ற மூன்று வாசல்கள்தான் பயன்பாட்டில் உள்ளன.
- மாருதப் புரவீகவல்லி வழிபட்ட செம்பு வேல், சிவலிங்கம், தான்தோன்றி விநாயகர் ஆகிய மூன்றுமே இன்றும் ஆலயங்களில் இருக்கின்றன.
இலங்கை நாட்டின் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அமைந்துள்ளது, மாவிட்டபுரம் கந்தசாமி திருக்கோவில். 'மாவிட்டபுரம்' என்பதற்கு இரண்டு காரணங்கள் கூறப்படுகின்றன. மா + புரம் என பிரித்து பொருள் கொண்டால் மாமர வடிவிலான அசுரனை சம்காரம் செய்து அருளியத் தலம் என்பது பொருள். மாருதப்புர வீகவல்லியின் மா -குதிரை/பெருநோய், விட்ட- நீங்கிய, புரம் - தலம் என்பதால் மாவிட்டபுரம் என்று ஆனதாக மற்றொரு காரணமும் கூறப்படுகிறது.
தல வரலாறு
சோழ மன்னனின் மகளாக பிறந்தவள், மாருதப்புரவீகவல்லி. இவளது முற்பிறவியில் ஹயக்கிரீவ முனிவரின் சாபத்தால் குன்ம நோயும், குதிரை முகமும் தோன்றி இளவரசியை வாட்டியது. இந்த குறை தீர சோழ, பாண்டிய, சேர நாட்டு திருத்தலங்கள் பலவற்றிலும் நீராடி இறைவனை வழிபட்டு வந்தாள். தல யாத்திரையின் போது, சாந்தலிங்க முனிவரை தரிசனம் செய்தாள். அந்த முனிவர், "இலங்கை நாட்டில் அமைந்துள்ள நகுலேச்சரம் எனும் தலத் தீர்த்தமான கண்டகி தீர்த்தத்தில் நீராடினால் சாபம் நீங்கும்" என்றார்.
இதையடுத்து கதிர்காமம் தீர்த்த யாத்திரை முடித்த நிலையில், நகுலேச்சரத்தில் நகுல முனிவரை சந்தித்தாள். அவர், "எனக்கு ஏற்பட்ட கீரி முகம், இத்தலம் நீராடிய பிறகு இயல்பான முகமாக மாறியது. அதேபோல் நளன், அர்ச்சுனன் ஆகியோரும் இங்கு நீராடி நலம் பெற்றுள்ளனர். எனவே நீயும் இத்தீர்த்தத்தில் நீராடி உன் சாபம் நீங்கப்பெறுவாய்" என்றார். அதன்படியே நீராடி கந்தனை வணங்கி வழிபட்டு வந்த மாருதப்புரவீகவல்லிக்கு, அவளது நோய் நீங்கியதுடன், குதிரை முகமும் அகன்று அழகிய முகம் கிடைத்தது. அது முதல் இந்த தலம் 'துரகானன விமோசனபுரி' என வடமொழியிலும், 'மாவிட்டபுரம்' எனத் தமிழிலும் அழைக்கப்பட்டது.
தன் மகளின் நோய் தீர்த்த இறைவனுக்கு, சோழ மன்னன் மிகப்பெரிய ஆலயம் ஒன்றை எழுப்பினான். இவ்வாலயத்தில் அருளும் கந்தசாமி விக்ரகம் இங்கிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்டது. அது சென்றடைந்த இலங்கை துறைமுகம் இன்று 'காங்கேசன் துறை முகம்' என்று அழைக்கப்படுகிறது. நகுலேச்சரம் தலத்தில் மாருதப்புரவீக வல்லியின் மீது காதல் கொண்ட உக்கிர சிங்கசேனன், இளவரசியின் தந்தையிடம் அவளை மணம் முடிக்க அனுமதி பெற்றான். அவர்களுக்கு கோவில் திருப்பணி முடிந்து குடமுழுக்கு நடைபெற்ற பின்னர் திருமணம் நடைபெற்றது.
ஆலய அமைப்பு
நான்கு திசைகளிலும் வாசல்களை கொண்டிருந்தாலும், வடக்கு வாசலைத் தவிர மற்ற மூன்று வாசல்கள்தான் பயன்பாட்டில் உள்ளன. மேற்கு வாசலில் 80 அடி உயர ராஜகோபுரம் கலைநயத்துடன் விண்ணை முட்டி நிற்கிறது. அருகே வேட்டை மண்டபம் உள்ளது. நான்கு மாட வீதிகளும், மூன்று பிரகாரங்களுமாக ஆலயம் அமைந்துள்ளது. ஆலயத்தில் வில்லு மண்டபம், தட்டி மண்டபம், ராஜகோபுரம், வசந்த மண்டபம், துவார கோபுரம், ஸ்தம்ப மண்டபம், ஸ்நபன மண்டபம், மகா மண்டபம் , அந்தாரள மண்டபம், அர்த்த மண்டபம், கருவறை ஆகியவை முறைப்படி கட்டப்பட்டுள்ளன. இளவரசியின் குதிரையின் முகம் மற்றும் அழகு முகம் கொண்ட சிற்பங்கள் ஸ்நபன மண்டபத்தில் காணப்படுகின்றன.

ஆலயத்தில் விநாயகர், சந்தான கோபாலர், மகாலட்சுமி, நாகராஜர், சண்முகர், முத்துக்குமாரசாமி, சுப்பிரமணியர், சந்திரசேகரர், மாயூரர் ஆகிய திருமேனிகள் ஒருங்கே அமைந்துள்ளன. இரண்டாம் பிரகாரத்தின் மேற்கே பழனி தண்டாயுதபாணி, வடக்கே திருச்செந்தூர் செந்தில் ஆண்டவன், கிழக்கே நவக்கிரகங்கள் மற்றும் பைரவர் சன்னிதிகள் இருக்கின்றன. இவற்றிற்கெல்லாம் நடுநாயகமாக கருவறையில் வள்ளி - தெய்வானை சமேத கந்தசுவாமி நின்ற கோலத்தில் அருள் வழங்குகிறார். இவர்களின் பின்புறம் காவலாக மயில் அழகுடன் காட்சி தருகிறது. இந்த வடிவம் சோழர் காலத்தைச் சேர்ந்தது என்பதை ஆய்வாளர்கள் உறுதி செய்துள்ளனர்.
மாருதப் புரவீகவல்லி வழிபட்ட செம்பு வேல், சிவலிங்கம், தான்தோன்றி விநாயகர் ஆகிய மூன்றுமே இன்றும் ஆலயங்களில் இருக்கின்றன. இந்த மூன்றிற்கும் முதல் மரியாதை செய்த பிறகே, பிற தெய்வங்களுக்கு பூஜைகள் நடைபெறும். ஆலயத்திற்கு சிறப்பு சேர்க்கும் வகையில், கிழக்கே 127 அடி உயரத்தில் 11 நிலைகள் கொண்ட இலங்கையின் மிக உயரமான ராஜகோபுரம் எழுப்பப்பட்டு வருகிறது. இவ்வாலயத்தைப் பற்றி அருணகிரிநாதர் புகழ்ந்து பாடியிருக்கிறார்.
இது தவிர யாழ்ப்பாண வைணவ வைபவ மாலை, தட்சிணக் கயிலாய புராணம், கயிலாயம் மாலை, நகுலாசல புராணம், நகுல மலைக் குறிஞ்சி, நகுல மலைச் சதகம், நகுலகிரி புராணம், நகுலேஸ்வரர் வினோத வித்யா கவி பூங்கொத்து முதலிய பழமையான நூல்கள் பலவும் இத்தலத்தை விரிவாக புகழ்ந்து உரைக்கின்றன. யாழ்ப்பாண நல்லூர் சரவணமுத்து புலவர் இயற்றிய ஊஞ்சல் பாக்கள், சுண்ணாகம் முத்துக்குமார் கவிராசர் இயற்றிய மாவை சுப்பிரமணியர் தோத்திரம், மாவை கலிவெண்பா, புன்னை நகர் கணேச ஐயர் இயற்றிய மாலை சுப்பிரமணியன் தோத்திர விருத்தம் போன்ற ஏராளமான இலக்கியங்கள் மாவைக் கந்தனை புகழ்கின்றன.
இந்த ஆலயத்தில் அமாவாசை தோறும் கண்டகி தீர்த்தத்தில் தீர்த்தவாரி நடைபெறுவது சிறப்பு. தைப்பூசம் லட்சார்ச்சனை, ஆனி மற்றும் ஆடியில் 25 நாட்கள் மகோற்சவம் நடைபெறுகிறது. இவ்விழாவில் இலங்கையின் அனைத்து பகுதிகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்வார்கள். இது தவிர ஐப்பசி சுக்ர வாரம், நவராத்திரி , கந்த சஷ்டி, கார்த்திகை தீபம், கார்த்திகை சோமவாரம், மார்கழி திருவெம்பாவை என விழாக்கள் குறைவின்றி நடைபெறுகின்றன.
மாவை ஆதீனத்தால் சிறப்புடன் நிர்வகிக்கப்பட்டு வரும் இந்த ஆலயத்தில் 6 கால பூஜைகள் நடைபெறுகிறது. இவ்வாலயம் தினமும் காலை 6 மணி முதல் இரவு 7.30 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
அமைவிடம்
இலங்கை நாட்டின் வடபகுதியான யாழ்ப்பாண மாவட்டத்தில், தெல்லிப்பிழை வட்டத்தில், காங்கேசன் துறைமுகத்தில் இருந்து தெற்கே 5 கிலோமீட்டர் தூரத்திலும், யாழ்ப்பாணத்திற்கு வடக்கே 17 கிலோமீட்டர் தொலைவிலும், பலாலி விமான நிலையத்திற்கு மேற்கே 2 கிலோமீட்டர் தொலை விலும் மாவிட்டபுரம் திருத்தலம் அமைந்துள்ளது. மாவிட்ட புரத்திற்கு பேருந்து மற்றும் ரயில் வசதிகள் உள்ளன.
- கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்று, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
- மங்கல வாத்தியங்கள் முழங்க கருட பகவான் உருவம் வரையப்பட்ட கொடி ஏற்றப்பட்டது.
சுவாமிமலை:
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற ராமசாமி கோவில் அமைந்துள்ளது. 'தென்னக அயோத்தி' என அழைக்கப்படும் இக்கோவிலில் ஆண்டுதோறும் ராமநசமி திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
அதன்படி, இந்த ஆண்டுக்கான ராமநவமி விழா இன்று (சனிக்கிழமை) காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக சிறப்பு அலங்காரத்தில் சீதா, ராமர், லெட்சுமணன், ஆஞ்சநேய சுவாமிகள் கொடிமரம் முன்பு எழுந்தருளினர்.
தொடர்ந்து, கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்று, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர், மங்கல வாத்தியங்கள் முழங்க கருட பகவான் உருவம் வரையப்பட்ட கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து, சுவாமிகளுக்கும், கொடிமரத்திற்கும் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழா நாட்களில் தினமும் சிறப்பு அலங்காரத்தில் உற்சவ மூர்த்திகள் இந்திர விமானம், சூரியபிரபை, சேஷம், கருடர், அனுமன், யானை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா காட்சிகள் நடைபெறுகிறது.
முக்கிய நிகழ்வான 4-ம் நாளன்று இரவு ஓலை சப்பரத்தில் கருட சேவையும், 7-ம் நாளன்று இரவு கோரதம் புறப்பாடும், அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை தேரோட்டமும், இரவு கோவில் வளகத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.
முடிவில் 7-ந்தேதி சப்தாவர்ணமும், 8-ந்தேதி விடையாற்றி விழாவும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
- நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
- பல்வேறு ஊர்களில் இருந்து சனீஸ்வர பகவான் கோவிலுக்கு சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன.
தமிழகத்தில் சனி பரிகார தலமாக குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவில் உள்ளது. இங்கு வருடந்தோறும் பக்தர்கள் வருகை தந்தாலும் சனிப்பெயர்ச்சி நாட்களில் அதிக அளவு வருகை தருவார்கள். மேலும் ஆடி மாத சனிக்கிழமை, 18-ம் பெருக்கு உள்ளிட்ட நாட்களில் சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
திருநள்ளாறு உள்பட முக்கிய கோவில்களில் சனிப்பெயர்ச்சி வழிபாடு இன்று நடைபெறாது என்று தெரிவிக்கப்பட்ட போதிலும் பக்தர்கள் அதிக அளவில் வந்து வழிபட்டு வருகின்றனர்.
அதன்படி சனிப்பெயர்ச்சி மற்றும் அமாவாசையை முன்னிட்டு குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவிலில் அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் வருகை தந்த வண்ணம் இருந்தனர். அவர்கள் சுரபி நதியில் நீராடி சனீஸ்வர பகவானை வழிபட்டு எள் தீபம் ஏற்றி பரிகார பூஜைகளை செய்தனர். சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.
நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பிரசாதங்கள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. பல்வேறு ஊர்களில் இருந்து சனீஸ்வர பகவான் கோவிலுக்கு சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன.
இதேபோல் திண்டுக்கல் மலையடிவாரம் சனீஸ்வர பகவான் கோவிலிலும் சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.
திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் நவக்கிரக சன்னதி, பழனி பெரியநாயகி அம்மன் கோவிலிலும் சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
- இந்திய நேரப்படி பிற்பகல் 2.20 முதல் மாலை 4.17 மணி வரை நிகழ உள்ளது.
- நாளை வழக்கம் போல் 6 கால பூஜைகள் நடைபெறும்.
பழனி:
இந்தியாவில் சூரிய கிரகணம் நிகழ்வு தெரியாது என்பதால் நாளை பழனி முருகன் கோவிலில் வழக்கம் போல் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
வானியல் நிகழ்வுகளில் கிரகணங்கள், கிரகண காலங்கள் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்த வகையில் நாளை (29-ந் தேதி) இந்திய நேரப்படி பிற்பகல் 2.20 மணிக்கு சூரிய கிரகணம் தொடங்கி மாலை 4.17 மணி வரை நிகழ உள்ளது.
இந்த நிகழ்வு இந்தியாவில் தெரியாது என்பதால் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் சூரிய அனுஷ்டானம் கிடையாது. எனவே நாளை வழக்கம் போல் 6 கால பூஜைகள் நடைபெறும். பக்தர்கள் எப்போதும்போல் சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வழக்கமாக சூரிய கிரகணம் மற்றும் சந்திர கிரகணத்தின் போது குறிப்பிட்ட நேரத்துக்கு பழனி முருகன் கோவிலில் அனைத்து சன்னதிகளும் அடைக்கப்படும். பக்தர்கள் சாமி தரிசனம் செய்யவும் அனுமதி வழங்கப்பட மாட்டாது.
கிரகணம் முடிந்து பரிகார பூஜைகளுக்கு பின்னே கோவில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் நாளை பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் மற்றும் உப கோவில்களான திருஆவினன்குடி, பெரியாவுடையார், பெரியநாயகி அம்மன் உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும் வழக்கமாக பூஜைகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
- பூக்குழி திருவிழா நாளை நடக்கிறது.
- நாளை மறுநாள் தேரோட்டத்துடன் விழா நிறைவடைகிறது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் மிகவும் பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன் கோவில் உள்ளது. வரலாற்று சிறப்புமிக்க இந்த கோவில் ஸ்ரீவில்லிபுத்தூரின் மையப்பகுதியில் ஆண்டாள் கோவிலுக்கு வடக்கு புறத்தில் இருக்கிறது.
இந்த கோவிலில் மூலவராக பெரிய மாரியம்மன், வடக்கு நோக்கி வீற்றிருந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் கோவிலுக்கு விருது நகர் மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் தினமும் எண்ணற்ற பக்தர்கள் வருகின்றனர்.

இந்த கோவிலில் கருப்பசாமி, வீரபத்திரர், துர்க்கை, பைரவர், சப்தகன்னியர், வராகி அம்மன் ஆகியோர் தனி சன்னிதியில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.
குழந்தை வரம் கேட்டு இந்தக் கோவிலுக்கு எண்ணற்ற பேர் வருகின்றனர். அவ்வாறு வருபவர்கள் தங்களது கணவருடன் சேர்ந்து இந்தக் கோவிலில் உள்ள மரத்தில் தொட்டில் கட்டி அம்மனை வழிபடுகின்றனர்.
கண்பார்வை குறைபாடு உள்ளவர்கள், தங்களின் குறை நீங்க வேண்டும் என்பதற்காக அம்மனை வேண்டி கண்மலர் வாங்கி போட்டு தரிசனம் செய்கின்றனர். அதேபோல திருமணத்தடை, தோல் வியாதி உள்ளவர்களும் இங்குள்ள அம்மனை மனமுருக வேண்டிச் செல்கின்றனர்.
இவர்கள் தங்களது வேண்டுதல்கள் நிறைவேறிய மறு வருடம், கோவிலில் நடைபெறும் பூக்குழி திருவிழாவில் தீமிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். இதனால் ஆண்டுதோறும் தீமிதி திருவிழாவில் கலந்துகொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு செல்கிறது.
இந்தக் கோவிலில் சிவராத்திரியை முன்னிட்டு குல தெய்வ வழிபாடு, பவுர்ணமி சிறப்பு பூஜை, பஞ்சமி திதி அன்று வராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், நவராத்திரி உற்சவம் என ஆண்டு முழுவதும் பல்வேறு விழாக்கள் நடைபெறுகின்றன.
இருப்பினும் ஆண்டுதோறும் பங்குனி மாதம் நடைபெறும் பூக்குழி திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டு பூக்குழி திருவிழா கடந்த 18-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவினை முன்னிட்டு தினமும் அம்மன் பல்வேறு அலங்காரங்களில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி திருவிழா நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) தேரோட்டத்துடன் விழா நிறைவடைகிறது.
இந்த கோவில் ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ் நிலையம் அருகே மதுரை செல்லும் பைபாஸ் சாலையில் அமைந்துள்ளது.
- கும்பாபிஷேக பூஜைகள் வருகிற 3-ந் தேதி முதல் தொடங்குகிறது.
- 7-ந் தேதி காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.
தென்காசி காசி விசுவநாத சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா வருகிற 7-ந் தேதி (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி கும்பாபிஷேக பூஜைகள் வருகிற 3-ந் தேதி (வியாழக்கிழமை) முதல் தொடங்குகிறது.
அன்று காலை 5 மணிக்கு ராஜ அனுக்ஜை, (பராக்கிரம பாண்டிய மன்னர் வழிபடுதல்), விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், பஞ்சகவ்யம், பாத்ர பூஜை, தன பூஜை, விப்ரனுக்ஞை, கிராம தேவதானுக்ஞை, ஸ்ரீமகா கணபதி ஹோமத்துடன் தொடங்குகிறது.

காலை 8.30 மணிக்கு பிரம்மச்சாரி பூஜை, கஜபூஜை, கோ பூஜை, அஸ்வ பூஜை, பூர்ணாகுதி, தீபாராதனை நடக்கிறது. மாலையில் தீர்த்தம் எடுத்து வருதல், ஹோமம் ஆகியவை நடக்கிறது.
4-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 8 மணிக்கு சாந்தி ஹோமம், திசா ஹோமம், ஸம்ஹிதா ஹோமம், மூர்த்தி ஹோமம், பிரசன்னாபிஷேகம், யாகசாலை ஸ்தண்டிலம் அமைத்தல், காலை 10.15 மணிக்கு விநாயகர் முதலான பரிவார மூர்த்திகளுக்கு அஷ்டபந்தன மருந்து சாத்துதல் ஆகியவை நடக்கிறது.
மாலை 5 மணிக்கு முதற்கால யாகசாலை பூஜைகள் தொடங்குகிறது. தொடர்ந்து 7-ந் தேதி வரை 6 கால யாக சாலை பூஜைகள் நடைபெறுகிறது.
7-ந் தேதி காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் உலகம்மன் உடனுறை காசி விசுவநாத சுவாமி கோபுரங்கள், விமான கோபுரங்கள், மூலஸ்தான பிரதான மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.

கும்பாபிஷேக நாட்களில் சதுர்வேத பாராயணம், திருமுறை பாராயணம் நடக்கிறது. கும்பாபிஷகேத்தை தூத்துக்குடி ஆலால சுந்தர வேத சிவாகம பாடசாலை முதல்வர் செல்வம்பட்டர், ஆலய தலைமை அர்ச்சகர் செந்தில் ஆறுமுகம் பட்டர் தலைமையிலான சிவாச்சாரியார் குழுவினர் நடத்தி வைக்கின்றனர்.
கும்பாபிஷேக விழாவுக்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மண்டல அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி மேற்பார்வையில் உதவி ஆணையர் தங்கம், அறங்காவலர் குழு தலைவர் பாலகிருஷ்ணன், கோவில் செயல் அலுவலர் பொன்னி, ஆய்வாளர் சரவணக்குமார், அறங்காவலர்கள் முருகேசன், புவிதா, சஷீலா குமார், மூக்கன் மற்றும் உபயதாரர்கள், கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
- உப்பிலியப்பன் கோவில் சீனிவாச பெருமாள் விடையாற்று விழா.
- திருத்தணி முருகப்பெருமான் கிளி வாகனத்தில் பவனி.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு பங்குனி-14 (வெள்ளிக்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: சதுர்த்தசி இரவு 7.24 மணி வரை பிறகு அமாவாசை
நட்சத்திரம்: பூரட்டாதி இரவு 9.44 மணி வரை பிறகு உத்திராட்டாதி
யோகம்: நாளை முழுவதும் சித்தயோகம்
ராகுகாலம்: பகல் 10.30 மணி முதல் 12 மணி வரை
எமகண்டம்: மாலை 3 மணி முதல் 4.30 மணி வரை
சூலம்: மேற்கு
நல்ல நேரம்: காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை
உப்பிலியப்பன் கோவில் சீனிவாச பெருமாள் விடையாற்று விழா. மன்னார்குடி ராஜகோபால சுவாமி, பரமபதநாதர் திருக்கோலம். திருவாரூர் தியாகராஜர் பவனி. திருப்புவனம் கோதண்டராம சுவாமி விழா தொடக்கம். சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். திருமாலிருஞ்சோலை கள்ளழகர் கோவிலில் சுந்தரவல்லி தாயார் புறப்பாடு. திருத்தணி முருகப்பெருமான் கிளி வாகனத்தில் பவனி.
இன்றைய ராசிபலன்
மேஷம்-லாபம்
ரிஷபம்-ஆர்வம்
மிதுனம்-முயற்சி
கடகம்-தாமதம்
சிம்மம்-மாற்றம்
கன்னி-வரவு
துலாம்- பொறுமை
விருச்சிகம்- மகிழ்ச்சி
தனுசு- பாசம்
மகரம்-விருப்பம்
கும்பம்-நன்மை
மீனம்-ஜெயம்
- பச்சைபட்டினி விரதம் கடந்த 9-ந்தேதி தொடங்கியது.
- ஏப்ரல் 6-ந்தேதி வரை இந்த விரத காலம் உள்ளது.
திருச்சி:
சக்தி தலங்களில் முதன்மையான திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருவது வழக்கம். இங்கு வருடந்தோறும் மாசி மாதம் கடைசி ஞாயிறு முதல் பங்குனி மாத கடைசி ஞாயிறு வரை பக்தர்களுக்காக அம்மனே 28 நாட்கள் பச்சைப் பட்டினி விரதம் இருப்பது சமயபுரம் மாரியம்மன் கோவிலின் தனிச்சிறப்பு ஆகும்.
உலக மக்களின் நன்மைக்காகவும், தன்னை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு தோய்கள், தீவினைகள் அணுகாது இருக்கவும், சவுபாக்கி யங்கள் கிடைக்கவும் இந்த பச்சைப்பட்டினி விரதம் இருப்பதாக ஐதீகம்.
அதன்படி இந்த ஆண்டுக்கான அம்மனின் பச்சைபட்டினி விரதம் கடந்த 9-ந்தேதி தொடங்கியது. வருகிற ஏப்ரல் 6-ந்தேதி வரை இந்த விரத காலம் உள்ளது.
சமயபுரத்தில் வழக்கமாக அம்பாளுக்கு தினந்தோறும் 6 கால பூஜையில், 6 விதமான தளிகையும் நை வேத்தியமாக வைக்கப்படும். சமைத்த உணவுப் பொருட்களையே 'தளிகை' என்று என்று சொல்வார்கள்.
ஆனால் அம்மன் பச்சைப் பட்டினி விரதம் இருக்கும் 28 நாட்களும், அம்மனுக்கு சமைத்த உணவுகள் எதுவும் படைக்கப்படுவதில்லை. இளநீர், பானகம், உப்பில் லாத நீர்மோர், துள்ளுமாவு, கரும்பு, பழ வகைகள் மட்டுமே நைவேத்தியமாக படைக்கப்பட்டு வருகிறது.
அம்மன் பட்டினி விரதம் இருக்கும் காலங்களில் அம்மனின் முகம் சோர்வு டன் காணப்படுவதாக சொல்லப்படுகிறது. இந்த காலத்தில் அம்மனை குளிர்விப்பதற்காக கூடை கூடையாக மலர்களை கொண்டு வந்து பூச்சொரி தல் விழா நடத்துகின்றனர்.
அம்மன் விரதம் இருக்கும் காலத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த பூச்சொரிதல் விழா நடக்கிறது. அந்த வகையில் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் 4-வது வார பூச்சொரிதல் விழா வருகிற 30-ந்தேதி (ஞாயிற்றுக் கிழமை) நடைபெற உள்ளது.
இதில் பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் குழு, குழுவாகப் பிரித்து பூக்களை கொண்டு செல்ல அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
மேலும், பக்தர்களை ஒழுங்குபடுத்தும் விதத்தி லும், அவர்களின் பாது காப்பு கருதியும், சன்னதி வீதியின் நுழைவு வாயிலில் இருந்து ராஜகோபுரம் வரை 10 இடங்களில் இரும்பு தடுப்பு வேலிகள் அமைக்கப்படுகிறது.
- சனி பகவான் ஆயுள் காரகனாக விளங்குபவர்.
- நவ கிரகங்களுக்கும் தனித் தனி கிணறுகள் உள்ளன.
திருநள்ளாறு
புதுச்சேரி அருகே உள்ள காரைக்கால் யூனியன் பிரதேசத்தில் திருநள்ளாறு சனி பகவான் கோவில் அமைந்துள்ளது. புராதான சிறப்பு கொண்ட இந்த கோவில் கி.பி. 7-ம் நூற்றாண்டைச் சேர்ந்தாகும்.

பக்தர்கள் முதலில் நள தீர்த்தத்தில் புனித நீராடி விட்டு அதன் பிறகே சனீஸ்வர பகவானை தரிசனம் செய்கிறார்கள். அவ்வாறு செய்தால் தான் தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.
நல்லெண்ணெயை தலையில் தேய்த்துக் கொண்டு வடக்கு முகமாகவோ, அல்லது கிழக்கு முகமாகவோ 9 முறை ஸ்நானம் செய்து தலை குளிக்க வேண்டும். அதன்பின்பு பிரம்மதீர்த்தம், சரஸ்வதி குளத்திலும் தண்ணீர் தெளித்துக் கொள்ளலாம்.
தொடர்ந்து கோவிலுக்குள் நுழைந்து வலமாக வந்து சொர்ண கணபதியை முதலில் வழிபட்டு சுப்பிரமணியர் சன்னதியை தரிசனம் செய்து கொண்டு கர்ப்ப கிரகத்தில் தர்ப்பாரண்யேஸ்வரர் எனும் திரு நாமம் கொண்டு எழுந் தருளியள்ள சிவ பெருமானை வழிபட வேண்டும்.

அவரை தரிசித்து வலம் வரும் போது கட்டை கோபுரச்சுவரில் சிறிய மாடத்தினுள் எழுந்தருளியுள்ள சனிபகவானை தரிசிக்கலாம். இவரை வழிபடத்தான் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் குவிகிறார்கள்.
இத்தலம் பேரளம் காரைக்கால் ரெயில் மார்க்கத்தில் அமைந்துள்ளது. அரிசொல் நதிக்கும். வாஞ்சை நதிக்கும் இடையில் இத்தலம் அமைந்திருப்பது சிறப்பு. இத்தலம் சப்தவிடங்கத் தலங்களுள் ஒன்றாக போற்றப் படுகின்றது.
இத்தலத்திற்கு ஆதிபுரி, தர்பிபராண்யம் நகவிடங்கபுரம், நாளேச்சுவரம் என்ற வேறு பெயர்களும் உண்டு. நளனுக்கு நல்வழியை கொடுத்ததால் நல்+ஆறு திருநள்ளாராயிற்று.
இறைவன் ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வரர். இத்தலத்தில் சனீஸ்வர பகவானுக்கென தனி ஆலயம் உள்ளது. இது வைணவர்களுக்கும், சைவர்களுக்கும் உகந்த தலமாகும்.
இறைவி ஸ்ரீபிராணாம்பிகை, போகமார்த்த பூண் முலையாள். தல விருட்சம் தர்ப்பை. தீர்த்தம் பிரம்ம தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தம், நளதீர்த்தம்.
சனி பகவான் ஆயுள் காரகனாக விளங்குபவர். சனியைப் போல கொடுப்பவரும் இல்லை, கெடுப்பவரும் இல்லை என்பது பழமொழி. அதனால் அனைவரும் இவரை பயபக்தியுடன் வணங்குவர்.
இத்தலத்தில் அனுக்கிரக மூர்த்தியாக விளங்கும் இவருக்கு தனியே அஷ்டோத்ரம், சஹஸ்ர நாம அர்ச்சனைகள் உண்டு. திருமால், பிரம்மன், இந்திரன், தசை பாலர்கள், அகத்தியர், புலங்தியர், அர்ச்சுனன், நளன் முதலியோர் வழிபட்டு பேறு பெற்ற தலமாகும்.
இச்சன்னதியின் முன்புறம் மகர, கும்ப ராசிகளின் உருவங்கள் உள்ளன. சனி தோஷமுள்ளவர்கள் எள் முடிச்சு தீபம் போடும் பிரார்த்தனை இங்கு விஷேசம். நளதீர்த்தம் கோவிலுக்கு சற்று தள்ளியுள்ள இத்தீர்த்ததில் எண்ணெய் தேய்த்து நீராடுவது நல்லது. இதில் நவ கிரகங்களுக்கும் தனித் தனி கிணறுகள் உள்ளன.
கோவில் முகவரி:
அருள்மிகு தர்ப்பாரண்யேஸ்வரர் திருக்கோவில், திருநள்ளார் (அஞ்சல்), காரைக்கால், புதுவை மாநிலம்.

குச்சனூர்
திருநள்ளார் சனீஸ்வர பகவானுக்கு சாப விமோசனம் அளித்தவர் குச்சனூர் சனிபகவான். இந்தியாவிலேயே சனீஸ்வரருக்கு என்று கோவில் மூர்த்தி, தீர்த்தம், தலம் ஆகிய மூன்று சிறப்புகளையும் கொண்டு விளங்கிவரும் தலம்.
சனிபகவான் சுயம்புவாக உள்ளது கூடுதல் விசேஷம். அட்டமத்துச் சனி, கண்டசனி, அர்த்தாஷ்டம சனி பிடித்தவர்கள் குச்சனூர் சென்று சுயம்பு சனி பகவானை வழிபட்டு சுகம் பெறலாம். மேலும் மூர்த்தியான குச்சனூர் சனிபகவானை வழிபட்டால் தீராத வயிற்று வலி தீரும்.
திருமணத்தடை நீங்கும். குழந்தை பாக்கியம் உண்டாகும். மந்தமான வியாபாரம் லாபத்தில் இயங்கும். நிலங்களில் அமோக விளைச்சல் இருக்கும். தேனியிலிருந்து 35 கி.மீ. தூரத்தில் குச்சனூர் உள்ளது.

திருகொல்லிக்காடு
மங்கு சனியால் பாதிப்பு அடைந்தவர்களுக்கு 30 வயதிலிருந்து 60 வயதிற்குள் பொங்குச்சனி கண்டிப்பாக வரும். அப்படிப்பட்டவர்கள் சனிபகவானை மனதார வணங்கி வரக்கூடிய தலம்தான் பொங்கு சனி தலம்.
திருக்கொள்ளிக்காடு சென்று வணங்கி வாருங்கள். வாழ்வில் வளம் பெறுங்கள். செல்லும் வழி திருவாரூர். விக்கிரவாண்டியத்தில் இருந்து 2½ கிலோமீட்டர் தொலைவில் கோவில் உள்ளது.
- சனிபிடித்தவன் சந்தைக்கு போனாலும் கந்தலும் அகப்படாது என்பார்கள்.
- சனி ஒருவர் மட்டுமே பிற கிரகங்களை விட மக்களிடம் பிரபலமானவர்.
சனிபிடித்தவன் சந்தைக்கு போனாலும் கந்தலும் அகப்படாது என்பார்கள். இப்படி சனியை பலகோணங்களில் வசை பாடினாலும் அவரின் மகத்துவம் சிறப்பானது. சனி ஒருவர் மட்டுமே பிற கிரகங்களை விட உலகத்து மக்களிடம் பிரபலமானவர்.
குரு கிரகத்திற்கு அடுத்த கிரகம் சனி, குறுக்களவு உத்தேசமாக 73 ஆயிரம் மைல். குமரிமாவட்டம் சுசீந்திரம் தாணுமாலையர் கோவிலில் கல்சிலையாக தூணில் பெண்உருவில் காட்சி தருகிறார். நெல்லையை அடுத்த கருங்குளத்தில் சனி பகவான் நீலாவுடன் அமர்ந்துள்ளார்.

மனித உடலில் தொடைகளுக்கு உடையவர், குடல் வாதநோய் இவரால் ஏற்படும்,
மேலும் ஹிரண்யா, முதுகு வலி, விரைவீக்கம், முடக்கு வாதம் யானைக்கால், பேய்தொல்லை, மூலநோய்.
மனதளர்ச்சி இவையும் இவரின் கட்டுப்பாட்டில் இருப்பதால் இந்நோய் பிடித்தவர்கள் சனியை வணங்குவதால் நோயின் வேகம் வெகுவாக தணியும்.
சனி ஜாதகத்தில் 3,6,10,11-ல் இருந்தால் நிலபுலம் வாங்குதல், வீட்டு வசதி, விவசாயத்தில் ஈடுபாடு, உத்யோகம், வருவாய் பெரியோர் ஆதரவு தலைமை தாங்கும் பொறுப்பு இவையாவும் சுலபத்தில் வந்து விடும்.
8-ம் இடத்து சனி, தொல்லைகள் அளித்தாலும் ஆயுளை அதிகரிக்கச்செய்வார். ரேகை சாஸ்திரத்தில் நடுவிரலுக்கு நேர் கீழ்பாகம் உள்ள சனி மேட்டில் அதிக ரேகைகள் செங்குத்தாக காணப்பட்டால் ஒன்றல்ல பல வீடுகள் சுலபமாக அவர்களை நாடிவரும்.
12-ல் சனி இருக்க பிறந்தோர் வாழ்க்கைத் துணைக்கு வேட்டு வைக்கும் சுபாவம் நிலைக்கும்.
ஊதாரித்தனம் வந்த வருமானம் நாலாவிதமாக தீய வழியில் செல விடுதல் போன்றவை நிகழும்.

பெருவிரலை அடுத்த சுக்கிரமேட்டில் பலவித குறுக்கு கோடுகள் அடியில் காணப்பட்டால் சனிபாடாய்படுத்தப் போவதற்கான அறிகுறி என உறுதியாக நம்பலாம்.
4-ல் சனி அன்னைக்கு அற்ப ஆயுள், கெட்ட நண்பர்கள் சேர்க்கை, வேண்டாத வம்பில் நம்மை இணைப்பது நிகழும்.
சனிபகவான் ஜாதகத்தில் சீராக அமைந்திந்தால் இரும்பு, மெஷினரி, இரும்பு தொழிற்சாலை, தோல், சிமென்ட் ஏஜென்ட்., தயாரிப்பு, கரும்பலகை, ரோஸ்உட், நல்லெண்ணை மொத்த வியாபாரம் மற்றும் போக்குவரத்து தொழிலில் ஈடுபட்டால் வெற்றிதரும்.
சனியன்று சந்திராஷ்டம தினமாக மகர ராசி திருவோண நட்சத்திரத்தில் பிறந்தோருக்கு அமையப்பெற்றால் அன்று கண் பார்வைக்காக அறுவை சிகிச்சை செய்தல் கூடாது.
- நாகங்களுக்கு பால் - பழம் படைப்பதால் நாகதோஷம் விலகும்.
- கோவில் இருக்கிற இடம் சங்கரநயினார்புரம் என அழைக்கப்படுகிறது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகில் உள்ளது, பேய்குளம் கிராமம். இது முற்காலத்தில் பெரும் காடாக இருந்தது. இந்த வழியாக வரும் வழிப்போக்கர்கள் இவ்விடத்தில் தங்கவே அஞ்சி நடுங்கினர்.
தற்போது பேய்குளம் பஜார் இருக்கும் இடம், இருண்ட காடாகவும், நுழைய முடியாத அளவுக்கு நெருக்கமான அதிக மரங்கள் கொண்ட இடங்களாகவும் இருந்தது. இதனால் மதிய வேளையில் கூட இவ்விடம் இருண்டு, பேய் குடிகொண்டிருக்கும் இடமாக தோன்றிய காரணத்தினால் 'பேய்குளம்' என பெயர் பெற்றது.
இந்த பகுதியில் பஞ்ச தலங்களில் ஒரு தலமான கட்டாரி மங்கலம் நடராஜர் கோவில் உள்ளது. இந்த கோவிலைக் கட்டிய வீரபாண்டியன் என்ற மன்னன், ஆலயத்தை கட்டி முடித்ததும் கொடிமரம் நடுவதற்காக யாகம் ஒன்றை செய்தான்.
அப்போது வேதவிற்பன்னர்கள், ஐந்து தேவதைகளை அழைத்து கொடிமரத்தில் அமர வைத்தனர். ஊர்மக்கள் கூடி கொடிமரத்தை கோவிலுக்கு கொண்டு வந்தனர். அப்போது எங்கள் ஊருக்கு காவல் தெய்வமாக இந்த தேவதைகளும் இடம்பெற வேண்டும் என்று பக்கத்து ஊர் மக்கள் கேட்டுக்கொண்டனர். அதோடு அவர்கள் அந்த தேவதைகளை அழைத்துப் போய் தங்கள் ஊர்களில் காவல் தெய்வமாக குடிவைத்துக்கொண்டார்களாம்.
கட்டாரிமங்கலம், அம்பலச்சேரி, புளியங்குளம், கருங்கடல், பேய்குளம் ஆகிய ஐந்து கிராமங்களில் தான் அந்த தேவதைகள் குடிபுகுந்தன. அதன்பிறகு வேதவிற்பன்னர் அந்த தேவதைகளை கொடிமரத்துக்கு வர எவ்வளவோ முயற்சி செய்தனர். ஆனால் அந்த தேவதைகள் கொடிமரத்திற்கு வர மறுத்தனர்.
தங்களை விரும்பி அழைத்த மக்களின் ஊருக்குச் சென்று, அந்த ஊரின் எல்லையில் காவல் தெய்வமாக அமர்ந்து கொண்டனர். எனவே தேவதை இல்லாத கொடிமரத்தை கோவிலில் நாட்டவில்லை. ஆகவே கட்டாரிமங்கலம் நடராஜர் கோவில் கொடிமரம் இன்றியே காணப்படுகிறது.
பேய்குளம் தேவதை குடிகொண்ட இடமாக மாறிய காரணத்தினால் இவ்வூர் காடு அழிந்து நகரமாக மாறிவிட்டது. தமிழ் கடவுள் முருகனின் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் சென்று வழிபடும் பக்தர்கள், அக்காலங்களில் பாத யாத்திரையாக செல்வார்கள்.
எனவே அவர்கள் தங்குவதற்காக வழி நெடுகிலும் அன்னதான சத்திரங்கள் அமைத்தனர். பொதிகைமலை அடிவாரத்தில் இருந்து திருச்செந்தூர் செல்லும் பாத யாத்திரீகர்கள் தங்குவதற்காக பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாக மார்த்தாண்டன் என்ற ஒரு சிவ பக்தர் இந்த பகுதியில் ஒரு மடம் அமைத்தார். அந்த மடத்தில் சில பசுக்களையும் பராமரித்து வந்தனர். அதனால் இந்த மடம் 'பசு மடம்' என்று அழைக்கப்பட்டது.

பின்னாளில் இங்கு வந்து தங்கிய சிவனடியார்களில் ஒருவர் இங்கு சிவபூஜை செய்து வந்தார். ஆண்டு தோறும் ஆடி தபசு காட்சியை காண சங்கரன்கோவில் சென்று வருவார். வயதான காரணத்தினால் அவரால் சங்கரன்கோவில் செல்ல இயலவில்லை. அதனால் மிகுந்த வருத்தத்தில் சங்கரலிங்க சுவாமியையும், கோமதி அம்மாளையும் நினைத்து சிவசிந்தனையில் அமர்ந்து தியானம் செய்தார்.
அதன் பலனாக சங்கரன்கோவிலில் நடந்த தவசுக் காட்சியானது இவ்வூரில் இருந்த அவருக்கு தெரிந்தது. இதனால் ஆனந்தம் அடைந்தார். 'தென்னகத்தில் இறைவன் தபசு காட்சி தந்த இந்த இடம் அல்லவா சின்ன சங்கரன்கோவில்' என்று எண்ணினார்.
இறைவனிடம் 'தனக்கு காட்சி தந்தது போலவே, இங்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் காட்சி தரவேண்டும்' என்று கோரினார். இறைவனும் 'அவ்வாறே ஆகட்டும்' எனக் கூறி மறைந்தார்.
இதையடுத்து அந்த சிவனடியார், இங்கு சுவாமி மற்றும் அம்பாளை பிரதிஷ்டை செய்தார். ஆடி மாதம் தோறும் இங்கும் ஆடி தபசு காட்சி மிகச்சிறப்பாக நடைபெற வழி ஏற்படுத்தினார்.
சங்கரன்கோவில் சென்று காட்சி காண முடியாத பக்தர்கள், இங்கேயே ஆடிதபசு காட்சியை கண்டு மகிழ்ந்தனர். அதன்பின் இந்த ஆலயத்தை வழிபட்ட சில பக்தர்கள், காசி விஸ்வநாதரைப் போன்று சிறிய லிங்கத்தையும் சிவ ஆகம விதிப்படி இங்கே பிரதிஷ்டை செய்தனர்.
ஆலயத்தையும் சிறப்பான முறையில் அமைத்து, கருவறையில் கிழக்கு நோக்கி சங்கரலிங்க சுவாமியையும், அர்த்த மண்டபத்தில் தெற்கு நோக்கி கோமதி அம்பாளையும் அமைத்தனர்.

இந்த மண்டபத்தில் நடராஜப் பெருமாள், சிவகாமி அம்மாள், ஐம்பொன்னால் ஆன மாணிக்கவாசகர், அதிகார நந்தி உள்ளது.
முதல் பிரகாரத்தில் தட்சிணாமூர்த்தி, கன்னி விநாயகர், வள்ளி -தெய்வானை சமேத சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர், சனீஸ்வரர், துர்க்கை அம்மன் மற்றும் பைரவர் போன்ற பரிகார தேவதைகளும் உள்ளனர்.
ஆலய பிரகாரத்தில் வேம்பு உள்ளது. இது மிகவும் சிறப்பு வாய்ந்தது. அதனடியில் புற்று மற்றும் சாஸ்தா சன்னிதி இருக்கிறது. இவ்விடத்தில் நாகங்களுக்கு பால் - பழம் படைப்பதால் நாகதோஷம் விலகும். இத்திருக்கோவிலில் தல விருட்சம், வில்வ மரம் ஆகும்.

இந்த கோவில் இருக்கிற இடம் சங்கரநயினார்புரம் என அழைக்கப்படுகிறது. கூட்டம் பெருக பெருக ஒவ்வொரு வருடமும் ஆடித்தபசு 10 நாள் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. இதற்காக ஒவ்வொரு மண்டகப்படியும், அருகில் உள்ள ஊர்களுக்கு வழங்கப்படும்.
குருகல்பேரி, பெருமாள்குளம், சாலைப்புதூர், தேர்க்கன்குளம், வீராக்குளம், ஸ்ரீவெங்கடேசபுரம், பழனியப்பபுரம், கோமநேரி, சங்கரநயினார்புரம், மீரான்குளம் ஊர் பொதுமக்கள் இந்த மண்டகப்படியை நடத்தி வருகிறார்கள்.
பேய்குளம் ஊரின் மேல் புறம் உள்ள பிள்ளையார் கோவிலில் அம்மன் தபசு இருப்பார். இதையொட்டி அம்மன் காலை 10.15-க்கு தபசுக்கு புறப்படுவார். மாலை 4.30 மணிக்கு சுவாமி சீர்வரிசையுடன் அம்பாளை அழைக்க புறப்படுவார்.
அம்பாளை அழைத்துக் கொண்டு வரும் சுவாமிக்கு, பேய்குளம் பஜாரில் மக்கள் வரவேற்பளிப்பர். அப்போது அப்பகுதியில் விளையும் கடலை, உளுந்து, பருத்தி போன்ற விளை பொருட்களை சந்தோஷமாக வீசி மகிழ்வார்கள்.
இதனால் அடுத்த ஆண்டு விளைச்சல் மிக அதிகமாகும் என விவசாயிகளுக்கு நம்பிக்கை. இரவு 8.30 மணிக்கு சுவாமி அம்பாள் திருக்கல்யாணமும் சிறப்பாக நடைபெறுகிறது. அன்றைய தினம் பெண்கள் மாவிளக்கேற்றி சிறப்பாக வழிபாடு செய்கிறார்கள்.
இத்திருக்கோவிலில் திருமணங்கள் அதிக அளவில் நடைபெறுகிறது. இங்கு வைத்து திருமணம் புரியும் தம்பதிகள் வாழ்வில் எல்லா வளமும் பெற்று இன்புற்று வாழ்வர் என்பது நம்பிக்கை.
முதலில் மடமாக இருந்த கோவிலில் பின் கருவறை மட்டும் கட்டப்பட்டது. அதன் பிறகு கும்பாபிசேகத்தின் போது இரண்டாவது பிரகாரத்தில் புதிதாக மகா மண்டபமும், அதில் கொடிமரம், நந்தி, பலிபீடம், நவக்கிரகம் மற்றும் ஆஞ்சநேயர் சன்னிதி, பைரவர் சன்னிதி, சாஸ்தா, பூதத்தார் திருக்கோவில் கல்யாண மண்டபம் போன்றவையும் உள்ளன.
இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்துவைக்கப்பட்டிருக்கும்.
அமைவிடம்
நாங்குநேரியில் இருந்து சாத்தான்குளம் செல்லும் சாலையில் சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் பேய்குளம் உள்ளது. திருநெல்வேலி, சாத்தான்குளம், ஸ்ரீவைகுண்டம், நாசரேத் பகுதியில் இருந்து பஸ் வசதி உண்டு.