என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க மீண்டும் அனுமதி
    X

    மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க மீண்டும் அனுமதி

    • தொடர் மழை பெய்யும்போது மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்.
    • கடந்த 22-ந்தேதி பாதுகாப்பு கருதி மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர்.

    கல்லிடைக்குறிச்சி:

    நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள பிரதான அருவியான மணிமுத்தாறு அருவியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். இங்கு குளித்து மகிழ்வதற்காக நெல்லை மாவட்டம் மட்டும் அல்லாமல் அண்டை மாவட்டங்கள், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.

    மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மாஞ்சோலை, ஊத்து, காக்காச்சி, நாலுமுக்கு உள்ளிட்ட பகுதிகளில் தொடர் மழை பெய்யும்போது மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும். அந்த காலகட்டங்களில் அருவியில் குளிக்க வனத்துறையினர் தடைவிதிப்பது வழக்கம்.

    அந்த வகையில் கடந்த வாரம் அருவிகளின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் கனமழை பெய்து வந்ததால் கடந்த 22-ந்தேதி பாதுகாப்பு கருதி மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர்.

    இந்நிலையில் இன்று காலை முதல் நீர்வரத்து சீரானதால், அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை அனுமதி வழங்கியது. 4 நாட்கள் தடைக்கு பின்னர் அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    Next Story
    ×