search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    • இளையராஜாவின் பாடல்கள் இன்றைய தலைமுறையையும் கவரும் வகையில் அமைந்துள்ளன.
    • சமீபத்தில் லண்டனில் வேலியண்ட் சிம்பொனியை அரங்கேற்றம் செய்து அவர் சாதனை படைத்தார்.

    சென்னை:

    இசைஞானி இளையராஜா தனது நீண்ட இசைப்பயணத்தில் சுமார் ஆயிரம் திரைப்படங்களுக்கு மேல் இசையமைத்து சாதனை படைத்துள்ளார்.

    மேற்கத்திய இசை மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவரான இளையராஜா மொசார்ட் உள்ளிட்ட மேற்கத்திய இசை ஜாம்பவான்களின் சிம்பொனி இசைக் கூறுகளை தனது பாடல்களில் பயன்படுத்தி பாமர மக்களும் அவற்றை ரசிக்கும் வகையில் மெட்டுகளை அமைத்தார். அவரது இசையால் பல திரைப்படங்கள் வெற்றிப் படங்களாக மாறியுள்ளன. அவரது பாடல்கள் அனைத்தும் இன்றைய தலைமுறையையும் கவரும் வகையில் அமைந்துள்ளன.

    சமீபத்தில் லண்டனில் 'வேலியண்ட்' (Valiant) சிம்பொனியை அரங்கேற்றம் செய்து இளையராஜா மற்றொரு சாதனையைப் படைத்துள்ளார்.

    இந்நிலையில், இளையராஜாவுக்கு அரசு சார்பில் பாராட்டு விழா நடத்த உள்ளதாக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:

    லண்டன் மாநகரில் சிம்பொனி சாதனை படைத்துத் திரும்பியுள்ள இசைஞானி இளையராஜா, அவரது பயணத்துக்கு வாழ்த்திய என்னை நேரில் சந்தித்து நன்றி கூறினார்.

    அவரது அரை நூற்றாண்டு காலத் திரையிசைப் பயணத்தை அரசின் சார்பில் கொண்டாட முடிவெடுத்துள்ளோம். ராஜாவின் இசை ராஜ்ஜியத்தில் வாழும் ரசிகர்களின் பங்கேற்போடு இந்த விழா சிறக்கும் என பதிவிட்டுள்ளார்.


    • 2025-2026-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார்.
    • தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை எல்லார்க்கும் எல்லாம் என்று பட்ஜெட் லோகோ வெளியிடப்பட்டுள்ளது.

    தமிழக சட்டசபையில் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் கூடியது. கவர்னர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்தும் நிகழ்வோடு தொடங்கி அந்த கூட்டத்தொடர் முடிவுக்கு வந்தது.

    சட்டசபையின் அடுத்த கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது. காலை 9.30 மணிக்கு சட்டசபையில் 2025-2026-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார்.

    இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் பட்ஜெட் லோகோவை எக்ஸ் தளத்தில் வெளியிட்டார். ரூ என்ற எழுத்துடன் 2025-26 தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை எல்லார்க்கும் எல்லாம் என்று பட்ஜெட் லோகோ வெளியிடப்பட்டுள்ளது.

    இதற்கு பாஜக உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.

    இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் அவர் கூறுகையில்," தமிழ்நாட்டிற்கு எதிரான பாஜகவின் ஒவ்வொரு தாக்குதலையும் எதிர்த்து நிற்கும் வலிமை எமக்கும், எமது தாய்மொழியாம் தமிழுக்கும் உண்டு" என்றார்.

    • செந்தில் பாலாஜி சிறை சென்று வந்த பிறகும் கூட இந்த முறைகேடு நடந்துள்ளது.
    • மோசடியை மறைப்பதற்காகவே தமிழக அரசு கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருக்கிறது.

    சென்னையில், டாஸ்மாக் தலைமை அலுவலகம், மது ஆலை நிறுவனங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.

    இதன்மூலம், டாஸ்மாக் கொள்முதல் முறைகேடு வழக்கில் ரூ.1000 கோடி கணக்கில் காட்டப்படாத பணம் புழங்குவதாக அமலாக்கததுறை கண்டுபிடித்துள்ளது.

    இதுதொடர்பாக கூறிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை," டாஸ்மாக்கில் மிகப்பெரிய மோசடி நடந்திருக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:-

    டாஸ்மாக்கில் மிகப்பெரிய மோசடி நடந்திருக்கிறது. சத்தீஸ்கர், டெல்லியில் நடைபெற்றதைவிட தமிழகத்தில் மிகப்பெரிய மோசடியாக இருக்கும்.

    டாஸ்மாக் முறைகேடு வழக்கு வரும் காலத்தில் பூதாகரமாக மாறும். செந்தில் பாலாஜி சிறை சென்று வந்த பிறகும் கூட இந்த முறைகேடு நடந்துள்ளது.

    மோசடியை மறைப்பதற்காகவே தமிழக அரசு கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பணியிட மாற்றம், பார் லைசன்ஸ் உள்ளிட்டவைகளை வழங்க லஞ்சம் பெறப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
    • ஒரு பாட்டிலுக்கு ரூ.10 முதல் ரூ.30 வரை வசூல் செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    சென்னையில், டாஸ்மாக் தலைமை அலுவலகம், மது ஆலை நிறுவனங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.

    இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    டாஸ்மாக் தொடர்புடைய போக்குவரத்து டெண்டரில் KYC, DD தரவுகள் ஒத்துப்போகவில்லை. பார் உரிமங்கள் பெறுவதற்கான டெண்டரில் GST, PAN நம்பர் இல்லை.

    டாஸ்மாக் கொள்முதல் முறைகேடு வழக்கில் ரூ.1000 கோடி கணக்கில் காட்டப்படாத பணம் புழங்குவதாக அமலாக்கததுறை கண்டுபிடித்துள்ளது.

    பணியிட மாற்றம், பார் லைசன்ஸ் உள்ளிட்டவைகளை வழங்க லஞ்சம் பெறப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு பாட்டிலுக்கு எம்ஆர்பி தொகையைவிட ரூ.10 முதல் ரூ.30 வரை வசூல் செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    மதுபாட்டில்களை குடோனுக்கு கொண்டு செல்லும் போக்குவரத்து ஒப்பந்தத்தில் ரூ.100 கோடி முறைகேடு நடந்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    மது ஆலை நிறுவனங்கள், டாஸ்மாக் உயர் அதிகாரிகள் இடையே நெருங்கிய தொடர்பு உள்ளது. ரூ.1000 கோடி முறைகேட்டில் மதுவுக்கான பாட்டில்களை தயாரிக்கும் ஆலைகளுக்கு முக்கிய பங்கு.

    ஏலத்தில் காலக்கெடு முடிவதற்குள் டிடி வழங்காமலே சலுகை வழங்கியதும் விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. செலவுகளை ஊதிப்பெருக்கி காண்பித்து, ரூ.1000 கோடி வரை முறைகேடு நடந்துள்ளது.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    • மொழியை பாதுகாப்பதற்கு போராட வேண்டிய அவசியம் அப்போது இல்லை.
    • 'ரூ' என்று மாற்றி இலச்சினை வெளியிட்டு தனது உணர்வினை வெளிப்படுத்தியுள்ளது தமிழ்நாடு அரசு.

    தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிப் பொறுப்பில் இருந்த போது, 2010 ஆம் ஆண்டு ரூபாய் இலட்சினையை மாற்றியமைத்தது. அப்போது மத்தியில் ஆண்ட காங்கிரஸ் அரசு, எந்த மாநிலத்தின் மீதும் மும்மொழிக்கொள்கையை வலிந்து திணிக்கவில்லை. மொழியை பாதுகாப்பதற்கு போராட வேண்டிய அவசியம் அப்போது இல்லை.

    ஆனால், தற்போது ஆட்சியில் இருக்கும் ஒன்றிய பாஜக அரசு ஜனநாயக விரோதமாக வலிந்து மும்மொழிக்கொள்கையை மாநிலங்கள் மீது திணிக்கின்றது.

    அதை ஏற்றுக்கொண்டால்தான் நிதி தருவோம் என ஆணவத்துடன் செயல்படுகிறது. தமிழர்களையும், தமிழ்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் வசைபாடுகிறது.

    மொழிக்கொள்கையில் தமிழ்நாடு கொண்ட கொள்கையும், உறுதியான நிலைப்பாட்டையும் சரி என்று மற்ற மாநிலங்கள் உணர்ந்து வருகிறது. அதை உரக்க வெளிப்படுத்தும் நேரமாக இது அமைந்து வருகிறது. அது அவசியமாகிறது. அதை உணர்ந்துதான், நாளை தாக்கல் செய்யப்படவுள்ள தமிழ்நாடு பட்ஜெட்டில் '₹'-க்கு பதில் 'ரூ' என்று மாற்றி இலச்சினை வெளியிட்டு தனது உணர்வினை வெளிப்படுத்தியுள்ளது தமிழ்நாடு அரசு.

    தமிழர்கள் மீது வன்மம் கொண்டவர்களுக்கு இது பிடிக்காது. தமிழர்கள் இவ்விஷயத்தில் பெருமை கொள்ள வேண்டுமே தவிர, இந்திய இறையாண்மைக்கே பிரச்சனை வந்தது போல பிதற்றக்கூடாது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் ஏற்கனவே 5 கட்டங்களாக இதுவரை 95 மாவட்டங்களுக்கு, மாவட்ட செயலாளர்களை நியமித்து உள்ளார்.
    • நான் உங்களை நம்பி தான் அரசியலுக்கு வந்துள்ளேன். நீங்கள் அனைவரும் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும்.

    சென்னை:

    நடிகர் விஜய், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ந்தேதி தமிழக வெற்றிக்கழகம் கட்சியை தொடங்கினார். அதன்பிறகு கட்சிக்கொடியை அறிமுகப்படுத்திய அவர், கட்சியின் முதல் மாநாட்டை விக்கிரவாண்டியில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 27-ந்தேதி மிகவும் பிரமாண்டமாக நடத்தி மக்களின் கவனத்தை ஈர்த்தார்.

    தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் 2-ம் ஆண்டு விழாவை கடந்த மாதம் 26-ந்தேதி மாமல்லபுரத்தில் மிகவும் பிரமாண்டமாக நடத்தினார். இதில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    தமிழக வெற்றிக் கழகம் கட்சி ரீதியாக 121 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு உள்ளது. இதையொட்டி 121 மாவட்ட செயலாளர்களை நியமிக்க திட்டமிடப்பட்டது. தமிழகத்தில் மொத்தம் 234 தொகுதிகள் உள்ளன. சிறிய தொகுதி என்றால் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளரும், பெரிய தொகுதி என்றால் ஒரு தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளரும் நியமிக்க முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் தமிழகத்தில் பெரிய தொகுதிகள் அதிகமாக இருக்கும் நிலையில் மாவட்டங்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

    தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் ஏற்கனவே 5 கட்டங்களாக இதுவரை 95 மாவட்டங்களுக்கு, மாவட்ட செயலாளர்களை நியமித்து உள்ளார். அவர்களை வரவழைத்து மாவட்ட செயலாளர்களாக நியமித்ததற்கான சான்றிதழை விஜய் நேரில் வழங்கியதுடன், கட்சியை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வதற்காக அவர்களுக்கு பல்வேறு அறிவுரைகளையும் வழங்கினார். இதையடுத்து மீதமுள்ள மாவட்ட செயலாளர்களை நியமிப்பதற்கான பணிகள் கடந்த சில நாட்களாகவே நடந்து வந்தது. இதற்காக மாவட்ட செயலாளர்களின் பட்டியலை பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் தயாரித்து வந்தார். அந்த மாவட்ட செயலாளர்களின் விவரங்கள், கட்சியில் அவர் எப்படி செயல்பட்டு வருகிறார், மாவட்டத்தில் அவருக்கு செல்வாக்கு எப்படி உள்ளது என்பதை அலசி ஆராய்ந்து இந்த பட்டியலை தயாரித்தார்.

    பின்னர் மாவட்ட செயலாளர்களின் பட்டியலை கட்சி தலைவர் விஜய்யிடம் வழங்கினார். பின்னர் விஜய்யும், புஸ்சி ஆனந்தும் அந்த பட்டியலில் உள்ளவர்களின் பின்னணியை மீண்டும் சரி பார்த்தனர். எவ்வளவு நாள் தங்களுடன் உள்ளனர். மாவட்டத்தில் அவர்கள் எப்படி செயல்படுகிறார்கள் என்பது பற்றி பரிசீலனை செய்தனர்.

    இதையடுத்து அவர்களில் 19 மாவட்ட செயலாளர்களின் பட்டியலை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று வெளியிட்டார். இதற்கான நிகழ்ச்சி சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக தலைமை அலுவலகத்தில் நடந்தது.

    மாவட்ட செயலாளர்களை விஜய் நியமித்ததுடன், அவர்களை தனித்தனியே நேரில் அழைத்து பேசினார். மாவட்ட செயலாளர் பதவிக்கான நியமன சான்றிதழை அவர்களிடம் வழங்கி கட்சியில் எப்படி செயல்பட வேண்டும் என்று அவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

    'நான் உங்களை நம்பி தான் அரசியலுக்கு வந்துள்ளேன். நீங்கள் அனைவரும் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும். அதனால் மக்கள் மகிழ்ச்சி அடைவது போல, நானும் அதைப்பார்த்து மகிழ்ச்சி அடைவேன். மாவட்ட செயலாளர் பதவியை பிடிக்க செல்வந்தர்கள் பலரும் முயன்றனர். ஆனால் உங்களின் உழைப்பை நம்பி உங்களுக்கு மாவட்ட செயலாளர் பதவி தந்துள்ளேன்.

    எனவே மக்களுக்கு நல்லது செய்வதற்காக இந்த பதவியை பயன்படுத்த வேண்டும். எந்த காரணத்தை கொண்டும் பண பேரம் உள்ளிட்ட விஷயங்களில் ஈடுபடக்கூடாது' என்று அவர்களிடம் விஜய் அறிவுறுத்தினார்.

    சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு மொத்தம் 19 மாவட்ட செயலாளர்கள் இன்று நியமிக்கப்பட்டு உள்ளனர். இவற்றில் பெரிய தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளர் நியமிக்கப்பட்டு உள்ளார். சிறிய தொகுதிகளில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளர் நியமிக்கப்பட்டு உள்ளார்.

    சென்னை விருகம்பாக்கம் தொகுதிக்கு சபரிநாதன், சேப்பாக்கம் தொகுதிக்கு திலீப்குமார், பல்லாவரம் தொகுதிக்கு குமார், தாம்பரம் தொகுதிக்கு சரத்குமார், திரு.வி.க.நகர் தொகுதிக்கு பல்லவி, ஆர்.கே.நகர் தொகுதிக்கு வேலு, மாதவரம் தொகுதிக்கு எம்.எல்.பிரபு ஆகியோர் மாவட்ட செயலாளர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் பல்லவி பெண் மாவட்ட செயலாளர் ஆவார். பரமக்குடி, முதுகுளத்தூர் ஆகிய 2 தொகுதிகளுக்கும் மன்மதன் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

    மேலும் பாப்பிரெட்டிப்பட்டி, அரூர், பெரம்பலூர், ராஜபாளையம், உசிலம்பட்டி, பூந்தமல்லி உள்ளிட்ட தொகுதிகளுக்கும் இன்று மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். மொத்தம் 19 மாவட்ட செயலாளர்கள் இன்று நியமிக்கப்பட்டு உள்ளனர். மீதமுள்ள மாவட்ட செயலாளர்கள் அடுத்தடுத்து நியமிக்கப்பட உள்ளனர்.

    • வார இறுதி நாட்களில் 8 ஆயிரம் வாகனங்கள் மட்டுமே இயக்க வேண்டும்.
    • அரசு பேருந்து, ரெயில்கள் மூலம் வரும் சுற்றுலா பயணிகளுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை.

    ஊட்டி, கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

    ஊட்டிக்கு வார நாட்களில் 6 ஆயிரம் வாகனங்களுக்கும், வார இறுதி நாட்களில் 8 ஆயிரம் வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி என நீதிபதி.

    இதேபோல், கொடைக்கானலுக்கு வார நாட்களில் 4 ஆயிரம் வாகனங்களும், வார இறுதி நாட்களில் 6 ஆயிரம் வாகனங்களுக்கு மட்டும் அனுமதி.

    வார இறுதி நாட்களில் 8 ஆயிரம் வாகனங்கள் மட்டுமே இயக்க வேண்டும். அரசு பேருந்து, ரெயில்கள் மூலம் வரும் சுற்றுலா பயணிகளுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை.

    உள்ளூர், விவசாய பொருட்கள் எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை. மின்சார வாகனங்ளுக்கு இ-பாஸ் வழங்குவதில் முன்னுரிமை வழங்க வேண்டும்.

    ஊட்டி, கொடைக்கானலுக்கான கட்டுப்பாடுகள் ஜூன் மாதம் வரை அமலில் இருக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    கட்டுப்பாடுகளை ஏப்ரல் 1ம் தேதி முதல் அமல்படுத்தி ஏப்ரல் 25ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    • எதிர்க்கட்சி தலைவருக்கு நேரடியாக முதலமைச்சர் பதிலளித்திருந்தால் பாராட்டி இருப்போம்.
    • நீட், காவிரி உள்ளிட்ட பல விஷயங்களில் தமிழகத்தின் உரிமையை திமுக விட்டுக் கொடுத்துள்ளது.

    தமிழ்நாட்டின் உரிமைகளை மத்திய அரசுக்கு திமுக தாரை வார்க்கும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது:-

    மக்கள் அனுபவிக்கும் எண்ணற்ற கொடுமைகளை பற்றி விவாதிக்க தயாரா ? என எதிர்க்கட்சி தலைவர் கேட்டார். தமிழக உரிமைகளை விட்டுக் கொடுத்தது யார்..? நேரடி விவாதத்திற்கு முதலமைச்சர் தயாரா ?

    எதிர்க்கட்சி தலைவருக்கு நேரடியாக முதலமைச்சர் பதிலளித்திருந்தால் பாராட்டி இருப்போம். நீட், காவிரி உள்ளிட்ட பல விஷயங்களில் தமிழகத்தின் உரிமையை திமுக விட்டுக் கொடுத்துள்ளது.

    திமுகவில் முறைவாசல் செய்து வருபவர் அமைச்சர் ரகுபதி. முறைவாசல் செய்பவர்களுக்கொல்லாம் நாங்கள் பதிலளிக்க வேண்டிய அவசியம் இல்லை.

    சட்டத்துறை அமைச்சராக உள்ள ரகுபதி அதிமுகவில் அடையாளம் காணப்பட்டவர். அமைச்சர் ரகுபதிக்கு மானம், ரோஷம் இருக்கிறதா ?

    கோபாலபுரத்தின் கொத்தடிமையான ரகுபதியிடம் நாங்கள் பேச முடியாது. முதல்வரை விவாதத்திற்கு அழைத்தால் ரகுபதி வருகிறார். ஆட்டை அழைத்தால் குட்டி வருகிறது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • இருவரும் தங்களுக்கு ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
    • மனுவை விசாரித்த நீதிபதி சுந்தர் மோகன், மனுதாரர்கள் இருவருக்கும் நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.

    நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரின்பேரில் பதியப்பட்ட வன்கொடுமை வழக்கின் விசாரணைக்கு ஆஜராகும்படி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு வளசரவாக்கம் போலீசார் சம்மன் அனுப்பினர்.

    சீமான் வீட்டு வாசலில் ஒட்டப்பட்ட சம்மனை சீமான் வீட்டில் உதவியாளராக பணிபுரியும் சுபாகர் கிழித்ததால் போலீசாருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக சுபாகரையும், அவரது வீட்டின் பாதுகாவலரான அமல்ராஜையும் நீலாங்கரை போலீசார் கைது செய்தனர்.

    அமல்ராஜ் வைத்திருந்த கைத்துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நிலையில் இருவரும் தங்களுக்கு ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

    அதில், அரசியல் உள்நோக்கத்துடன் தங்களை போலீசார் கைது செய்திருப்பதாகவும், போலீசார் கூறிய குற்றச்சசாட்டுகள் அனைத்தும் தவறானவை என்றும், துப்பாக்கிக்கு உரிய அனுமதி இருப்பதால் தங்களை ஆயுத தடுப்பு சட்ட பிரிவின் கீழ் போலீசார் கைது செய்திருப்பது சட்டவிரோதமானது என்றும் தெரிவித்திருந்தனர்.

    இந்த மனுவை விசாரித்த நீதிபதி சுந்தர் மோகன், மனுதாரர்கள் இருவருக்கும் நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.

    • சட்டமன்ற உறுப்பினரை பணி செய்ய விடாமல் தடுத்து தாக்கியிருப்பது கண்டிக்கத்தக்கது.
    • திமுகவினரின் பாசிசத்துக்கு மக்கள் முடிவு கட்டும் நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது.

    சேலம் மேற்கு சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட முத்துநாயக்கன்பட்டி ஊராட்சி பாலக்குட்டப்பட்டியில் புதிய பள்ளிக் கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் இன்று தொடங்கப்படுவதைப் பார்வையிடுவதற்காகச் சென்ற பா.ம.க. சட்டமன்ற உறுப்பினரை தாக்கிய சம்பவத்திற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

    சேலம் மேற்கு சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட முத்துநாயக்கன்பட்டி ஊராட்சி பாலக்குட்டப்பட்டியில் ரூ.4.5 கோடியில் புதிய பள்ளிக் கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் இன்று தொடங்கப்படுவதைப் பார்வையிடுவதற்காகச் சென்ற பா.ம.க. சட்டமன்ற உறுப்பினர் அருளை திமுகவினர் தடுத்து நிறுத்தி தள்ளி விட்டுள்ளனர். சட்டமன்ற உறுப்பினரை பணி செய்ய விடாமல் தடுத்து தாக்கியிருப்பது கண்டிக்கத்தக்கது.

    பாலக்குட்டப்பட்டியில் பள்ளிக்கூடம் கட்டும் திட்டம் பா.ம.க. சட்டமன்ற உறுப்பினர் அருளின் மூன்றாண்டு கால தொடர் முயற்சியால் கொண்டு வரப்பட்டது ஆகும். ஒரு சட்டமன்ற உறுப்பினரை அவரது தொகுதிக்குட்பட்ட பகுதியில் அவரது முயற்சியால் கொண்டுவரப்பட்ட திட்டத்தின் தொடக்க விழாவில் கலந்து கொள்ளக்கூட விடாமல் தடுப்பது தான் பாசிசம் ஆகும்.

    திமுகவினரின் பாசிசத்துக்கு மக்கள் முடிவு கட்டும் நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது. சட்டமன்ற உறுப்பினர் அருளை தாக்கியவர்கள் மீது தமிழக அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புமணி கூறியுள்ளார்.

    • முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று உயரிய ஊக்கத்தொகையாக 20 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.
    • சேலஞ்சர்ஸ் பிரிவில் வெற்றி பெற்ற பிரணவ் வெங்கடேசுக்கு பரிசு தொகையாக 6 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.

    உலக ஜூனியர் செஸ் போட்டியில் சாம்பியன் தமிழக வீரர் பிரணவ் வெங்கடேசுக்கு ரூ.20 லட்சம் ஊக்க தொகை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    மொண்டெனேகுரோ நாட்டின், பெட்ரோவாக்கில் நடைபெற்ற பீடே உலக ஜூனியர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த 18 வயதான பிரணவ் வெங்கடேஷ் வெற்றி பெற்று வரலாறு படைத்ததற்காக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று உயரிய ஊக்கத்தொகையாக 20 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.

    பிரணவ் வெங்கடேஷ், 2022-ம் ஆண்டில், கிராண்ட் மாஸ்டர் பட்டத்திற்கு தகுதி பெற்றார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நடத்திய சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் போட்டியில் சேலஞ்சர்ஸ் பிரிவில் வெற்றி பெற்ற பிரணவ் வெங்கடேசுக்கு பரிசு தொகையாக 6 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    நிகழ்ச்சியில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலாளர் முருகானந்தம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி, மற்றும் பிரணவ் வெங்கடேசின் பெற்றோர் உடன் இருந்தனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கிளாம்பாக்கத்தில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு நாளை 270 பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
    • கோயம்பேட்டில் இருந்து நாளை தலா 51 பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

    வார விடுமுறையையொட்டி அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 966 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

    சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு நாளை (14-ந்தேதி) 270 பஸ்களும், 15-ந்தேதி 275 பஸ்களும் இயக்கப்பட உள்ளன.

    கோயம்பேட்டில் இருந்து நாளை (14-ந்தேதி) மற்றும் 15-ந்தேதிகளில் தலா 51 பஸ்களும், மாதவரத்தில் இருந்து தலா 20 பஸ்களும் இயக்கப்பட உள்ளன.

    ×