search icon
என் மலர்tooltip icon
    • அதிகாலை 6.30 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.
    • பாதிப்புகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு.

    ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 4.5 ஆக பதிவாகி உள்ளது. இது குறித்து நிலநடுக்கவியல் மையம் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், இந்திய நேரப்படி இன்று அதிகாலை 6.30 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.

    இந்த நிலநடுக்கம் பூமியில் இருந்து 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் உயிரிழப்பு மற்றும் சேதம் எதுவும் ஏற்பட்டதாக இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. நிலநடுக்கத்தின் பாதிப்புகள் குறித்து அதிகாரிகள் மதிப்பீடு செய்து வருகின்றனர்.

    • இன்றைய முக்கியச் செய்திகள்
    • இன்றைய அரசியல், சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.

    தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்..

    • சூரியனார் கோவில் ஸ்ரீசூரிய நாராயணருக்கு திருமஞ்சன அலங்கார சேவை.
    • திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு மார்கழி-7 (ஞாயிற்றுக்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: சப்தமி மாலை 4.50 மணி வரை பிறகு அஷ்டமி

    நட்சத்திரம்: பூரம் காலை 8.56 மணி வரை பிறகு உத்திரம்

    யோகம்: சித்த, அமிர்தயோகம்

    ராகுகாலம்: மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை

    எமகண்டம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    சூலம்: மேற்கு

    நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    சூரியனார் கோவில் ஸ்ரீசூரிய நாராயணருக்கு திருமஞ்சன அலங்கார சேவை. திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம். நாட்டரசன் கோட்டை ஸ்ரீ கண்ணுடைய நாயகியம்மன், காரைக்கால் ஸ்ரீ கொப்புடையம்மன் கோவில்களில் காலையில் அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமனுக்கு திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை. சாத்தூர் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் புறப்பாடு. ராமேசுவரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் ஊஞ்சலில் காட்சி. வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீ அங்காரகருக்கும், ஸ்ரீ செல்வமுத்துக்குமார சுவாமிக்கும் அபிஷேகம், அலங்காரம். ஸ்ரீவாஞ்சியம் ஸ்ரீ வாஞ்சிநாத சுவாமிக்கு அபிஷேகம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-கடமை

    ரிஷபம்-ஆசை

    மிதுனம்-வெற்றி

    கடகம்-லாபம்

    சிம்மம்-புகழ்

    கன்னி-முயற்சி

    துலாம்- நட்பு

    விருச்சிகம்-இன்பம்

    தனுசு- கவனம்

    மகரம்-மாற்றம்

    கும்பம்-தனம்

    மீனம்-பயணம்

    • புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற அறிவுறுத்தப்பட்டு இருந்தது.
    • காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்தது.

    தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதை தொடர்ந்து, 9 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்ததை தொடர்ந்து 9 துறைமுகங்களில் ஏற்றப்பட்ட 1ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டை இறக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    அதன்படி சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன் மற்றும் தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களில் ஏற்றப்பட்ட 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டினை இறக்கிட வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி இருக்கிறது.

    • ராக்கெட் முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்டு முதலாவது ஏவுதளத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
    • ஒரே குறிக்கோளை கொண்டு விண்ணில் செலுத்தப்படும் பல ராக்கெட் திட்டங்களை ஒருங்கிணைக்க இது உதவும்.

    இந்திய விண்வெளி ஆராய்ச்சிநிறுவனம் (இஸ்ரோ) பல்வேறு விண்வெளி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது, கடந்த ஆண்டு நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்வதற்காக சந்திரயான்- 3, சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்-1 ஆகிய திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தியது. வணிக ரீதியாகவும் வெளிநாட்டு செயற்கைக்கோள்களை விண்ணில் நிலைநிறுத்தியதன் மூலம், உலக சந்தையில் முன்னணி அமைப்பாக திகழ்கிறது. தனது கனவு திட்டமான மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தை செயல்படுத்த இஸ்ரோ தீவிரமாக பணியாற்றி வருகிறது.

    அதன்படி வருகிற 2035-ம் ஆண்டுக்குள் விண்வெளியில் இந்திய ஆய்வு மையத்தையும் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான முன் தயாரிப்பு திட்டமாக ஸ்பேஸ்-எக்ஸ் எனும் திட்டம் தற்போது செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தில் ஸ்பேஸ் டாக்கிங் எனப்படும் விண்வெளியில் விண்கலன்களை ஒருங்கிணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

    பி.எஸ்.எல்.வி.- சி-60 ராக்கெட்டை வருகிற 30-ந்தேதி (திங்கட்கிழமை) விண்ணில் ஏவ முடிவு செய்யப்பட்டு உள்ளது. 'ஸ்பேட் எக்ஸ்' என்ற இந்த பணியில் எஸ்.டி.எக்ஸ்-01 மற்றும் எஸ்.டி.எக்ஸ்-02 என்ற செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படுகிறது. இவை ஒவ்வொன்றும் தலா 220 கிலோ எடை கொண்ட 2 சிறிய செயற்கைக்கோள்கள் பூமியில் இருந்து 470 கிலோ மீட்டர் உயரத்தில் உள்ள வெவ்வேறு சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்படுகிறது.

    ராக்கெட் முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்டு முதலாவது ஏவுதளத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அதன்பின் அவற்றை ஒன்றிணைக்கும் பணிகள் படிப்படியாக மேற்கொள்ளப்படும். இந்த பணிகள் மொத்தம் 66 நாட்கள் நடைபெறும்.

    நிலவில் இருந்து மாதிரி எடுத்து திரும்புதல், இந்தியாவின் விண்வெளி மையம் உருவாக்குதல் மற்றும் இயக்கம் போன்ற இந்தியாவின் விண்வெளி லட்சியங்களுக்கு இந்தத் தொழில்நுட்பம் அவசியம். ஒரே குறிக்கோளை கொண்டு விண்ணில் செலுத்தப்படும் பல ராக்கெட் திட்டங்களை ஒருங்கிணைக்க இது உதவும்.

    திட்ட ஆய்வுக் குழுவின் ஒப்புதல் கிடைத்தவுடன் ஏவுதலுக்கான செயல்பாடுகள் தொடங்கும். இந்த திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்துவதன் மூலம், ஸ்பேஸ் டாக்கிங் தொழில்நுட்பத்தைக் கொண்ட 4-வது நாடாக இந்தியா முன்னேறும்.

    • ராபின் உத்தப்பாவுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.
    • கடன்கள் வடிவில் நிதி அளித்ததால் இயக்குநராக நியமிக்கப்பட்டேன்.

    இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேன்களில் ஒருவராக இருந்தவர் ராபின் உத்தப்பா. தற்போது கிரிக்கெட் மட்டுமின்றி தொலைக்காட்சி தொகுப்பாளர், வர்ணனையாளர் போன்ற துறைகளிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

    இந்நிலையில், ராபின் உத்தப்பாவுக்கு எதிரான வருங்கால வைப்பு நிதி (பி.எஃப்.) மோசடி புகாரைத் தொடர்ந்து ராபின் உத்தப்பாவுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. தன் மீதான கைது வாரண்ட் குறித்து ராபின் உத்தப்பா விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    அதில், "எனக்கு எதிரான பி.எஃப். வழக்கு தொடர்பான சமீபத்திய செய்திகளைத் தொடர்ந்து, ஸ்ட்ராபெரி லென்செரியா பிரைவேட் லிமிடெட், சென்டௌரஸ் லைஃப்ஸ்டைல் பிரான்ட்ஸ் பிரைவேட் லிமிட்டெட் மற்றும் பெர்ரிஸ் ஃபேஷன் ஹவுஸ் உடனான எனது தொடர்பு குறித்து சில விளக்கங்களை வழங்க விரும்புகிறேன்.

    2018-19 ஆம் ஆண்டில், நான் இந்த நிறுவனங்களுக்கு கடன்கள் வடிவில் நிதி அளித்ததால் நான் இயக்குநராக நியமிக்கப்பட்டேன். இருப்பினும், நான் நிர்வாகப் பொறுப்பிலோ, அல்லது அந்நிறுவனங்களின் அன்றாட நடவடிக்கைகளிலோ ஈடுபடவில்லை. ஒரு தொழில்முறை கிரிக்கெட் வீரர், டிவி தொகுப்பாளர் மற்றும் வர்ணனையாளர் என்ற வகையில், அந்நிறுவனங்களின் செயல்பாடுகளில் பங்கேற்க எனக்கு நேரமும் நிபுணத்துவமும் இல்லை. உண்மையில், இன்றுவரை நான் நிதியளித்த வேறு எந்த நிறுவனங்களிலும் நான் நிர்வாகப் பொறுப்பிலும் இல்லை.

     


    வருந்தத்தக்க வகையில், இந்த நிறுவனங்கள் நான் கடனாகக் கொடுத்த நிதியைத் திருப்பிச் செலுத்தத் தவறிவிட்டதால், சட்டப்பூர்வ நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கு என்னை இட்டுச் சென்றது. நானும் பல வருடங்களுக்கு முன் இயக்குனர் பதவியை ராஜினாமா செய்துவிட்டேன்.

    வருங்கால வைப்பு நிதி அதிகாரிகள் நிலுவைத் தொகையை செலுத்தக் கோரி நோட்டீஸ் அனுப்பியபோது, எனது சட்டக் குழு பதிலளித்தது. இந்த நிறுவனங்களில் எனக்கு எந்தப் பங்கும் இல்லை என்பதை எடுத்துக்காட்டுகிறது மற்றும் எனது ஈடுபாடு இல்லாததை உறுதிப்படுத்தும் ஆவணங்களை நிறுவனங்களிடமிருந்து வழங்கியது.

    இருந்த போதிலும், வருங்கால வைப்பு நிதி அதிகாரிகள் நடவடிக்கைகளை தொடர்ந்துள்ளனர். மேலும் எனது சட்ட ஆலோசகர்கள் வரும் நாட்களில் இந்த பிரச்சினையை தீர்க்க தேவையான நடவடிக்கைகளை எடுப்பார்கள். முழுமையான உண்மைகளை தயவுசெய்து முன்வைக்கவும், பகிரப்படும் தகவல்களின் நம்பகத்தன்மையை சரிபார்க்கவும் ஊடகங்களை நான் கேட்டுக்கொள்கிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.

    • இந்த விபத்தில் சிக்கி பலர் காயமுற்றனர்.
    • சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

    சத்தீஸ்கர் மாநிலத்தின் பஸ்தர் மாவட்டத்தில் சரக்கு வாகனம் கவிழ்ந்த விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் சிக்கி பலர் காயமுற்றனர்.

    விபத்து குறித்து அம்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஷ்வர் நாக் கூறும் போது, "ஜக்தல்பூரின் தர்பா காவல் நிலை எல்லைக்கு உட்பட்ட சந்தமேட்டா கிராமத்திற்கு அருகே 45 பேரை ஏற்றிச் சென்ற சரக்கு வாகனம் விபத்தில் சிக்கியது," என்றார். விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் மத்திய ரிசர்வ் காவல் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

    "சரக்கு வாகனம் விபத்தில் சிக்கியதாக மாலை 4.30 மணி அளவில் எங்களுக்கு தகவல் கிடைத்தது. இதுவரை காயமுற்ற 30 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் மருத்துவமனைக்கு அழைத்து வரும் வழியில் உயிரிழந்தார்," என்று மருத்து அதிகாரியான திலீப் காஷ்யப் தெரிவித்தார்.

    இந்த விபத்து நேற்று பிற்பகலில் நடைபெற்ற நிலையில், இது தொடர்பான மேலதிக விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக திலீப் காஷ்யப் தெரிவித்தார்.

    • தொழில் வளர்ச்சி என்ற முறையில் விளைநிலங்கள் பறிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது.
    • விவசாயிகளுக்கு எதிரான தி.மு.க. அரசை இன்னும் ஓராண்டில் மக்கள் தூக்கி எறிய தயாராகி விட்டனர்.

    திருவண்ணாமலை:

    தமிழ்நாடு உழவர் பேரியக்கம் சார்பில் திருவண்ணாமலையில் நேற்று உழவர் பேரியக்க மாநில மாநாடு நடந்தது. அதில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது:

    தொழில் வளர்ச்சி என்ற முறையில் விளைநிலங்கள் பறிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது.

    விவசாயிகளின் நலனுக்காக தி.மு.க. அரசு ஒரு துரும்பையும் கிள்ளிப் போடவில்லை. விவசாயிகளை குண்டர் சட்டத்தில் அடைத்தது தி.மு.க. அரசு.

    விவசாயிகளைக் காக்க முடியாத அரசு ஒரு நிமிடம் கூட நீடிக்கக்கூடாது.

    விவசாயிகளுக்கு எதிரான தி.மு.க. அரசை இன்னும் ஓராண்டில் மக்கள் தூக்கி எறிய தயாராகி விட்டனர்.

    தமிழகத்தில் ஏற்படும் வறட்சி என்பது மனிதர்களால் செயற்கையாக ஏற்படுத்தப்படுவது.

    தண்ணீர் மேலாண்மையை சிறப்பாக செயல்படுத்தா விட்டால் தமிழகம் மோசமான நிலைக்கு தள்ளப்படும். ஆறுகளில் மணல் எடுப்பதை நிறுத்த வேண்டும்.

    சென்னையில் போர் நினைவுச் சின்னம் அருகில் விவசாயிகளைத் திரட்டி முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும். 2025ல் போராட்ட தேதியை அறிவிப்பேன் என தெரிவித்தார்.

    • ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 38 பேர் உயிரிழந்தனர்.
    • மாயமான 100 பேரை தேடும் பணியில் மீட்புக் குழு ஈடுபட்டு வருகிறது.

    கின்ஷசா:

    மத்திய ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடான காங்கோவின் இகியுடர் மாகாணத்தில் புசிரா என்ற ஆறு பாய்கிறது.

    இகியுடர் மாகாணத்தில் இருந்து நேற்று இரவு அண்டை நகருக்கு புசிரா ஆற்றில் நேற்று படகு ஒன்று புறப்பட்டது. அந்தப் படகில் 150க்கும் மேற்பட்டோர் பயணித்தனர்.

    கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட பலர் தங்கள் சொந்த ஊருக்கு அந்தப் படகில் புறப்பட்டுச் சென்றனர்.

    இந்நிலையில், ஆற்றில் பயணித்துக் கொண்டிருந்தபோது திடீரென படகு கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இதில் படகில் பயணித்த அனைவரும் ஆற்றில் தத்தளித்தனர்.

    இதில் ஆற்றில் மூழ்கி 38 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 100 பேர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனர். ஆற்றில் அடித்து செல்லப்பட்டவர்களை தேடும் பணியில் மீட்புக்குழு ஈடுபட்டு வருகிறது.

    கடந்த அக்டோபர் மாதம் படகு கவிழ்ந்த விபத்தில் 78 பேர் பலியானது நினைவிருக்கலாம்.

    • வளைகுடா ஸ்பிக் தொழிலாளர் முகாம் சென்ற பிரதமர் மோடி இந்திய தொழிலாளர்களுடன் உரையாடினார்.
    • ஹாலா மோடி என்ற தலைப்பில் இந்திய வம்சாவளியினர் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

    குவைத்:

    பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறை பயணமாக குவைத் சென்றுள்ளார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்திய வம்சாவளியினர் ஒன்று சேர்ந்து பிரதமர் மோடியை வரவேற்றனர்.

    வளைகுடா ஸ்பிக் தொழிலாளர் முகாமிற்கு சென்ற பிரதமர் மோடி அங்குள்ள இந்திய தொழிலாளர்களை சந்தித்து நலம் விசாரித்தார். அவர்களுடன் உற்சாகமாக கலந்துரையாடினார்.

    குவைத்தின் ஷேக் சாத் அல் அப்துல்லா விளையாட்டு உள்ளரங்கில், ஹாலா மோடி என்ற தலைப்பில் இந்திய வம்சாவளியினர் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், குவைத் ஆட்சியாளர்களுடன் நான் பேசும்போது எல்லாம் இந்தியர்களை அவர்கள் புகழ்ந்து பேசுகின்றனர் என தெரிவித்தார்.

    இதைத்தொடர்ந்து, குவைத்தில் அரேபியன் கோப்பை கால்பந்து தொடரின் தொடக்க விழாவில் பிரதமர் மோடி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார். மேலும், போட்டியையும் கண்டு களித்தார்.

    ×