search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    • இந்துசமய அறநிலையத்துறை சார்பில் 2,713 திருக்கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது.
    • கோவில்களுக்குச் சொந்தமான ரூ.7,197 கோடி மதிப்பிலான நிலங்கள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டது.

    சென்னை:

    வடபழனி முருகன் திருக்கோவிலில் 4 ஜோடிகளுக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு திருமணம் நடத்தி வைத்து சீரிவரிசைப் பொருட்களை வழங்கினார். அதன்பின்னர் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு முதலாம் ஆண்டு 500 ஜோடிகள், இரண்டாம் ஆண்டு 600 ஜோடிகள், மூன்றாம் ஆண்டு 700 ஜோடிகளுக்கு கட்டணமில்லா திருமணம் நடத்தி வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டன.

    இன்று வடபழனியில் நடைபெற்ற 4 ஜோடிகளுக்கான திருமணத்துடன் சேர்த்து இதுவரை திருக்கோவில்கள் சார்பில் 1,786 ஜோடிகளுக்கு 4 கிராம் தங்கத் தாலியுடன் ரூ. 60 ஆயிரம் மதிப்பிலான சீர்வரிசைப் பொருட்களுடன் திருமணங்களை நடத்தி வைத்துள்ளோம்.

    இந்து சமய அறநிலையத்துறை வரலாற்றில் இல்லாத அளவிற்கு 2,713 திருக்கோவில்களுக்கு இதுவரை குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. கோவில்களுக்கு சொந்தமான ரூ.7,197 கோடி மதிப்பிலான 7,436.70 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.

    ஒளிவு மறைவற்ற வகையில், எந்தெந்த பணிகளுக்கு உபயதாரர்கள் நிதியளிக்கின்றார்களோ அதனை முறையாக பயன்படுத்துகின்ற ஆட்சியாக திராவிட மாடல் ஆட்சி திகழ்கிறது.

    தினந்தோறும் பொய்யிலே பிறந்து, பொய்யிலே வளர்ந்த ஒரு மாநில கட்சிக்கு தலைவர் இருப்பாரென்றால், அவர் அண்ணாமலை ஒருவராகத்தான் இருக்க முடியும்.

    காமாலை நோய் பிடித்தவருக்கு கண்டதெல்லாம் மஞ்சள் என்பது போல், எதை எடுத்தாலும் குறை சொல்லியே பழக்கப்பட்ட அண்ணாமலை நிதிநிலை அறிக்கை குறித்து நிறைவாக கூறுவார் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை.

    எங்களை வசை பாடியவர்களும் இன்றைக்கு வாழ்த்து சொல்கிற அளவிற்கு நிதிநிலை அறிக்கையை உலக அரங்கிலே தூக்கி பிடித்த, மதிநுட்பம் நிறைந்த அரசியல் தீர்க்கதரிசியாக முதலமைச்சர் திகழ்கின்றார்.

    நிதிநிலை அறிக்கையானது ஒன்றியம் கடந்து உலக நாடுகள் பாராட்டுகின்ற அளவிற்கு இருக்கின்ற போது மக்களுடைய ஆதரவைப் பெறாத அண்ணாமலை போன்றவர்களுக்கு பதில் சொல்லி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை.

    வேளாண்மை நிதிநிலை அறிக்கையை உண்மையான விவசாய குடிமக்கள் வரவேற்றுக் கொண்டிருக்கின்றார்கள் என தெரிவித்தார்.

    • ஆர்.எஸ்.எஸ். கூட்டங்களில் கலந்து கொண்டது எனக்கு எப்போது மகிழ்ச்சியாக இருந்தது.
    • ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தற்போது 100 ஆண்டுகளை நிறைவு செய்யவுள்ளது.

    பிரபல எழுத்தாளரும், செயற்கை நுண்ணறிவு ஆய்வாளருமான லெக்ஸ் ப்ரீட்மேனுக்கு பிரதமர் மோடி பேட்டி கொடுத்துள்ளார்.இந்த பேட்டியில் பல்வேறு முக்கிய தகவல்களை மோடி பகிர்ந்துள்ளார்.

    அப்போது ஆர்.எஸ்.எஸ். அமைப்பு குறித்த கேள்விக்கு பதில் அளித்த பிரதமர் மோடி, "ஆர்.எஸ்.எஸ். போன்ற புனிதமான அமைப்பின் மூலமாக நான் வாழ்க்கையின் நோக்கத்தையும் விழுமியங்களையும் கற்றுக்கொண்டதை அதிர்ஷ்டமாக கருதுகிறேன்.

    என்னுடைய குழந்தை பருவத்தில் ஆர்.எஸ்.எஸ். கூட்டங்களில் கலந்து கொண்டது எனக்கு எப்போது மகிழ்ச்சியாக இருந்தது. நாட்டிற்கு சேவை செய்ய வேண்டும் என்பதை தான் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு எனக்கு கற்றுக்கொடுத்தது. நாடுதான் அனைத்துக்கும் மேலானது. மக்களுக்குச் செய்யும் சேவை கடவுளுக்குச் செய்வதைப் போன்றது என்பதை ஆர்.எஸ்.எஸ். எங்களுக்குச் சொல்லிக் கொடுத்தது. அத்தகைய ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தற்போது 100 ஆண்டுகளை நிறைவு செய்யவுள்ளது.

    ஆர்.எஸ்.எஸ். அமைப்பு மற்றும் துறவிகளுடன் நேரத்தைச் செலவிட்டதை நான் எனது அதிர்ஷ்டமாகக் கருதுகிறேன். துறவிகளின் வழிகாட்டுதலால் எனது ஆன்மீகத் தேடல் விரிவடைந்தது.

    எனது வாழ்க்கையை ஒழுங்குபடுத்தியதில் ராமகிருஷ்ணா மிஷன், சுவாமி விவேகானந்தர், ஆர்.எஸ்.எஸ். இன் சேவை மனப்பான்மை ஆகியவை முக்கியப் பங்கு வகிக்கின்றன" என்று தெரிவித்தார். 

    • ஒரு சமுதாய நலக்கூடம் அமைத்து தர வேண்டும் என்ற ஊர் மக்கள் கோரிக்கை வைத்தனர்.
    • பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 15 லட்சம் ஒதுக்கீடு.

    நாகர்கோவில் பெருவிளை பகுதியில் ஒரு சமுதாய நலக்கூடம் அமைத்து தர வேண்டும் என்ற ஊர் மக்கள் கோரிக்கை வைத்தனர்.

    இதனை ஏற்று பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 15 லட்சம் ஒதுக்கீடு செய்து அதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது.

    இந்த விழாவில் கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி விஜய் வசந்த் மற்றும் நிர்வாகிகள் கலந்துக் கொண்டு அடிக்கல் நாட்டினர்.

    இதுதொடர்பாக விஜய் வசந்த் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

    • எனது அப்பா தினமும் அதிகாலை 4:30 மணியளவில் டீ கடைக்கு செல்வார்.
    • டீ கடையில் கற்ற அனுபவங்களை எனது பொது வாழ்க்கையில் பயன்படுத்தினேன்

    பிரபல எழுத்தாளரும், செயற்கை நுண்ணறிவு ஆய்வாளருமான லெக்ஸ் ப்ரீட்மேனுக்கு பிரதமர் மோடி பேட்டி கொடுத்துள்ளார்.இந்த பேட்டியில் பல்வேறு முக்கிய தகவல்களை மோடி பகிர்ந்துள்ளார்.

    அந்த பேட்டியில், தனது குழந்தை பருவம் குறித்து பேசிய பிரதமர் மோடி, "நான் என் தந்தையின் தேநீர் கடையில் அமர்ந்திருந்தபோது அங்கு வந்தவர்களிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன். அந்தக் கற்றல்களை எனது பொது வாழ்க்கையில் பயன்படுத்தினேன்

    எனது அப்பா தினமும் அதிகாலை 4:30 மணியளவில் வீட்டை விட்டு கிளம்பி, பல கோயில்களுக்குச் சென்று, பின்னர் தான் டீ கடைக்கு செல்வார். கிராமத்தில் உள்ள மக்கள் எனது அப்பாவின் காலடிச் சத்தத்தை கேட்டாலே அந்த நேரத்தைக் கண்டுபிடிக்க முடியும் என்று சொல்வார்கள். அந்த அளவுக்கு அவர் ஒழுக்கமாக இருந்தார்.

    என் குழந்தைப்பருவம் பெரும் வறுமையிலேயே கழிந்தது. என் வெள்ளை ஷூ-வை பாலிஷ் போட சாக்பீஸ் சேகரித்துக் கொண்டிருப்பேன்" என்று தெரிவித்தார்.

    • நான் பேசிய கருத்தை இட்டுக்கட்டி திரித்து பரப்புகின்றனர்
    • காயப்படுத்தி இருந்தால் வருத்தம் தெரிவிக்கிறேன்

    திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, இஸ்லாமியர்கள் குறித்து இழிவாக பேசியதாக சர்ச்சை எழுந்தது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சிவாஜி கிருஷ்ணமூர்த்தி வீடியோ வெளியிட்டு வருத்தம் தெரிவித்துள்ளார்.

    த.வெ.க. தலைவர் விஜய் அண்மையில் ரம்ஜான் இஃப்தார் நோன்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார். இது தொடர்பாக திமுக கூட்டத்தில் பேசிய சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, "இஸ்லாமியர்கள் குறித்து இழிவாக பேசியதாக கூறப்படுகிறது.

    இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மன்னிப்பு தெரிவித்து அவரது எக்ஸ் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார்.

    அந்த வீடியோவில், "நான் பேசிய கருத்தை வேறுவிதமாக சிலர் இட்டுக்கட்டி திரித்து பரப்புகின்றனர். இஸ்லாமியர்கள் மீது எனக்கு காழ்ப்புணர்ச்சியோ வெறுப்போ இல்லை; என் பேச்சில் வார்த்தை தடுமாறி இருந்தால் அதற்காக என் வருத்ததை பதிவு செய்கிறேன்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

    • கூட்ட நெரிசலைத் தவிர்க்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்ததே இன்றைய உயிரிழப்புக்கு காரணம்.
    • உயிரிழந்த ஓம்குமாரின் குடும்பத்தாருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தரிசனத்திற்காக , 100 ரூபாய் கட்டண வரிசையில் நின்று காத்திருந்த காரைக்குடியை சேர்ந்த ஓம்குமார் (50) என்ற பக்தர் மூச்சுத்திணறி உயிரிழந்தார்.

    இந்நிலையில், "பக்தர் ஓம்குமாரின் உயிரிழப்புக்கு ஸ்டாலின் மாடல் திமுக அரசும், அறநிலையத்துறை அமைச்சருமே முழு பொறுப்பு" என இபிஎஸ் குறிப்பிட்டுள்ளார்.

    இதுகுறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயிலில் தரிசனம் செய்ய 100 ரூபாய் கட்டண வரிசையில் காத்திருந்த காரைக்குடியைச் சேர்ந்த ஓம்குமார் என்பவர் கூட்ட நெரிசலில் மூச்சுத்திணறி உயிரிழந்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

    கடந்த ஜனவரி மாதம் திருச்செந்தூர் கோயிலுக்கு திமுக அரசின் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு

    சென்றிருந்த போதே, கோயிலில் கட்டண வரிசை உட்பட அனைத்து தரிசன வழிகளிலும் கூட்ட நெரிசல் அதிகம் ஏற்படுவதை மக்கள் முறையிட்ட போது, "திருப்பதிக்கு போறான், 24 மணி நேரம் நிப்பான்" என்று பக்தர்களின் உணர்வுகளையும் முறையிடலையும் உதாசீனப்படுத்தி பேசியதோடு அல்லாமல், கூட்ட நெரிசலைத் தவிர்க்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்ததே இன்றைய உயிரிழப்புக்கு காரணம்.

    எனவே, பக்தர் ஓம்குமாரின் உயிரிழப்புக்கு ஸ்டாலின் மாடல் திமுக அரசும், அறநிலையத்துறை அமைச்சருமே முழு பொறுப்பு!

    திருப்பணி என்பது பக்தியுடன் செய்யப்பட வேண்டியது. ஆனால், பகல்வேஷம் போடும் இந்த ஸ்டாலின் மாடல் ஆட்சியில் அதுவும் வெறும் விளம்பர நோக்கத்தில் மட்டும் தான் செய்யப்பட்டு வருகின்றன. கோயிலுக்கு வரும் பக்தர்கள் நிம்மதியாக சாமி தரிசனம் செய்யவேண்டும் என்ற எண்ணம். இந்த அரசுக்கு துளியும் இல்லை. இது கடும் கண்டனத்திற்குரியது.

    உயிரிழந்த ஓம்குமாரின் குடும்பத்தாருக்கு உரிய இழப்பீடு வழங்குவதுடன், இனியேனும் இந்த விளம்பர நாடகங்களை எல்லாம் விட்டுவிட்டு, அறநிலையத்துறையை அதற்குரிய அறத்துடன் வழிநடத்த வேண்டுமென மு.க.ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • தீயை அணைக்கும் பணியில் விருகம்பாக்கம் உள்பட 4 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபட்டுள்ளன.
    • தீ விபத்தால் ராமாபுரம் சுற்றுவட்டாரம் முழுவதும் கரும்புகை சூழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    சென்னை ராமாபுரம் அரசமரம் ஜங்ஷனில் அமைந்துள்ள பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தீயை அணைக்கும் பணியில் விருகம்பாக்கம் உள்பட 4 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபட்டுள்ளன.

    தீ விபத்தால் ராமாபுரம் சுற்றுவட்டாரம் முழுவதும் கரும்புகை சூழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    பிளாஸ்டிக் குடோன், கார் மெக்கானிக் கடை என அடுத்தடுத்து மூன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் தீ பரவியதால் கொளுந்துவிட்டு எரிகிறது.

    • ரஷிய அதிபர் புதினிடம் 'இது போருக்கான நேரம் கிடையாது' என்று என்னால் பேச முடியும்.
    • பேச்சுவார்த்தைக்கு ரஷ்யாவும், உக்ரைனும் உடன்பட்டால் மட்டுமே தீர்வு கிடைக்கும்.

    பிரபல எழுத்தாளரும், செயற்கை நுண்ணறிவு ஆய்வாளருமான லெக்ஸ் ப்ரீட்மேனுக்கு பிரதமர் மோடி பேட்டி கொடுத்துள்ளார்.இந்த பேட்டியில் பல்வேறு முக்கிய தகவல்களை மோடி பகிர்ந்துள்ளார்.

    அதில், உக்ரைன் - ரஷியா போர் குறித்து ப்ரீட்மேன் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த பிரதமர் மோடி, "ரஷியா மற்றும் உக்ரைனுடன் இந்தியா நல்ல நட்புறவை கொண்டுள்ளது. ரஷிய அதிபர் புதினிடம் 'இது போருக்கான நேரம் கிடையாது' என்று என்னால் பேச முடியும்.

    அதேபோல உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியிடம் உங்களுக்காக உலகில் எத்தனையோ மக்கள் ஆதரவாக இருக்கிறார்கள். போரில் நம்மால் ஒருபோதும் நல்ல முடிவை எட்ட முடியாது' என்று எடுத்துக்கூற முடியும்.

    உக்ரைன் - ரஷியா போர் தொடங்கிய நேரத்தில் சமாதானப் பேச்சுவார்த்தைகள் சவாலானதாக இருந்தது. ஆனால், தற்போது சமாதானப் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்கிற நம்பிக்கை உருவாகியுள்ளது.

    பேச்சுவார்த்தை மூலமாக இந்த போரை நிறுத்த முடியும். பேச்சுவார்த்தைக்கு ரஷ்யாவும், உக்ரைனும் உடன்பட்டால் மட்டுமே தீர்வு கிடைக்கும்.

    இந்தப் போரில் இந்தியா யாருக்கும் ஆதரவாக இல்லை. ஆனால், அமைதியின் பக்கமும் சமாதானத்தின் பக்கமும் இந்தியா நிற்கிறது. இந்தப் போரினால் உலக நாடுகளே பாதிப்பு அடைந்துள்ளது.

    இந்த போரினால் உணவு, எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே, அமைதியை ஏற்படுத்துவதற்கு உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும். நான் நடுநிலையானவன் கிடையாது. நான் எப்போதும் அமைதியின் பக்கம் நிற்கிறேன்'' என்று தெரிவித்தார்.


    • வைரமுத்துவை பாராட்ட பல்வேறு நாட்டு அறிஞர்கள் வந்தது பெருமைக்குரியது.
    • பல்வேறு நாடுகளின் அறிஞர்கள், பேராசியிர்கள் உள்ளிட்ட 22 பேர் வைரமுத்தியம் விழாவுக்கு வந்துள்ளனர்.

    சென்னை எம்ஆர்சி நகரில் வைரமுத்தியம் என்ற பெயரிலான கவிஞர் வைரமுத்துவின் படைப்பிலக்கிய பன்னாட்டு கருத்தரங்கம் நடைபெற்றது.

    அங்கு வைரமுத்துவின் படைப்பிலக்கியம் பன்னாட்டு கருத்தரங்கத்தில் கட்டுரை நூலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இதனை எம்பி ஜெகத்ரட்சகன் பெற்றுக் கொண்டார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    பொன்மாலை பொழுதில் தன் திரையிசை வாழ்வை தொடங்கிய வைரமுத்துவுக்கு இது உண்மையிலேயே பொன்னான நாள்.

    இப்படி ஒரு கருத்தரங்கில் பங்கேற்பதை நான் மிகவும் பெருமையாக கருதுகிறேன்.

    தமிழின் புகழை உலகெல்லாம் கொண்டு சேர்த்த வைரமுத்துவை பாராட்ட பல்வேறு நாட்டு அறிஞர்கள் வந்தது பெருமைக்குரியது.

    பல்வேறு நாடுகளின் அறிஞர்கள், பேராசியிர்கள் உள்ளிட்ட 22 பேர் வைரமுத்தியம் விழாவுக்கு வந்துள்ளனர்.

    உலக கவியாக அங்கீகரிக்கப்பட்டுவிட்டார் வைரமுத்து என்றே எண்ணத் தோன்றுகிறது.

    கலைஞரின் இலக்கிய மகன் வைரமுத்து. வைரமுத்துவின் 17 படைப்புகளை கலைஞர் வெளியிட்டிருக்கிறார். வைரமுத்துவுக்கு கவிப்பேரரசர் என பெயரிட்டு அழைத்தவர் கலைஞர்.

    இலக்கியத்தின் எல்லா பக்கங்களிலும் நுழைந்து வெற்றியை சாதித்து காட்டியவர் வைரமுத்து.

    நமது ஜெகத்ரட்சகன் எம்பி வஞ்சனையில்லாமல் அனைவரையும் பாராட்டக் கூடியவர்.

    இவ்வாறு கூறினார்.

    • நாம் பட்ஜெட்டில் குறிப்பிட்ட ரூ என்பதை தமிழை பிடிக்காதவர்கள் பெரிய செய்தியாக்கிவிட்டனர்.
    • மத்திய நிதி அமைச்சரே பலமுறை ரூ என்ற குறியீட்டை பயன்படுத்தியுள்ளனர்.

    தமிழக பட்ஜெட்டில் ரூ என குறிப்பிடப்பட்டது பூதாகரமாக வெடித்தது ஏன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

    இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:-

    மொழிக் கொள்கையில் நாம் எந்தளவுக்கு உறுதியுடன் உள்ளோம் என்பதை காட்டவே ரூ என்ற எழுத்தை பெரிதாக வைத்தோம்.

    நாம் பட்ஜெட்டில் குறிப்பிட்ட ரூ என்பதை தமிழை பிடிக்காதவர்கள் பெரிய செய்தியாக்கிவிட்டனர்.

    மத்திய நிதி அமைச்சரே பலமுறை ரூ என்ற குறியீட்டை பயன்படுத்தியுள்ளனர். கல்வி நிதி கேட்ட போதெல்லாம் பதில் பேசாத மத்திய நிதியமைச்சர் ரூ என்று மாற்றப்பட்டதை பற்றி பேசுகிறார்.

    ஆங்கிலத்தில் கூட Rs என்றே பயன்படுத்துகின்றனர். அதெல்லாம் பிரச்சனையாக தெரியாதவர்களுக்கு ரூ மட்டும் பிரச்சனையாக உள்ளது" என்றார்.

    தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை குறித்து ஆங்கில நாளேடுகளில் வௌியான செய்திகளை சுட்டிக்காடி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்தோடு கூறினார்.

    அப்போது அவர்," தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையை அனைத்து ஆங்கில நாளேடுகளும் பாராட்டியுள்ளன" என்றார்.

    • ரெயில்வே துறைக்கு அதிமுக, பாமக, காங்கிரஸ் கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.
    • ரெயில்வே அமைச்சருக்கு மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் கடிதம் எழுதினார்.

    தெற்கு ரெயில்வே உதவி லோகோ பைலட் 493 பணியிடங்களுக்கு 2ஆம் கட்டத்தேர்வு மார்ச் 19ல் நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்வு அருகாமை மையங்களில் நடந்த நிலையில், 2ஆம் கட்ட தேர்வுக்கு தெலங்கானாவில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாட்டு தேர்வர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    இந்த விவகாரம் தொடர்பாக ரெயில்வே துறைக்கு அதிமுக, பாமக, காங்கிரஸ் கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. இதனிடைய தொடர்பாக ரெயில்வே அமைச்சருக்கு மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் கடிதம் எழுதினார்.

    இந்நிலையில், தமிழக தேர்வர்களுக்கு தெலுங்கானாவில் தேர்வு மையம் ஒதுக்கியது தொடர்பாக ரெயில்வே தேர்வு வாரியம் விளக்கம் அளித்துள்ளது.

    அதில், ரெயில்வேயில் உதவி லோகோ பைலட் பணிக்கான இரண்டாம் கட்டத் தேர்வு அனைவருக்கும் ஒரே நேரத்தில் நடத்தப்படுவதால் விண்ணப்பதாரர்களுக்கு முடிந்த அளவு சொந்த மாநிலத்திலேயே தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. சொந்த மாநிலத்தில் தேர்வு மையம் ஒதுக்க முடியாத சூழலில் அண்டை மாநிலங்களில் மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் எந்த பாகுபாடும் காட்டப்படவில்லை; இது ஏற்கனவே பின்பற்றப்படும் நடைமுறைதான். இட ஒதுக்கீட்டுப் பிரிவு தேர்வர்கள், ரெயிலில் இலவசமாக பயணிக்க பாஸ் தரப்படும்

    • ஆடைக் கட்டுப்டுகளை பின்பற்றாத பெண்களைக் கண்காணித்து தண்டிக்க டிஜிட்டல் கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன.
    • இந்தப் பெண்கள் இந்தக் குற்றச்சாட்டிற்காக மரண தண்டனையை எதிர்கொள்ள நேரிடும் என்று ஐநா அறிக்கை தெரிவித்துள்ளது.

    உலகம் முழுவதும், மக்களுக்கான சேவைகளை வழங்க  ஏஐ மற்றும் நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் ஈரான் இந்த விஷயத்தில் மிகவும் வித்தியாசமானது. இங்கு ஹிஜாப் சட்டத்தை கடுமையாக அமல்படுத்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.

    இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பெண்கள் மற்றும் சிறுமிகளை குறிவைத்து, எதிர்ப்பை அடக்குவதற்கு, செயற்கை நுண்ணறிவு மற்றும் வெகுஜன கண்காணிப்பை ஈரான் அதிகரித்துள்ளதாக ஐ.நா.வின் அறிக்கை தெரிவிக்கிறது.

    ஈரான் பெண்கள், சிறுமிகள் ஹிஜாப் அணிந்திருப்பதை உறுதி செய்ய ட்ரோன்கள் மற்றும் face recognition போன்ற மேம்பட்ட கண்காணிப்பு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது என்று ஐநா அறிக்கை கூறுகிறது.

     

    ஐ.நா அறிக்கையின்படி, ஈரான் தனது கட்டாய ஹிஜாப் சட்டத்தை அமல்படுத்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது. ஆடைக் கட்டுப்டுகளை பின்பற்றாத பெண்களைக் கண்காணித்து தண்டிக்க டிஜிட்டல் கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன.

    இதற்காக, நாசர் மொபைல் சிஸ்டம் பயன்படுத்தப்படுகிறது. இது ஹிஜாப் சட்டங்களை மீறும் பெண்களைப் புகாரளிக்க காவல்துறை மற்றும் பொதுமக்கள் ஆகிய இருவருக்கும் உதவுகிறது. இந்த செயலி உதவியுடன் வாகனத்தில் ஹிஜாப் அணியாமல் இருக்கும் பெண்களுடைய வாகன நம்பர் பிளேட், இடம் மற்றும் விதிமீறல் நேரம் ஆகியவை அதிகாரிகளைச் சென்றடைகின்றன.

    மீண்டும் மீண்டும் விதிமீறல்கள் ஏற்பட்டால் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என்று வாகன உரிமையாளருக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பப்படும்.

    செப்டம்பர் 2024 முதல், ஆம்புலன்ஸ்கள், டாக்சிகள் மற்றும் பொதுப் போக்குவரத்தில் பயணிக்கும் பெண்களும் இதன்மூலம் கண்காணிக்கப்படுகிறார்கள். இந்த செயலியைத் தவிர, ஹிஜாப் விதிகளை கண்காணிக்க ஈரானிய அரசாங்கம் தெஹ்ரான் மற்றும் தெற்கு பிராந்தியங்களில் வான்வழியாக டிரோன்களை அனுப்பத் தொடங்கியுள்ளது.

    ஹிஜாப் சட்டம் ஈரானின் பாதுகாப்புப் படைகளுக்கு விதிகளைச் செயல்படுத்த விரிவாக்கப்பட்ட அதிகாரங்களை வழங்கும். ஈரானின் இஸ்லாமிய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 286 இன் கீழ், இந்தப் பெண்கள் இந்தக் குற்றச்சாட்டிற்காக மரண தண்டனையை எதிர்கொள்ள நேரிடும் என்று ஐநா அறிக்கை தெரிவித்துள்ளது.

    2022 ஆம் ஆண்டு அறநெறிப் போலீசாரின் காவலில் 22 வயதான மஹ்சா அமினி இறந்ததைத் தொடர்ந்து போராட்டங்கள் தொடங்கின. அதைத் தொடர்ந்து நடந்த அடக்குமுறையில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டதாக ஐநா சபை மதிப்பிட்டுள்ளது. 

    ×