search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எப்படி பந்து வீசினாலும் வெளுத்து வாங்கிய ஷேவாக்: அஸ்வின் வெளியிட்ட ருசிகர தகவல்கள்
    X

    எப்படி பந்து வீசினாலும் வெளுத்து வாங்கிய ஷேவாக்: அஸ்வின் வெளியிட்ட ருசிகர தகவல்கள்

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான ஆர்.அஸ்வின் டெலிவிஷன் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில் முன்னாள் வீரர் ஷேவாக்கின் அதிரடி குறித்து மனம் திறந்து பேசி இருக்கிறார்.
    புதுடெல்லி :

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான ஆர்.அஸ்வின் டெலிவிஷன் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில் முன்னாள் வீரர் ஷேவாக்கின் அதிரடி குறித்து மனம் திறந்து பேசி இருக்கிறார். அதன் விவரம் வருமாறு:-

    ஷேவாக் ஒருபோதும் சிக்கலானவர் அல்ல. ஆனால் அவர் எனது நம்பிக்கையை குலைத்து இருக்கிறார். இலங்கையில் டம்புல்லா மைதானத்தில் பயிற்சியில் அவருக்கு பந்து வீசினேன். ஆப் ஸ்டம்புக்கு வெளியே வீசிய முதல் பந்தை அவர் ‘கட் ஷாட்’ அடித்தார். அடுத்து ஆப் ஸ்டம்பை குறி வைத்து வீசிய பந்தையும் ‘கட் ஷாட்’ அடித்தார்.

    மிடில் ஸ்டம்ப், லெக் ஸ்டம்பை நோக்கி வீசிய பந்துகளையும் இதே போல் ‘கட்’ செய்து அடித்தார். எனக்கு என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. அடுத்து அவர் பக்கத்தில் பிட்ச் ஆகும் வகையில் வீசினேன். அந்த பந்தை இறங்கி வந்து சிக்சருக்கு தூக்கினார். அதனால் என்ன செய்வது என்பது தெரியாமல் திகைத்தேன். ஒன்று நான் சிறப்பாக பந்து வீசவில்லை. இல்லையெனில் அவர் நன்றாக ஆடுகிறார் என்று மனதில் நினைத்து கொண்டேன். உண்மையை சொல்லப்போனால் தெண்டுல்கருக்கு பந்து வீசிய போது கூட இதுபோல் நான் திணறியது கிடையாது.



    இதனால் எனக்குள் ஆர்வம் அதிகரித்தது. ஷேவாக்கை தொடர்ந்து கவனித்து வந்தேன். பிறகு என்னால் ஷேவாக்கிடம் கேட்காமல் இருக்க முடியவில்லை. எனது பந்து வீச்சை மேம்படுத்த என்ன செய்ய வேண்டும் என்று ஷேவாக்கிடம் ஒருநாள் கேட்டு விட்டேன். தெண்டுல்கரிடம் கேட்டு இருந்தால் ஏதாவது உதவிகரமான ஆலோசனை அளித்து இருப்பார்.

    டோனியிடம் கேட்டு இருந்தால் அவரது கண்ணோட்டத்தை சொல்லி இருப்பார். ஆனால் ஷேவாக் என்ன சொன்னார் தெரியுமா?. “நான் ஆப்-ஸ்பின்னர்களை பந்து வீச்சாளர்களாகவே நினைப்பது இல்லை என்பது உனக்கு தெரியுமா?. அவர்கள் எனக்கு நெருக்கடியாக இருந்தது இல்லை. அவர்கள் பந்து வீச்சை விளாசுவது எனக்கு எளிதாக இருக்கிறது’ என்றார். எப்படி வீசினாலும் ‘கட் ஷாட்’ அடிக்கிறீர்களே அது எப்படி சாத்தியமாகியது என்று நான் கேட்டதற்கு ‘எந்த வகை சுழற்பந்து வீச்சாக இருந்தாலும் அதற்கு எதிர்திசையில் பந்தை விளாசுவது எனது வாடிக்கையாகும்’ என்று பதிலளித்தார்.

    அடுத்த நாள் எனது பந்து வீச்சில் வித்தியாசமாக முயற்சித்து பார்த்தேன். இருப்பினும் அவர் எந்த பக்கத்தில் பந்து வீசினாலும் நொறுக்கினார். ஏதோ தெருவில் கிரிக்கெட் விளையாடுபவரை போல் என்னை பாவித்து அடித்து ஆடினார். ஷேவாக் பல நாட்கள் எனது பந்து வீச்சை சிதறடித்த பிறகு அவரை எப்படி வீழ்த்துவது சாத்தியம் என்ற யுக்தியை கண்டுபிடித்தேன்.



    அவருக்கு எதிராக பந்து வீசுகையில் ஒவ்வொரு பந்தையும் நல்ல மோசமான பந்தாக வீச வேண்டும். ஏனெனில் அதனை அவர் எதிர்பார்க்கமாட்டார். நாம் சிறப்பாக பந்து வீசுவோம் என்று அவர் எதிர்பார்க்கையில் நாம் இப்படி மோசமாக பந்து வீசினால் அவரை வீழ்த்த போதுமானதாக இருக்கும். இதேபோல் பந்து வீசி அவரை ஐ.பி.எல். போட்டியில் சில சமயங்களில் வீழ்த்தி இருக்கிறேன். அவரது கர்வத்துக்கு எதிராக நாம் பந்து வீச வேண்டியது அவசியமானது என்பதை உணர்ந்தேன்.

    ரோட்டாக்கில் நடந்த ஒரு உள்ளூர் போட்டியில் காய்ச்சலுடன் ஆடிய ஷேவாக் ஹர்பஜன்சிங் பந்து வீச்சில் 12 சிக்சர்கள் விளாசிய சம்பவத்தை என்னிடம் சொன்னார். தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கி 2 சிக்சர் அடித்து விட்டு காய்ச்சலால் வெளியேறிய அவர் கடைசி விக்கெட்டுக்கு மீண்டும் களம் திரும்பி 10 சிக்சர்கள் விளாசி இருக்கிறார். அது எப்படி என்று கேட்டதற்கு, ‘பந்து நன்றாக சுழன்றதால் ஒவ்வொரு பந்தையும் லெக் சைடில் அடிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். அவர் ஆப் ஸ்டம்பை தாண்டி வீசினாலும் லெக் சைடில் சிக்சருக்கு தூக்கினேன்’ என்று தெரிவித்தார். ஷேவாக்கை பொறுத்த வரையில் நல்ல பந்துகளை விளாசி விடுவார். எனவே அவருக்கு மோசமான பந்துகளை வீசுவது தான் உத்தமம் என்பதை உணர்ந்தேன். அதற்கு தகுந்த பலனும் கிடைத்தது.

    இவ்வாறு அஸ்வின் கூறியுள்ளார்.
    Next Story
    ×