search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வெயிலில் மயங்கி விழுந்த பச்சைக்கிளி... தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்திய போலீஸ்காரர்
    X

    வெயிலில் மயங்கி விழுந்த பச்சைக்கிளி... தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்திய போலீஸ்காரர்

    • வெயிலில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ளும் வகையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகிறது.
    • பொதுமக்களுக்கு நீர்ச்சத்து இழப்பு ஏற்படாதவாறு பல்வேறு இடங்களில் உப்பு-சர்க்கரை கரைசல் வழங்கப்படுகிறது.

    நெல்லை:

    தமிழகம் முழுவதும் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. பகலில் வெப்ப அலை வீசுவதால் வெளியில் செல்லும் மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.

    நெல்லையில் கடந்த 15 நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளது. கடந்த 4-ந்தேதி முதல் அக்னி நட்சத்திர வெயில் அனலாக சுட்டெரிப்பதால் மக்கள் வெளியில் நடமாட முடியாதவாறு தவிக்கின்றனர். கடந்த சில தினங்களாக 106 டிகிரி வெயில் கொளுத்தி வருகிறது. வெயிலில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ளும் வகையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகிறது. பொதுமக்களுக்கு நீர்ச்சத்து இழப்பு ஏற்படாதவாறு பல்வேறு இடங்களில் உப்பு-சர்க்கரை கரைசல் வழங்கப்படுகிறது.

    நெல்லையில் நேற்று முன்தினம் 106.7 டிகிரி வெயில் கொளுத்தியது. இதனால் மக்கள் பெரிதும் தவிப்புக்கு உள்ளானார்கள். அப்போது நெல்லை கலெக்டர் அலுவலக நுழைவுவாயில் பகுதியில் வெயிலுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் பச்சைக்கிளி மயங்கி விழுந்தது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர் பாலசுப்பிரமணியன் அந்த கிளியை எடுத்து சென்று, சக போலீஸ்காரர்கள் உதவியுடன் அங்குள்ள குடிநீர் தொட்டியில் வைத்து தண்ணீர் தெளித்தார்.

    அதற்கு தண்ணீரும் பருக கொடுத்தார். இதையடுத்து கண் விழித்த கிளி தன்னை மெல்ல ஆசுவாசப்படுத்தி கொண்டு பறக்க தயாரானது. அதற்கு பொரிகடலையை போலீசார் வழங்கினர். அவற்றை உண்ட பின்னர் கிளி பறந்து சென்றது. வெயிலில் மயங்கிய பச்சைக்கிளிக்கு தண்ணீர் தெளித்து ஆசுவாசப்படுத்திய நிகழ்ச்சி காண்போரை நெகிழ்ச்சி அடையச் செய்தது.

    Next Story
    ×