என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

விஜய் சுற்றுப்பயணம்- போலீசாரின் நிபந்தனைகளை ஏற்க த.வெ.க. மறுப்பு
- திருச்சி மரக்கடை பகுதியில் விஜய் பிரசாரம் செய்து பேசுவதற்கு போலீசார் அனுமதி அளித்தனர்.
- பேசும் இடங்களை தவிர மற்ற இடங்களில் விஜய் பிரசார வாகனத்தின் வெளியே வரக்கூடாது.
தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். வருகிற 13-ந் தேதி திருச்சி மாவட்டத்தில் இருந்து அவர் தனது பிரசார பயணத்தை தொடங்க திட்டமிட்டுள்ளார். இதில் 13-ந்தேதி காலை 10.30 மணிக்கு சென்னையில் இருந்து திருச்சிக்கு வரும் விஜய் முதலில் டி.வி.எஸ். டோல்கேட், தலைமை தபால் நிலையம், மேலப்புதூர், பாலக்கரை, மார்க்கெட் வழியாக வந்து திருச்சி காந்தி மார்க்கெட் பகுதி மரக்கடை எம்.ஜி.ஆர். சிலை அருகில் உரையாற்றுவார் என்று கூறப்படுகிறது.
இது தொடர்பாக கடந்த 6-ந் தேதி த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், போலீஸ் கமிஷனர் காமினியை சந்தித்து மனு அளித்தார். அந்த மனுவில், டி.வி.எஸ். டோல்கேட், தலைமை தபால் நிலையம், மேலப்புதூர், பாலக்கரை, மார்க்கெட் வழியாக வந்து சத்திரம் பஸ் நிலையம் அருகே உரையாற்ற அனுமதி அளிக்குமாறு கூறப்பட்டிருந்தது. ஆனால் போலீசார், பொதுக்கூட்டத்திற்கு மட்டுமே அனுமதி, 'ரோடு ஷோ' நடத்த அனுமதி இல்லை என்று தெரிவித்துள்ளனர். மேலும் திருச்சி காந்தி மார்க்கெட் மரக்கடை பகுதியில் மக்கள் சந்திப்பு பயணத்தை நடத்தி கொள்ளுமாறு போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து நேற்று திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு, த.வெ.க. திருச்சி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் குடமுருட்டி கரிகாலன் தலைமையில் நிர்வாகிகள் ஒரு மனு அளிக்க போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தனர். ஆனால் த.வெ.க.வினர் அனுமதி கேட்கும் கடிதத்துடன் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனரை சந்திக்க போலீசார் அனுமதி மறுத்துவிட்டனர்.
மேலும் திருச்சி மாநகர போலீஸ் துணை கமிஷனரை சந்தித்து, பிரசார பயணத்திற்கு அனுமதி கடிதம் கொடுக்குமாறு போலீசார் அறிவுறுத்தினர். இருப்பினும் நீண்ட நேரமாக த.வெ.க.வினர் கமிஷனர் அலுவலகம் முன்பு காத்திருந்தனர். இதனால் போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் துணை கமிஷனரை சந்திக்க புறப்பட்டனர்.
அதன்படி அவர்கள் திருச்சி சத்திரம் பஸ் நிலையம் எஸ்.ஆர்.சி. கல்லூரி அருகில் உள்ள திருச்சி மாநகர வடக்கு போலீஸ் துணை கமிஷனர் அலுவலகத்திற்கு சென்றனர். அங்கு வடக்கு போலீஸ் துணை கமிஷனர் சிபினை சந்தித்து, விஜய் பிரசாரத்திற்கு அனுமதி கோரி மனு அளித்தனர். இதைத்தொடர்ந்து திருச்சி மரக்கடை பகுதியில் விஜய் பிரசாரம் செய்து பேசுவதற்கு போலீசார் அனுமதி அளித்தனர். ஆனால் ஊர்வலம் நடத்த அனுமதி இல்லை என்று தெரிவித்தனர். இதையடுத்து திருச்சி மரக்கடை பகுதியில் த.வெ.க. தலைவர் பிரசாரம் செய்வது உறுதியாகி உள்ளது.
இந்நிலையில் விஜய் சுற்றுப்பயணத்திற்காக போலீசார் விதித்த நிபந்தனைகள் ஏற்க முடியாதது என த.வெ.க.வினர் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.
பொதுமக்களின் சிரமங்களை கருத்தில் கொண்டு, 'ரோடு ஷோ' நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. விஜய் வாகனத்தின் பின்னால் அதிக அளவில் வாகனங்கள் செல்லவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பேசும் இடங்களை தவிர மற்ற இடங்களில் விஜய் பிரசார வாகனத்தின் வெளியே வரக்கூடாது எனவும் போலீசார் நிபந்தனை விதித்தனர்.
காவல்துறையின் குறிப்பிட்ட நிபந்தனைகளை ஏற்க த.வெ.க.வினர் மறுப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து இன்று காலை 11 மணிக்கு மீண்டும் காவல் துணை கமிஷனர் அலுலவகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.






