என் மலர்tooltip icon
    • இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
    • ராய்பூரில் உள்ள மேக்னெட்டோ மாலில் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன.

    இயேசு கிறிஸ்து பிறந்த தினம் உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

    சத்தீஸ்கர் மாநில தலைநகர் ராய்பூரில் உள்ள மேக்னெட்டோ மாலில் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில், மாலுக்குள் புகுந்த கும்பல் ஒன்று கிறிஸ்துமஸ் அலங்காரங்களை சேதப்படுத்தி அராஜகத்தில் ஈடுபட்டனர்.

    மேலும், மாலில் வேலைபார்க்கும் ஊழியர்களையும் அந்த கும்பல் மிரட்டியுள்ளனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    சில நாட்களுக்கு முன்பு ஒடிசாவில் தெருவோரத்தில் கிறிஸ்தவப் பொருட்களை விற்பனை செய்து வந்த மக்களை மிரட்டிய மதவாத கும்பல், உடனடியாக அவர்களை காலி செய்ய சொன்ன வீடியோ இணையத்தில் வைரலானது.இந்த வீடியோவில், :இது இந்து ராஷ்டிரம்.. இங்க கிறிஸ்தவப் பொருட்களை விற்கக் கூடாது.." என்று அந்த கும்பல் மிரட்டியது குறிப்பிடத்தக்கது.

    • இயேசு பிறந்தபோது வானில் தோன்றிய ஒரு நட்சத்திரத்தைப் பின்பற்றி, கிழக்கத்திய ஞானிகள் அவரை வணங்கச் சென்றனர்.
    • இயேசு கிறிஸ்துவால் போதிக்கப்பட்ட கருணை, மன்னிப்பு ஆகிய மாண்புகள் மீது நமது நம்பிக்கையை உறுதிப்படுத்துவதாக கிறிஸ்துமஸ் விழா அமைகிறது.

    கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. நேற்று நள்ளிரவில் இருந்தே கொண்டாட்டங்கள் தொடங்கிவிட்டது. இந்த நாளில் கிறிஸ்தவர்களின் வீடுகளில் மரம் வைத்து, ஸ்டார் தொங்கவிட்டு, வண்ண விளக்குகளால் அலங்கரித்து இயேசுவின் பிறப்பை கொண்டாடுவர். மத எல்லைகளைத் தாண்டி, அன்பு, கருணை, அமைதி ஆகிய மனிதநேய மதிப்புகளைப் பரப்பும் விழாவாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது.

    பாவிகளை ரட்சிக்க பாலகனாய் இயேசு அவதரித்த நாள் இது. உலகத்தை இருளில் இருந்து மீட்டு, மக்களின் வாழ்வில் புதிய ஒளியை வழங்க அவதரித்தவர் இயேசு கிறிஸ்து. நமக்காகவே பிறந்த அவர் இந்த பூமியில் அவதரித்து மக்களுக்காக பட்ட துன்பங்கள், அவரின் தியாகத்திற்கு நன்றியைத் தெரிவிக்கும் முக்கிய நாளாக இது அமைகிறது.

    அன்னை மேரியின் கனவில், கேப்ரியல் என்ற தேவதை தோன்றி, அவள் கருவுற்றிருப்பதையும், அவள் ஒரு மகனை ஈன்றெடுக்க போகிறாள் என்றும், அந்த குழந்தை இறைவனின் குழந்தை, தேவ தூதன் என்றும் தெரிவித்தது. அதன்படி மேரி கருவுற்றாள்.

    பிரசவ காலத்தின்போது பெத்லகேமில் இரவு நேரத்தில் எங்கு தங்குவது என தெரியாமல் திகைத்து போய் இருந்த மேரி, ஆடு மேய்ப்பவர் ஒருவரிடம் உதவி கேட்டாள்.

    அவரும் அன்று இரவு தன்னுடைய ஆடு, மாடுகளை பாதுகாக்கும் தொழுவத்தில் தங்குவதற்கு மேரிக்கு இடம் கொடுத்தார். அடுத்த நாள் இயேசு கிறிஸ்துவை, மேரி ஈன்றெடுத்தாள்.

    இயேசு பிறந்த நேரம், அருகிலுள்ள புல்வெளியில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த இடையருக்கு இறைத்தூதர் தோன்றி பெத்லகேமில் மீட்பர் பிறந்திருக்கிறார் என்ற நற்செய்தியை அறிவிக்கிறார். மேலும் பரலோக இறைத்தூதர் அனைவரும் "உன்னதங்களிலே கடவுளுக்கு மகிமை உண்டாகுக, இப்பூமியில் நல்மனதோருக்கு அமைதியுமாகுக" என பாடினர். இடையர் எழுந்து நகருக்குள் சென்று குழந்தை இயேசுவை கண்டு வணங்கினார்கள்.

     

    இயேசு பிறந்தபோது வானில் தோன்றிய ஒரு நட்சத்திரத்தைப் பின்பற்றி, கிழக்கத்திய ஞானிகள் அவரை வணங்கச் சென்றனர். ஞானிகளுக்கு வழிகாட்டிய நட்சத்திரத்தை அடையாளப்படுத்தவே கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் நட்சத்திரங்கள் இடம் பெறுகின்றன.

    இயேசு பிறப்பதற்கு முன் உலகில் பல அநியாயங்களும், தீமைகளும் பரவி இருந்தது. தீமைகள் அனைத்தையும் அழித்து, உலகை அமைதியானதாக மாற்றினார் இயேசு கிறிஸ்து.

    இயேசுகிறிஸ்து ஆண்டவனின் ஒரே குமாரன். அவரை தேவன் நினைத்திருந்தால் ஏதேனும் ஓர் அரண்மனையில் பிறக்க வைத்திருக்கலாம். ராஜாவாக வாழ வைத்திருக்கலாம். சகல ஜனங்களையும் அவருக்குக் கீழ்படியுமாறு செய்திருக்கலாம். இன்றைக்கு பலரும் தன் மகனை எப்படி வாழ வைக்க வேண்டும் என்னும் பெருங்கனவோடு இருக்கிறார்கள். ஆனால் இந்தப் பிரபஞ்சத்தையே படைத்த அந்த இறைவன் தன் மகனை ஒரு தொழுவத்தில் பிறக்கவும், கந்தல் துணிகளால் சுற்றிக்கிடக்கவும் செய்தார். காரணம் இறைவன் தான் விரும்புவது எளிமையின் ரூபமே என்பதை உணர்த்த விரும்பினார். அந்த எளிமை அவர் வாழ்நாள் முழுவதும் அவரோடு இருந்தது.

    "நமக்கு ஒரு பாலகன் பிறந்தார். நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார். கர்தத்துவம் அவர் தோளின் மேல் இருக்கும். அவர் நாமம் அதிசயமானவர். ஆலோசனைக் கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதான பிரபு என்னப்படும்" -ஏசாயா (9 : 16)

    கிறிஸ்து பிறப்புக்கு முன்பாக 7-ம் நூற்றாண்டின் மத்தியில் தோன்றிய ஏசாயா கூறிய தீர்க்க தரிசனம் இது.

    "இதோ எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர், உங்களுக்கு தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்". (லூக் 2 : 10-11)

    இயேசு கிறிஸ்துவால் போதிக்கப்பட்ட கருணை, மன்னிப்பு ஆகிய மாண்புகள் மீது நமது நம்பிக்கையை உறுதிப்படுத்துவதாக கிறிஸ்துமஸ் விழா அமைகிறது.

    கிறிஸ்துமஸ் பண்டிகை டிசம்பர் 25 என்பது முதன் முதலாக கி.பி.154-ம் ஆண்டு போப் ஜூலியசால் அறிவிக்கப்பட்டது. இருப்பினும் 221 ஆம் ஆண்டில் செக்ஸ்டஸ் ஜூலியஸ் ஆப்ரிக்கன்ஸ் என்பவரால் இயேசு பிறந்த தேதி இதுதான் என முதன் முதலில் அடையாளம் காணப்பட்டு அன்றைய நாள் முதல் டிசம்பர் 25 அன்று உலகளவில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.

    இயேசு கிறிஸ்துவானவர் ஒவ்வொருவர் இருதயத்திலே பிறந்து, அவருடைய பண்புகளாலும், செய்கைகளாலும் அன்பும் கருணையும் நிறைந்தவர்களாய் காணப்படுவதே, கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் உண்மையான நோக்கமாகும். இயேசுவானவர் பிறப்பினாலும், அவர் வார்த்தையினாலும் கிடைத்த மகிழ்ச்சியை மற்றவர்களுக்கும் அறிவித்து உதவி செய்து வாழ்வதே உன்னதமாகும்.

    `மனிதர்கள் செய்யும் பாவங்களுக்காக, மனிதர்களை மீட்பதற்காக பிறந்த இயேசு, நமக்காக மரித்தார்' என்று சொல்லும் வேளையில் அவருக்காக அவரது அன்புக்காக அவருக்கு நாம் செய்யவேண்டியது என்ன என்பதை சிந்திக்க வேண்டும். இந்த நாளில் அவர் கூறிய பரிசுத்த வழியில் அன்பையும், சகோதரத்துவத்தையும் சேர்த்து கொண்டாடுவோம்.

    • தமிழ்நாட்டில் ஆளும் இரு கட்சிகள் மட்டுமே ஆள வேண்டுமா? புதிய கட்சி ஆளக்கூடாதா?
    • கூட்டணியை பொறுத்தவரையில் யார் வேண்டுமானாலும், யாரிடம் வேண்டுமானாலும் பேசலாம்.

    கோபி:

    தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை தலைவர்களில் ஒருவரான வீரமங்கை வேலு நாச்சியாரின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதை ஒட்டி இன்று ஈரோடு மாவட்டம் கோபி, கரட்டூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ. செங்கோட்டையன் தலைமையில் நிர்வாகிகள் வீரமங்கை வேலுநாச்சியாரின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    பின்னர் செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள். இன்று த.வெ.க.கொள்கை தலைவர்களில் ஒருவராக உள்ள வேலு நாச்சியாருக்கு அவரது நினைவு நாளை ஒட்டி அஞ்சலி செலுத்தப்பட்டு உள்ளது.

    வெள்ளையனை எதிர்த்து போராடி வெற்றி பெற்றவர் வேலுநாச்சியார். இது ஒரு வரலாறு. எதிர்கால தமிழகத்தின் நாயகன் விஜய் 2026-ல் முதலமைச்சர் நாற்காலில் அமர போகிறார்.

    தமிழ்நாட்டில் ஆளும் இரு கட்சிகள் மட்டுமே ஆள வேண்டுமா? புதிய கட்சி ஆளக்கூடாதா?

    தலைவர் விஜய் மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். அதன்படி வாக்காளர் வரைவு பட்டியலை சரிபார்ப்பு பணியில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம்.

    ஒ.பி.எஸ் பொறுத்தவரையிலும் அவர் உடன் உள்ள மாவட்ட செயலாளர் த.வெ.க.வுடன் செல்ல வேண்டும் என்று சொல்லி இருக்கின்றனர். அதனை பொறுத்தவரையில் அவர் தான் முடிவு செய்ய வேண்டும்.

    ஈரோட்டில் நடந்த கூட்டத்தில் 2 லட்சம் பேர் முன்னிலையில் தலைவர் விஜய் கருத்துகளை தெளிவாக சொல்லி இருக்கிறார்.

    கூட்டணியை பொறுத்தவரையில் யார் வேண்டுமானாலும், யாரிடம் வேண்டுமானாலும் பேசலாம். கருத்துக்கள் கூறலாம். தலைமை தான் முடிவு செய்யும்.

    பொறுத்திருந்து பாருங்கள்... அ.தி.மு.க.வில் உள்ள முக்கிய புள்ளிகள் மிக விரைவில் வந்து த.வெ.க.வில் இணைவார்கள். அதை நீங்கள் பார்க்க தான் போகின்றீர்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் த.வெ.க.வில் இணைந்தவுடன் கொங்கு மண்டலத்தில் கட்சியை வலுப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறார். குறிப்பாக பல்வேறு கட்சிகளில் இருக்கும் அதிருப்தி தலைவர்களிடம் ரகசியமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

    அ.தி.மு.க.வில் இருக்கும் அதிருப்தி தலைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பொங்கல் பண்டிகைக்கு பிறகு பெரிய அளவில் இணைப்பு விழா நடத்தி பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்களை த.வெ.க.வில் சேர்ப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    • செல்லப்பிராணிகளின் உரிமையாளர்கள் கட்டாயம் பெருநகர சென்னை மாநகராட்சியின் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
    • பிட்புல், ராட்வீலர் நாய்களை புதிதாக வாங்கி வளர்ப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் வீதம் அபராதம் விதிக்கப்படும்.

    சென்னையில் நாய்க்கடி சம்பவங்களைத் தொடர்ந்து, வளர்ப்பு நாய்களுக்கும், விலங்குகளுக்கும் உரிமம் பெறுவதைக் கட்டாயமாக்கி சென்னை மாநகராட்சி உத்தரவிட்டது.

    பெருநகர சென்னை மாநகராட்சியில் செல்லப்பிராணிகள் வளர்ப்பினை முறைப்படுத்த கடந்த 2023-ம்ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் பெருநகர சென்னை மாநகராட்சி இணையதளம் வாயிலாக செல்லப்பிராணி உரிமம் பெறும் முறை நடைமுறையில் உள்ளது.

     

    பெருநகர சென்னை மாநகராட்சியில் தெரு நாய்களின் இனப்பெருக்கத்தினை கட்டுப்படுத்திடும் வகையில் அவற்றிற்கு கருத்தடை அறுவை சிகிச்சையினையும் வெறிநாய்க்கடி நோய்த் தடுப்பூசி போடும் நடவடிக்கைகளும், செல்லப் பிராணிகளுக்கான உரிமம் வழங்குதல் வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி செலுத்துதல் உள்ளிட்ட விவரங்களை தொடர்ந்து கண்காணித்தல் நடவடிக்கைகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    இப்பணிகளை மேலும் சிறப்பாக மேற்கொள்ளும் வகையில், இந்தியாவிலேயே முதன்முறையாக பெருநகர சென்னை மாநகராட்சியில் மைக்ரோசிப் செலுத்துதல், உரிமம் வழங்குதல் உள்ளிட்ட ஒருங்கிணைந்த மேலாண்மைக்காக மேம்படுத்தப்பட்ட பெருநகர சென்னை மாநகராட்சியின் இணையதள சேவையினை மேயர் ஆர்.பிரியா அக்.3-ந்தேதி தொடங்கி வைத்தார்.

    செல்லப் பிராணிகளின் உரிமையாளர் தங்களின் புகைப்படம், முகவரிச் சான்று, செல்லப்பிராணி புகைப்படம் மற்றும் வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி செலுத்தப்பட்ட சான்றிதழ் ஆகியவற்றை பதிவேற்றம் செய்து ரூ.50 உரிமக் கட்டணமாகச் செலுத்தி உரிமம் பெறலாம்.

    செல்லப்பிராணிக்களுக்கான உரிமம் பெறும் நடைமுறையை மேலும் விரைவுபடுத்தவும், இதன்மூலம் செல்லப்பிராணிகளின் உரிமையாளர்கள் எளிதாக தங்கள் செல்லப்பிராணிகளுக்கான உரிமத்தை பெற்றுக்கொள்வதற்காகவும் இந்தியாவிலேயே முதன்முறையாக பெருநகர சென்னை மாநகராட்சியில் மைக்ரோசிப் செலுத்துதல், உரிமம் வழங்குதல் உள்ளிட்ட மேம்படுத்தப்பட்ட இணையதள சேவை (www.chennaicorporation.gov.in-ல் Pet Animal Licence) தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து வளர்ப்பு நாய் உரிமையாளர்களுக்கு சென்னை மாநகராட்சி கட்டுப்பாடுகளை விதித்தது.

    செல்லப்பிராணிகளின் உரிமையாளர்கள் கட்டாயம் பெருநகர சென்னை மாநகராட்சியின் உரிமம் பெற்றிருக்க வேண்டும். செல்லப்பிராணிகளுக்கு வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி செலுத்தியும், முறையாக உணவு, தண்ணீர் மற்றும் இருப்பிடம் முதலியவற்றை வழங்கி பராமரிக்கவும், பொது இடங்களுக்கு அழைத்து செல்லும் பொழுது கழுத்துப்பட்டையுடன் சங்கிலி இல்லாமல் கொண்டு செல்வதை கண்டிப்பாக தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டது.

    செல்ல பிராணிகளான நாய், பூனைகளுக்கு உரிமம் கட்டாயம் பெற வேண்டும். இதற்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. உரிமம் பெற தவறினால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். மாநகராட்சி ஊழியர்கள் இதை வீடு வீடாக சென்று கணக்கெடுப்பு நடத்துவார்கள். மேலும் பூங்காக்கள் நடைபாதைகள் பிற பகுதிகளில் கழுத்துப் பட்டை இல்லாமல் நாய்களை அழைத்து வந்தால் உரிமையாளர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

     

    பிட்புல், ராட்வீலர் இன நாய்களுக்கு புதிதாக உரிமம் வழங்குவதை நிறுத்தவும், ஏற்கனவே உரிமம் பெற்றவர்கள் செல்லப்பிராணியை வெளியே அழைத்து செல்லும்போது கழுத்துப்பட்டை, வாய்க்கவசம் அணிவிப்பது கட்டாயம். இதனை பின்பற்றாத உரிமையாளர்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கவும், மேற்கண்ட 2 நாய்களின் ஆண்டு உரிமத்தை புதுப்பிக்க தடை விதிக்கப்படுகிறது. உரிமம் இல்லாமல் பிட்புல், ராட்வீலர் நாய்களை புதிதாக வாங்கி வளர்ப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் வீதம் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    செல்லப்பிராணிகளுக்கு சென்னை மாநகராட்சி கட்டுப்பாடு விதித்ததையடுத்து அதன் உரிமையாளர்கள் ஆர்வத்துடன் தங்களது செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெற்று வருகின்றனர்.

    இதுவரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் உரிமம் பெற பதிவு செய்துள்ளனர். இதில், 57 ஆயிரம் பேருக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. 

    • சீனாவில் இருந்து இந்தியாவின் இறக்குமதி 114 பில்லியன் டாலராக இருக்கும் நிலையில், ஏற்றுமதி வெறும் 14.25 பில்லியன் டாலராக மட்டுமே உள்ளது.
    • மூலோபாய கூட்டாண்மை, பிராந்திய ஸ்திரத்தன்மை, உலகளாவிய தெற்கு போன்ற அலங்கார சொற்களுக்கு அப்பால் பார்த்தால்...

    ஜூன் 15, 2020இல் எல்லைப்பகுதியான லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் சீன வீரர்கள் தாக்குதல் நடத்தினர். இதில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்திய வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தினர். இதன் பிறகு இந்தியா - சீனா உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டது.

    இந்த ஆண்டு அமைக்கப்பட்ட கல்வான் தாக்குதல் நினைவுச் சின்னம்

    2024 அக்டோபரில் ரஷியாவின் கசான் நகரில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் போது, பிரதமர் நரேந்திர மோடியும் சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் சந்தித்துப் பேசினர்.

     லடாக் எல்லையில் நிலவிய நான்கு ஆண்டுகால பிரச்சனைக்கு தீர்வாக, ரோந்து பணிகளை மீண்டும் தொடங்குவது மற்றும் தத்தமது படைகளை தங்கள் எல்லைக்குள் மீண்டும் பின்வாங்க செய்வது உள்ளிட்டவை குறித்து எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் 2025-ல் செயல்படுத்தப்பட்டன.

    அதேநேரம் இந்த ஆண்டில் ஆகஸ்ட்டில் சீனாவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) உச்சிமாநாட்டிற்கு பிரதமர் மோடி சென்றிருந்தார்.

    சீன அதிபர் ஷி ஜின்பிங்குடன் அங்கு நடந்த சந்திப்பில் ஓரளவு உறுதியான சில முடிவுகள் எட்டப்பட்டன என்றே சொல்லலாம். 2018-க்குப் பிறகு பிரதமர் இந்த ஆண்டுதான் மீண்டும் சீனா சென்றிருந்தார்.

    இந்த பேச்சுவார்த்தையின் நேரடி விளைவாக மோதல் மற்றும் கொரோனாவால் 5 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்ட இந்தியா- சீனா நேரடி விமான சேவை கடந்த அக்டோபரில் மீண்டும் தொடங்கப்பட்டது. அக்டோபர் 26 அன்று இண்டிகோ நிறுவனம் கொல்கத்தா மற்றும் குவாங்சூ இடையே தனது சேவையைத் தொடங்கியது.

    மேலும் லிபுலேக் மற்றும் நாது லா போன்ற முக்கியமான கணவாய்கள் வழியாக எல்லை வர்த்தகத்தை மீண்டும் தொடங்க முயற்சிகள் எடுக்கப்பட்டன.

    இந்தியா சீனா நெருங்குவதற்கு முக்கிய காரணம், அமெரிக்க அதிபர் இந்திய பொருட்கள் மீது விதித்த 50 சதவீத வரியே ஆகும்.

    டிரம்ப் தலைமையிலான அமெரிக்காவின் புதிய வர்த்தகக் கொள்கைகள் மற்றும் வரிக் கட்டுப்பாடுகள், ஆசியாவின் இரு பெரும் சக்திகளான இந்தியாவையும் சீனாவையும் தங்களுக்குள் வர்த்தகத்தை புதுப்பித்துக்கொள்ள செய்தது.

    இந்த சந்திப்புகள் மூலம் இந்தியா - சீனா ஆகிய இரு நாடுகளும் முழுமையான நண்பர்களாக மாறவில்லை என்றாலும், பொருளாதாரத் தேவைகளுக்காகவும், அமெரிக்காவுக்கு எதிரான பிராந்திய ஒற்றுமைக்காகவும் முயற்சியாக அமைந்தது.

    ஆனால் இதுதவிர பெரிய அளவிலான முன்னேற்றம் ஏதும் ஏற்படவில்லை. மாறாக 2024 இல் முடிவெடுக்கப்பட்டபடி தத்தமது படைகளை விலக்கிக் கொண்டாலும், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் (LAC) இன்னும் சில இடங்களில் பதற்றம் முழுமையாகத் தணியவில்லை.

    எல்லைப் பிரச்சனையானது தொடர்ந்து நீடித்து வருகிறது. லடாக்கில் எல்லைக் கட்டுப்பாடு கோடு அருகே பாங்காங் ஏரியில் தங்கள் உள்ள பகுதியில் புதிய கட்டமைப்புகளை சீனா உருவாக்கி வருவதும் சாட்டிலைட் ஆதாரம் மூலம் தெரியவந்துள்ளது.

    எல்லையில் வான் பாதுகாப்பு அமைப்பு உருவாக்கும் சீனா:

    திபெத்தின் பாங்காங் ஏரியின் கிழக்குக் கரையில் வான் பாதுகாப்பு வளாகம் ஒன்றை சீனா கட்டி வருவது கடந்த அக்டோபரில் வெளியான செயற்கைக்கோள் படங்கள் மூலம் தெரியவந்தது.

    2020இல் திபெத்தின் கல்வான் பள்ளத்தாக்கில் அத்துமீறி சீன வீரர்கள் தாக்குதல் நடத்தி 20 இந்திய வீரர்களை கொன்ற இடத்தில் இருந்து சுமார் 110 கி.மீ தொலைவில் இந்த சீன வான் பாதுகாப்பு வளாக கட்டுமானம் முழுவீச்சில் நடைபெறுவதை புகைப்படங்கள் காட்டுகின்றன.

    அருணாச்சல பிரதேச பெண்ணின் கசப்பான அனுபவம்:

    அதேநேரம் இந்தியாவின் அருணாச்சல பிரதேசத்தை தங்களுடையது என்றும் சீனா வெளிப்படையாக தெரிவித்தும், வரைபடம் வெளியிட்டும், இந்திய பகுதிகளுக்கு சீன பெயர்களை சூட்டியும் வருகிறது. 2025 மே மாதம், சுமார் 27 இடங்களுக்குச் சீனா புதிய பெயர்களை அறிவித்ததை இந்தியா வன்மையாகக் கண்டித்தது. "பெயர்களை மாற்றுவதால் உண்மை மாறிவிடாது, அருணாச்சல் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி" என்று இந்தியா திட்டவட்டமாக தெரிவித்தது.

    ஆனால் இதன் உச்சமாக கடந்த மாதம் லண்டனில் இருந்து ஜப்பான் செல்ல இணைப்பு விமானம் ஏற சீனாவின் ஷாங்காய் விமான நிலயத்தில் காத்திருந்த இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசத்தை சேர்ந்த பெண்ணை சீன அதிகாரிகள் 18 மணிநேரம் தடுத்து வைத்தனர். அருணாசல பிரதேசம் சீனாவின் பகுதி என்பதால் அப்பெண்ணின் பாஸ்போர்ட் செல்லாதாம்.. இதில் சீன பாஸ்போர்ட்க்கு அப்ளை பண்ணுங்க என கூறி அப்பெண்ணை கிண்டல் வேறு செய்துள்ளனர் சீன அதிகாரிகள்.

    அடிப்படை வசதிகள் மறுக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்ட அப்பெண், சீனாவில் உள்ள இந்திய தூதரக தலையீட்டின் பின் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இதோடு நிற்கவில்லை சீனா.

    அருணாச்சலப் பிரதேசம் சீனாவிற்கு சொந்தமானது என சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் பேட்டி வேறு கொடுத்து இந்த செயலுக்கு விளக்கம் அளித்த கொடுமை நிகழ்ந்தது.

    இந்தியா சார்பில் இதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இனியேனும் அருணாச்சல பிரதேச மக்களுக்கு இதுபோல ஏதும் சங்கடம் நேராமல் பார்த்துக் கொள்ளுங்கள் என பாதிக்கப்பட்ட பெண் பிரதமர் மோடிக்கு வேறு கடிதம் எழுதி அனுப்பியிருக்கிறார்.

    எல்லையில் நிலவும் இந்த இழுபறி நிலை, இரு நாடுகளுக்கும் இடையே இன்னும் ஆழமான நம்பிக்கை ஏற்படவில்லை என்பதையே காட்டுகிறது.

    சரி, பொருளாதார உறவு எப்படி?

    இந்த ஆண்டில் இந்தியா - சீனா இடையிலான வர்த்தகம் சுமார் 127.71 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. கொஞ்சம் பொறுங்கள்.. இதில் இந்தியாவுக்கு ஒரு பெரிய சவால் உள்ளது.

    சீனாவில் இருந்து இந்தியாவின் இறக்குமதி 114 பில்லியன் டாலராக இருக்கும் நிலையில், ஏற்றுமதி வெறும் 14.25 பில்லியன் டாலராக மட்டுமே உள்ளது. அதாவது, வர்த்தகப் பற்றாக்குறை சுமார் 99.2 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.

    சீனாவிடமிருந்து மின்னணுப் பொருட்கள் மற்றும் உதிரிப்பாகங்களை இந்தியா அதிகம் நம்பியிருப்பது இந்தத் தரவுகள் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

    ஒரு பக்கம் பிரதமர் மோடியிடம் ஜி ஜிங் பின் நட்பு முகம் காட்டும் வேலையில் மறுபுறம் சீனா தங்கள் நலன்களை முன்னிறுத்தி அதன் வேலையை தொடர்ந்து வருகிறது.

    எனவே மூலோபாய கூட்டாண்மை, பிராந்திய ஸ்திரத்தன்மை, உலகளாவிய தெற்கு போன்ற அலங்கார சொற்களுக்கு அப்பால் பார்த்தால், 2025-ல் இந்தியா-சீனா உறவு சந்திப்புகளில் இணக்கமாக தோன்றினாலும் செயல்கள் அதற்கு நேர்மாறாகவே இருந்து வருகிறது. 

    • கிறிஸ்துமஸ் நம் சமூகத்தில் நல்லிணக்கத்தையும் நல்லெண்ணத்தையும் ஊக்குவிக்கட்டும்.
    • இந்த கிறிஸ்துமஸ் நம்பிக்கையையும், அரவணைப்பையும் கொண்டுவரட்டும்

    இயேசு கிறிஸ்து பிறந்த தினம் உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

    இந்நிலையில், டெல்லியில் உள்ள மீட்பின் பேராலயத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் கிறிஸ்துமஸ் விழா பிரார்த்தனையில் பிரதமர் மோடி கலந்துகொண்டார்.

    இதையொட்டி பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், "கிறிஸ்துமஸ் விழா பிரார்த்தனை அன்பு, அமைதி மற்றும் கருணை ஆகிய காலத்தால் அழியாத செய்திகளைப் பிரதிபலித்தது. கிறிஸ்துமஸ் நம் சமூகத்தில் நல்லிணக்கத்தையும் நல்லெண்ணத்தையும் ஊக்குவிக்கட்டும்.

    இந்த கிறிஸ்துமஸ் நம்பிக்கையையும், அரவணைப்பையும், கருணைக்கான ஒருமித்த உறுதிப்பாட்டையும் கொண்டுவரட்டும்" என்று தெரிவித்தார்.

    • கிறிஸ்துமஸ் விழாவை வரவேற்கும் வகையில் பேராலயம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது.
    • கேரளா, ஆந்திரா, தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

    நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் விழா சிறப்பாக கொண்டாடப்படும்.

    அந்தவகையில் இந்த ஆண்டும் கிறிஸ்துமஸ் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதற்காக கிறிஸ்துமஸ் விழாவுக்கு முதல் நாள் நள்ளிரவில் இயேசு பிறப்பு நிகழ்ச்சி விமரிசையாக நடைபெறும்.

    அதன்படி, இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு விண்மீன் ஆலய வளாகத்தில் குடில் அமைக்கப்பட்டது.

    கிறிஸ்துமஸ் விழாவை வரவேற்கும் வகையில் பேராலயம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது. மேலும், பேராலயத்தின் முன்பு 43 அடி உயரத்தில் பிரம்மாண்ட கிறிஸ்துமஸ் மரம் புனிதம் செய்யப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.

    நேற்று இரவு 11.30 மணிக்கு இயேசு பிறப்பு நிகழ்ச்சி விண்மீன் ஆலயத்தில் நடந்தது. இதில் பேராலய அதிபர் இருதய ராஜ் மற்றும் பங்கு தந்தை அற்புதராஜ் ஆகியோர் தலைமையில் நடந்த சிறப்பு திருப்பலியில் உலக மக்களின் நன்மைக்காக பிரார்த்தனை செய்யப்பட்டது.

    இதில் கேரளா, ஆந்திரா, தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

    அதைத்தொடர்ந்து குழந்தை இயேசு சொரூபம் வானதேவதைகளால் பவனியாக எடுத்துவரப்பட்டு பேராலய அதிபரிடம் வழங்கப்ட்டது. அதைத்தொடர்ந்து நள்ளிரவு 12 மணிக்கு குழந்தை இயேசு சொரூபத்தை பெற்ற பங்கு தந்தை அற்புதராஜ் அருகில் உள்ள குடிலில் வைத்து இயேசு பிறப்பு செய்தியை அறிவித்தார்.

    அப்போது குடிலில் பிறந்த இயேசு கிறிஸ்துவுக்கு, பாதிரியார்கள் தீர்த்தம் தெளித்து மகிழ்ந்தனர்.

    • தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.

    சென்னை:

    தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு கேரளா பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

    இந்த நிலையில், தமிழ்நாட்டில் இன்று பிற்பகல் 1 மணிவரை 4 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
    • இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    இயேசு கிறிஸ்து பிறந்த தினம் உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

    இந்நிலையில், நடிகர் சந்தானம் சாண்டாவுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    சந்தனத்தை ரசிகர்கள் செல்லமாக சாண்டா என்று கூப்பிடும் நிலையில், சாண்டாவுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய சாண்டா என்று ரசிகர்கள் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • கிறிஸ்துமஸ் பண்டிகை நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது.
    • இந்த கிறிஸ்துமஸ் உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி, செழிப்பைக் கொண்டு வந்து அன்பால் நிரப்பட்டும்.

    இயேசு கிறிஸ்து பிறந்த தினம் உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

    இதையொட்டி மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

    அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்.

    இந்த கிறிஸ்துமஸ் உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி, செழிப்பைக் கொண்டு வந்து அன்பால் நிரப்பட்டும்.

    இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    ×