என் மலர்
ஆன்மிகம்
- கடந்த 5-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- 16 வகையான மங்கல பொருட்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.
திருப்பரங்குன்றம்:
அறுபடை வீடுகளில் முருகப்பெருமானின் முத லாம் படை வீடான திருப்ப ரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கொண்டாடப்படும் விழாக்களில் மிகவும் பிரசித்தி பெற்றது பங்குனி பெருவிழாவாகும். 15 நாட்கள் நடைபெறும் இந்த விழா கடந்த 5-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவை முன்னிட்டு முருகப்பெருமான் தெய்வானையுடன் தினமும் காலையில் பல்லக்கிலும், மாலையில் தங்கமயில் வாகனம், தங்கக்குதிரை வாகனம், பூத வாகனம், அன்ன வாகனம், சேஷ வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார்.
விழாவை யொட்டி கடந்த 16-ந்தேதி மாலை கோவில் முன்பாக சூரசம்காரமும், நேற்று முன்தினம் இரவு முருகப்பெருமானுக்கு பட்டாபிஷேகமும் நடந்தது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று முருகப்பெருமான், தெய்வானை திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதில் மதுரையில் இருந்து பிரியாவிடையுடன் சுந்தரேஸ்வரர், மீனாட்சி அம்மன் ஆகியோர் கலந்து கொண்டு முருகப்பெருமான் திருமணத்தை நடத்தி வைத்தனர்.
விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுப்பிரமணிய சுவாமி- தெய்வானை அம்பாளை திருமண கோலத்தில் தரிசனம் செய்து வழிபட்டனர். அதேபோல் சுமங்கலி பெண்கள் மஞ்சள் தாலி கயிறை மாற்றிக்கொண்ட னர்.
இதையடுத்து இரவு மீனாட்சி அம்மன் மற்றும் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரருக்கு வழியனுப்பு விழா நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து அம்பாரி வாகனத்தில் முருகப்பெருமான் தெய்வானையுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
விழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று காலையில் பெரிய தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு காலை 4 மணிக்கு உற்சவர் சன்னதியில் முருகன், தெய்வானைக்கு பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான மங்கல பொருட்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.
தொடர்ந்து கொளுத்தும் வெயிலுக்கு ஏற்ப வெட்டி வேரால் உருவாக்கப்பட்ட மாலை அணிந்து சிறப்பு அலங்காரத்தில் காலை 6.40 மணிக்கு முருகப்பெருமான், தெய்வானை தேரில் எழுந்தருளினர்.
பின்னர் அங்கு கூடியிருந்த பக்தர்கள் குன்றத்து முருகனுக்கு அரோ கரா என்ற பக்தி பெருக்கு டன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தேர் கிரிவ லப்பாதை வழியாக வயல்வெளிகளை ஒட்டிய பகுதியில் ஆடி அசைந்து சென்று பக்தர்களை பரவசப்படுத்தியது. அப்போது பக்தர்கள் எழுப்பிய அரோகரா கோஷமும், மங்கள வாத்தி யங்களின் ஒலியும் விண்ணை முட்டியது.
தேரின் முன்பாக சிறிய தேரில் விநாயகர் சென்றார். விழாவில் திருப்பரங்குன்றம், அவனியாபுரம், நிலையூர், கூத்தியார்குண்டு, தனக்கன்குளம் உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், உள்ளூர், வெளியூர் பக்தர்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமியை தரிசனம் செய்தனர்.
இதையடுத்து பகல் 12.45 மணிக்கு தேர் மீண்டும் நிலையத்தை வந்தடைந்தது. அப்போதும் முருகனுக்கு அரோகரா என விண்ணதிர பக்தி கோஷங்களை எழுப்பினர். தேரோட்டத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றத்தில் ஆங்காங்கே பக்தர்களுக்கு நீர்மோர், அன்னதானம் வழங்கப்பட்டது.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் சத்ய பிரியா பாலாஜி தலைமையில் அறங்காவலர்கள் சண்முகசுந்தரம், மணி செல்வம், பொம்மதேவன், ராமையா, கோவில் துணை ஆணையர் சூரிய நாராய ணன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து இருந்தனர்.
- தமிழ் வருட தேவதைகள் 60 படிக்கட்டுகளாக அமையப்பெற்றது சிறப்பாகும்.
- பங்குனி உத்திர திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது.
சுவாமிமலை:
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே சுவாமிமலையில் சுவாமிநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது.
இது முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 4-ம் படை வீடாகும். இங்கு பிரபவம் முதல் அட்சயம் வரையிலான தமிழ் வருட தேவதைகள் 60 படிக்கட்டுகளாக அமையப்பெற்றது சிறப்பாகும்.
பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் பங்குனி உத்திர திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான வள்ளி திருக்கல்யாண வைபவம் நேற்றிரவு நடந்தது.
முன்னதாக சுவாமிமலை காவிரியாற்று கரையில் உள்ள விநாயகர் கோவிலில் இருந்து கும்பகோணம் மற்றும் சுவாமிமலை சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த வள்ளி இன மக்கள் நூற்றுக்கணக்கானோர் மாம்பழம், பலாப்பழம், ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளை உள்ளிட்ட பல்வேறு வகையான பழங்கள், பட்டு வேட்டி, துண்டு, பட்டுச்சேலை உள்ளிட்ட வஸ்திரங்கள், சுவாமிகளுக்கு மலர் மாலைகள் மற்றும் உதிரி பூக்கள் ஆகியவற்றை சுமந்தவாறு மேளதாளம் முழங்க முக்கிய வீதிகள் வழியாக சுவாமிநாத சுவாமி கோவிலுக்கு ஊர்வலமாக வந்து சீர்வரிசை அளித்தனர்.
பின்னர், முருகப்பெருமான்-வள்ளி ஆகியோருக்கு மாலை மாற்றும் சம்பிரதாய சடங்கு நடந்தது. தொடர்ந்து, மாங்க ல்யம் அணிவிக்கப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அர்ச்சனை செய்து, மனமுருகி முருகப்பெருமானை தரிசனம் செய்தனர்.
திருக்கல்யாணத்தை முன்னிட்டு மூலவர் சுவாமிநாத சுவாமி ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
- சமயபுரம் மாரியம்மனை தரிசிப்போருக்கு நவக்கிரக தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.
- சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பகல் பொழுதில் நடை சாத்தப்படும் வழக்கம் கிடையாது.
பொதுவாக பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்து வதற்காக அம்மனை வேண்டி விரதம் இருப்பது வழக்கம். மேலும் கோவில் விழாக்களில் சாமிக்கு நேர்ச்சை செலுத்துவோர் மற்றும் வழிபாடுகளை முன் நின்று செய்வோர் கடுமையான விரதம் இருப்பார்கள்.
சபரிமலை கோவிலுக்கு செல்வோர் 48 நாட்களும், முருகன் கோவில் களுக்கு செல்வோர் 40 நாட்களுக்கு மேலாகவும் விரதம் இருப்பது வழக்கம். ஆனால் உலக மக்களின் நன்மைக்காக அம்மனே விரதம் இருக்கும் நிகழ்வு திருச்சி சமயபுரம் கோவிலில் பல ஆண்டுகாலமாக நடைபெற்று வருகிறது.

சமயபுரம் மாரியம்மனை வணங்கினால் சங்கடங்கள் போகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஒட்டுமொத்த உலகத்தில் உள்ள அத்தனை மாரியம்மன் கோயில்களுக்கும் தலைமை பீடமானதுதான் சமயபுரம் ஆகும். சக்தி தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது இந்த தலம்.
தட்சன் யாகத்துக்குச்சென்ற தாட்சாயணியை தூக்கி சிவபெருமான் ருத்ரதாண்ட வம் ஆடியபோது அம்மனின் திருக்கண் இப்பகுதியில் விழுந்ததால் இந்த திருத்தலத்திற்கு கண்ணனூர் என்ற பெயர் புராணகாலம் தொட்டே இருந்து வருகிறது.
மிகத்தொன்மையான உற்சவ அம்மனின் திருமேனியில் இன்றும் ஆயிரம் கண்கள் உள்ளன. இது, இத்தலத்தின் பெருமையை விளக்குவதாக அமைந்துள்ளது.
அம்மனின் சுயம்பு திருமேனியில் நவக்கிரக ஆதிக்கத்தை உள்ளடக்கி நவக்கிரகங்களை நவசர்ப்பங்களாக தரித்து அருள்பாலிப்பதால் அம்மனை தரிசனம் செய்வதன் மூலம் நவக்கிரக தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.
27 நட்சத்திரங்களின் ஆதிக்கங்களையும் தன்னுள் அடக்கி 27 எந்திரங்களாக திருமேனி பிரதிஷ்டையில் மகா மாரியம்மன் அருள்பாலிப்பது தனிப்பெரும் சிறப்பு அம்சமாகும்.
இங்கு உலக நன்மைக்காகவும், தன்னை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு நோய், நொடிகள், தீவினைகள் அணுகாது, சகல சவுபாக்கியங்களும் கிடைக்க ஒவ்வொரு ஆண்டும் மாசி மாத கடைசி ஞாயிறு முதல், பங்குனி மாத கடைசி ஞாயிறு வரை அம்மனே பக்தர்களுக் காக 28 நாட்கள் பச்சை பட்டினி விரதம் இருப்பது தனிச்சிறப்பாகும்.
இந்த 28 நாட்களில் இக்கோவிலின் அம்மனுக்கு தளிகை, நைவேத்தியம் கிடையாது. துள்ளு மாவும், நீர்மோர், கரும்பு, பானகம் மற்றும் இளநீர் மட்டுமே நெய் வேத்தியமாக படைக்கப்படுகிறது.
மகிஷா சூரனை வதம் செய்த பாவம் தீரவும், தன் கோபம் தணியவும் இந்த விரதத்தை அம்மன் மேற்கொள்கிறார். இந்த நாட்களில் பட்டினி விரதம் இருக்கும் காலங்களில் அம்மனின் முகம் சோர்வுடன் காணப்படுவதாக சொல்லப்படுகிறது.

அம்மனை மகிழ்வூட்ட பூச்சொரிதல் நடைபெறும். அம்மன் விரதம் இருக்கும் 28 நாட்களில் வரக்கூடிய ஞாயிற்றுக்கிழமை களில் திருச்சி மட்டுமல்லாது சுற்றுப்பகுதி களில் இருந்து மக்கள் பூக்களை கூடை, கூடையாக கொண்டு வந்து அம்மனுக்கு சாற்றுவார்கள்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பல ஆயிரம் கிலோ பூக்கள் கொண்டு வரப்பட்டு அம்மனுக்கு சாத்தப் படும். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அலங்காரிக்கப்பட்ட வாகனங்களில், மேளதாளங்களுடன் பக்தர்கள் ஊர்வலமாக வருவார்கள். உடல் முழுவதும் வாசனை பூக்களால் மலை போல் குவித்து உண்ணா நோன்பிருக்கும் அம்மன் சாந்த சொரூபிணியாகி அருள்பாலிக்கிறார்.
அம்மன் பச்சை பட்டினி விரதம் இருக்கும் நாட்களில் பக்தர்கள் வீடுகளில் அம்மன் படத்தை வைத்து வழிபடுவது வழக்கம். சமையலின்போது தாளிக்காமல் இருப்பார்கள். காலில் செருப்பு அணியாமல் இருப்பார்கள்.
இளநீரும் நீர் மோரும் அருந்தி இருப்பார்கள், மஞ்சள் ஆடை உடுத்தி மகமாயியின் அருள் வேண்டி இருப்பார்கள். மாரியம்மன் பச்சை பட்டினி விரதம் நிறைவு செய்யும் நாளில், சித்திரை தேரோட்ட விழா கொடியேற்றம் நடைபெறும்.
சமயபுரம் மாரியம்மன் கோவில் அனைத்து நாட்களிலுமே பகல் பொழுதில் நடை சாத்தப்படும் வழக்கம் கிடையாது.
காலை முதல் இரவு வரை அம்மனை எப்போது வேண்டுமானாலும் பக்தர்கள் தரிசனம் செய்யலாம். சமயபுரம் மாரி யம்மனுக்கு உலகின் பல நாடுகளிலும் கோவில் இருந்தாலும் திருச்சி சமயபுரத்திற்கு வந்து அம்பிகையை தரிசிப்பதை பலருக்கும் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
- கந்தாயத்தின் கடைசி மாதம் மாசி மாதம் அமாவாசையாகும்.
- மயானக்கொள்ளை அன்று தான் அங்காளி அங்காளம்மனாக ஆனாள்.
கந்தாயத்தின் கடைசி மாதம் மாசி மாதம் அமாவாசையாகும். அன்றுதான் சித்த பிரம்மை பிடித்த சிவபெருமானுக்கு பிரம்மஹத்தி தோஷம் விலகிய நாள். அன்றுதான் அங்காளி என்ற பூங்காவனத்தாள் அங்காளம்மனாக ஆனாள்.
சிவசுயம்பு புற்றுருவாகவும், புற்றுக்குள் குடி கொண்ட நாக வடிவமாகவும் ஆனாள் என்று அறிந்த வண்ணம் நாகத்தின் படம் சுருங்காமல் சீறிபாயும் நிலையில் இருந்ததாகவும், இந்த நிகழ்வுகளைக் கண்ணுற்ற, பூலோகத்தில் இருந்த பூதகணங்களான, ஆண்பூதம், பெண்பூதம், மிருக கணங்கள், பறவை கணங்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்த வண்ணம் வகை வகையாக வந்து அப்புற்றை சுற்றி பணிந்து தொழுததாக ஐதீகம்.

அதற்கும் அந்த நாகப்பாம்பு படம் சுருங்காமல் இருப்பதைக் கண்ட பூலோக கணங்களில் வேண்டுகோளுக்கு இணங்க தேவர் உலக தேவர்கள் தங்களின் வாகனமான ஐராவதம் என்ற வெள்ளை யானையில் பூலோகமான இப்புற்றை வந்து தொழுது நின்றதாகவும், அதற்கும் இந்த நாகப்பாம்பின் படம் சுருங்காமல் இருப்பதைக் கண்ட தேவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்த வகையில் தேவர்களின் திருவுருவமாக "திருத்தேர் ஆகி" நின்ற அப்புற்றை சுற்றி வரும் போது அப்போது கலியுகம் பிறந்ததாக அறிந்த வண்ணம் கலியுகத்தில் அந்த பாம்பு படம் சுருங்கி புற்றுக்குள் சென்று மறைந்ததாகவும் அறியப்பட்டுள்ளது.
இந்த வரலாற்று நிகழ்வுகளை ஒவ்வொரு ஆண்டும் நினைவு கூறவே எழுந்த நிலைகளே திருவிழாக்கள் ஆகும்.
மாசி மாதம் சிவபெருமான் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலுக்கு வந்து இரவு தங்கியதால், அன்றைய இரவு சிவன் ராத்திரி என்றும், அன்று இரவில் கரம் என்ற சக்தி கரக திருவிழாவாகவும், மறுநாள் பூரண அமாவாசை தினத்தில் அங்காளி ஆவிகளுக்கும், ஆன்மாக்களுக்கும் பொதுவில் சூறையிடும் நாள், இதையே மயானக்கொள்ளை என்றும் அன்று தான் அங்காளி அங்காளம்மனாக ஆனாள்.
ஆண்பூத கணங்கள் புற்றை சுற்றி பணிந்தன என்று அறிந்த வண்ணம், இரவில் ஆண்பூத வாகனத்தில் அம்மன் பவனி என்றும், மூன்றாம் நாள் பெண்பூதவாகனத்தில் அம்மன் பவனி என்றும், நான்காம் நாள், காட்டில் இருக்கும் மிருகத்தின் தலைவன் சிங்க வாகனத்தில் அம்மன் பவனி என்றும், ஐந்தாம் நாள் வாகனத்தில் இருந்த பறவை கணங்கள் தன்னுடைய தலைவனான அன்னத்தை வாகனமாக ஏற்று அன்ன வாகனத்தில் அம்மன் பவனி என்றும், அன்றைய பகல் திருவிழாவாக கோபம், சினம், சீற்றம், ஆங்காரம், ஆவேசம் என்ற நிலையில் உச்ச கட்டமாக கருதி "தீமிதி" திருவிழாவாகவும் நடக்கிறது.
ஆறாம் நாள் உலகின் ஐராவத்தில் இருந்து தேவர்கள் வந்தனர் என்றும் அவர்களின் வாகனமான ஐராவதத்தில் அம்மன் பவனி என்றும், ஏழாம் நாள் தேவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்த வகையில் தேவர்களின் உருவமான திருத்தேர் வடிவமாகி நின்று புற்றை சுற்றி வந்தனர் என்பதன் நினைவாக ஏழாம் நாள் அம்மன் திருத்தேரில் பவனி என்றும் நடத்தப்படுகிறது.
எட்டாம் நாள் கலியுகம் பிறந்ததை நினைவு கூறவே குதிரை வாகனத்தில் அம்மன் பவனி என்றும், ஒன்பதாம் நாள் தான் எடுத்த உருவமான நாகத்தை நினைவு கூறவே 9 தலை நாக வாகனத்தில் அம்மன் பவனி என்றும், பத்தாம் நாள் சத்தாபரணம் அணிந்து அனைவருக்கும் அருள் கொடுக்கும் சத்தாபரணத் திருவிழா என்றும், தெப்பல் திருவிழா என்றும், ஆதி முதல் இன்று வரையில் இந்த திருவிழாவில் மாற்றம் இல்லாமல் கொண்டாடப்படுவது தமிழகத்தின் தனி சிறப்பு.
இந்த 10 நாட்களும் திருவிழாவாக கொண்டாடுவது முழுக்க முழுக்க இந்த அம்மனின் வரலாற்றுத் திருவிழாவாகும்.
மேலும் இந்த விசேஷ திருவிழா நாட்களில் அங்காளம்மன் தான் எடுத்த அலங்கோல உருவத்தை நினைவு கூறவே, ஒவ்வொரு நாளும் பக்தர்கள் மொட்டை அடிப்பது, காது குத்துவது, ஆடு, கோழி, அறுத்து, பொங்கல் வைத்து, அபிஷேகம், ஆராதனை, அர்ச்சனை செய்வது சித்தாங்கு, கஞ்சுலி, கபால வேஷம் அணிந்து வருவது, மஞ்சள் ஆடை, வேப்பஞ்சேலை அணிந்து வருவது போன்ற வேஷத்துடன் மேல்மலையனூருக்கு திருவிழா காலங்களில் வந்து நேர்த்தி கடன் செலுத்துகின்றனர்.
வேண்டுதல் காணிக்கை பிரார்த்தனைகளான, பொன், வெள்ளி பணம் போன்ற காணிக்கைகளை உண்டியலில் செலுத்தி பக்தர்கள் தங்களின் வேண்டுதல் பிரார்த்தனையை செய்து செல்வதே இந்த 10 நாள் திருவிழாவாகும்.
இந்த அம்மனின் வரலாற்றை தொடர்புபடுத்தி செய்யும் திருவிழா வேறு எங்கும் கொண்டாடுவதில்லை. இந்த மேல்மலையனூரில் மட்டுமே ஆதி திருவிழாவாக கொண்டாடப்படுவது தமிழகத்தின் தனி சிறப்பு.
- திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம்.
- நத்தம் ஸ்ரீ மாரியம்மன் மஞ்சள் நீராட்டு விழா.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு பங்குனி-5 (புதன்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: பஞ்சமி இரவு 10.32 மணி வரை பிறகு சஷ்டி
நட்சத்திரம்: விசாகம் இரவு 6.56 மணி வரை பிறகு அனுஷம்
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
எமகண்டம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
சூலம்: வடக்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை
திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம், கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல். மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி புன்னை மர கண்ணன் அலங்காரம். நத்தம் ஸ்ரீ மாரியம்மன் மஞ்சள் நீராட்டு விழா. திரு வெள்ளாறை ஸ்ரீ கவேதாத்தரிநாதர் பவனி. ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதிக்கு பால் அபிஷேகம். ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்ம மூலவருக்கு திருமஞ்சனம். மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீகோதண்டராம சுவாமிக்கு திருமஞ்சனம். திருப்பெருந்துறை ஸ்ரீ மாணிக்கவாசகர் புறப்பாடு. ஸ்ரீ ரங்கம் நம்பெருமாள், தேவக்கோட்டை ஸ்ரீ ரங்கநாதர் கோவில்களில் பெருமாள் புறப்பாடு. விருதுநகர், வேதாரண்யம் ஸ்ரீசிவபெருமான் கோவில்களில் சிறப்பு அபிஷேகம். திருநெல்வேலி சமீபம் நான்காம் நவதிருப்பதி புளியங்குடி மூலவர் ஸ்ரீ பூமி பாலகர், ஸ்ரீ புளியங்குடி வள்ளியம்மை கோவிலில் திருமஞ்சனம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-பெருமை
ரிஷபம்-ஆசை
மிதுனம்-வெற்றி
கடகம்-பக்தி
சிம்மம்-வரவு
கன்னி-தனம்
துலாம்- தாமதம்
விருச்சிகம்-முயற்சி
தனுசு- புத்துணர்ச்சி
மகரம்-நன்மை
கும்பம்-உழைப்பு
மீனம்-பதிவு
- முருகனின் அறுபடை வீடுகளில் 4-ம் படை வீடாகும்.
- விநாயகர், யானை ரூபத்தில் வந்து வள்ளியை விரட்டும் நிகழ்ச்சி தத்ரூபமாக நடைபெற்றது.
சுவாமிமலை:
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே சுவாமிமலையில் சுவாமிநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் முருகனின் அறுபடை வீடுகளில் 4-ம் படை வீடாகும்.
பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி பெருவிழா சிறப்பாக நடைபெறும். அதன்படி, இந்த ஆண்டு பங்குனி பெருவிழா நடைபெற்று வரும் நிலையில், அதன் முக்கிய நிகழ்வான வள்ளி கல்யாணம் நடந்தது.
முன்னதாக இன்று அதிகாலை திருவலஞ்சுழி அரசலாற்றங்கரையில் முதுமை வேடத்தில் இருக்கும் முருகனை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தி விநாயகர், யானை ரூபத்தில் வந்து வள்ளியை விரட்டும் நிகழ்ச்சி தத்ரூபமாக நடைபெற்றது. அப்போது வள்ளி வயதான வேடத்தில் இருக்கும் முருகனை திருமணம் செய்து கொள்வதாக அமையும் திருமண காட்சி நடைபெற்றது.
தத்ரூபமாக நடந்த இந்த நிகழ்வை ஏராளமான பக்தர்கள் வியந்து தரிசனம் செய்தனர்.
- விழாக்களில் பங்குனி பெருவிழா பிரசித்தி பெற்றது.
- பெண்கள் தங்களது மஞ்சள் கயிற்றை புதிதாக மாற்றிக் கொண்டனர்.
திருப்பரங்குன்றம்:
மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் 12 மாதங்களும் திருவிழா சிறப்பாக நடைபெறும். இதில் முத்தாய்ப்பாக சித்திரை மாதத்தில் நடைபெறும் மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம், மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபோகம், திருத்தேரோட்டம் பிரசித்தி பெற்றதாகும்.
தங்கை மீனாட்சியின் திருக்கல்யாணத்தை காண மதுரைக்கு வரும் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
மேலும் வேறு எந்த ஸ்தலங்களிலும் இல்லாத சிறப்பாக தாய், தந்தையரின் திருமண கோலத்தை காண்பதற்காக மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் நடைபெறும் திருக்கல்யாண வைபவத்தை காண்பதற்காக திருப்பரங்குன்றத்திலிருந்து வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வருகை தருவது வழக்கம்.
அதேபோல் பங்குனி மாதம் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நடைபெறும் பங்குனி திருவிழாவில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருப்பரங்குன்றம் சென்று மகனான முருகன், தெய்வானையின் திருமணத்தை நடத்தி வைத்து கோவிலுக்கு திரும்புவது தொன்று தொட்டு நடந்து வருகிறது.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமியின் கோவிலில் கொண்டாடப்படும் விழாக்களில் பங்குனி பெருவிழா பிரசித்தி பெற்றது. ஆண்டுதோறும் 15 நாட்கள் கொண்டாடப்படும் இந்த விழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவினை முன்னிட்டு தினமும் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் காலையில் தங்க பல்லக்கிலும், மாலையில் தங்க மயில் வாகனம், தங்க குதிரை வாகனம், வெள்ளி ஆட்டு கிடா வாகனம், உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவிதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
விழாவின் 11-ம் நாள் நிகழ்ச்சியாக நேற்று சுப்பிரமணிய சுவாமிக்கு நவரத்தினங்கள் பதித்த செங்கோல் சேவல் கொடி சாற்றப்பட்டு தங்க கிரீடம் சூட்டி பட்டாபிஷேகம் நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சுப்பிரமணிய சுவாமி-தெய்வானை திருக்கல்யாண வைபவம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. விழாவினை முன்னிட்டு அதிகாலையில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானை அம்பாளுக்கு பால், சந்தனம், திரவியம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் திருக்கல்யாண அலங்காரத்தில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் சந்திப்பு மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு மதுரையில் இருந்து சுந்தரேஸ்வரர்-மீனாட்சி அம்மன் எழுந்தருள வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடர்ந்து சுவாமிகள் கோவிலுக்கு புறப்பாடானார்கள். வழி நெடுகிலும் பக்தர்கள் அமைத்த திருக்கண் மண்டபத்தில் எழுந்தருளி அருள்பாலித்தனர்.
தொடர்ந்து கோவிலின் ஒடுக்க மண்டபத்தில் கன்னி ஊஞ்சல் நடைபெற்று கோவிலுக்குள் உள்ள ஆறு கால் மண்டபத்தில சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் திருக்கல்யாண கோலத்தில் எழுந்தருளினார்.
அப்போது மீனாட்சி அம்மன் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆறு கால் மண்டபத்தில் எழுந்தருளினர் அங்கு திருமண நிகழ்ச்சிகள் நடை பெற்று மங்கள வாத்தியம் முழங்க சுப்ரமணிய சுவாமி-தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் முன்னிலையில ஆயிரக் கணக்கான பக்தர்கள் அரோகரா கோஷம் எழுப்ப கோலாகலமாக நடை பெற்றது. அப்போது ஏராளமான பெண்கள் தங்களது மஞ்சள் கயிற்றை புதிதாக மாற்றிக் கொண்டனர்.
தொடர்ந்து ஆயிரக் கணக்கான பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் மற்றும் உபயோகாரர் சார்பில் கோயில் கந்த சஷ்டி மண்டபம் வள்ளி தேவசேனா திருமண மண்டபங்களில் மதிய உணவு வழங்கப்பட்டது.
மேலும் பக்தர்களுக்கு ஆங்காங்கே மின்விசிறி வசதிகள், குளிர்சாதன வசதியும் குடிநீர் வசதியும் செய்து தரப்பட்டுள்ளது.
திருக்கல்யாண வைபவத்தை பக்தர்கள் நேரடியாக காணும் வகையில் பெரிய திரைகளில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதற்காக சுமார் 9 இடங்களில் திரைகள் வைக்கப்பட்டன.
இன்று மாலையில் வெள்ளி யானை வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி-தெய்வானை உடன் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.
விழாவின் சிகர நிகழ்ச்சியாக நாளை (19-ந் தேதி) காலை 5 மணிக்கு சுப்ரமணிய சுவாமி தெய்வானையுடன் பெரிய தேரில் எழுந்தருள கிரிவல பாதை வழியாக சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழு தலைவர் சத்யபிரியா பாலாஜி தலைமையில் அறங்காவலர்கள் சண்முக சுந்தரம், மணி செல்வம், பொம்ம தேவன், ராமையா, கோயில் துணை ஆணையர் சூரிய நாராயணன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
- சுமார் 1500 ஆண்டுகள் பழமையான கோவில்.
- முருகன் பாதமும், அருகில் சிவலிங்கமும் உள்ளது.
தென்காசி மாவட்டத்தில் சிவகிரி என்னும் ஊரில் உள்ள மலை மீது அமைந்திருக்கிறது, பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோவில். சுமார் 1500 ஆண்டுகள் பழமையான இந்தக் கோவிலின் மூலவராக 'பால சுப்பிரமணியர்' உள்ளார். உற்சவரின் திருநாமம், முத்துக்குமாரர் என்பதாகும். இவ்வாலய தீர்த்தமாக சரவணப் பொய்கை உள்ளது.
சூரபத்மனை அழித்த பிறகு தெய்வானையை மணப்பதற்காக, முருகப்பெருமான் திருப்பரங்குன்றம் புறப்பட்டார். அப்போது முருகனை தரிசனம் செய்ய வேண்டி அகத்திய முனிவர் இந்த மலையில் தவம் செய்து கொண்டிருந்தார்.
அவருக்கு தரிசனம் அளித்த முருகப்பெருமான், அகத்தியரின் விருப்பப் படியே இந்த மலை மீதும் வாசம் செய்தார். பின்னாளில் இம்மலை மீது ஆலயம் எழுப்பப்பட்டது. இங்கு பாலகராக முருகப்பெருமான் காட்சியளிக்கிறார்.
எனவே இவர் 'பாலசுப்பிரமணியர்' என்று பெயர் பெற்றார். அகத்தியருக்கு முருகன் காட்சி தந்த இடத்தில் பாத மண்டபம் இருக்கிறது. இங்கு முருகன் பாதமும், அருகில் சிவலிங்கமும் உள்ளது.
பாதகமான கிரக அம்சங்களை எதிர்கொள்பவர்கள், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் நிவாரணத்திற்காக இங்கு வழிபாடு செய்கிறார்கள். பக்தர்கள் முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம் செய்கின்றனர்.
பிரச்சினைகளை எதிர்கொள்பவர்கள், அந்த பிரச்சினைக்கு காரணமான கிரகத்திற்கு உரிய நாளில் இங்குள்ள முருகனை வழிபட்டு சென்றால், நல்ல பலன் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

இங்கு முருகப்பெருமான் தனது ஜடாமுடியையே, கிரீடம் போல சுருட்டி வைத்த கோலத்தில் காட்சி தருகிறார். இது முருகப்பெருமானின் அரிய வடிவம் ஆகும்.
கிரகப் பிரச்சினை உள்ளவர்கள், ராசி சின்னங்களுடன் ஒரு உலோகத் துண்டை (தகடு), முருகப்பெருமானின் பாதத்தில் வைக்கிறார்கள். இதன்மூலம் பக்தர்களின் கிரக சம்பந்தமான பிரச்சனைகள் அகலும் என்பது ஐதீகம்.
மலைகள் மற்றும் நீர் வளங்களால் சூழப்பட்ட இயற்கை எழில் மிகுந்ததாக, இந்த மலைக் கோவில் திகழ்கிறது. பாலசுப்பிரமணியர் கோவில் அமைந்துள்ள குன்று 'சக்தி மலை' என்று அழைக்கப்படுகிறது. இடதுபுறம் சிவன் மலை உள்ளது.
சிவனுக்கும், சக்திக்கும் இடையில் சோமாஸ்கந்த வடிவத்தில் இங்குள்ள முருகன் காட்சி தருகிறார். முருகன் சன்னிதியின் வலதுபுறம் சுந்தரேஸ்வரரும், இடதுபுறம் அன்னை மீனாட்சியும் உள்ளனர்.
பங்குனி பிரம்மோற்சவத்தில் உற்சவரான முத்துக்குமாரர் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்படுகிறார். திருவிழாக் காலங்களில் மூன்று நாட்கள் மட்டுமே முருகப்பெருமானின் ஊர்வல தரிசனம் கிடைக்கும். மற்ற நாட்களில் கோவிலுக்குள் மட்டுமே தரிசனம் செய்ய முடியும்.
இவ்வாலயத்தில் தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, சண்டிகேஸ்வரி, பைரவர், நவக்கிரகங்கள், சனி பகவான், அஷ்டபுஜ துர்க்கை மற்றும் இடும்பன் ஆகியோருக்கும் சன்னிதிகள் உள்ளன. முருகப்பெருமானின் கருவறை கோஷ்டத்தில் பிரம்மா மற்றும் சண்டிகேஸ்வரரின் எதிரே லிங்கோத்பவருக்கு தனிச் சன்னிதி உள்ளது.
மலையின் நடுவில் காளி அன்னை சன்னிதி உள்ளது. காலையிலும், மாலையிலும் முதல் பூஜை இந்த காளியம்மனுக்குத்தான் செய்யப்படுகிறது. அதன் பிறகுதான் முருகப்பெருமானுக்கு வழிபாடு நடைபெறும்.
பவுர்ணமி தினங்களில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. இக்கோவிலில் உள்ள முருகப்பெருமான் நவக்கிரக முருகனாக போற்றப்படுகிறார். இங்கு உள்ள விநாயகருக்கு 'அனுக்ஞை விநாயகர்' என்று பெயர்.

பங்குனி பிரம்மோற்சவம், ஐப்பசியில் கந்த சஷ்டி, வைகாசி விசாகம், மாசி மகம் ஆகியவை இந்த கோவிலில் சிறப்பாகக் கொண்டாடப்படும் திருவிழாக்கள் ஆகும். திருச்செந்தூர் கோவிலில் செய்யப்படும் முறைப்படியே, இங்கு பூஜைகள் நடைபெறுகின்றன.
பொதுவாக கந்தசஷ்டி விழா 6 நாட்கள் நடைபெறும். ஆனால் இந்த ஆலயத்தில் 11 நாட்கள் பெருவிழாவாக கொண்டாடப்படுகிறது. 11-வது நாளில் முருகப்பெருமானுக்கு முடிசூட்டு விழா நடைபெறும்.
அப்போது அரியணையில் முருகனை அமரச் செய்து, தங்க கிரீடம் அணிவித்து, அரச அதிகாரத்தை குறிக்கும் செங்கோல் கொடுக்கப்படும். பின்னர் அரச அங்கியில் முருகன் வீதி உலா வருவார். இதனை 'பட்டினப் பிரவேசம்' என்று சொல்வார்கள்.
இந்த ஆலயம் தினமும் காலை 6.30 மணி முதல் 11.30 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
அமைவிடம்
மதுரையில் இருந்து குற்றாலம் செல்லும் வழித்தடத்தில் 108 கி.மீ. தொலைவில் சிவகிரி உள்ளது. ராஜபாளையத்தில் இருந்தும் தென்காசிக்கு பேருந்து வசதி உள்ளது. அந்த பேருந்துகள் சிவகிரி வழியாகத்தான் செல்லும். சிவகிரி பேருந்து நிலையத்தில் இருந்து 1 கி.மீ. தூரத்தில் கோவில் அமைந்துள்ளது.
- பச்சைப் பட்டினி விரதம் கடந்த 9-ந் தேதி தொடங்கியது.
- அம்மனே 28 நாட்கள் பச்சைப் பட்டினி விரதம் இருப்பது தனிச்சிறப்பு.
திருச்சியில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் காவிரியின் வடகரையில் அமைந்திருக்கிறது, சமயபுரம். பிரசித்திபெற்ற இந்த திருத்தலத்தில் சமயபுரம் மாரியம்மன் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.
மகாவிஷ்ணு எடுத்த அவதாரத்தில் ஒன்று, கிருஷ்ண அவதாரம். இந்த அவதாரத்தின்போது தேவகியின் பிள்ளையாக கிருஷ்ணரும், யசோதையின் பிள்ளையாக மாயா தேவியும் பிறந்தனர். இறையருளால் அவர்கள் இருவரும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
தேவகியின் பிள்ளையை கொல்வதற்காக வந்த கம்சன், குழந்தையை தூக்க முயன்றபோது, அந்தக் குழந்தை தன் உண்மையான உருவத்தைக் காட்டி நின்றது. மகாசக்தியாக தோன்றிய அந்த அன்னையின் எட்டு கரங்களிலும் ஆயுதங்கள் இருந்தன.
அந்த தேவியே 'மகாமாரி'. இந்த அன்னைதான் மக்களால் மாரியம்மனாக பூஜிக்கப்படுவதாக புராணம் சொல்கிறது.
திருவரங்கம் அரங்கநாத சுவாமியின் திருக்கோவிலில் தான், சமயபுரம் மாரியம்மன் திருமேனி இருந்ததாம். அந்த அன்னை உக்கிரமாக இருந்ததால், அப்போது இருந்த ஜீயர் சுவாமிகள் அம்மனின் திருவுருவத்தை மற்றொரு இடத்திற்கு மாற்ற ஏற்பாடு செய்தார்.

திருவரங்கம் அரங்கநாதர் ஆலயத்தில் இருந்து அன்னையின் திருமேனியை எடுத்துக் கொண்டு வடக்கு நோக்கிச் சென்றவர்கள், இளைப்பாறுவதற்காக திருமேனியை ஓரிடத்தில் வைத்தனர். அந்த இடம்தான், சமயபுரம் ஆகும்.
பிறகு அதனை எடுத்துக்கொண்டு தென்மேற்காக வந்து தற்போதுள்ள மாரியம்மன் கோவில் அமைந்துள்ள கண்ணனூர் அரண்மனை மேட்டில் வைத்து விட்டுச் சென்றனர்.
அப்போது, காட்டு வழியாகச் சென்ற வழிப்போக்கர்கள், அச்சிலையைப் பார்த்து அதிசயப்பட்டு அக்கம்பக்கத்தில் இருந்த கிராம மக்களைக் கூட்டிவந்து அதற்கு 'கண்ணனூர் மாரியம்மன்' என்று பெயரிட்டு வழிபடத் தொடங்கினர்.
விஜயநகர மன்னர் தென்னாட்டின் மீது படையெடுத்து வந்து, கண்ணனூரில் முகாமிட்டார். அப்போது மாரியம்மனை வழிபட்டு, தாங்கள் தென்னாட்டில் வெற்றி பெற்றால் அம்மனுக்கு கோவில் கட்டி வழிபடுவதாக சபதம் செய்தார்.
அதன்படி அவர்கள் வெற்றிபெற்றதால், விஜயரெங்க சொக்கநாத நாயக்கர் காலத்தில் 1706-ல் அம்மனுக்குத் தனியாக கோவில் அமைத்ததாக வரலாற்று சான்று கூறுகின்றன.
சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் தோற்றுவிக்கப்பட்ட கண்ணனூர் மாரியம்மன் கோவில்தான், இன்று 'சமயபுரம் மாரியம்மன்' ஆலயமாக சிறப்புற்று விளங்குகிறது.

ஆலய அமைப்பு
இந்த ஆலயம், ஆகம விதிப்படியும், சிற்ப சாஸ்திரத்தின்படியும் அமைக்கப்பட்டுள்ளது. கோவில் முகப்பில் நீண்ட பெரு மண்டபம் உள்ளது. இதனை 'பார்வதி கல்யாண மண்டபம்' என்கிறார்கள்.
மூன்று திருச்சுற்றுகளைக் கொண்டது இந்த ஆலயம். கிழக்கே சன்னிதித் தெருவில் விநாயகர் கோவிலும், தெற்கில் முருகன் கோவிலும், தேரோடும் வீதியின் வடக்கே மற்றொரு விநாயகர் கோவிலும் உள்ளன.
மேற்கில் ராஜகோபால சுவாமி அருள்பாலிக்கிறார். இத்திருக்கோவிலின் தல விருட்சமாக வேப்ப மரம் உள்ளது. சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாகக் கருதப்படும் இம்மரம், தற்போது திருக்காப்பு விண்ணப்பச் சீட்டை விண்ணப்பிக்கும் இடமாகத் திகழ்கிறது.
இரண்டாம் திருச்சுற்றில் விநாயகர் சன்னிதி, நவராத்திரி மண்டபம், அபிஷேக அம்மன் சன்னிதி, யாகசாலை, தங்கரத மண்டபம் உள்ளன. இரண்டாம் திருச்சுற்று முடிவடைந்து உள்ளே சென்றால் கொடிமரம், பலிபீடம் காணப்படும்.
அதைத் தொடர்ந்து மாவிளக்கு மண்டபம் இருக்கிறது. கருவறைக்குச் செல்லும் வாசலின் இருபுறமும் துவார சக்திகளின் சுதை சிற்பம் உள்ளன. வலதுபுறம் கருப்பண்ணசாமி சன்னிதி உள்ளது.
கருவறைக்கும், மாவிளக்கு மண்டபத்துக்கும் இடைப்பட்ட பகுதிகள் மகா மண்டபம் மற்றும் அர்த்த மண்டபம் என்று அழைக்கப்படுகின்றன.
கருவறையை சுற்றி ஒரு பிரகாரம் உள்ளது. இங்கே விமானத்தின் அதிஷ்டான பகுதியை ஒட்டி ஒரு தொட்டி அமைக்கப்பட்டு, அதில் நீர் நிரப்பப்பட்டுள்ளது. அம்மனின் உக்கிரத்தை தணிப்பதற்காகவும், அம்பாளின் கருவறை குளிர்ச்சியாக இருப்பதற்காகவும் இந்த தொட்டி அமைக்கப்பட்டிருப்பதாக சொல்கிறார்கள்.
கருவறையின் இடது புறம் உற்சவ அம்மனின் சன்னிதி உள்ளது. இத்திரு மேனிக்கு நாள்தோறும் சிறப்பாக அபிஷேகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த உற்சவ அம்மனுக்கு தினமும் 6 கால பூஜை மற்றும் அபிஷேகங்கள் நடைபெறுகின்றன.
காலை 7.30 மணி மற்றும் மாலை 5.30 மணிக்கு செய்யப்படும் அபிஷேக தீர்த்தம், வடக்குப் பிரகாரத்தில் பக்தர்கள் மீது தெளிக்கப்படுகிறது. இதனால் அம்மை நோய் கண்டவர்கள் மற்றும் உடல்நலக் குறைவு உள்ளவர்கள் நோயின் தாக்கத்தில் இருந்து விரைவில் நலம் பெறுவர் என்பது நம்பிக்கை.

கருவறையில் சமயபுரம் மாரியம்மன் மாறுபட்ட கோலத்தில் அருள்கிறார். மூலவரின் திருவுருவம் மரத்தால் செய்யப்பட்டது. ஆனால் அதன்மேல் சுதை வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருப்பது புதுமையான ஒன்று.
தங்க ஜடா மகுடம், நெற்றியில் வைரப்பட்டை, வைர கம்மல், மூக்குத்தி, கண்களில் கருணை நிறைந்த பார்வையும் கொண்டிருக்கும் மாரியம்மன், தன்னுடைய இடது கரங்களில் கபாலம், மணி, வில், பாசம், வலது கரத்தில் கத்தி, சூலம், அம்பு மற்றும் உடுக்கை ஆகியவற்றை தாங்கியுள்ளார்.
இடது காலை மடக்கி வைத்து, வலது காலை தொங்கவிட்ட நிலையில் சுகாசனத்தில் அமர்ந்து பக்தர்களின் குறைகளை நீக்கி அருள்கிறாள், இந்த மாரியம்மன்.
இந்த ஆலயத்தில் தைப்பூசத் திருவிழா, பூச்சொரிதல், சித்திரை பெருந்திருவிழா, புரட்டாசியில் நவராத்திரி பெருவிழா ஆகியவை முக்கியமான திருவிழாக்கள் ஆகும். தை மாதத்தில் 11 நாட்கள் தைப்பூசத் திருவிழா நடைபெறுகிறது.
பத்தாம் திருநாளில் திருவரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் இருந்து மாரியம்மன் சீர் பெறுதல் வைபவம் நடைபெறும். மாசி மாதத்தில் கடைசி ஞாயிற்றுக்கிழமை அம்மனுக்குப் பூச்சொரிதல் நடைபெறுகிறது.
மகிஷாசுரனை வதம் செய்த பாவம் தீரவும், தன் கோபம் அடங்கவும் தவம் செய்து, பச்சைப் பட்டினி விரதம் இருந்து சாந்த சொரூபியாக மாறிய மாரியம்மனுக்கான திருவிழா இது.
வருடந்தோறும் மாசி மாத கடைசி ஞாயிறு முதல் பங்குனி மாத கடைசி ஞாயிறு வரை பக்தர்களுக்காக அம்மனே 28 நாட்கள் பச்சைப் பட்டினி விரதம் இருப்பது சமயபுரம் மாரியம்மன் கோவிலின் தனிச்சிறப்பு ஆகும்.
உலக மக்களின் நன்மைக்காகவும், தன்னை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு நோய்கள், தீவினைகள் அணுகாது இருக்கவும், சகல சவுபாக்கியங்கள் கிடைக்கவும் இந்த பச்சைப்பட்டினி விரதம் இருக்கிறார், சமயபுரம் மாரியம்மன்.
சமயபுரத்தில் வழக்கமாக அம்பாளுக்கு தினம் தோறும் 6 கால பூஜையில், 6 விதமான தளிகையும் நைவேத்தியமாக வைக்கப்படும். சமைத்த உணவுப் பொருட்களை தான் 'தளிகை' என்று சொல்வார்கள்.
ஆனால் அம்மன் பச்சைப் பட்டினி விரதம் இருக்கும் 28 நாட்களும், அம்பாளுக்கு சமைத்த உணவுகள் எதுவும் படைக்கப்படாது. இந்த 28 நாட்களிலும் இளநீர், பானகம், உப்பில்லாத நீர்மோர், துள்ளுமாவு, கரும்பு, பழ வகைகள் மட்டுமே நைவேத்தியமாக படைக்கப்படும்.
இந்த ஆண்டுக்கான பச்சைப் பட்டினி விரதம் கடந்த 9-ந் தேதி தொடங்கியது. இந்த விரதம் வருகிற ஏப்ரல் 6-ந் தேதி வரை உள்ளது. இந்த இடைப்பட்ட நாளில் வரும் ஞாயிற்றுக்கிழமைகளில் அம்மனுக்கு பூச்சொரிதல் விழா நடை பெறும்.
- 20-ந்தேதி சஷ்டி விரதம்.
- இன்று திருப்பரங்குன்றம் ஆண்டவர் திருக்கல்யாணம்.
18-ந்தேதி (செவ்வாய்)
* திருப்பரங்குன்றம் ஆண்டவர் திருக்கல்யாணம்.
* மன்னார்குடி ராஜ கோபாலசுவாமி உற்சவம் ஆரம்பம்.
* காங்கேயம் முருகப்பெருமான் லட்சதீபக் காட்சி.
* உப்பிலியப்பன் கோவில் சீனிவாசப் பெருமாள் காலை பல்லக்கிலும், இரவு வெள்ளி பிரபையிலும் தாயாருடன் புறப்பாடு.
* சமநோக்கு நாள்.
19-ந்தேதி (புதன்)
* நத்தம் மாரியம்மன் மஞ்சள் நீராட்டு விழா, புஷ்பப் பல்லக்கில் புறப்பாடு.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்மருக்கு அலங்கார திருமஞ்சனம்.
* ஆழ்வார்திருநகரி நம்மாழ்வார் புறப்பாடு.
* கீழ்நோக்கு நாள்,
20-ந்தேதி (வியாழன்)
* சஷ்டி விரதம்.
* திருப்பரங்குன்றம் ஆண்டவர் தங்கமயில் வாகனத்தில் பவனி.
* திருவாரூர் தியாகராஜர் பவனி.
* சுவாமிமலை முருகப் பெருமான் தங்கக்கவசம் அணிந்து வைர வேல் தரிசனம்.
* சமநோக்கு நாள்.
21-ந்தேதி (வெள்ளி)
* திருவெள்ளறை சுவேதாத்திரிநாதர் காலை சிம்ம வாகனத்திலும், இரவு சேஷ வாகனத்திலும் பவனி.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.
* திருவில்லிபுத்தூர் ஆண்டாள் புறப்பாடு.
* சமநோக்கு நாள்.
22-ந்தேதி (சனி)
* திருபெரும்புதூர் மணவாள மாமுனிகள் புறப்பாடு.
* காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள், திருவரங்கம் பெருமாள், திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் தலங்களில் அலங்கார திருமஞ்சனம்,
* கீழ்நோக்கு நாள்.
23-ந்தேதி (ஞாயிறு)
* மன்னார்குடி ராஜ கோபாலசுவாமி கண்ட பேரண்ட பட்சி ராஜ அலங்காரம்.
* திருவெள்ளறை சுவேதாத்திரிநாதர் பூந்தேரில் பவனி.
* உப்பிலியப்பன் கோவில் சீனிவாசப் பெருமாள் காலை சூர்ணாபிஷேகம், இரவு சுவாமி புன்னை மரம், தாயார் அலங்காரப்படி சட்டத்தில் பவனி.
* கீழ்நோக்கு நாள்.
24-ந்தேதி (திங்கள்)
* திருவெள்ளறை சுவேதாத்திரிநாதர் வண்டலூர் சப்பரத்திலும், இரவு தங்க குதிரை வாகனத்திலும் பவனி.
* உப்பிலியப்பன் கோவில் சீனிவாசப் பெருமாள் காலையில் வெண்ணெய்த்தாழி சேவை.
* மேல்நோக்கு நாள்.
- சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல்.
- நத்தம் ஸ்ரீ மாரியம்மன் பொங்கல் பெருவிழா மாலை பூக்குழி விழா.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு பங்குனி-4 (செவ்வாய்க் கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: சதுர்த்தி இரவு 8.40 மணி வரை பிறகு பஞ்சமி
நட்சத்திரம்: சுவாதி மாலை 4.32 மணி வரை பிறகு விசாகம்
யோகம்: சித்த, மரணயோகம்
ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
சூலம்: வடக்கு
நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். காங்கேயம் ஸ்ரீ முருகப் பெருமான் லட்ச தீபக்காட்சி. நத்தம் ஸ்ரீ மாரியம்மன் பொங்கல் பெருவிழா மாலை பூக்குழி விழா. திருவாரூர் தியாகேசர் பவனி. மன்னார்குடி ஸ்ரீ ராஜகேபால சுவாமி உற்சவம் ஆரம்பம். ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ பெரியாழ்வார் புறப்பாடு. காரைக்கால் அம்மையார் குரு பூஜை. ஆறுமுக மங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநா யகர் காலை சிறப்பு அபிஷேகம். திருநறையூர் ஸ்ரீ சித்த நாதீசுவரர் கோவிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு, சம்ஹார அர்ச்சனை. திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன் றத்தூர், கந்தகோட்டம் கோவில்களில் சிறப்பு அபிஷேகம். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப்பாவாடை தரிசனம். திருமாலி ருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் புறப்பாடு. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஸ்ரீ ஆண்டாள் மூலவருக்கு திருமஞ்சனம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-வெற்றி
ரிஷபம்-ஆசை
மிதுனம்-தனம்
கடகம்-பக்தி
சிம்மம்-இரக்கம்
கன்னி-கண்ணியம்
துலாம்- முயற்சி
விருச்சிகம்-உயர்வு
தனுசு- உண்மை
மகரம்-சாந்தம்
கும்பம்-பரிசு
மீனம்-நலம்
- ஒப்பிலியப்பன் கோவில் 108 திவ்ய தேச தலங்களில் ஒன்றாகும்.
- பங்குனி பெருவிழா 12 நாட்கள் சிறப்பாக நடை பெறுவது வழக்கம்.
சுவாமிமலை:
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் ஒப்பிலியப்பன் கோவில் 108 திவ்ய தேச தலங்களில் ஒன்றாகும். இத்தலம் நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், பொய்கையாழ்வார், பேயாழ்வாரால் மங்களா சாசனம் செய்யப்பட்ட கோவிலாகும்.
மேலும், பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி பெருவிழா 12 நாட்கள் சிறப்பாக நடை பெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

முன்னதாக உற்சவர் பூமாதேவி உடனாய பொன்னப்பர் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் முன்பு எழுந்தருளினார்.
தொடர்ந்து, கொடி மரத்துக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று, தீபாராதனை காண்பிக்கப்பட்டு, பட்டாட்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கருடாழ்வார் சின்னம் வரையப்பெற்ற கொடி ஏற்றப்பட்டது.
இதனை யொட்டி மூலவர் ஒப்பிலியப்பனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று, அபிஷேக, அலங்காரம் செய்யப்பட்டது. விழா நாட்களில் தினமும் சிறப்பு அலங்காரத்தில் பெருமாள்-தாயார் எழுந்தருளி வீதிஉலா காட்சிகள் நடைபெறும்.
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வருகிற 25-ந்தேதியும், தொடர்ந்து, அஹோராத்ர புஷ்கரணியில் தீர்த்தவாரி நிகழ்ச்சியும், உற்சவர் திருமஞ்சனம், அன்னப் பெரும்படையல், புஷ்பயாகம், விடையாற்றி புறப்பாடுடன் விழா நிறைவடைகிறது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.