என் மலர்
செய்திகள்
- ஆட்டோ டிரைவர் உள்ளிட்டோரிடம் போலீசார் விசாரணை நடத்தி தகவல்களை பெற்றுள்ளனர்.
- நகரில் முக்கிய இடத்தில் குண்டு வெடிப்பை நிகழ்த்த சதி நடந்திருப்பதற்கான பரபரப்பு தகவல் தெரியவந்துள்ளது.
பெங்களூரு:
பெங்களூரு சம்பிகேஹள்ளி அருகே தனிச்சந்திராவில் உள்ள ஒரு ஓட்டலில் அப்துல் ரகுமான் (வயது 24) என்பவர் ஊழியராக வேலை செய்தார். அவரிடம், ஆதார் அடையாள அட்டை கொடுக்கும்படி உரிமையாளர் கேட்டு வந்துள்ளார். ஆனால் அப்துல் ரகுமான் கொடுக்காமல் இருந்ததால், அவரது உடைமைகள் இருந்த பையில் சக ஊழியர் ஆதார் அட்டையை தேடிய போது ஒரு கையெறி குண்டு சிக்கி இருந்தது.
கடந்த மாதம் (மார்ச்) 21-ந் தேதி இந்த சம்பவம் நடந்திருந்தது. இதையடுத்து, ஓட்டல் ஊழியர் அப்துல் ரகுமான் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட கையெறி குண்டு செயலிழக்க செய்யப்பட்டது. அதே நேரத்தில் கையெறி குண்டுவின் உதிரி பாகங்கள் தடய அறிவியல் ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது. கைதான அப்துல் ரகுமானை காவலில் எடுத்து போலீசார் விசாரித்தனர்.
மேலும் மத்திய விசாரணை அமைப்பினர், அப்துல் ரகுமானிடம் தீவிரமாக விசாரித்தார்கள்.
அப்போது பெங்களூரு அரண்மனை மைதானத்தில் வைத்து ஒரு நபர் தன்னிடம் கையெறி குண்டை கொடுத்து, அரண்மனை அருகே உள்ள ஒரு கடையில் வைக்கும்படி கூறியதாக அப்துல் ரகுமான் கூறியுள்ளார். இதன்மூலம் நகரில் முக்கிய இடத்தில் குண்டு வெடிப்பை நிகழ்த்த சதி நடந்திருப்பதற்கான பரபரப்பு தகவல் தெரியவந்துள்ளது.
மேலும் அரண்மனை மைதானத்தில் இருந்து தனிச்சந்திராவுக்கு ராஜண்ணா என்பவர் தான் ஆட்டோவில் அழைத்து சென்றதாகவும், மேலும் 2 பேரின் பெயர்களையும் அப்துல் ரகுமான் கூறியதாக சொல்லப்படுகிறது. அதுபற்றி ஆட்டோ டிரைவர் உள்ளிட்டோரிடம் போலீசார் விசாரணை நடத்தி தகவல்களை பெற்றுள்ளனர். அவர்கள் அப்துல் ரகுமான் பற்றி தங்களுக்கு எதுவும் தெரியாது என கூறியதாக தெரிகிறது.
இதையடுத்து, கையெறி குண்டுவை அப்துல் ரகுமானுக்கு கொடுத்த நபரை பிடிக்க சம்பிகேஹள்ளி போலீசார் மற்றும் மத்திய விசாரணை அமைப்பினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.
- யார் எதிரியாக நினைத்தார்களோ அவர்களை பெயரை வைத்து மகிழந்த கட்சி தான் திமுக.
- கூட்டணி பற்றி ரகசியமாக பேசிவிட்டு கேட்டால் நாங்கள் சும்மதான் போயிட்டு வந்தோம் என்கிறார்கள்.
சென்னை:
சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு 'சூரிய மகள் 2025' என்ற தலைப்பில் ராஜா அண்ணாமலை மன்றத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் இயக்குநர் கரு.பழனியப்பன் கலந்து கொண்டார். அவர் பேசியாதவது:-
நிகழ்ச்சியில் பேசிய இரண்டு அமைச்சர்களும் அரசியல் பற்றி பேசாமல், இந்த ஆட்சியின் சாதனைகளை பற்றி பேசினார்கள். முதலமைச்சர்களின் திட்டங்களை பற்றி பேசினார்கள். அது தான் மனிதனுக்கு கிடைக்கின்ற மிக சிறந்த பாராட்டு என்று நினைகின்றேன்.
திமுக ஆட்சியில் நூலகம் கட்டினார்கள். முதலில் சென்னை நூலகத்திற்கு அண்ணாவின் பெயர், மதுரையில் நூலகம் கட்டி கலைஞர் பெயர், கோவை நூலகத்திற்கு பெரியார் பெயர் வைத்துள்ளனர்.
ஆனால் திருச்சியில் உள்ள நூலகத்திற்கு எதற்காக காமராஜர் பெயர் வைக்க வேண்டும். ஏன் என்றால் விஜய் என்னுடைய எதிரி திமுக தான் என்று சொன்னார். அதை முதல் முதலில் 1958ல் சட்டசபையில் என்னுடைய ஒரே எதிரி திமுக தான் என்று காமராஜர் சொன்னார்.
யார் எதிரியாக நினைத்தார்களோ அவர்களை பெயரை வைத்து மகிழந்த கட்சி தான் திமுக.
கூட்டணி பற்றி ரகசியமாக பேசிவிட்டு கேட்டால் நாங்கள் சும்மதான் போயிட்டு வந்தோம் என்கிறார்கள்.
ஆனால் அமித்ஷாவோ கூட்டணியை பற்றி பேசினோம் என்று சொல்கிறார்.
நமக்கு இருக்குற ஒரே காமெடி அண்ணாமலை. அவரையும் மாத்திடாதீங்க.. அந்தக் கட்டுல எல்லாமே ஜோக்கர்தான் என அவர் கூறினார்.
- நவிமும்பை விமான நிலையத்தில் ஜூன் மாதம் முதல் விமான சேவை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
- மும்பை- நவிமும்பையை இணைக்கும் வகையில் ‘அடல்சேது’ கடல் பாலம் கட்டப்பட்டுள்ளது.
மும்பை:
நவிமும்பையில் சர்வதேச தரத்தில் விமான நிலையம் கட்டும் பணி இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. நவிமும்பை விமான நிலையத்தில் ஜூன் மாதம் முதல் விமான சேவை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில் நவிமும்பை விமான நிலையம்- தானே இடையே 26 கி.மீ. தூரத்துக்கு பறக்கும் சாலை அமைக்க சிட்கோ (நகர மற்றும் தொழில் மேம்பாட்டு கழகம்) திட்டமிட்டுள்ளது.
மும்பை- நவிமும்பையை இணைக்கும் வகையில் 'அடல்சேது' கடல் பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்தநிலையில் நவிமும்பை விமானநிலையத்தை தானேயுடன் இணைக்கும் வகையில் ரூ.8 ஆயிரம் கோடி செலவில் பறக்கும் சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி திகா பத்னி மைதானம் அருகில் உள்ள தான் நிரான்கரி சவுக்கில் இருந்து வாஷி பாம் பீச் வரை 17 கி.மீ.க்கு பறக்கும் சாலை அமைக்கப்படுகிறது.
அதன்பிறகு பாம் பீச் ரோட்டில் இருந்து நவிமும்பை விமான நிலையத்துக்கு நேரடியாக இரட்டை பறக்கும் சாலை அமைக்கப்பட உள்ளது.
- யானைகள் ரெயில் தண்டவாளங்களை கடக்கும் 11 இடங்கள் அடையாளம் காணப்பட்டது.
- 2 இடங்களில் சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டு வருகிறது.
சென்னை:
தமிழ்நாடு - கேரள வனப்பகுதிகளில் தண்டவாளங்களை கடக்க முற்படும்போது ரெயில் மோதி யானைகள் உயிரிழப்பதைத் தடுக்க கோரியும், உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை தெற்கு ரெயில்வே நிர்வாகம் மேற்கொள்ளக்கோரியும் சென்னை ஐகோர்ட்டில் திண்டுக்கல்லைச் சேர்ந்த மனோஜ் இமானுவேல் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரதசக்கரவர்த்தி ஆகியோர் கொண்ட சிறப்பு டிவிசன் பெஞ்ச் விசாரித்து வருகிறது. இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தெற்கு ரெயில்வே தரப்பில் ஆஜரான வக்கீல் ராம்குமார், 'ரெயில் மோதி யானைகள் உயிரிழப்பை தடுக்கும் வகையில் சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் தமிழ்நாடு மற்றும் கேரள வனத்துறையுடன் இணைந்து தெற்கு ரெயில்வே நிர்வாகம் கோவை, பாலக்காடு ஒட்டிய வனப்பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டது.
யானைகள் ரெயில் தண்டவாளங்களை கடக்கும் 11 இடங்கள் அடையாளம் காணப்பட்டது. இதில் 9 இடங்களில் சுரங்க வழித்தடங்கள் அமைக்கப்பட்டு தண்டவாளங்களுக்கு அடியில் யானைகள் கடந்து செல்லும் வகையில் வழி அமைக்கப்பட்டுள்ளது. 2 இடங்களில் சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டு வருகிறது. இதேபோல போத்தனூர் - மதுக்கரை பகுதிகளில் தண்டவாளத்தை ஒட்டிய பகுதிகளில் யானை நடமாட்டத்தைக் கண்டறியும் வகையில் சென்சார் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. அப்பகுதிகளில் 12 உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டு ஒவ்வொன்றிலும் 2 அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.
இந்த நவீன கேமராக்கள் யானைகள் ரெயில் தண்டவாளங்களுக்கு அருகில் உள்ள 150 மீட்டர் தூர சுற்றளவுக்குள் வந்தால் உடனடியாக அருகில் உள்ள ரெயில் நிலைய மேலாளர் மற்றும் ரெயி்ல் ஓட்டுநர்களுக்கு தகவல்களை அனுப்பும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளன.
தெற்கு ரெயில்வே நிர்வாகத்தின் இதுபோன்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக பாலக்காடு - போத்தனூர் வழித்தடத்தில் கடந்த 27 மாதங்களாக ரெயில் மோதி ஒரு யானை கூட சாகவில்லை.'' என்று கூறினார்.
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இதுகுறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்யும்படி தெற்கு ரெயில்வே நிர்வாகத்துக்கு உத்தரவிட்டனர்.
- இங்கிலாந்தில் முதன்முறையாக கண்டுபிடிக்கப்பட்ட ரோமானிய நாணயம் ஆகும்.
- நாணய சேகரிப்பில் தீவிர ஆர்வம் கொண்ட ஸ்காட்லாந்தைச் சேர்ந்தவர் அதனை வாங்கியது குறிப்பிடத்தக்கது.
லண்டன்:
இங்கிலாந்தின் மேற்கு மிட்லாண்ட்ஸ் பிராந்தியம் கிங்ஸ்வின்போர்டைச் சேர்ந்தவர் ரான் வால்டர்ஸ் (வயது 76). கடந்த ஆண்டு இவர் அங்குள்ள வால் ஹீத் நகரில் பழங்கால தங்க நாணயம் ஒன்றைக் கண்டெடுத்தார். பின்னர் நடைபெற்ற ஆய்வில் அது ஆலஸ் விட்டெலியஸ் என்ற மன்னர் காலத்தைச் சேர்ந்த ரோமானிய நாணயம் என்பது தெரிய வந்தது.
1,900 ஆண்டுகள் பழமை வாய்ந்த இதுவே இங்கிலாந்தில் முதன்முறையாக கண்டுபிடிக்கப்பட்ட ரோமானிய நாணயம் ஆகும். இதனை தற்போது வால்டர்ஸ் விற்க முடிவு செய்தார். அதன்படி ஸ்டோர்பிரிட்ஜ் நகரில் நடைபெற்ற ஏலத்தின்போது அந்த நாணயம் சுமார் ரூ.5 லட்சத்துக்கு விற்பனையானது. நாணய சேகரிப்பில் தீவிர ஆர்வம் கொண்ட ஸ்காட்லாந்தைச் சேர்ந்தவர் அதனை வாங்கியது குறிப்பிடத்தக்கது.
- முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு 'சூரிய மகள் 2025' என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடந்தது.
- இந்த நிகழ்ச்சியில் நடிகர் சதயராஜ் மற்றும் நடிகர் பிரபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சென்னை:
சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு 'சூரிய மகள் 2025' என்ற தலைப்பில் ராஜா அண்ணாமலை மன்றத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் சதயராஜ் மற்றும் நடிகர் பிரபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சத்யராஜ், மு.க.ஸ்டாலின் என்றால் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்றும் சொல்லலாம். முதுகெலும்புள்ள களப்போராளி ஸ்டாலின் என்றும் சொல்லலாம் என தெரிவித்தார்.
சமீபத்தில் நடந்த த.வெ.க. பொதுக்குழுவில் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய், மாண்புமிகு மன்னராட்சி முதல்வர் அவர்களே.... மாண்புமிகு திரு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே... பெயரை மட்டும் வீராப்பா சொன்னா பத்தாது. செயலையும், ஆட்சியிலும் அதை காட்டணும் அவர்களே என காட்டமாகத் தெரிவித்தார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக நடிகர் சத்யராஜ் மேற்கண்டவாறு கூறியுள்ளார் என கருதப்படுகிறது.
- கச்சத்தீவை திரும்பப்பெற அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொள்ள வலியுறுத்தி தீர்மானம்.
- இலங்கை கடற்படையால் தமிழ்நாடு மீனவர்களுக்கு ஏற்படும் இன்னல்களைப் போக்கிட இதுவே நிரந்தரத் தீர்வாக அமையும்.
தமிழக சட்டசபை கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நாளை கச்சத்தீவை திரும்பப்பெற அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொள்ள வலியுறுத்தி, பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வருகிறார்.
இலங்கை கடற்படையால் தமிழ்நாடு மீனவர்களுக்கு ஏற்படும் இன்னல்களைப் போக்கிட இதுவே நிரந்தரத் தீர்வாக அமையும் எனத் தெரிவித்துள்ளார்.
- திருமணத்துக்கு பிறகும் அவர்களுக்கு இடையே நட்பு நீடித்தது.
- மனைவியிடம் 2 குழந்தைகள் உள்ளனர். இனிமேலும் இந்த காதல் தேவையா எனக்கூறி கண்டித்தார்.
லக்னோ:
உத்தர பிரதேச மாநிலம் சந்த்கபூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பப்லு. இவரது மனைவி ராதிகா. இவர்களுக்கு கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்தத் தம்பதிக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.
ராதிகாவுக்கு ஏற்கனவே தனது கிராமத்தைச் சேர்ந்த ஒரு வாலிபருடன் காதல் இருந்து வந்தது. திருமணத்துக்கு பிறகும் அவர்களுக்கு இடையே நட்பு நீடித்தது. பப்லு வேலை விஷயமாக அடிக்கடி வெளியூர் சென்று விடுவார். இந்தச் சமயத்தைப் பயன்படுத்தி காதலர்கள் இருவரும் ரகசியமாக அடிக்கடி சந்தித்து வந்தனர். இந்த விஷயம் அரசல் புரசலாக உறவினர்களுக்கு தெரியவந்தது. இது பற்றி அவர்கள் பப்லுவிடம் தெரிவித்தனர். அவரும் மனைவியிடம் 2 குழந்தைகள் உள்ளனர். இனிமேலும் இந்த காதல் தேவையா? எனக்கூறி கண்டித்தார். ஆனால் ராதிகாவோ காதலனை தன்னால் மறக்க முடியவில்லை என தெரிவித்தார்.
இதனால் வேறு வழியின்றி, காதலனுடன் சேர்த்து வைக்க முடிவு செய்தார். தனது விருப்பத்தை அவர் மனைவி மற்றும் கிராம மக்களிடம் கூறினார். முதலில் இதற்கு எதிர்ப்பு கிளம்பினாலும் பின்னர் அனைவரும் சம்மதம் தெரிவித்தனர். காதலர்களும் இதை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டனர்.
இதையடுத்து, கோர்ட்டில் வைத்து ராதிகாவுக்கும், காதலனுக்கும் பப்லு திருமணம் செய்து வைத்தார். பின்னர் அங்குள்ள ஒரு கோவிலில் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள், உறவினர்கள் கண் முன் ராதிகாவும், காதலனும் மாலை மாற்றிக்கொண்டனர்.
திருமணம் முடிந்ததும் பப்லு தனது மனைவியிடம் 2 குழந்தைகளையும் தான் வளர்க்க விரும்புவதாக தெரிவித்தார். இதற்கு ராதிகாவும் சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து 8 ஆண்டு தன்னுடன் குடும்பம் நடத்திய மனைவியை பப்லு காதலனுடன் அனுப்பி வைத்து விட்டு 2 குழந்தைகளை தன்னுடன் அழைத்துச் சென்றார்.
இந்நிலையில், காதலனுடன் சென்ற ராதிகாவை அவரது புதிய மாமியார் திருப்பி அனுப்பியுள்ளார். ராதிகா தனது முதல் கணவருடன் பெற்ற இரு குழந்தைகளுக்காக வருத்தப்படுவதாகவும், அவர்கள் தங்கள் தாயின் அன்பைப் பெறுவதை உறுதிசெய்ய விரும்புவதாகவும் கூறி ராதிகாவை திருப்பி அனுப்பினார்.
இதையடுத்து, வீட்டுக்கு வந்த ராதிகாவை ஏற்றுக்கொண்ட பப்லு, இனிமேல் அவளுக்கு என்ன நடந்தாலும் அதற்கு நான்தான் பொறுப்பு என தெரிவித்தார்.
- பாம்பன் புதிய ரெயில் பாலத்தை திறந்து வைக்க பிரதமர் மோடி ஏப்ரல் 6-ம் தேதி தமிழகம் வருகிறார்.
- அதன்பின், பிரதமர் மோடி ராமேசுவரத்தில் உள்ள ராமநாதசாமி கோவிலில் தரிசனம் செய்கிறார்.
ராமேஸ்வரம்:
ராமநவமியான வருகிற 6-ம் தேதி அன்று பாம்பன் புதிய ரெயில் பாலம் திறப்பு விழா நடைபெற உள்ளது. ராமாயணத்துடன் நெருங்கிய தொடர்புடைய ராமேசுவரத்தில் நடைபெறும் இந்த பிரமாண்ட விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பாம்பன் புதிய பாலத்தில் ரெயில் போக்குவரத்தைத் தொடங்கி வைக்கிறார்.
பாம்பன் ரெயில்வே பாலம் திறப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கவர்னர் ஆர்.என்.ரவி, மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் தமிழக எம்.பி.க்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், பா.ஜ.க. மூத்த தலைவர்கள், தொண்டர்கள் என பலரும் கலந்துகொள்ள உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை தெற்கு ரெயில்வே செய்து வருகிறது.
பாம்பன் புதிய பாலம் திறப்புக்கு பின், பிரதமர் மோடி ராமேசுவரத்தில் உள்ள ராமநாதசாமி கோவிலில் தரிசனம் செய்கிறார்.
இந்நிலையில் , பிரதமர் மோடி வருகையையொட்டி ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட இடங்களில் இருந்து ஏப்ரல் 4 முதல் 6 வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
பாம்பனில் நிறுத்தப்பட்டுள்ள விசைப்படகுகளை குந்துகால் துறைமுகத்திற்கு மாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாட்டுப்படகுகளை பாம்பனை விட்டு அப்புறப்படுத்தி தங்கச்சிமடம் பகுதியில் நிறுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- கபாலீசுவரர் கோவில் பங்குனி பெருவிழாவையொட்டி மயிலாப்பூரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
- மாட வீதிகளில் வாகனங்களை நிறுத்தக் கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
கபாலீசுவரர் கோவில் பங்குனி பெருவிழாவையொட்டி மயிலாப்பூரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இதுதொடர்பாக,
சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் வருடாந்திர பங்குனி பெருவிழா வரும் 3-ம் தேதி முதல் ஏப்ரல் 12-ம் தேதி வரை நடைபெறுவதை முன்னிட்டு பொதுமக்களின் போக்குவரத்து வசதியை கருதி தேவைப்படும் நேரங்களில் பின்வரும் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படும். மேற்கண்ட நாட்களில் கபாலீசுவரர் கோவிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து கோவிலை நோக்கி வாகனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது.
அதாவது தேவடி தெருவில் இருந்து - நடுத்தெரு மற்றும் சித்ரகுளம் வடக்கு நோக்கி, நடுத்தெரு மற்றும் சுந்தரேஸ்வரர் தெருவில் இருந்து கிழக்கு மாட தெரு நோக்கி, வடக்கு சித்ரகுளத்தில் இருந்து கிழக்கு மாட தெரு நோக்கி, மேற்கு சித்ரகுளம் தெரு, டி.எஸ்.வி. கோவில் தெரு, ஆடம்ஸ் தெரு மற்றும் ஆர்.கே. மடம் சாலையில் இருந்து தெற்கு மாட தெரு நோக்கி, ஆர்.கே.மடம் சாலையில் இருந்து வடக்கு மாட தெரு நோக்கி, கச்சேரி சாலையில் இருந்து மத்தள நாராயணன் தெரு நோக்கி, புனிதமேரி சாலையில் இருந்து ஆர்.கே.மடம் சாலையில் தெற்கு மாடவீதி நோக்கி, டாக்டர் ரங்கா சாலையில் இருந்து வெங்கடேச அக்ரஹாரம் சாலை நோக்கி, முண்டக கன்னியம்மன் கோவில் தெருவில் இருந்து கல்விவாரு தெரு நோக்கியும் வாகனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது.
ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் இருந்து லஸ் சந்திப்பு வழியாக அடையாறு செல்லும் வாகனங்கள் லஸ் சர்ச் ரோடு, டிசில்வா ரோடு, பக்தவத்சலம் ரோடு, ரங்கா ரோடு, சி.பி.ராமசாமி சாலை, காளியப்பா சந்திப்பு, காமராஜ் சாலை, ஸ்ரீனிவாச அவென்யு, ஆர்.கே.மடம் சாலை வழியாக கிரீன்வேஸ் சந்திப்பை அடையலாம்.
அடையாறில் இருந்து லஸ் சந்திப்பு வழியாக ராயப்பேட்டை செல்லும் வாகனங்கள் ஆர்.கே.மடம் ரோடு, திருவேங்கடம் தெரு, வெங்கட கிருஷ்ணா ரோடு, சிருங்கேரி மடம் சாலை, வாரன்ரோடு, ரங்கா ரோடு, கிழக்கு அபிராமபுரம் முதல் தெரு, லஸ் அவென்யூ, அமிர்தாஞ்சன் சந்திப்பு, கற்பகாம்பாள் நகர், பி.எஸ்.சிவசாமி சாலை, ராயப்பேட்டை நெடுஞ்சாலை வழியாக இலக்கை அடையலாம்.
ஆழ்வார்ப்பேட்டை சந்திப்பில் இருந்து லஸ் சந்திப்பு வழியாக செல்லும் வாகனங்கள் ஆலிவர் சாலை, பி.எஸ்.சிவசாமி சாலை சந்திப்பு, விவேகானந்தர் கல்லூரி, ராயப்பேட்டை நெடுஞ்சாலை வழியாக இலக்கை அடையலாம்.
வருகிற 5-ம் தேதி அதிகாரநந்தி திருவிழா காலை 5 மணி முதல் நிகழ்ச்சி முடிவடையும் வரையிலும், ஏப்ரல் 9-ம் தேதி தேர் திருவிழா காலை 5 மணி முதல் நிகழ்ச்சி முடிவடையும் வரையிலும் மற்றும் ஏப்ரல் 10-ம் தேதி அறுபத்து மூவர் திருவிழா பகல் 1 மணி முதல் நிகழ்ச்சி நிறைவடையும் வரையிலும் மேற்கண்ட போக்குவரத்து மாற்றங்கள் செயல்படுத்தப்படும்.
வருகிற 5 மற்றும் ஏப்ரல் 9,10-ம் தேதிகளில் சன்னதி தெரு, கிழக்கு மாடவீதி, தெற்கு மாடவீதி, ராமகிருஷ்ணா மடம் சாலை, மேற்கு மாடவீதி மற்றும் வடக்கு மாடவீதி ஆகிய இடங்களில் எந்த வாகனமும் நிறுத்த அனுமதியில்லை. அந்த நாட்களில் கீழ்கண்ட இடங்களில் வாகனங்களை நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது அதன் விவரம் வருமாறு:-
கிழக்கு அபிராமபுரத்தில் இருந்து வரும் பக்தர்களின் வாகனங்கள் சாய்பாபா கோவில் அருகில், வெங்கடேச அக்ரஹாரம், திருமயிலை பறக்கும் ரெயில்வே நிலைய மேம்பாலத்தின் கீழ் நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. (100 இருசக்கர வாகனங்கள் மற்றும் 30 கார்)
ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் இருந்து மயிலாப்பூர் குளம் நோக்கி வரும் பக்தர்களின் வாகனங்கள் லஸ் சர்ச் ரோடு, காமதேனு கல்யாண மண்டபம் எதிரில் நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. (100 இருசக்கர வாகனங்கள் மற்றும் 15 கார்)
செயின்ட் மேரீஸ் சாலை மற்றும் மந்தவெளி வீதியில் இருந்து மயிலாப்பூர் குளம் நோக்கி வரும் வாகனங்கள் பி.எஸ். பள்ளி அருகே கபாலீசுவரர் கோவில் மைதானத்தில் நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. (400 இருசக்கர வாகனங்கள் மற்றும் 80 கார்)
காவல்துறை வாகனங்கள் சுந்தரேஸ்வரர் தெருவில் உள்ள ரசிக ரஞ்சனி சபா வளாகத்தில் நிறுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. (100 இருசக்கர வாகனங்கள் மற்றும் 20 கார்)
வாகன ஓட்டுனர்களும், பொதுமக்களும் மேற்கண்ட நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
- மாநிலம் முழுவதும் 1-ஆம் வகுப்பிற்கு 1,05,286 மழலையர் சேர்ந்துள்ளனர்.
- ஏனைய வகுப்புகளும் சேர்த்து மொத்தம் 1,17,310 மாணவச் செல்வங்கள் சேர்ந்துள்ளனர்.
தமிழக கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் பக்க பதிவில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு முழுவதும் அரசுப்பள்ளிகளில் 2025- 2026-ஆம் ஆண்டிற்காக மாணவச் சேர்க்கையை மார்ச் 1-ஆம் தேதி சென்னையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அன்றிலிருந்து ஏராளமான பெற்றோர் தங்கள் பிள்ளைகளை ஆர்வமுடன் அரசுப்பள்ளிகளில் சேர்த்து வருகிறார்கள்.
சேர்க்கை தொடங்கியது முதல் கடந்த ஒரு மாதத்தில் மாநிலம் முழுவதும் 1-ஆம் வகுப்பிற்கு 1,05,286 மழலையர் உட்பட ஏனைய வகுப்புகளும் சேர்த்து மொத்தம் 1,17,310 மாணவச் செல்வங்கள் சேர்ந்துள்ளனர். அனைவருக்கும் வாழ்த்துகள்.
தொடர்ந்து மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. கல்வியின் துணை கொண்டு உலகை வெல்ல நம் அரசுப்பள்ளிகளே தலைசிறந்த முறையில் அடித்தளமிடும்.
இவ்வாறு அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
- கடந்த ஜனவரி மாதம் 1ஆம் தேதி 57,200 ரூபாயாக இருந்தது. ஜனவரி 15ஆம் தேதி 58720 ஆக அதிகரித்தது.
- பிப்ரவரி 1ஆம் தேதி 61,960 ஆக அதிகரித்தது. பிப்ரவரி 15ஆம் தேதி 63,520 ஆக உயர்ந்தது.
சென்னையில் தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்த வண்ணம் உள்ளது. இப்படி சென்றால் ஒரு சவரன் ஒரு லட்சம் ரூபாயை தொட்டு விடுமோ என்ற அச்சம் மக்களிடையே ஏற்பட்டுள்ளது. இன்னும் சில வருடங்களில் கட்டாயம் ஒரு லட்சத்தை தொட்டு விட வாய்ப்புள்ளது.
தங்கத்தின் மீதான அதிக ஆர்வம், உலகப் பொருளாதாரம், கச்சா எண்ணெய், தங்கத்தின் மீதான முதலீடு ஆகியவை தங்க விலை அதிகரிக்க முக்கிய காரணிகளாக விளங்குகின்றன.
இந்த நிலையில் சென்னையில் கடந்த 3 மாதங்களில் தங்கம் விலை சவரனுக்கு 10,880 ரூபாய் அதிகரித்துள்ளது.
கடந்த ஜனவரி மாதம் 1ஆம் தேதி 57,200 ரூபாயாக இருந்தது. ஜனவரி 15ஆம் தேதி 58720 ஆக அதிகரித்தது.
பிப்ரவரி 1ஆம் தேதி 61,960 ஆக அதிகரித்தது. பிப்ரவரி 15ஆம் தேதி 63,520 ஆக உயர்ந்தது,
மார்ச் 1ஆம் தேதி 65,760 ஆக உயர்ந்தது. ஏப்ரல் 1ஆம் தேதியான இன்று 68,080 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 3 மாதங்களில் ஒரு சவரனுக்கு 10,880 ரூபாய் அதிகரித்துள்ளது.