search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருநள்ளாறில் சனிப்பெயர்ச்சி விழா ஏற்பாடுகள் தீவிரம்
    X

    திருநள்ளாறில் சனிப்பெயர்ச்சி விழா ஏற்பாடுகள் தீவிரம்

    திருநள்ளாறில் சனிப் பெயர்ச்சி விழா தொடர்பான ஏற்பாடு குறித்து கலெக்டர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
    புதுவை மாநிலம் காரைக்காலை சேர்ந்த திருநள்ளாறில் உலகப்பிரசித்தி பெற்ற சனீஸ்வரபகவான் தலமான தர்பாரண்யேஸ்வரசாமி கோவில் உள்ளது. இங்கு சனிகிரகத்தின் அதிபதியான சனிபகவான் தனி சன்னதி கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகி றார். இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை சனிபகவான் ஒரு ராசியில் இருந்து அடுத்த ராசிக்கு பெயர்ச்சி அடைவது சனிப்பெயர்ச்சி ஆகும். அதன்படி வருகிற டிசம்பர் மாதம் 19-ந் தேதி சனிப்பெயர்ச்சி விழா நடைபெற உள்ளது.

    இதையொட்டி செய்யப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டரும், திருநள்ளாறு தேவஸ்தான தனிஅதிகாரியுமான கேசவன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் தேவஸ்தான நிர்வாக அதிகாரியும், மாவட்ட துணை கலெக்டருமான எஸ்.கே.பன்னீர்செல்வம் பேசியதாவது;-

    திருநள்ளாறுக்கு வரும் பக்தர்களுக்காக போதுமான அளவில் கழிவறை வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும், பக்தர்களுக்கு தூய்மையான குடிநீர் வசதியும், தங்கும் வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. கோவிலின் உள்பகுதி, வெளிப்பகுதி, நளன்குளம் மற்றும் பல்வேறு முக்கிய இடங்களில் மொத்தம் 125 கண்காணிப்பு கேமராக்கள் நிரந்தரமாக பொருத்தப்பட்டுள்ளன. சனிப்பெயர்ச்சியின் போது மேலும் கூடுதலாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படும். இந்த ஆண்டு நடைபெறும் சனிப்பெயர்ச்சியின்போது, பாதுகாப்பு கருதி தனியார் அன்னதானம் மற்றும் வேறு பொருட்களை தருவது தடை செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து மாவட்ட கலெக்டர் கேசவன் பேசியதாவது;-

    சனிப்பெயர்ச்சி விழாவிற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருநள்ளாறுக்கு வருகை தருவார்கள் என்பதால் பழுதடைந்துள்ள சாலைகளை உடனடியாக பொதுப்பணித்துறை அதிகாரிகள செப்பனிட வேண்டும், திருநள்ளாறு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் குப்பைகள் சேராமல் தொடர்ந்து தீவிர துப்புரவு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

    சனிப்பெயர்ச்சி விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பதையொட்டி பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள காவல்துறை அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு சந்திரன், மற்றும் பல்வேறு அரசுத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×