என் மலர்
செய்திகள்
- பஸ்சை வழிமறித்த 3 பேர் கொண்ட கும்பல் தேவேந்திரனை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடியது.
- படுகாயம் அடைந்த தேவேந்திரன் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள அரியநாயகிபுரம் கிராமத்தை சேர்ந்த பிளஸ்-1 மாணவன் தேவேந்திரன் (வயது 17) நேற்று பள்ளிக்கு தேர்வு எழுதுவதற்காக பஸ்சில் சென்றார்.
அப்போது பஸ்சை வழிமறித்த 3 பேர் கொண்ட கும்பல் தேவேந்திரனை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடியது. இதில் படுகாயம் அடைந்த தேவேந்திரனை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, போலீசார் விசாரணை நடத்தி மாணவனை வெட்டியதாக கெட்டியம்மாள்புரம் பகுதியை சேர்ந்த முருகன் மகன் லெட்சுமணன் என்ற பெரியவன் (வயது 19) மற்றும் 2 இளஞ்சிறார்களை கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ஏப்ரல் 2ம் தேதிக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
- கோடை விடுமுறைக்கு மக்கள் அதிக அளவில் சொந்த ஊர் செல்வது வழக்கம்.
- இதனை முன்னிட்டு தெற்கு ரயில்வே சிறப்பு ரெயில்களை அறிவித்துள்ளது.
சென்னை:
தமிழகத்தில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை ஏப்ரல்-மே மாதங்களில் விடப்படுகிறது. கோடை விடுமுறையின்போது பேருந்துகள் மற்றும் ரெயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதும். எனவே கூட்ட நெரிசலைத் தவிர்க்க சிறப்பு ரெயில்கள் மற்றும் சிறப்பு பேருந்துகளை இயக்க வேண்டும் என பயணிகள் நீண்ட நாளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதற்கிடையே, கோடை விடுமுறைக்கு மக்கள் அதிக அளவில் சொந்த ஊர் செல்வது வழக்கம். இதனை முன்னிட்டு தெற்கு ரயில்வே சிறப்பு ரெயில்களை அறிவித்துள்ளது.
இந்நிலையில், தாம்பரத்தில் இருந்து திருச்சிக்கு ஏப்ரல் 4-ம் தேதி முதல் இருந்து 27-ம் தேதி வரை வாரத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு என 3 நாட்கள் கோடை கால அதிவேக சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும்.
நாளை காலை 8 மணிக்கு சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு தொடங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த ரெயில்கள் அதிவேக ரெயில்களாக இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகள் கோரிக்கை ஏற்று சிறப்பு ரெயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது பயணிகளுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
- தர்மேந்திரா பிரதான் அவர்களே, தவறான தகவல்களைப் பரப்புவது உண்மைகளை மாற்றாது.
- தமிழ்நாட்டின் கலாச்சாரத்தையும் மரபையும் சிதைக்க முயற்சிப்பவர்கள்தான் அரசியல் செய்கிறார்கள்.
நேற்று நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு தொடங்கிய உடனேயே, தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி மறுப்பு விவகாரத்தை கையில் எடுத்த திமுக எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
இதற்கு பதில் அளித்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திரா பிரதான், "பாஜக ஆளாத மாநிலங்களான கர்நாடகா, இமாச்சல பிரதேசத்திலும் தேசிய கல்விக் கொள்கை ஏற்கப்பட்டுள்ளது. தேசிய கல்விக்கொள்கை மூலம் இந்தி திணிக்கப்படுகிறது என்பது தவறானது. தமிழ்நாட்டு மாணவர்களை, திமுக தவறாக வழிநடத்தி அரசியல் செய்கிறது.
தமிழக எம்.பி.க்கள் நாகரீகமற்றவர்கள், ஜனநாயக விரோதமானவர்கள். தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்காலத்தை மாநில அரசு பாழடித்து வருகிறது.
பிஎம்ஸ்ரீ திட்டத்தில் கையெழுத்திட வந்த தமிழ்நாடு கடைசி நேரத்தில் யு-டர்ன் போட்டது. கடந்தாண்டு மார்ச் 15இல் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழ்நாடு அரசு கையெழுத்திட்டது. திட்டத்தை ஏற்க ஒப்புக்கொண்டு சூப்பர் முதலமைச்சரின் ஆலோசனையில் அரசு பின்வாங்கியது. சூப்பர் முதல்வரின் பேச்சைக் கேட்டு கையெழுத்திட மறுத்தனர்" என்று தெரிவித்தார்.
இந்நிலையில், மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பதில் அளித்துள்ளார்.
இது தொடர்பான அவரது எக்ஸ் பதிவில், "மத்திய அமைச்சர் தர்மேந்திரா பிரதான் அவர்களே, தவறான தகவல்களைப் பரப்புவது உண்மைகளை மாற்றாது.
தமிழ்நாடு தொடர்ந்து தேசிய கல்விக்கொள்கை 2020 ஐ எதிர்த்து வருகிறது, ஏனெனில் அது நமது வெற்றிகரமான கல்வி மாதிரியை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது.
எங்களது நிலைப்பாட்டில் எந்த திடீர் மாற்றமும் இல்லை. 15/3/2024 தேதியிட்ட கடிதம் தேசிய கல்விக்கொள்கையை அங்கீகரிப்பதாக கூறவில்லை.
மாணவர்களுக்கு நன்மை பயக்கும் போது மட்டுமே தமிழ்நாடு மத்திய திட்டங்களில் ஈடுபடுகிறது, ஆனால் அது எந்தவொரு திட்டத்தையும் அல்லது கட்டமைப்பையும் குருட்டுத்தனமாக ஏற்றுக்கொள்வதாக அர்த்தம் இல்லை. .
ஒரு குழு அமைக்கப்படும் என்றும், குழுவின் கண்டுபிடிப்புகள் மற்றும் பரிந்துரைகளின் அடிப்படையில் செயல்படுத்துவது குறித்து நாங்கள் முடிவு செய்வோம் என்றும் அந்தக் கடிதம் தெளிவாகக் கூறுகிறது.
அது தேசிய கல்விக்கொள்கையை திணித்து தமிழ்நாட்டின் கலாச்சாரத்தையும் மரபையும் சிதைக்க முயற்சிப்பவர்கள்தான் அரசியல் செய்கிறார்கள்.
தமிழ்நாட்டின் கல்வி மாதிரி முன்மாதிரியானது மற்றும் நமது மாணவர்களின் எதிர்காலத்தை வடிவமைக்கும் திறனை தொடர்ந்து நிரூபித்துள்ளது
இந்தியாவின் பலமான அதன் பன்முகத்தன்மை பலவீனமானது இல்லை என்பதை தயவுசெய்து புரிந்து கொள்ளவேண்டும் என்பதே நாங்கள் உங்களிடம் இருந்து எதிர்பார்ப்பது.
தமிழ்நாட்டின் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு எது சிறந்தது என்பதைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை அங்கீகரித்து ஆதரிப்பதன் மூலம், நீங்கள் உண்மையில் தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்கும் அதன் மாணவர்களுக்கும் ஒரு சிறந்த சேவையைச் செய்கிறீர்கள்" என்று பதிவிட்டுள்ளார்.
- முஸ்லிம்களுக்கு தனி மருத்துவ வசதி ஏற்படுத்துவது இந்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும்.
- வரும் வெள்ளிக்கிழமை ஹோலி பண்டிகையே கொண்டாடப்படுகிறது.
அரசு மருத்துவமனைகளில் முஸ்லிம்களுக்கு தனி வார்டு ஒதுக்க வேண்டும் என்று உத்தரபிரதேச பெண் பாஜக எம்.எல்.ஏ. கேட்டகீ சிங் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர்களிடம் பேசிய கேட்டகீ சிங், "ஹோலி பண்டிகை வருடத்திற்கு 1 நாள் மட்டும் தான் வருகிறது. ஆனால் வருடத்திற்கு 52 வெள்ளிக்கிழமை வருகிறது என சம்பல் மாவட்டத்தில் ஒரு போலீஸ்காரர் தெளிவாக பேசினார். அந்த நாளில் எதாவது தவறுதலாக நடந்தால் அந்த அழுகை கும்பல் (முஸ்லிம்) தெருவில் இறங்குவார்கள். நம் மக்களை (இந்துக்களை) பார்த்து இவ்வளவு பயம் இருந்தால் புதிதாக கட்டப்பட்டு வரும் மருத்துவ கல்லூரியில் ஒரு மருத்துவக் கல்லூரியில், முஸ்லிம்களுக்கு ஒரு தனிப் பிரிவு உருவாக்க வேண்டும்
முஸ்லிம்களுக்கு தனி மருத்துவ வசதி ஏற்படுத்துவது இந்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும். முஸ்லிம்கள் பழங்களில் காய்கறிகளில் எச்சில் துப்புவது, சிறுநீர் கலப்பது போன்ற வீடியோக்களைப் பார்த்திருப்பீர்கள். அவர்களுக்கு மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் சிகிச்சை அளிக்கும் வகையில் அவர்களுக்கு தனிப் பிரிவு உருவாக்கப்பட வேண்டும் என்று நான் முதல்வரிடம் கோரிக்கை வைக்கிறேன்.
வரும் வெள்ளிக்கிழமை ஹோலி பண்டிகையே கொண்டாடப்படுகிறது. இது தொடர்பாக சம்பல் மாவட்ட சர்க்கிள் அதிகாரி பேசுகையில், "ஹோலி என்பது வருடத்திற்கு ஒரு முறை வரும் பண்டிகை, அதே நேரத்தில் வெள்ளிக்கிழமை தொழுகை வருடத்திற்கு 52 முறை நடைபெறும். ஹோலியின் வண்ணங்களால் யாராவது சங்கடமாக உணர்ந்தால், அவர்கள் அந்த நாளில் வீட்டிலேயே இருக்க வேண்டும்" என்று தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- மொரிஷியஸின் பல குடும்பங்கள் கும்பமேளாவில் கலந்துகொள்ள முடியவில்லை.
- அவர்களின் உணர்வுகளைப் பற்றி நான் கவலைப்பட்டேன் என தெரிவித்தார்.
போர்ட் லூயிஸ்:
மொரிஷியசில் உள்ள இந்திய வம்சாவளியினர் இடையே பிரதமர் மோடி கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:
இந்தியா மற்றும் மொரிஷியஸ் உறவுகளில் இனிமை அதிகரித்துள்ளது. மொரிஷியஸ் குடிமக்களுக்கு அவர்களின் தேசிய தின வாழ்த்துக்கள்.
மொரிஷியஸைச் சேர்ந்த பல குடும்பங்கள் சமீபத்தில் நடந்த மகா கும்பமேளாவில் கலந்து கொண்டன. சுமார் 65 முதல் 66 கோடி மக்கள் கலந்துகொண்ட உலகின் மிகப்பெரிய கூட்டத்தைக் கண்டு உலகம் ஆச்சரியப்படுகிறது.
மொரிஷியஸின் பல குடும்பங்கள் மகா கும்பமேளாவில் கலந்துகொள்ள முடியவில்லை. அவர்களின் உணர்வுகளைப் பற்றி நான் கவலைப்பட்டேன்.
எனவே, மகா கும்பமேளாவின்போது சங்கமத்திலிருந்து புனித நீரைக் கொண்டு வந்தேன். இந்தப் புனித நீர் நாளை கங்கை தாலாப்பில் இணைக்கப்படும்.
கங்கை அன்னையின் அருளால் மொரிஷியஸ் புதிய செழிப்பை அடைய பிரார்த்திக்கிறேன்.
மொரிஷியஸ் இந்தியாவிற்கும் உலகளாவிய தெற்கிற்கும் இடையே பாலமாக உள்ளது என தெரிவித்தார்.
- வேட்பாளர்கள் அதிக அளவில் பணம் செலவழித்து தேர்தலில் வெற்று பெறுகின்றனர்.
- கடந்த தேர்தலில் ஒரு வேட்பாளர் 45 கோடி ரூபாய் செலவிட்டதாக மக்கள் கூறினர்.
மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற தேர்தலின்போது 10 கோடி முதல் 12 கோடி ரூபாய் வரை செலவு செய்ததாக அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ. பேசிய வீடியோ வைரலாகி கேள்வியை எழுப்பிய நிலையில், லட்சம் என்பதை கோடி என தெரிவித்ததாக விளக்கம் அளித்துள்ளார்.
பீட் மாவட்டத்தின் மஜல்கயான் தொகுதியில் இருந்து 4 முறை எம்.எல்.ஏ.-வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் பிரகாஷ் சொலாங்கே. இவர் ஒரு பொது நிகழ்ச்சியில் பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில்:-
வேட்பாளர்கள் அதிக அளவில் பணம் செலவழித்து தேர்தலில் வெற்று பெறுகின்றனர். கடந்த தேர்தலில் ஒரு வேட்பாளர் 45 கோடி ரூபாய் செலவிட்டதாக மக்கள் கூறினர். மற்றொரு வேட்பாளர்கள் 35 கோடி ரூபாய் செலவழித்ததாக நான் அறிந்தேன். எனினும் என்னுடைய செலவு 10 கோடி முதல் 12 கேபாடி வரைதான்.
தேர்தலில் வெற்றிபெற பணம் இருக்க வேண்டிய அவசியமில்லை. அரசியலில் சாதாரண மக்களின் நம்பிக்கை, வளர்ச்சிப் பணிகள் மற்றும் சாதாரண மக்களுக்கு நீதி ஆகியவை முக்கியம், பணம் என்பது இரண்டாம் பட்சம்தான்.
பிரகாஷ் சொலாங்கே பேசுவதுபோல் இடம் பெற்றுள்ளது.
தேர்தல் ஆணையம் ஒரு வேட்பாளர் 40 லட்சம் ரூபாய் வரைதான் செலவழிக்க அனுமதி அளித்துள்ளது. ஆனால் இவர் 12 கோடி வரை செலவழித்ததாக சொல்கிறாரே? என கேள்வி எழுப்பப்பட்டது.
உடனே, "நான் லட்சம் என சொல்ல விரும்பினேன். ஆனால் கோடி எனச் சொல்லிவிட்டேன். கட்சி எனக்கு தேர்தல் செலவிற்காக 40 லட்சம் ரூபாய் கொடுத்தது. ஆனால் அதில் 23 லட்சம் ரூபாய் செலவழித்தேன். மீதி பணத்தை திருப்பி கட்சியிடம் வழங்கினேன்" எனத் தெரிவித்துள்ளார்.
- ஒடிசாவைச் சேர்ந்த ராமச்சந்தர் என்பவரை வெறிநாய் கண்டித்துள்ளது.
- ரேபிஸ் அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தனி வார்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது,
வெறிநாய் கடியால் பாதிக்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த புலம் பெயர் தொழிலாளி ராம் சந்தர் கழுத்தை அறுத்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசாவைச் சேர்ந்த ராம் சந்தர் என்பவருக்கு வெறிநாய் கடித்ததில் ரேபிஸ் அறிகுறி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் கோவை அரசு மருத்துவமனையில் தனி வார்டில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், மருத்துவமனையில் அறிவிப்பு பலகையின் கண்ணாடியை உடைத்து கழுத்தை அறுத்து தனது உயிரை மாய்த்து அவர் கொண்டார் .
- தமிழக எம்.பி.க்கள் நாகரீகமற்றவர்கள், ஜனநாயக விரோதமானவர்கள்" என்று தர்மேந்திரா பிரதான் தெரிவித்தார்.
- பிரதமர் மோடி தலைமையிலான அரசு தமிழருக்கும், தமிழகத்திற்கும் எதிரானது அல்ல
நேற்று நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு தொடங்கியது அப்போது தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி மறுப்பு விவகாரத்தை கையில் எடுத்த திமுக எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
இதற்கு பதில் அளித்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திரா பிரதான், "பாஜக ஆளாத மாநிலங்களான கர்நாடகா, இமாச்சல பிரதேசத்திலும் தேசிய கல்விக் கொள்கை ஏற்கப்பட்டுள்ளது. தேசிய கல்விக்கொள்கை மூலம் இந்தி திணிக்கப்படுகிறது என்பது தவறானது. தமிழ்நாட்டு மாணவர்களை, திமுக தவறாக வழிநடத்தி அரசியல் செய்கிறது.
தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்காலத்தை மாநில அரசு பாழடித்து வருகிறது. தமிழக எம்.பி.க்கள் நாகரீகமற்றவர்கள், ஜனநாயக விரோதமானவர்கள்" என்று தெரிவித்தார்.
இதனையடுத்து, திமுக எம்.பி.க்களின் கடும் கண்டனத்தை அடுத்து தமிழ்நாட்டு எம்.பி.க்கள் நாகரீகமற்றவர்கள் என்று பேசியதை திரும்பப் பெற்றுக்கொள்வதாக தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.
இந்நிலையில்,இன்று மாநிலங்களவையில் உரையாற்றிய தர்மேந்திர பிரதான், பிஎம்ஸ்ரீ பள்ளிகள் திட்டம் குறித்து பேசியதால் எதிர்க்கட்சிகள் ஆட்சேபம் தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர்.
அப்போது திமுக எம்.பி. திருச்சி சிவாவுக்கும் தர்மேந்திர பிரதானுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
மாநிலங்களவையில் பேசிய தர்மேந்திர பிரதான், "யாருடைய மனதும் புண்படும்படி பேசி இருந்தால் 100 முறை கூட மன்னிப்பு கேட்க தயார். பிரதமர் மோடி தலைமையிலான அரசு தமிழருக்கும், தமிழகத்திற்கும் எதிரானது அல்ல. அவையில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என எனக்கு பாடம் எடுக்க வேண்டாம். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை அவமதித்தவர்கள் எனக்கு பாடம் எடுப்பதா?" என்று தெரிவித்தார்.
- அடிப்படை பணி முதல் உயர் நிர்வாக பொறுப்பில் உள்ளவர்கள் வரை பாலியல் உணர்திறன் பயிற்சி அளிக்க வேண்டும்.
- அரசு பணிகளுக்கு பாலியல் உணர்திறன் பாடத்தில் தேர்ச்சியை கட்டாயமாகக் வேண்டும்.
தமிழகத்தில் சமூக நலத்துறையில் இருந்து பிரித்து மகளிர் மேம்பாட்டுக்கென தனித்துறையை ஏன் உருவாக்க கூடாது?. அடிப்படை பணி முதல் உயர் நிர்வாக பொறுப்பில் உள்ளவர்கள் வரை பாலியல் உணர்திறன் பயிற்சி அளிக்க வேண்டும். அரசு பணிகளுக்கு பாலியல் உணர்திறன் பாடத்தில் தேர்ச்சியை கட்டாயமாகக் வேண்டும். நிறுவனங்கள் உருவாக்கத்தில் பாலியல் உணர்திறன் தகுதிச் சான்றிதழை கட்டாயப்படுத்தவும். பரிந்துரைகள் குறித்து சம்பந்தப்பட்ட அரசு செயலர்களிடம் கலந்து பேசி செயல்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
- விளம்பரப் பலகைகளை நிறுவ அரசு நிதியை தவறாகப் பயன்படுத்தியதாக புகார்
- மார்ச் 18 ஆம் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்க போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசு நிதியை தவறாக பயன்படுத்தியதற்காக அரவிந்த் கெஜ்ரிவால் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய டெல்லி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
2019 ஆம் ஆண்டு டெல்லியின் துவாரகா பகுதியில் பெரிய விளம்பரப் பலகைகளை நிறுவ அரசு நிதியை தவறாகப் பயன்படுத்தியதாக கூறப்படும் வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த புகாரில் கெஜ்ரிவால் ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் எம்எல்ஏ குலாப் சிங் மற்றும் துவாரகா கவுன்சிலர் நிதிகா சர்மா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து அதன் அறிக்கையை மார்ச் 18 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- 2026-ல் சட்டமன்ற தேர்தல் வர இருப்பதால் திமுக தற்போது நாடகங்களை மேற்கொண்டு இருக்கிறது.
- இந்த முறை மக்கள் திமுக-விற்கு வாக்களிக்க போவதில்லை. அதிமுக-தான் வெற்றிபெறும்.
தமிழகத்தில் மும்மொழி கொள்கை மூலமாக இந்தியை திணிக்க பாஜக தலைமையிலான மத்திய அரசு முயன்று வருவதாக தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடுமையாக விமர்சித்து வருகிறார்.
இந்த நிலையில் அதிமுக எம்.பி. தம்பிதுரை, "மும்மொழி கொள்கை, இந்தி திணிப்பு அனைத்தையும் செய்தது காங்கிரஸ். 2026-ல் சட்டமன்ற தேர்தல் வர இருப்பதால் திமுக தற்போது நாடகங்களை மேற்கொண்டு இருக்கிறது. இந்த முறை மக்கள் திமுக-விற்கு வாக்களிக்க போவதில்லை. அதிமுக-தான் வெற்றி பெறும்" என்றார்.
- ஏர்டெல்லின் சில்லறை விற்பனைக் கடைகளில் ஸ்டார்லிங்க் உபகரணங்களை வழங்குவது குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.
- மத்திய அரசு விதித்த டேட்டா மற்றும் பாதுகாப்பு விதிகளை ஸ்பேஸ் எக்ஸ் ஏற்காமல் இருந்தது.
எலான் மஸ்க்கின் விண்வெளி தொழில்நுட்ப நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ், ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் மூலம் இணைய சேவைகளை வழங்கி வருகிறது.
இந்நிலையில் இந்த சேவையை இந்தியாவிற்கு கொண்டு வர தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல்லுடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதை ஏர்டெல் நிறுவனம் இன்று (செய்வ்வாய்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த ஒப்பந்தம் ஸ்பேஸ்எக்ஸ், இந்தியாவில் ஸ்டார்லிங்க்கை விற்பனை செய்வதற்கான அங்கீகாரங்களைப் பெறுவதற்கு உட்பட்டது என்று அறிக்கையில் ஏர்டெல் தெரிவித்துள்ளது.
மேலும், ஏர்டெல்லின் சில்லறை விற்பனைக் கடைகளில் ஸ்டார்லிங்க் உபகரணங்களை வழங்குவது குறித்து ஆராய்ந்து வருவதாவும் ஏர்டெல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது .
முன்னதாக இந்தியாவில் செயல்படுவதற்கான GMPCS உரிமம் என்றும் அழைக்கப்படும் செயற்கைக்கோள் பிராட்பேண்ட் சேவை உரிமத்தை பெற மத்திய அரசு விதித்த டேட்டா மற்றும் பாதுகாப்பு விதிகளை ஸ்பேஸ் எக்ஸ் ஏற்காமல் இருந்தது.
இதற்கிடையே கடந்த மாதம் விதிகளுக்கு உட்பட்டு ஸ்பேஸ் எக்ஸ் கையெழுத்திட்டு உரிமத்தை விரைவில் பெறும் என தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்நிலையில் தற்போது முதற்கட்டமாக ஏர்டெல் உடன் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.