search icon
என் மலர்tooltip icon
    • சிறைக்கு செல்வதற்கு விலக்கு அளிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் ராஜேஷ் தாஸ் மனு தாக்கல் செய்தார்.
    • சிறைக்குச் செல்ல விலக்கு கேட்கும் மனுவை ஐகோர்ட்டு நீதிபதி எம்.தண்டபாணி விசாரித்தார்.

    சென்னை:

    தமிழ்நாடு சிறப்பு டி.ஜி.பி.யாக பதவி வகித்தவர் ராஜேஷ் தாஸ். அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதலமைச்சர் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது அவருடன் சென்ற சிறப்பு டி.ஜி.பி., ஒரு பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு தன் காரில் வைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு இருந்தது.

    இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை விழுப்புரம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு விசாரித்தது. பின்னர் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி ராஜேஷ் தாசுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்த தண்டனையை விழுப்புரம் மாவட்ட முதன்மை செசன்ஸ் கோர்ட்டு உறுதி செய்தது.

    2 கோர்ட்டுகளும் தண்டனை வழங்கியதால், ராஜேஷ் தாஸ் சிறைக்குள் சென்று விட்டு, அதன் பின்னர் தான் மேல்முறையீடு செய்ய வேண்டும்.

    ஆனால் சிறைக்கு செல்வதற்கு விலக்கு அளிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் ராஜேஷ் தாஸ் மனு தாக்கல் செய்தார். அதில் காவல் துறையில் பல்வேறு முக்கிய பதவிகளை வகித்த தான் சிறைக்கு சென்றால் அது தனக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார். மேலும் கீழ் கோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடும் செய்துள்ளார். இதில், சிறைக்குச் செல்ல விலக்கு கேட்கும் மனுவை ஐகோர்ட்டு நீதிபதி எம்.தண்டபாணி கடந்த வாரம் விசாரித்தார். பின்னர் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தார். இந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி இன்று பிறப்பித்தார்.

    அப்போது ராஜேஷ் தாசின் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார். அவர் கீழ் கோர்ட்டில் சரண் அடைந்து சிறைக்கு சென்ற பின்னர் அவரது மேல்முறையீட்டு வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

    • இதே வார்த்தையை மோடி தமிழ்நாட்டில் இருக்கும் போது பேச மாட்டார். கர்நாடகாவில் பேச மாட்டார். அந்த பருப்பு இங்கே வேகாது.
    • மோடி பேச்சு குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுக்க வேண்டுமா? திருடனை பற்றிய புகாரை இன்னொரு திருடனுக்கு நீங்கள் கொடுப்பீர்களா?

    ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் பிரதமர் மோடி பேசியது மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

    அவர் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள ஒரு கருத்தை குறிப்பிட்டு பேசும்போது கூறியதாவது:-

    இது நகர்ப்புற நக்சல் மனநிலை. தாய்மார்கள், சகோதரிகள்... அவர்கள் உங்களுடைய மங்களசூத்ராவை (தாலி) கூட விட்டு வைக்கமாட்டார்கள். அவர்கள் அந்த நிலைக்கு கூட போவார்கள்...

    தாய்மார்கள், சகோதரிகள் வைத்துள்ள தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு, தகவல்கள் பெறப்பட்டு, பகிர்ந்து கொடுப்போம் என காங்கிரஸ் தேர்தல் அறிக்கை சொல்கிறது.

    அவர்கள் யாருக்கு பகிர்ந்து அளிப்பார்கள். முந்தைய மன்மோகன் சிங் அரசு, நாட்டின் சொத்துகளில் முஸ்லிம்களுக்கே முதல் உரிமை எனத் தெரிவித்திருந்தது.

    முன்னதாக, அவர்களுடைய (காங்கிரஸ்) அரசு ஆட்சியில் இருந்தபோது, நாட்டிகள் சொத்துகளில் முஸ்லிம்களுக்கு முதல் உரிமை எனக் கூறியது. இதன் அர்த்தம் யாருக்கு சொத்து பகிர்ந்தளிக்கப்படும்?. அதிக குழந்தைகளை வைத்திருப்பர்களுக்கிடையே பகிர்ந்து அளிக்கப்படும். இந்திய நாட்டுக்குள் ஊடுருவியர்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படும். உங்களுடைய கடின உழைப்பால் சம்பாதித்த பணம் ஊடுருவியவர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா?

    இவ்வாறு பிரதமர் மோடி பேசியிருந்தார்.

    இந்நிலையில் மோடியின் இந்த பேச்சு தொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு நடிகர் பிரகாஷ்ராஜ் பேட்டி கொடுத்துள்ளார். அதில்,

    மல்லிப்பூவில் இருந்து எப்படி அதன் மணம் வெளியே வருமோ அதே போல் தான் மன்னரின் (மோடி ) வாயிலிருந்து அவரின் பேச்சிலிருந்து அவரது அசிங்கம் வெளியே வருகிறது.

    10 ஆண்டுகளுக்கு முன்பு பிரதமராக இருந்தவர் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பேசிய பேச்சை திரித்து அதை முஸ்லிம்கள் என பேசும் போதே மோடியின் அஜெண்டா நமக்கு தெரிகிறது.

    இதே வார்த்தையை மோடி தமிழ்நாட்டில் இருக்கும் போது பேச மாட்டார். கர்நாடகாவில் பேச மாட்டார். அந்த பருப்பு இங்கே வேகாது. ஆனால் உத்தரபிரதேசம் போன்ற வடமாநிலங்களில் அது வேகும்.

    ஒரு நாளைக்கு 5 வேடம் போடுகிற மாதிரி... ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே தர்மம் என்று பேசுகிற மன்னருக்கு 2 நாக்குகள் உள்ளது.

    ஒவ்வொரு நாக்கும் ஒவ்வொன்று பேசி கொண்டு இருக்கிறது. இவை எல்லாம் நாம் தலைகுனிய வேண்டிய அசிங்கமான விஷயம். இதற்கு மக்கள் தான் பதில் சொல்ல வேண்டும்.

    மோடி பேச்சு குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுக்க வேண்டுமா? திருடனை பற்றிய புகாரை இன்னொரு திருடனுக்கு நீங்கள் கொடுப்பீர்களா? ராமரின் படத்தை வைத்து அரசியல் செய்கிறார்கள், சாதியை வைத்து அரசியல் செய்கிறார்கள் என்றால் அவர்கள் (தேர்தல் ஆணையம்) வாங்கப்பட்டுள்ளார்கள்.

    பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அவர்கள் சொல்வது தான் நடக்கும். எதிர்க்கட்சிகள் இருக்க கூடாது, யாரும் கேள்வி கேட்கக்கூடாது. ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே தர்மம், தேர்தலே கிடையாது" என்று அவர் கூறியுள்ளார்.

    • 2021-க்கும் முன்னதாக நான்கு ஆண்டுகளில் வெறும் 299 பேர் மட்டுமே வந்த நிலையில்,
    • 2022-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு சட்டவிரோதமாக குடிபெயர்ந்தோர் எண்ணிக்கை 45,774 ஆக அதிகரித்தது.

    பல்வேறு வெளிநாடுகளில் இருந்து சிறிய படகு மூலம் இங்கிலாந்து நாட்டிற்குள் நுழையும் நபர்கள், அங்கு அகதிகளாக வசிக்க உரிமை கோரலாம். இதனால் பல்வேறு நாடுகளில் இருந்து இங்கிலாந்து நாட்டிற்கு அதிகமானோர் வரத் தொடங்கினர்.

    2021-க்கும் முன்னதாக நான்கு ஆண்டுகளில் வெறும் 299 பேர் மட்டுமே வந்த நிலையில் 2022-ம் ஆண்டு 45774 ஆக உயர்ந்தது.

    இதை கட்டுப்படுத்த இங்கிலாந்து பிரதமரான ரிஷி சுனக் சட்டம் கொண்டு வரப்படும் என்றார். இதற்கு எதிர்கட்சிகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும் ரிஷி சுனக் இதில் உறுதியாக இருந்தார்.

    பணம் பெற்றுக் கொண்டு மக்களை சட்டவிரோதமாக அனுப்பி வைக்கும் கும்பலை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுத்ததாலும், இங்கிலாந்துக்கு வரும் அல்பேனிய நாட்டினரை அவர்களுடைய நாட்டிற்கே திருப்பி அனுப்புதற்கும் இங்கிலாந்து அந்த நாட்டுடன் ஒப்பந்தம் போட்டது. அதனால் கடந்த வருடம் இங்கிலாந்துக்கு வருபோரின் எண்ணிக்கை 29,437 என குறைந்தது.

    இந்த நிலையில் குடிபெயர்ந்தவர்கள் சிலரை ருவேண்டா நாட்டிற்கு அனுப்புவது தொடர்பாக ருவாண்டா நாடு கடத்தல் மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

    கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக இந்த மசோதா இங்கிலாந்து பாராளுமன்றத்தில் நிறைவேறாமல் இருந்தது. இந்த நிலையில்தான் இன்று காலை, வெளிநாட்டில் இருந்து இங்கிலாந்துக்கு சட்டவிரோதமாக வரும் நபரை கட்டுப்படுத்தும் வகையிலான மசோதா தடுக்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும். அதுவரை பாராளுமன்றம் நடைபெறும் என அறிவித்தார்.

    இந்த நிலையில் இன்று இந்த மசோதாவுக்கு பாராளுமன்றத்தின் இரு அவைகளும் ஒப்புதல் அளித்துள்ளன. இதன்மூலம் இன்னும் 10 முதல் 12 வாரங்களுக்குள் (ஜூன்) சட்டவிரோதமாக குடிபெயர்ந்தவர்கள் விமானம் மூலம் ருவேண்டா நாட்டிற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.

    அரசாங்கம் ஏற்கனவே நாடுகடத்தல் விமானங்களுக்கு வாடக விமானங்களை ஏற்பாடு செய்துள்ளது. தடுப்புக்காவல் இடத்தை அதிகரித்துள்ளது. மேலும் வழக்கறிஞர்களை பணியமர்த்தியுள்ளது. மேல்முறையீடுகளை கையாள நீதிமன்றங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.

    • "பேக்மேன்ப்ரோ" என்ற குறியீட்டு பெயரில் உருவாக்கப்பட்டு வந்தது.
    • அந்த ஸ்மார்ட்போன் A142P எனும் மாடல் நம்பர் கொண்டிருந்தது.

    நத்திங் நிறுவனத்தின் போன் (3) மாடல் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது. நத்திங் நிறுவனத்தின் அடுத்த ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மாடலாக நத்திங் போன் (3) அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

    இந்த நிலையில், நத்திங் போன் (3) ஸ்மார்ட்போன் மாடல் டெட்ரிஸ் என்ற குறியீட்டு பெயரில் உருவாக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த பெயர் மற்றும் மாடல் நம்பர் தவிர ஸ்மார்ட்போனின் வேறு எந்த தகவலும் இடம்பெறவில்லை.

    இது குறித்து வெளியாகி இருக்கும் தகவல்களில் நத்திங் போன் (3) ஸ்மார்ட்போன் A015 என்ற மாடல் நம்பர் கொண்டிருப்பதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது. நத்திங் நிறுவனம் கடைசியாக அறிமுகம் செய்த நத்திங் போன் (2a) ஸ்மார்ட்போன் A142P எனும் மாடல் நம்பர் கொண்டிருந்தது. இந்த ஸ்மார்ட்போன் "பேக்மேன்ப்ரோ" என்ற குறியீட்டு பெயரில் உருவாக்கப்பட்டு வந்தது.

    அம்சங்களை பொருத்தவரை நத்திங் போன் (3) ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 8s ஜென் 3 பிராசஸர் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. இதில் உள்ள பிராசஸர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 வெர்ஷனின் ஓவர்கிளாக் செய்யப்பட்ட வெர்ஷன் ஆகும். பிராசஸர் தவிர ஸ்மார்ட்போனின் மற்ற அம்சங்கள் ரகசியமாகவே உள்ளன.

    • கேரளாவில் வருகிற 26ஆம் தேதி இரண்டாம் கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது
    • இதற்கான தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவடையவுள்ளது

    தமிழ்நாடு உள்பட மொத்தம் 102 தொகுதிகளுக்கு முதற்கட்டமாக பாராளுமன்ற தேர்தல் கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்தது. கேரளாவில் வருகிற 26ஆம் தேதி இரண்டாம் கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவடையவுள்ளது.

    இதனிடையே தேர்தல் பிரசாரத்தில் எதிர்க்கட்சியினர் தாக்கியதால் கண்ணில் காயம் ஏற்பட்டதாக கண்ணில் பிளாஸ்திரியுடன் கொல்லம் தொகுதி பாஜக வேட்பாளர் நடிகர் கிருஷ்ணகுமார் சமூக வலைதளத்தில் புகைப்படத்தை பதிவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீஸ் பாஜக தொண்டர் சனல் என்பவரை கைது செய்து விசாரித்தனர். அப்போது, நான் தான் தவறுதலாக கிருஷ்ணகுமாரின் கண்களை சாவியால் குத்திவிட்டதாக அவர் வாக்குமூலம் கொடுத்துள்ளார். அதன் பின்னர் காவல்துறை சனலுக்கு ஜாமீன் வழங்கியது.

    • இப்படத்தின் நாயகியாக சித்தி இத்னானி நடிக்கவுள்ளார்.
    • அன்பறிவு ஸ்டண்ட் காட்சிகளை கையாளுகின்றனர். பிடிஜி யூனிவர்சல் என்ற நிறுவனம் இப்படத்தை தயாரிக்கவுள்ளனர்.

    கடந்த ஜனவரி மாதம் விஜய் ஏ.எல் இயக்கத்தில் அருண் விஜய் , எமி ஜாக்சன், நிமிஷா சஜயன் இணைந்து நடித்து மிஷன் சாப்டர் 1 திரைப்படம் வெளியாகியது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பாலா இயக்கத்தில் வனங்கான், பார்டர், AV 36 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

    சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த மான் கராத்தே படத்தை இயக்கிய திருக்குமரன் அருண் விஜயின் படத்தை இயக்குகிறார். இப்படத்தின் நாயகியாக சித்தி இத்னானி நடிக்கவுள்ளார். இவர் இதற்கு முன் சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு படத்தின் கதாநாயகியாக நடித்தது குறிப்பிடத்தக்கது.

    இவர்களுடன் தான்யா ரவிச்சந்திரன் நடிக்கிறார். படத்தின் இசையை சாம். சி.எஸ் மேற்கொள்கிறார். அன்பறிவு ஸ்டண்ட் காட்சிகளை கையாளுகின்றனர். பிடிஜி யூனிவர்சல் என்ற நிறுவனம் இப்படத்தை தயாரிக்கவுள்ளனர்.

    இப்படத்தின் தலைப்பு இன்று மாலை வெளியாகும் என படக்கிழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். இதை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் அவரது எக்ஸ் பக்கத்தில் இன்று மாலை 5 மணிக்கு வெளியிடவுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.
    • வரும் 25-ந்தேதி தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    வட தமிழக உள் மாவட்டங்களில் இன்றும் நாளையும் வெப்ப அலை வீசக்கூடும்.

    தமிழக உள் மாவட்டங்களில் 27-ந்தேதி வரை வெப்பநிலை இயல்பைவிட 2-4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.

    சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஈரோட்டில் 43 டிகிரி செல்சியஸ், சேலத்தில் 41.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி உள்ளது.

    23, 24-ந்தேதிகளில் தென் தமிழக மாவட்டங்கள், வட தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

    வரும் 25-ந்தேதி தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • எதிர்பாராத விதமாக வீரக்குமார் கால் தவறி 7-வது மலையில் இருந்து கீழே விழுந்தார்.
    • ஆலாந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வடவள்ளி:

    திருப்பூர் மாவட்டம் எஸ்.பி.காலனியை சேர்ந்தவர் வீரக்குமார்(வயது31).

    இவர் தனது நண்பர்களுடன் கடந்த 18-ந்தேதி கோவையில் உள்ள வெள்ளியங்கிரி மலைக்கு வந்தார்.

    பின்னர் தனது நண்பர்களுடன் மலையேறி சாமி தரிசனம் செய்தார். பின்னர் அங்கிருந்து நண்பர்களுடன் கீழே இறங்கி கொண்டிருந்தார்.

    அப்போது எதிர்பாராத விதமாக வீரக்குமார் கால் தவறி 7-வது மலையில் இருந்து கீழே விழுந்தார். இதில் அவருக்கு வயிறு, காலில் படுகாயம் ஏற்பட்டது.

    இதை பார்த்த அவரது நண்பர்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக வனத்துறையினர் விரைந்து வந்து, மலைவாழ் மக்களுடன் சேர்ந்து வீரக்குமாரை மீட்டு, டோலி கட்டி மலையில் இருந்து மலையடிவாரத்திற்கு கொண்டு வந்தனர்.

    அவரை பூலுவப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்து முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த வீரக்குமார் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுதொடர்பாக ஆலாந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையில் தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு மேற்கொள்கிறார்.
    • விக்ரமின் 62-வது படமான இதில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உட்பட பலர் நடிக்கின்றனர்.

    நடிகர் விக்ரம் 'சித்தா' பட இயக்குநர் அருண்குமாருடன் 'வீர தீர சூரன்' படத்தில் நடித்து வருகிறார். படத்தின் டைட்டில் டீசர் சீயான் விக்ரமின் பிறந்தநாளன்று வெளியாகி மக்களிடையே மிக பெரிய வரவேற்பை பெற்றது. படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையில் தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு மேற்கொள்கிறார்.

    விக்ரமின் 62-வது படமான இதில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உட்பட பலர் நடிக்கின்றனர். அதைத்தொடர்ந்து படத்தின் புது அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. படத்தில் மலையாள நடிகரான சித்திக் நடிக்கவிருக்கிறார் என்று போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். இவர் 350 மேற்பட்ட மலையாள படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை ஹெச்.ஆர்.பிக்சர்ஸ் சார்பில் ரியா ஷிபு தயாரிக்கிறார்.

    டைட்டில் டீசரில் மளிகை கடையில் வேலை செய்யும் விக்ரம் திடீர் என்று துப்பாக்கி எடுத்து சுடும் காட்சிகள் மிரட்டலாக உள்ளது. மற்ற படங்களில் இல்லாத ஒரு விஷயம் இப்படத்தில் உள்ளது. படத்தலைப்பில் வீர தீர சூரன் பாகம் - 2 என்று வெளியிட்டுள்ளனர். முதலில் பாகம் இரண்டை வெளியிட்டபின் பாகம் ஒன்றை வெளியிடப்போகிறார்கள்.

    இந்த வீடியோவில் விக்ரமின் தோற்றம் நம் கவனத்தை கவர்கிறது இதன் முந்தைய பாகம் அடுத்து வெளியாகும் என தெரிகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இ-மெயில் மூலம் வந்த வெடிகுண்டு மிரட்டலால் வணிக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    • வெடிகுண்டு நிபுணர்களும் வணிக வளாகத்தில் சோதனை நடத்தி வருகின்றனர்.

    சென்னை:

    சென்னை கோயம்பேடு மேம்பாலம் அருகே உள்ள தனியார் வணிக வளாகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுவிக்கப்பட்டுள்ளது.

    இ-மெயில் மூலம் வந்த வெடிகுண்டு மிரட்டலால் வணிக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    தகவல் அறிந்து வந்த திருமங்கலம் போலீசார் மோப்ப நாய்கள் மூலம் வணிக வளாகத்தில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் வெடிகுண்டு நிபுணர்களும் வணிக வளாகத்தில் சோதனை நடத்தி வருகின்றனர்.

    ஏற்கனவே கடந்த மாதம் சென்னை, கோவையில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுவிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது வணிக வளாகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுவிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×