search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேட்டுப்பாளையம் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் விடிய, விடிய மறியல்
    X

    மேட்டுப்பாளையம் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் விடிய, விடிய மறியல்

    • பவானி ஆற்றில் தண்ணீர் வற்றியதால் ஜடையம்பாளையம் ஊராட்சிக்கு கடந்த 15 நாள்களுக்கு மேலாக குடிநீர் வழங்கப்படவில்லை என தெரிகிறது.
    • தொடர்ந்து 2-வது நாளாக இன்றும் ஆலாங்கொம்பு பகுதியில் காலை 6 மணியில் இருந்து போராட்டத்தில் மீண்டும் ஈடுபட்டனர்.

    மேட்டுப்பாளையம்:

    மேட்டுப்பாளையம் அருகே ஜடையம்பாளையம் ஊராட்சியில் 12 வார்டுகள் உள்ளது. இங்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

    இந்த ஊராட்சி மக்களுக்கு மூலையூர் குடிநீர்த் திட்டத்தின் மூலமும், ஜடையம்பாளையம் தனி குடிநீர்த் திட்டத்தின் மூலமும் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டங்களுக்கு மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது.

    இதனிடையே திருப்பூர் 2-ஆவது கூட்டு குடிநீர்த் திட்டத்துக்காக கடந்த 2 மாதங்களாக மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுக்க தடுப்பணை ஏற்படுத்தப்பட்டது. இதனால் பவானி ஆற்றில் இருந்து எடுக்கப்படும் மற்ற குடிநீர்த் திட்டங்களுக்கு குடிநீர் கிடைக்காத நிலை ஏற்பட்டது.

    இதனிடையே பவானி ஆற்றில் தண்ணீர் வற்றியதால் ஜடையம்பாளையம் ஊராட்சிக்கு கடந்த 15 நாள்களுக்கு மேலாக குடிநீர் வழங்கப்படவில்லை என தெரிகிறது. குடிநீர் வழங்காததைக் கண்டித்து ஜடையம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட ஆலாங்கொம்பு, தண்ணீர்தடம், வீராசாமி நகர், காந்திபுரம், கோழிப்பண்ணை, சவுடேஸ்வரி நகர், பழையூர் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மேட்டுப்பாளையம்- சிறுமுகை சாலையில் ஆலாங்கொம்பு பகுதியில் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் திருப்பூர் 2-ஆவது குடிநீர் திட்டத்தில் மீதமாகும் 27 எம்.எல்.டி தண்ணீரில் 1 எம்.எல்.டி தண்ணீரை ஜடையம்பாளையம் ஊராட்சிக்கு வழங்க வேண்டுமென தெரிவித்தனர்.குடிநீர் வழங்கக்கோரி நள்ளிரவிலும் தொடர்ந்து பொதுமக்கள் ஈடுபட்டனர்.

    தொடர்ந்து 2-வது நாளாக இன்றும் ஆலாங்கொம்பு பகுதியில் காலை 6 மணியில் இருந்து போராட்டத்தில் மீண்டும் ஈடுபட்டனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ ஏ.கே.செல்வராஜ், காரமடை ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மணிமேகலை மகேந்திரன், ஜடையம்பாளையம் ஊராட்சி தலைவர் டி.கே.வி பழனிசாமி மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதனால் மேட்டுப்பாளையம் சிறுமுகை சாலையில் 2-வது நாளாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சிறுமுகை வழியாக மேட்டுப்பாளையம் நோக்கி வந்த வாகனங்கள் வெள்ளிக்குப்பம் பாளையம், குமரன் குன்று வழியாக திருப்பி விடப்பட்டன. இதேபோல் மேட்டுப்பாளையத்தில் இருந்து சிறுமுகை நோக்கி சென்ற வாகனங்கள் ஓடந்துறை வச்சினாம்பாளையம் வழியாக திருப்பி அனுப்பப்பட்டன.

    Next Story
    ×