search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    • அஸ்ட்ராஜெனெகா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை செலுத்திய பிறகு மூளையில் பாதிப்பு ஏற்பட்டதாக கூறி ஜேமி ஸ்காட் என்பவர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
    • கொரோனா தடுப்பூசி அரிதான சந்தர்ப்பங்களில், ரத்த உறைவு மற்றும் குறைந்த பிளேட்லெட் எண்ணிக்கைக்கு வழிவகுக்கும் நிலையை ஏற்படுத்தும்.

    லண்டன்:

    கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

    இதையடுத்து கொரோனா தடுப்பூசியை பல்வேறு நாடுகள் கண்டுபிடித்தன. இதில் இங்கிலாந்தை சேர்ந்த அஸ்ட்ரா ஜெனெகா நிறுவனம் மற்றும் ஆக்ஸ்போர்ட்டு பல்கலைக்கழகம் இணைந்து தடுப்பூசியை உருவாக்கின.

    இந்த தடுப்பூசி இந்தியாவில் கோவிஷீல்டு என்ற பெயரில் விநியோகிக்கப்பட்டது. இதற்கிடையே அஸ்ட்ராஜெனெகா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை செலுத்திய பிறகு மூளையில் பாதிப்பு ஏற்பட்டதாக கூறி ஜேமி ஸ்காட் என்பவர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

    இதேபோல் 51 வழக்குகள் நஷ்டஈடு கேட்டு தொடரப்பட்டன. இவ்வழக்குகள் மீது விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில் அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் கோர்ட்டில் அளித்த ஆவணத்தில், கோவிட் தடுப்பூசி ஒரு அரிய பக்க விளைவை ஏற்படுத்தும் என்று ஒப்புக்கொண்டதாக தி டெலிகிராப் ஊடகம் தெரிவித்துள்ளது.

    கொரோனா தடுப்பூசி அரிதான சந்தர்ப்பங்களில், ரத்த உறைவு மற்றும் குறைந்த பிளேட்லெட் எண்ணிக்கைக்கு (டி.டி.எஸ்.) வழிவகுக்கும் நிலையை ஏற்படுத்தும். ஆனால் இது மிகவும் அரிதான சந்தர்ப்பங்களில் மட்டுமே நடக்கும். எனவே பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்று தெரிவித்துள்ளது.

    • குறிப்பிட்ட வீட்டை போலீசார் நெருங்கும்போது தேடப்படும் சந்தேக நபர் துப்பாக்கியால் சுட்டார்.
    • மோதலுக்குப் பிறகு அந்த வீட்டில் ஒரு பெண்ணும் 17 வயது ஆணும் இருந்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணம் சார்லோட் நகரில் உள்ள ஒரு வீட்டில் தேடப்படும் குற்றவாளிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் போலீசார் அங்கு சென்றனர்.

    அப்போது அந்த வீட்டில் இருந்த 2 வாலிபர்கள், போலீசார் மீது திடீரென்று துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு தாக்குதல் நடத்தினார்கள். உடனே போலீசாரும் பதில் தாக்குதல் நடத்தினர்.

    மூன்று மணி நேரம் நீடித்த இந்த துப்பாக்கி சண்டையில் 4 போலீசார் உயிரிழந்தனர். 4 பேர் காயம் அடைந்தனர். துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்திய ஒரு நபர் உயிரிழந்தார். மற்றொருவர் தப்பி ஓடிவிட்டார்.

    அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். இதுகுறித்து காவல்துறைத் தலைவர் ஜானி ஜென்னிங்ஸ் கூறும் போது, நமது சமூகத்தை பாதுகாப்பாக வைத்திருக்க முயற்சித்த சில ஹீரோக்களை இன்று நாம் இழந்து விட்டோம். குறிப்பிட்ட வீட்டை போலீசார் நெருங்கும்போது தேடப்படும் சந்தேக நபர் துப்பாக்கியால் சுட்டார். அவர் வீட்டு வாசலில் கொல்லப்பட்டார்.

    அவர் சட்ட விரோதமாக ஆயுதம் வைத்திருந்த குற்றவாளியாகத் தேடப்படுபவர். மோதலுக்குப் பிறகு அந்த வீட்டில் ஒரு பெண்ணும் 17 வயது ஆணும் இருந்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார்.

    • தனது காதலியை தேடிய இவர் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள சீட்வாட்டர் பகுதியில் 20 அடியில் விளம்பர பலகை வைத்துள்ளார்.
    • எனக்கு ஓய்வூதிய வருமானம் இருக்கிறது. நான் என் வயதை பார்க்கவில்லை என்றார்.

    டேட்டிங் கலாச்சாரம் உலகம் முழுவதும் பரவி வரும் நிலையில், காதலியை கண்டுபிடிக்க ஆன்லைன் தளங்களில் விண்ணப்பிக்கும் நிலையில், 70 வயது முதியவர் ஒருவர் தனது காதலியை கண்டுபிடிக்க வாரம் தோறும் ரூ.33 ஆயிரம் செலவிடுகிறார்.

    அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்தவர் அல் கில்பெர்டி. கடந்த 2015-ம் ஆண்டு முதல் தனிமையில் வசித்து வரும் இவர் மீண்டும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார். இதற்காக தனது காதலியை தேடிய இவர் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள சீட்வாட்டர் பகுதியில் 20 அடியில் விளம்பர பலகை வைத்துள்ளார். இதற்காக வாரத்திற்கு 400 டாலர் (இந்திய மதிப்பில் ரூ.33 ஆயிரம்) கட்டணம் செலுத்துகிறாராம்.

    இதுகுறித்து அவர் கூறுகையில், எனக்கு விசுவாசமான ஒருவர் வேண்டும். அவர் உண்மையானவராகவும், எனது நலனில் அக்கறை கொண்டவராகவும் இருக்க வேண்டும். சரியான நபரை சந்திக்க நான் ஐரோப்பா வரை செல்வதற்கும் தயாராக இருக்கிறேன். எனக்கு ஓய்வூதிய வருமானம் இருக்கிறது. நான் என் வயதை பார்க்கவில்லை என்றார். அவர் வைத்துள்ள விளம்பர பலகையை பார்த்து 400-க்கும் மேற்பட்ட அழைப்புகள், 50-க்கும் மேற்பட்ட மின்னஞ்சல்கள் வந்துள்ளது. எனினும் அதில் பெரும்பாலும் பணம் கேட்டு வரும் நபர்களாகவே இருப்பதாகவும், சரியான காதலியை தேடிக்கொண்டிருப்பதாகவும் கில்பெர்டி கூறினார்.

    • புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 9 வயது சிறுமி ஒருவர் இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார்.
    • நினைவு பரிசு ஒன்றை பெறவேண்டும் என்ற ஆர்வத்துடன் வந்த சிறுமியை டெய்லர் ஷிப்ட் கண்டுகொண்டார்.

    பிரபல பாடகியான டெய்லர் ஷிப்ட் பாப் பாடல்கள் பாடுவதில் உலகம் முழுவதும் புகழ்பெற்றவர். தனித்துவமான இசை ஆல்பங்களை வெளியிட்டு வரும் இவர் நாடு முழுவதும் பயணித்து மேடை அமைத்து பாடல்களையும் பாடி வருகிறார். பல கோடி ரசிகர்களை கொண்ட இவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சிட்னி நகரில் மேடை கச்சேரியில் பாடல்கள் பாடினார்.

    அப்போது புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 9 வயது சிறுமி ஒருவர் அந்த இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார். அவரிடம் நினைவு பரிசு ஒன்றை பெறவேண்டும் என்ற ஆர்வத்துடன் வந்த சிறுமியை டெய்லர் ஷிப்ட் கண்டுகொண்டார். பின்னர் அவருக்கு இசைநிகழ்ச்சிகளில் அணிந்து கொண்ட தொப்பி ஒன்றை பரிசாக கொடுத்தார்.

    இந்த நிகழ்வு அப்போது வலைத்தளங்களில் வேகமாக பரவி பேசுப்பொருளானது. இந்தநிலையில் டெய்லர் ஷிப்டிடம் நினைவு பரிசு பெற்ற 9 வயது சிறுமி நோய் பாதிப்பு காரணமாக மரணம் அடைந்தார். இதுதொடர்பான புகைப்படங்களை சமூக வலைத்தளவாசிகள் இணையத்தில் பரவ செய்து வைரலாக்கி வருகின்றனர்.

    • எகிப்து நாட்டின் எல்லையோரம் உள்ள ரஃபா ஹமாஸ் அமைப்பினரின் கோட்டையாக திகழ்வதாக இஸ்ரேல் கூறி வருகிறது.
    • ரஃபா நகரில் 10 லட்சத்திற்கு மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் வசித்து வருகிறார்கள்.

    காசாவின் தெற்கு பகுதியான ரஃபா நகர் மீது இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் 22 பேர் உயிரிழந்ததாக பாலஸ்தீன சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் ஆறு பெண்கள், ஐந்து குழந்தைகள் அடங்குவார்கள். ஒரு குழந்தை பிறந்து ஐந்தே நாட்கள் ஆன நிலையில் உயிரிழந்துள்ளது.

    எகிப்து நாட்டின் எல்லையோரம் உள்ள ரஃபா ஹமாஸ் அமைப்பினரின் கோட்டையாக திகழ்வதாக இஸ்ரேல் கூறி வருகிறது. இதனால் ரஃபா மீது தரை தாக்குதல் நடத்த ஆயத்தமாகி வருகிறது. ரஃபா நகரில் 10 லட்சத்திற்கு மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் வசித்து வருகிறார்கள்.

    காசா முனையில் உள்ள பெரும்பாலான மக்கள் ரஃபா நகருக்கு குடிபெயர்ந்து முகாம்களில் வசித்து வருகின்றனர். மனிதாபிமான பேரிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால் ரஃபா மீது தரைவழி தாக்குதல் நடத்தக்கூடாது என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன் சவுதி அரேபியா சென்றுள்ளனர். இவர் இஸ்ரேல் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. காசாவிற்கு மேலும் உதவிப் பொருட்கள் சென்றடைய இஸ்ரேல் வழிவகை செய்ய வேண்டும். இருந்தபோதுிலும், மனிதாபிமான நெருக்கடியை தணிக்க இரு தரப்பிலும் போர் நிறுத்தம் செய்து கொள்வது அவசியம் எனத் தெரிவித்துள்ளார்.

    • கென்யாவில் 2 லட்சம் மக்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    • வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பள்ளிக்கூடங்களில் மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

    கென்யாவின் மேற்கு பகுதியில் உள்ள கிரேட் ரிஃப்l; பள்ளத்தாக்கு மாகாணத்தில் அமைந்தள்ள பகுதி மாய் மஹியு. இங்கு ஒல்டு கிஜாப் என்ற அணை உள்ளது. இந்த அணி திடீரென்று உடைந்தது வெள்ளம் ஊருக்குள் புகுந்தது. இதில் வீடுகள் அடித்து செல்லப்பட்டன. மரங்களை வேறோடு சாய்த்து இழுத்துச் சென்றது. கார்கள் அடித்து செல்லப்பட்டன.

    அணையில் இருந்து வெளியேறிய வெள்ளத்தால் சுமார் 40 பேர் உயிரிழந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    கடந்த மாதம் மத்தியில் இருந்து கென்யாவில் கனமழை பெய்து வருகிறது. அதிகமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்திருந்தது, கனமழை காரணமாக அணை நிரம்பியிருந்தது.

    கடந்த சனிக்கிழமை கென்யாவின் முக்கியமான விமான நிலையம் மழை வெள்ளத்தால் மூழ்கியது. ரன்வே மூழ்கியதால் பல விமானங்கள் திருப்பி விடப்பட்டன என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    கென்யாவில் 2 லட்சம் மக்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பள்ளிக்கூடங்களில் மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தற்காலிய முகாம் அமைக்க கென்ய அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

    கிழக்க ஆப்பிரிக்க நாடுகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வருகின்றன. தான்சானியாவில் கனமழை பெய்தது. இந்த மழைக்கு 155 பேர் உயிரிழந்தனர். புருண்டியில் 2 லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    • துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக கோல்பி ட்ரிக்கிள் தெரிவித்தார். போலீசாரும் இது தற்கொலை தான் என வழக்கை முடித்துவிட்டனர்.
    • போலீஸ் அதிகாரி ஒருவருக்கு கிறிஸ்டின் டரிக்கிள் சாவில் சந்தேகம் ஏற்பட்டது. இது தொடர்பாக அவர் கோல்பி டிரிக்கிளிடம் விசாரித்த போது உண்மை வெளிவந்தது.

    கன்சாஸ்:

    அமெரிக்கா கன்சாஸ் மாகாணத்தை சேர்ந்தவர் கோல்பி ட்ரிக்கிள் (வயது 30). இவரது மனைவி கிறிஸ்டன் டிரிக்கிள் (26) கடந்த 2019-ம் ஆண்டு இவர் ஹோஸ்ட் கன்சாவில் உள்ள வீட்டில் உடலில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த நிலையில் பிணமாக கிடந்தார்.

    அவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக கோல்பி ட்ரிக்கிள் தெரிவித்தார். போலீசாரும் இது தற்கொலை தான் என வழக்கை முடித்துவிட்டனர்.

    மனைவி பெயரில் 2 ஆயுள் காப்பீடுகள் இருந்தது. அதன் மூலம் கோல்பிக்கு 1.20 லட்சம் டாலர் ( சுமார் ரூ.1 கோடி ) இன்சூரன்சு தொகை கிடைத்தது. அதனை அவர் ஜாலியாக செலவழித்தார்.

    வீடியோ கேம்களுக்காக ஆயிரக்கணக்கான டாலர்கள் செலவழித்தார். கடன்களை அடைத்தார். தான் பெரிய இசை கலைஞராக வேண்டும் என்ற ஆசையில் இசைக்கருவி–கள் வாங்கி குவித்தார். இதோடு மட்டும் நின்று விடாமல் ரூ1.66 லட்சம் மதிப்பிலான செக்ஸ் பொம்மை வாங்கினார்.

    இது தனக்கு ஆறுதலாகவும், அரவணைப்பாகவும் உள்ளதாக அவர் கருதினார். இது தொடர்பாக அவரது தாயார் கூறும் போது தனது மகன், மனைவி இறந்த பிறகு சரியாக தூங்குவது இல்லை. இதனால் செக்ஸ் பொம்மையினை வாங்கினார். ஆனால் அதனுடன் செக்ஸ் உறவு எதுவும் வைக்கவில்லை என்று கூறினார்.

    இந்த சூழ்நிலையில் போலீஸ் அதிகாரி ஒருவருக்கு கிறிஸ்டின் டரிக்கிள் சாவில் சந்தேகம் ஏற்பட்டது. இது தொடர்பாக அவர் கோல்பி டிரிக்கிளிடம் விசாரித்த போது உண்மை வெளிவந்தது.

    மனைவியை கொன்று தற்கொலை செய்ததாக நாடகமாடி இன்சூரன்சு மூலம் கிடைத்த பணத்தில் செக்ஸ் பொம்மை உள்ளிட்ட பொருட்கள் வாங்கியது தெரியவந்தது. இதையடுத்து கொலை வழக்கில் போலீசார் கோல்பி டிரிக்கிளை கைது செய்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அதிர்ஷ்டவசமாக தீவிபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
    • மொத்தம் ரூ.11.5 லட்சம் அளவுக்கு பொருட்கள் எரிந்து சேதமானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    தென்மேற்கு சீனாவில் உள்ள சிச்சுவான் மாகாணத்தில் உள்ள ஒரு வீட்டில் கடந்த 4-ந்தேதி திடீரென தீப்பற்றி எரிந்தது. இதுகுறித்த தகவலின் பேரில் தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்று போராடி தீயை அணைத்தனர். மேலும் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர்.

    அப்போது வீட்டில் இருந்த மின்சார குக்கரை வீட்டு உரிமையாளர் அணைத்து வைத்திருந்த நிலையில், வீட்டில் அவர் செல்லமாக வளர்த்த பூனை அந்த மின்சார குக்கரை 'ஆன்' செய்ததும், அதனால் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக வீட்டில் தீப்பிடித்ததும் தெரிய வந்தது.

    அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றாலும், வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமானது. இதில் மொத்தம் ரூ.11.5 லட்சம் அளவுக்கு பொருட்கள் எரிந்து சேதமானதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்த தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பயனர்கள் மத்தியில் பேசுபொருளாகி உள்ளது.

    • வீடியோ 20 லட்சத்திற்கும் அதிகமாக பார்வைகளை பெற்று பயனர்கனை கவர்ந்துள்ளது.
    • வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் சிறுமியின் அசாத்திய திறமையை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    தனித்திறமைகள் கொண்ட சிறுவர், சிறுமிகள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தும் வீடியோக்கள் மூலம் சமூக வலைதளங்களில் எளிதில் பிரபலமாகி விடுகிறார்கள். அந்த வகையில் சிங்கத்தின் கர்ஜனையை கச்சிதமாக பின்பற்றும் ஒரு சிறுமியின் வீடியோ எக்ஸ் தளத்தில் வைரலாகி வருகிறது.

    அதில், ரிலே கே ஸ்காட் என்ற அந்த சிறுமி, சக்தி வாய்ந்த சிங்கம் கர்ஜிப்பது போன்று தனது வாயால் கர்ஜித்து காட்டி அவரது அசாத்திய திறனை வெளிப்படுத்துகிறார். மேலும் ரிலேயின் தாயார், தனது மகளிடம் உனது சிங்க சத்தம் அனைவருக்கும் பிடித்திருந்ததாகவும், அது உண்மை என்று அவர்கள் நினைத்ததாகவும் கூறுவதையும் காண முடிகிறது. பேட்டன் என்ற பயனரால் பகிரப்பட்ட அந்த வீடியோ 20 லட்சத்திற்கும் அதிகமாக பார்வைகளை பெற்று பயனர்கனை கவர்ந்துள்ளது.

    வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் சிறுமியின் அசாத்திய திறமையை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அதில் ஒரு பயனர், இதை நீங்கள் சிறுவயதில் கற்கவில்லை என்றால், பெரியவர்களாகிய நீங்கள் அதை பெற மாட்டீர்கள் என்று நினைக்கிறேன் எனவும், மற்றொரு பயனர், சிறுமியின் தாயார் அவளைப் பற்றி பெருமைப்பட வேண்டும் எனவும் பதிவிட்டுள்ளார்.


    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஒமாஹா பகுதியில் கடும் சூறாவளி காற்று வீசும் என எச்சரிக்கை செய்யப்பட்டிருந்தது.
    • பார்ப்பதற்கு சினிமாவில் இடம்பெறும் காட்சிகளை போல உள்ள வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் அந்த காதல் ஜோடியினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    காதலை காதலியிடம் முன்மொழிய இளைஞர்கள் பல்வேறு வித்தியாசமான செயல்களை செய்கிறார்கள். நடுரோட்டில் பொதுமக்கள் முன்னிலையில் காதலை வெளிப்படுத்தியது முதல் பறக்கும் விமானத்தில் சக பயணிகள் மத்தியில் வெளிப்படுத்துவது வரை ஏராளமான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி இருந்தது.

    இந்நிலையில் தற்போது எக்ஸ் தளத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், சூறாவளிக்கு முன்பு ஒரு இளம்ஜோடி மோதிரத்தை மாற்றி நிச்சயதார்த்தம் செய்த காட்சிகள் உள்ளது. அமெரிக்காவின் நெப்ராஸ்கா மாகாணத்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. அங்கு கடந்த வாரம் சக்தி வாய்ந்த சூறாவளி காற்றுடன் புயல் வீசியது.

    அப்போது அங்கு உள்ள ஒமாஹா பகுதியில் கடும் சூறாவளி காற்று வீசும் என எச்சரிக்கை செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் அப்பகுதிக்கு சென்ற ஒரு இளம்ஜோடி சூறாவளிக்கு மத்தியில் மோதிரத்தை மாற்றி நிச்சயதார்த்தம் செய்துள்ளனர். இதுதொடர்பான வீடியோ எக்ஸ் தளத்தில் வெளியாகி 2 லட்சத்து 46 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்றது. பார்ப்பதற்கு சினிமாவில் இடம்பெறும் காட்சிகளை போல உள்ள வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் அந்த காதல் ஜோடியினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    • கடைசி நிமிடத்தில் பயணத்தை ரத்து செய்து சீனாவுக்கு சென்றுள்ளார்.
    • சீன அதிகாரிகளுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல்.

    உலகின் முன்னணி எலெக்ட்ரிக் கார் உற்பத்தியாளர் டெஸ்லா. இந்நிறுவனத்தின் நிறுவனர் எலான் மஸ்க் சீனாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். முன்னதாக டெஸ்லா கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்வது தொடர்பாக இந்தியாவுக்கு பயணம் செய்ய திட்டமிட்ட எலான் மஸ்க், கடைசி நிமிடத்தில் தனது பயணத்தை ரத்து செய்து சீனாவுக்கு சென்றுள்ளார்.

    அந்த வகையில், தனது சீன பயணத்தின் போது தானியங்கி வாகனத்திற்கான மென்பொருளை அறிமுகம் செய்வது மற்றும் கடல்கடந்து தகவல்களை பரிமாற்றம் செய்வதற்கான அனுமதி பெறுவது தொடர்பாக சீன அதிகாரிகளுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    மேலும், சீன பயணத்தின் போது எலான் மஸ்க் அந்நாட்டு பிரதமர் லி கியாங்கை நேரில் சந்தித்தார். சந்திப்பின் போது சீனாவில் டெஸ்லா நிறுவனத்தின் வளர்ச்சி அந்நாட்டின் பொருளாதாரம் மற்றும் வர்த்தகம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிகிறது. சந்திப்பு தொடர்பாக எலான் மஸ்க் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    அந்த பதிவில், "பிரதமர் லி கியாங்கை சந்தித்ததில் பெருமை கொள்கிறேன். ஷாங்காய் நாட்கள் தொடங்கி பல ஆண்டுகளாக நாங்கள் ஒருவரை ஒருவர் நன்கு அறிந்துள்ளோம்," என்று குறிப்பிட்டுள்ளார். இத்துடன் இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை அவர் இணைத்துள்ளார். 

    • புதிய சட்டம் மனித உரிமைகளுக்கு எதிரானது.
    • சட்டம் அந்நாட்டு பாராளுமன்றத்தில் இற்றப்பட்டு விட்டதாக தகவல்.

    ஈராக் அரசாங்கம் சார்பில் இயற்றப்பட்டு இருக்கும் புதிய சட்டம், தன்பாலின ஈர்ப்பு திருமணங்களுக்கு தடை விதிக்கும் வகையில் அமைந்துள்ளது.

    அதன்படி ஈராக் அரசு இயற்றியிருக்கும் புதிய சட்டத்தின்படி தன்பாலின ஈர்ப்பு திருமணம் செய்து கொள்வோருக்கு அதிகபட்சம் 15 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். புதிய சட்டம் மனித உரிமைகளுக்கு எதிரானது என்று சில அமைப்புகள் கருத்து தெரிவித்துள்ளன.

    புதிய சட்டம் அந்நாட்டில் வசிக்கும் தன்பாலின ஈர்ப்பாளர்கள் மீது தாக்குதலாக அமைந்துள்ளது. தன்பாலின  ஈர்ப்பு திருமணங்களை சட்டவிரோதமாக அறிவிக்கும் சட்டம் அந்நாட்டு பாராளுமன்றத்தில் இற்றப்பட்டு விட்டதாக தகவல் வெளியாகி உள்ளன. இந்த சட்டம் ஈராக் சமூகத்தை ஒழுக்க சீர்கேடுகளில் இருந்து பாதுகாக்கும் நோக்கில் இயற்றப்பட்டுள்ளது.

    தன்பாலின ஈர்ப்பு திருமணங்கள் மற்றும் விபச்சாரத்தை ஒழிக்கும் புதிய சட்டத்தை மீறுவோருக்கு குறைந்தபட்சம் 10 ஆண்டுகள், அதிகபட்சம் 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும். தன்பாலின ஈர்ப்பு அல்லது விபச்சாரத்தை ஊக்குவிப்போருக்கு அதிகபட்சம் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும். 

    ×