search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    • பதிவு வைரலாகி 2.5 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றது.
    • பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    பணக்கார குடும்பத்தினர் தங்களது மகளுக்கு பெரிய இடத்தில் மாப்பிள்ளை தேடுவார்கள். ஆனால் தனது மகளுக்கு தங்களை விட மிகப்பெரிய பணக்கார குடும்பங்களில் இருந்து மட்டுமே வரன் வேண்டும் என்பதற்காக தந்தை ஒருவர் ரூ.3 லட்சம் கட்டணம் செலுத்தியது இணையத்தில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இதுதொடர்பாக மிஷ்கா ராணா என்ற பயனர் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள பதிவில், ரூ.200 கோடிக்கு மேல் வசதி கொண்ட பணக்கார குடும்பத்தில் இருந்து மட்டுமே வரன் வேண்டும் என்பதற்காக எனது நண்பரின் தந்தை ஒருவர் ஆன்லைன் தளத்தில் ரூ.3 லட்சம் கட்டணம் செலுத்தி உள்ளார் என பதிவிட்டுள்ளார்.

    இவரது பதிவு வைரலாகி 2.5 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றது. பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    • கனடாவில் சீக்கியர் தினம் தொடர்பாக நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
    • பிரதமர் ட்ரூடோ பங்கேற்ற நிகழ்ச்சியில் காலிஸ்தான் ஜிந்தாபாத் என்ற கோஷம் எழுப்பியதாகக் கூறப்படுகிறது.

    புதுடெல்லி:

    கனடா நாட்டில் சீக்கியர் தினம் தொடர்பாக நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பங்கேற்றார்.

    அப்போது, காலிஸ்தான் ஜிந்தாபாத் என்ற கோஷம் எழுப்பியதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்திற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், டெல்லியில் உள்ள இந்தியாவிற்கான கனடா துணை தூதரை அழைத்து வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரிவினைவாதம், பயங்கரவாதம் மற்றும் வன்முறைக்கு, கனடா மீண்டும் இடமளித்துள்ளதை இது மீண்டும் ஒருமுறை எடுத்துக்காட்டுகிறது. காலிஸ்தான் ஆதரவு முழக்கங்களை எழுப்பியது இரு நாடுகள் இடையிலான உறவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்த வீடியோ மீண்டும் வைரலாகி ஆயிரக்கணக்கான பார்வைகளை குவித்து வருகிறது.
    • வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    விலங்குகள் மனிதர்களுடன் விளையாடுவது சகஜம் தான் என்றாலும், யானை ஒன்று மனிதர்களை போல தும்பிக்கையில் பேட் பிடித்து கிரிக்கெட் விளையாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    சமூக வலைதளமான ரெடிட் தளத்தில் பரவி வரும் அந்த வீடியோவில், யானை ஒன்று பூங்காவுக்கு அருகே சிலருடன் கிரிக்கெட் விளையாடும் காட்சிகள் உள்ளது. அதில், சிலர் பீல்டிங் செய்த நிலையில் ஒருவர் யானைக்கு பந்து வீசுகிறார். அந்த பந்தை யானை தும்பிக்கையால் அடிக்கும் காட்சிகளும், பந்தை பீல்டிங் செய்பவர்கள் அதனை பிடித்து மீண்டும் யானைக்கு பந்து வீசும் காட்சிகளும் உள்ளது.

    இந்த வீடியோ கேரளாவில் கடந்த 2021-ம் ஆண்டு படமாக்கப்பட்டது என கூறப்படுகிறது. ஆனாலும் தற்போது நாடு முழுவதும் ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்த வீடியோ மீண்டும் வைரலாகி ஆயிரக்கணக்கான பார்வைகளை குவித்து வருகிறது. வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    • பிகானர் பகுதியில் சத்தா பஜாரில் ‘பீடா’ கடை நடத்தி வருபவர் பூல்சந்த்.
    • கைகளில் ஏராளமான மோதிரங்கள், கழுத்தில் அதிகளவில் தங்க செயின்கள், பிரேஸ்லெட்டுகள் மற்றும் காதணிகள் என உடம்பு முழுவதும் தங்க நகைகளை அணிந்துள்ளார்.

    தங்க நகைகள் அதிகம் அணிவதை பெண்கள் விரும்புவது சகஜம். ஆண்கள் அதிகளவில் தங்க நகைகள் அணிவதில்லை. அப்படியே அணிந்தாலும் ஒன்றிரண்டு நகை மட்டுமே அணிவார்கள். ஆனால் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 'பீடா' கடைக்காரர் ஒருவர் ரூ.2 கோடி மதிப்புள்ள நகைகளை அணிந்து கலக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    அங்குள்ள பிகானர் பகுதியில் சத்தா பஜாரில் 'பீடா' கடை நடத்தி வருபவர் பூல்சந்த். இவர் கைகளில் ஏராளமான மோதிரங்கள், கழுத்தில் அதிகளவில் தங்க செயின்கள், பிரேஸ்லெட்டுகள் மற்றும் காதணிகள் என உடம்பு முழுவதும் தங்க நகைகளை அணிந்துள்ளார். இவற்றின் மொத்த மதிப்பு ரூ.2 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. இவர் கடையில் 'பீடா' வாங்குவதற்கு வரும் கூட்டத்தை விட இவரை பார்ப்பதற்காகவே கூட்டம் அலைமோதி வருகிறதாம்.

    பூல்சந்தின் குடும்பம் பாரம்பரியமாக இந்த கடையை நடத்தி வருகின்றனர். இவரது கடையில் குறைந்த விலையில் 'பீடா' விற்பனை செய்யப்படுவதோடு, இவரை பார்க்கவும் கூட்டம் குவிவதால் வியாபாரம் நன்றாக நடப்பதாக கூறுகிறார்கள்.

    • மும்பை கோரேகாவ் கிழக்கு, சந்தோஷ் நகரில் உள்ள ஓட்டலில் சம்பவத்தன்று சிக்கன் சவர்மா சாப்பிட்ட 12 பேருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது.
    • சிக்கன் சவர்மா சாப்பிட்ட 12 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்ட சம்பவம் மும்பை மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    மும்பை:

    சமீபகாலமாக சிக்கன் சவர்மா உணவு வகை பிரபலமாகி இருக்கிறது. இருப்பினும் சிக்கன் சவர்மாவை சாப்பிட்டு பலர் நொந்து போன சம்பவங்களும் நடந்துள்ளன.

    தற்போது மும்பை கோரேகாவ் கிழக்கு, சந்தோஷ் நகரில் உள்ள ஓட்டலில் சம்பவத்தன்று சிக்கன் சவர்மா சாப்பிட்ட 12 பேருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. உடனடியாக அவர்கள் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதில் 9 பேர் சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினர்.

    3 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களின் உடல் நிலை மோசமாக இருப்பதாக கூறப்படுகிறது. சிக்கன் சவர்மா சாப்பிட்ட 12 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்ட சம்பவம் மும்பை மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் உள்ள நாமக்கல்லில் சிக்கன் சவர்மா சாப்பிட்ட 9-ம் வகுப்பு மாணவியும், கேரளாவில் ஒரு சிறுமியும் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி என மும்முனைப் போட்டி நிலவுகிறது.
    • காங்கிரசால் மட்டுமே ஆந்திராவை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல முடியும் என்றார்.

    அமராவதி:

    ஆந்திராவில் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டசபை தேர்தலும் நடக்கிறது. அங்கு 25 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், 175 சட்டசபை தொகுதிகளுக்கும் மே 13-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. இதையடுத்து அங்கு தீவிர பிரசாரம் நடந்து வருகிறது.

    ஆளும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க-தெலுங்கு தேசம் இணைந்த தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி என மும்முனைப் போட்டி நிலவுகிறது.

    இந்நிலையில், மாநில காங்கிரஸ் தலைவரும், ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரியுமான ஒய்.எஸ்.சர்மிளா நேற்று காக்கிநாடாவில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

    கடந்த 10 ஆண்டுகளில் ஆந்திர மாநிலம் ஒரு அடி முன்னேற்றம் காணவில்லை. சந்திரபாபு நாயுடு, ஜெகன்மோகன் ரெட்டியால் எந்தப் பயனும் இல்லை.

    இருவரும் பா.ஜ.க.வுடன் கைகோர்த்துள்ளனர். ஒருவர் கூட்டணி வைத்தும், மற்றொருவர் மறைமுகமாகவும் பா.ஜ.க.வின் கைக்கூலியாக உள்ளனர்.

    ஆந்திராவுக்கு மீள முடியாத வீழ்ச்சியை பா.ஜ.க. கொடுத்துள்ளது. மாநிலத்துக்கு 10 ஆண்டுகளுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என வாக்குறுதி அளித்த அந்த கட்சி, மோசடி செய்துவிட்டது. போலவரம் திட்டத்தை பா.ஜ.க. புறக்கணித்து விட்டது. உண்மை நிலவரம் இப்படியிருக்க சந்திரபாபு நாயுடுவும், ஜெகன்மோகன் ரெட்டியும் அந்தக் கட்சியுடன் கூட்டணி வைத்திருக்கிறார்கள்.

    காங்கிரஸ் கட்சியால் மட்டுமே ஆந்திராவை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல முடியும். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என தெரிவித்தார்.

    • தொழில்நுட்பத்தை பயன்படுத்தி என்னுடைய குரலை வைத்து போலி வீடியோக்கள் உருவாக்குகின்றனர்.
    • இது அபாயத்தை ஏற்படுத்தும். போலி வீடியோவை பார்த்தீர்கள் என்றால், காவல்துறைக்கு தகவல் தெரிவியுங்கள்.

    பிரதமர் மோடி இன்று வடக்கு மகாராஷ்டிரா மாவட்டமான சத்தாராவில் உள்ள கராத் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் பேசினார்.

    அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:-

    நான், அமித் ஷா மற்றும் ஜே.பி. நட்டா போன்ற தலைவர்களின் மேற்கோள்களை சித்தரித்து சமூக முரண்பாடுகளை உருவாக்க எதிரிகள் AI-ஐப் பயன்படுத்துகின்றனர். தொழில்நுட்பத்தை பயன்படுத்தி என்னுடைய குரலை வைத்து போலி வீடியோக்கள் உருவாக்குகின்றனர். இது அபாயத்தை ஏற்படுத்தும். போலி வீடியோவை பார்த்தீர்கள் என்றால், காவல்துறைக்கு தகவல் தெரிவியுங்கள்.

    அடுத்த ஒரு மாதங்களில் மிகப்பெரிய சம்பவத்தை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளனர். நான் இந்த குற்றச்சாட்டுகளை மிகவும் தீவிரமாக முன்வைக்கிறேன். சில அசம்பாவித சம்பவங்கள் நடக்கும் வகையில் சமூக பதற்றத்தை ஏற்படுத்த விளையாட்டுகள் நடத்தப்படுகின்றன.

    இதுபோன்ற போலி வீடியோக்களில் இருந்து சமூகத்தை காப்பாற்றுவது நமது பொறுப்பு. இதுபோன்ற போலி வீடியோக்களுக்கு பின்னணியில் உள்ளவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணையத்தை கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

    அமித் ஷா பேசியதாக ஒரு வீடியோவை சித்தரித்து தெலுங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்ததுடன், ரேவந்த் ரெட்டிக்கு சம்மனும் அனுப்பப்பட்டுள்ளது

    • தேவகவுடா பேரன் பிரஜ்வால் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் வெளியாகி கர்நாடகாவை அதிர வைத்துள்ளது
    • பெண்களுடன் பிரஜ்வால் ரேவண்ணா உல்லாசமாக இருப்பது போன்ற ஆபாச வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவிக் கொண்டிருக்கிறது

    கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வால் ரேவண்ணா ஹாசன் தொகுதி எம்.பியாக உள்ளார். அவர் கர்நாடகாவில் முதல் கட்டமாக நடந்த பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டார்.

    இந்த பாராளுமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. .

    இந்நிலையில் தேவகவுடா பேரன் பிரஜ்வால் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் வெளியாகி கர்நாடகாவை அதிர வைத்துள்ளது. பெண்களுடன் பிரஜ்வால் ரேவண்ணா உல்லாசமாக இருப்பது போன்ற ஆபாச வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவிக் கொண்டிருக்கிறது.

    ஹாசன் தொகுதிக்கு வாக்குப்பதிவு நடைபெற்ற ஏப்ரல் 26-ந் தேதி முதல் நாளில் இருந்தே இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    இப்படிப்பட்ட நபருக்கா நீங்கள் ஓட்டுப் போடப் போகிறீர்கள்? என்ற வாசகத்துடன் இந்த ஆபாச வீடியோக்கள் வலம் வருகிறது. இதனால் ஒட்டுமொத்த தேவகவுடா குடும்பமும் நிலை குலைந்து போயுள்ளது.

    இந்த நிலையில் ஆபாச வீடியோ வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அமைக்க அரசு முடிவு செய்துள்ளதாக கர்நாடக முதல்-அமைச்சர் சித்தராமையா எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    இதனையடுத்து, பெண்களை மிரட்டி பாலியல் ரீதியாக துன்புறுத்தி ஆபாச வீடியோ எடுத்ததாக ரேவண்ணா மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பிரஜ்வால் ரேவண்ணா, ஜெர்மனுக்கு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இந்நிலையில் இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய தலைவர் டி.ராஜா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,

    "பிரதமருக்கு நெருக்கமான ஒருவர் சம்பந்தப்பட்ட கொடூரமான வீடியோக்கள், ஆயிரக்கணக்கான எண்ணிக்கையில் வெளியாகியுள்ளன. பெண்கள் பாதுகாப்புக்கு மோடியின் உத்தரவாதத்திற்கு இந்த வீடியோக்களே சாட்சி. இதுதான் மோடியின் 'நாரி சக்தி'யின் (பெண்கள் சக்தி) உண்மையான நிலை.

    பெண்களுக்கு எதிரான பிரஜ்வல் ரேவண்ணாவின் குற்றங்கள் பற்றி மோடி-ஷா வாய் மூடியுள்ளார்கள்.

    வீடியோக்கள் வெளியானதையடுத்து ரேவண்ணா நாட்டை விட்டு ஓடிவிட்டார், தப்பிக்க அவருக்கு உதவியவர் யார்? இந்த விடை நம் அனைவருக்குமே தெரியும்.

    பெண் மல்யுத்த வீரர்கள் பாலியல் துன்புறுத்தலின் போதும், மணிப்பூரில் பெண்கள் நிர்வாணமாக ஊர்வலம் அழைத்துச் செல்லப்பட்ட போதும் மோடி மவுனம் காத்தார். ஆயிரக்கணக்கான பெண்களை சீரழிவுக்கு ஆளாக்கிய இந்த கூட்டாளி குறித்தும் மோடி மௌனம் காப்பார்" என்று பதிவிட்டுள்ளார்.

    • முதல் இரண்டு கட்ட தேர்தல் வாக்கு சதவீதத்தை பார்த்த பிறகு, பா.ஜனதா தோல்வியடையும் என்பதை நாம் உறுதியாக நம்ப முடியும்.
    • மீதமுள்ள ஐந்து கட்ட தேர்தல்களிலும் அவர்கள் தோல்வியை சந்திப்பார்கள்.

    சிறுபான்மையினர் அதிக அளவில் வசிக்கும் முர்ஷிதாபாத், ஜாங்கிபுர் மக்களவை தொகுதிகளில் மம்தா பானர்ஜி அடுத்தடுத்து தேர்தல் பிரசார பேரணியில் கலந்த கொண்டு பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    தேர்தல் வரும்போதெல்லாம் அவர்கள் ஒரு விசயத்தை பயன்படுத்துவார்கள் அல்லது வகுப்புவாத பதற்றத்தை ஏற்படுத்துவார்கள். இந்த முறை அவர்கள் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு எதிராக பொது சிவில் சட்டத்தை எடுத்துள்ளார்கள். அது குறித்து பரப்புரை செய்கிறார்கள். தேர்தல் சொல்லாடலைத் தவிர அதில் வேறு ஏதும் இல்லை. இதனால் இந்துக்கள் எந்த வகையிலும் பயனடையமாட்டார்கள்.

    வாக்குமுறை மற்றும் முதல் இரண்டு கட்ட தேர்தல் வாக்கு சதவீதத்தை பார்த்த பிறகு, பா.ஜனதா தோல்வியடையும் என்பதை நாம் உறுதியாக நம்ப முடியும். மீதமுள்ள ஐந்து கட்ட தேர்தல்களிலும் அவர்கள் தோல்வியை சந்திப்பார்கள். பா.ஜனதாவுக்கு பயம் மற்றும் பீதி ஏற்பட்டுள்ளது. தற்போது காவி முகாம் தோற்கடிக்கப்பட வேண்டும்.

    யாராவது ஒருவர் தவறில் ஈடுபட்டால், அதை சரி செய்து கொள்ள முடியும். ஆனால், 26 ஆயிரம் வேலைகளை (ஆசிரியர்கள் வேலை நியமனம் செல்லாது என உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது) பறித்தது ஏற்றுக் கொள்ள முடியாதது. இது பா.ஜனதாவின் சூழ்ச்சி. உங்களின் வேலைகளை பறித்த அவர்களுக்கு வாக்கு அளிக்காதீர்கள்.

    சிஏஏ சட்டப்பூர்வமான குடிமக்களை வெளிநாட்டினர்களாக்குவதற்கான பொறியாகும். சிசிஏ-வை அமல்படுத்தினால், என்.ஆர்.சி. பின்பற்றப்படும். நாங்கள் இரண்டையும் மேற்கு வங்காளத்தில் அனுதிக்கமாட்டோம். அவர்கள் என்ஆர்சி-யை பயன்படுத்த விரும்புகிறார்கள். நான் அனுதிக்கமாட்டேன்.

    இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

    • 2018-2019-ல் 70 பில்லியன் டாலராக இருந்த நிலையில், தற்போது 101 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.
    • சீனா எட்டு துறைகளில் ஏற்றுமதி செய்வதில் முன்னணி வகிக்கிறது.

    இந்தியா தொழில்துறை பொருட்களை சீனாவில் இருந்து இறக்குமதி செய்கிறது. 2023-24-ல் மட்டும் 101 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு சீனாவில் இருந்து இறக்குமதி செய்துள்ளதாக ஜிடிஆர்ஐ ( Global Trade Research Initiative) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    2018-2019-ல் 70 பில்லியன் டாலராக இருந்த நிலையில், தற்போது 101 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.

    இந்திய தொழில்துறைக்கு தேவைப்படும் சீன பொருட்களின் இறக்குமதியின் பங்கு கடந்த 15 ஆண்டுகளில் 21 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாக உயர்ந்துள்ளது.

    இயந்திரம், கெமிக்கல், மருந்து, டெக்ஸ்டைல் உள்ளிட்ட துறைகளில் சீனா ஏற்றுமதி செய்வதில் முன்னணி வகிக்கிறது. எலக்ட்ரானிக் துறையில் மட்டுமே சீனா அதிக அளவில் இறக்கமதி செய்கிறது.

    2018-2019- 2023-2024-க்கு இடையில் இந்தியா சீனாவுக்கு ஏற்றுமதி செய்த அளவு வருடத்திற்கு 16 பில்லியன் என்ற அளவில் மந்தமாக இருந்ததாகவும், அதேவேளையில் சீனாவில் இருந்து இந்தியா அதிக அளவில் இறக்குமதி செய்தது. இதனால் ஆறு ஆண்டுகளில் ஒட்டுமொத்த வர்த்தக பற்றாக்குறை 387 பில்லியன் டாலர் உயர்ந்ததாகவும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

    எல்க்ட்ரானிக்ஸ், டெலிகாம், எலக்ட்ரிக்கல் தயாரிப்புக்கான பொருட்கள் 43.9 சதவீதம், இயந்திரம் தயாரிப்பு துறையில் 39.7 சதவீதம், டெக்ஸ்டைல் மற்றும் ஆடை துறையில் 38.2 சதவீதம், கெமிக்கல் மற்றும் மருந்து துறையில் 26.8 சதவீதம், ஆட்டோமொபைல் துறையில் 26 சதவீதம் வரை இறக்குமதி செய்துள்ளது.

    ஆனால், வர்த்தக அமைச்சகம், மொத்தம் 161 பொருட்களில் குறிப்பிட்ட 90 பொருட்கள் சீனாவிற்கு கடந்த வருடம் அதிகமாக ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளது.

    • தேவகவுடா பேரன் பிரஜ்வால் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் வெளியாகி கர்நாடகாவை அதிர வைத்துள்ளது
    • ஆபாச வீடியோ வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அமைக்க கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது

    கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வால் ரேவண்ணா ஹாசன் தொகுதி எம்.பியாக உள்ளார். அவர் கர்நாடகாவில் முதல் கட்டமாக நடந்த பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டார்.

    இந்த பாராளுமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. .

    இந்நிலையில் தேவகவுடா பேரன் பிரஜ்வால் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் வெளியாகி கர்நாடகாவை அதிர வைத்துள்ளது. பெண்களுடன் பிரஜ்வால் ரேவண்ணா உல்லாசமாக இருப்பது போன்ற ஆபாச வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவிக் கொண்டிருக்கிறது.

    ஹாசன் தொகுதிக்கு வாக்குப்பதிவு நடைபெற்ற ஏப்ரல் 26-ந் தேதி முதல் நாளில் இருந்தே இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    இப்படிப்பட்ட நபருக்கா நீங்கள் ஓட்டுப் போடப் போகிறீர்கள்? என்ற வாசகத்துடன் இந்த ஆபாச வீடியோக்கள் வலம் வருகிறது. இதனால் ஒட்டுமொத்த தேவகவுடா குடும்பமும் நிலை குலைந்து போயுள்ளது.

    இந்த நிலையில் ஆபாச வீடியோ வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அமைக்க அரசு முடிவு செய்துள்ளதாக கர்நாடக முதல்-அமைச்சர் சித்தராமையா எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    இதனையடுத்து, பெண்களை மிரட்டி பாலியல் ரீதியாக துன்புறுத்தி ஆபாச வீடியோ எடுத்ததாக ரேவண்ணா மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பிரஜ்வால் ரேவண்ணா, ஜெர்மனுக்கு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இந்நிலையில் இது தொடர்பாக காங்கிரஸ் தனது எக்ஸ் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளது. அதில், "பெண்களை மிரட்டி பாலியல் ரீதியாக துன்புறுத்தி 3000+ வீடியோக்கள் எடுத்த கர்நாடகாவின் ஹாசன் தொகுதி பாஜக கூட்டணி வேட்பாளர் ரேவண்ணாவும் மோடியின் குடும்பம் தான். பாஜகவிடம் இருந்து பெண்களை காப்பாற்றுங்கள்" என்று பதிவிடப்பட்டுள்ளது.

    • ஜம்மு காஷ்மீரின் பல பகுதிகளில் பனிப்பொழிவு மிகுதியாக உள்ளது
    • பனிமழை மற்றும் பனிக்காற்றால் ஜம்மு காஷ்மீரின் பல பகுதிகளில் கடும் குளிர் நிலவி வருகிறது.

    தமிழகத்தில் கடந்த சில நாட்களாக இயல்பை விட அளவுக்கு அதிகமான வெப்பம் பதிவாகி வருகிறது. மேலும், ஒவ்வொரு நாளும் வெப்பம் அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகம் என்றும், ஒவ்வொரு பகுதிக்கும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

    தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியா முழுவதுமே கடும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது.

    அதே சமயம் ஜம்மு காஷ்மீரின் பல பகுதிகளில் பனிப்பொழிவு மிகுதியாக உள்ளது. பனிமழை மற்றும் பனிக்காற்றால் ஜம்மு காஷ்மீரின் பல பகுதிகளில் கடும் குளிர் நிலவி வருகிறது.

    இந்நிலையில் காஷ்மீரின் சோனாமார்க் பகுதியில் உள்ள சர்பால் என்ற இடத்தில் பெரும் பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது. வனப்பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவால் சேதம் எதுவும் இல்லை என முதற்கட்டத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பனிச்சரிவு காரணமாக வனப்பகுதியை ஒட்டியுள்ள 4 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    ×