search icon
என் மலர்tooltip icon

    கேரளா

    • சமூக வலைத்தளங்களில் மம்முட்டியை அவரது இயற்பெயரான முகமது குட்டி என்ற பெயரில் மத ரீதியாக வெறுப்பு பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
    • வெறுப்பை பரப்புபவர்களின் இழிவான மனதில் மட்டுமே மம்முட்டி முகமது குட்டியாக இருக்கிறார்.

    2 ஆண்டுகளுக்கு முன்பு மம்முட்டி நடிப்பில் புழு என்ற திரைப்படம் மலையாளத்தில் வெளிவந்தது. அந்த படத்தில் உயர்சாதியினரை இழிவுபடுத்தியுள்ளதாக எழுந்த குற்றசாட்டில் சமூக வலைத்தளங்களில் மம்முட்டி விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளார்.

    புழு படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ரதீனா. அண்மையில் இவரது கணவர் ஷர்ஷத் பனியாண்டி ஆன்லைன் மீடியா ஒன்றிற்கு பேட்டியளித்தார். அப்போது புழு திரைப்படம் உயர்சாதியினரை இழிவுபடுத்தியுள்ளது. மம்முட்டி ஏன் அந்த திரைப்படத்தில் நடித்தார். அவர் படத்தின் ஸ்க்ரிப்டை படித்து பார்த்தாரா என்று கேள்வி எழுப்பினார்.

    மேலும், இந்த திரைப்படத்தின் திரைக்கதை ஆசிரியர்களில் ஒருவரான ஹர்ஷத் ஒரு தீவிரமான இஸ்லாமியர் என்று தெரிவித்தார்.

    இதனையடுத்து சமூக வலைத்தளங்களில் மம்முட்டியை அவரது இயற்பெயரான முகமது குட்டி என்ற பெயரில் மத ரீதியாக வெறுப்பு பிரசாரத்தில் பலரும் ஈடுபட்டனர்.

    நடிகர் மம்முட்டி மீதான இத்தகைய வெறுப்பு பிரசாரத்திற்கு அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இது சம்பந்தமாக தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். அதில், மம்முட்டியை மதம் அல்லது சாதியின் பிரிவுகளுக்குள் அடைத்து வைக்க முடியாது. வெறுப்பை பரப்புபவர்களின் இழிவான மனதில் மட்டுமே மம்முட்டி முகமது குட்டியாக இருக்கிறார். கேரளாவின் மதச்சார்பற்ற சமூகம் இந்த பிரச்சாரத்தை ஆதரிக்காது என்று தெரிவித்துள்ளார்.

    இதே போல் கேரள கல்வி அமைச்சர் சிவன்குட்டி, மம்முட்டியுடன் இருக்கும் புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார். அதில், "மம்முட்டி மலையாளிகளின் பெருமை" என்று பதிவிட்டுள்ளார்.

    "மம்முட்டியை முகமது குட்டி என்றும், இயக்குநர் கமலை கமாலுதீன் என்றும், நடிகர் விஜய்யை விஜய் ஜோசப் என்றும் அழைக்கும் சங்பரிவார் அரசியல் கேரளாவில் இயங்காது" என்று கேரள வருவாய்த்துறை அமைச்சர் கே ஃபஜன் தெரிவித்துள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பிடிபட்ட ரஷ்ய வாலிபரிடம் பாஸ்போர்ட் இல்லை.
    • விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் கொச்சியில் துறைமுகம் செயல்பட்டு வருகிறது. சர்வதேச துறை முகமாக செயல்படும் இங்கு மத்திய பாதுகாப்பு படையினர் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் இங்குள்ள வல்லார்பாடம் சர்வதேச கொள்கலன் முனையத்தில் வெளிநாட்டு வாலிபர் ஒருவர் அத்துமீறி நிழைந்தார்.

    கொள்கலன் முனை யத்தின் மேற்கு பகுதி வழியாக சுவர் ஏறி குதித்து புகுந்த அந்த நபரை பாது காப்பு படையினர் பிடித்தனர். பின்பு அவரை முளவு காடு போலீசில் ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் ரஷ்யா நாட்டை சேர்ந்த இலியா எகிமோவ்(வயது26) என்பது தெரியவந்தது.

    அவர் கடந்த 2 நாட்க ளுக்கு முன்பு கேரளாவுக்கு வந்ததாகவும், பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்த தாகவும், கூகுள் மேப்பை பார்த்து வந்தபோது வழி மாறி கொச்சி துறைமுகத்தின் கொள்கலன் முனை யத்துக்குள் நுழைந்து விட்ட தாகவும் விசாரணையில் ரஷ்ய வாலிபர் தெரி வித்துள்ளார். ஆனால் அவர் கூறும் தகவல் உண்மை தானா? என்று தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டது.

    மேலும் பிடிபட்ட ரஷ்ய வாலிபரிடம் பாஸ்போர்ட் இல்லை. எர்ணாகுளத்துக்கு செல்வதற்கான ரெயில் டிக்கெட் மட்டும் வைத்தி ருந்தார். பாஸ்போர்ட் இல்லாத நிலையில் அவர் கேரளா வந்தது எப்படி? எதற்காக துறைமுக பகு திக்குள் நுழைந்தார்? என்று தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டது.

    மேலும் அவரிடம் மத்திய உளவு அமைப்புகளான 'ரா' மற்றும் 'ஐ.பி.' அதிகாரிகளும் விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பிறகு ரஷ்ய வாலிபர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு எர்ணாகுளம் சப்-ஜெயிலில் அடைக்கப்பட்டார். கொச்சி துறை முகத்துக்குள் ரஷ்ய வாலிபர் அத்துமீறி நுழைந்த சம்பவம் பற்றி தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • அத்துமீறிய வழக்கில் எப்திகர் அகமதுவை போலீசார் கைது செய்தனர்.
    • 3-வது முறையாக சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    திருவனந்தபுரம்:

    கேரள மத்திய பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வருபவர் எப்திகர் அகமது (வயது51). இவர் பல்கலைக்கழகத்தில் படித்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய குற்றச்சாட்டில் கடந்த 2013-ம்ஆண்டு நவம்பர் மாதம் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

    மூன்று மாதங்களுக்கு பிறகு பிப்ரவரி மாதம் 23-ந்தேதி மீண்டும் பணியில் சேர்க்கப்பட்ட நிலையில், ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் அதே மாதத்தில் 29-ந்தேதி மீண்டும் பணி நீக்கம் செய்யப்பட்டார்.

    இந்நிலையில் தற்போது கண்ணூர் அருகே கேளிக்கை பூங்காவில் ஒரு பெண்ணிடம் அத்துமீறிய வழக்கில் எப்திகர் அகமதுவை போலீசார் கைது செய்தனர்.

    அவர் மீது பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டது. மேலும் அந்த வழக்கில் சிறையிலும் அடைக்கப்பட்டார். இதனால் உதவி பேராசிரியர் எப்திகர் அகமதுவை மீண்டும் சஸ்பெண்டு செய்து பல்கலைக்கழக துணைவேந்தர் உத்தரவு பிறப்பித்திருக்கிறார். அவர் தற்போது 3-வது முறையாக சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ரவடிகள் சர்வ சாதாரணமாக சுற்றித்திரிவதாக குற்றச்சாட்டுகள்.
    • கத்தி உள்ளிட்ட ஆயுதங்களும் சிக்கியதாக கூறப்படுகிறது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் குண்டர்கள் மற்றும் போதை பொருள் கடத்தல் கும்பலால் சமீபகாலமாக அதிக குற்றங்கள் நடந்தன. ஏராளமான ரவடிகள் சர்வ சாதாரணமாக சுற்றித்திரிவதாக குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. இது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது.

    அடாவடியில் ஈடுபடும் நபர்களை பிடிக்க அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் மட்டுமின்றி, பல்வேறு அரசியல் கட்சியினரும் வலியுறுத்தினர். இந்நிலையில் அதற்கான நடவடிக்கையை போலீசார் எடுத்தனர். அதன்படி மாநிலம் முழுவதும் போலீசார் நேற்று குற்றவாளிகளை கைது நடவடிக்கையில் ஈடுபட்டார்கள்.

    இதில் போதைப்பொருள் வியாபாரிகள், குண்டர்கள், பழைய குற்றவாளிகள், வாரண்டு பிறப்பிக்கப்பட்ட வர்கள் என நேற்று ஒரே நாளில் 300 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்க ளில் பலரது வீடுகளில் போலீசார் சோதனையும் நடத்தினர். இதில் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களும் சிக்கியதாக கூறப்படுகிறது.

    300 பேர் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை போலீசார் தேடி வருகின்ற னர். அவர்களை பிடிக்கும் நடவடிக்கையில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    தலைமறைவு குற்ற வாளிகள், போதை பொருள் விற்பனை கும்பல், ரவுடிகள் உள்ளிட்டோரை கைது செய்யும் நடவடிக்கை தொடரும் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ள னர். கடந்த ஆண்டு இதே போன்று நடத்தப்பட்ட போலீஸ் ஆபரேசனில் 2ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • படத்தின் கதைக்கு ஒரு தரப்பினர் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது.
    • திரைப்படம் வெளியானதில் இருந்து தற்போது வரை நடிகர் மம்முட்டி சைபர் தாக்குதலை சந்தித்து வருகிறார்.

    திருவனந்தபுரம்:

    பிரபல மலையாள திரைப்பட நடிகர் மம்முட்டி நடித்த 'புழு'என்ற திரைப்படம் கடந்த 2022-ம் ஆண்டு வெளியாகியது. ரதீனா என்பவர் இயக்கிய இந்த மலையாள திரைப்படத்திற்கு மம்முட்டியின் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. ஆனால் இந்த படத்தின் கதைக்கு ஒரு தரப்பினர் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது.

    இந்த திரைப்படம் பிராமணர்களுக்கு எதிரானது என்று அவர்கள் குற்றம் சாட்டினர். இதையடுத்து மம்முட்டிக்கு எதிர்ப்பு தெரவித்தும், ஆதரித்தும் சமூக வலைதளங்களில் பலர் கருத்து தெரிவித்தனர். அந்த திரைப்படம் வெளியானதில் இருந்து தற்போது வரை நடிகர் மம்முட்டி சைபர் தாக்குதலை சந்தித்து வருகிறார்.

    இந்நிலையில் நடிகர் மம்முட்டிக்கு அவரது ரசிகர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். மம்முட்டிக்கு முதன்முதலாக ஆதரவு தெரிவித்தவர் கேரள மாநில கல்வித்துறை மந்திரி சின்குட்டி. அவர் தனது முகநூல் பக்கத்தில், 'நடிகர் மம்முட்டி கேரளாவின் பெருமை' என்று குறிப்பிட்டு, மூத்த நடிகர்களுடன் தான் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்தார்.

    அதேபோன்று மந்திரி ஏ.கே.ராஜன் தனது முகநூல் பக்கத்தில், 'நடிகர் மம்முட்டியை முகமது குட்டி என்றும், நடிகர் கமலை கமாலுதீன் என்றும், நடிகர் விஜய்யை விஜய் ஜோசப் என்றும் அழைக்கிறார்கள். அதுதான் அவர்களின் அரசியல். ஆனால் இங்குள்ள நிலைமை வேறு. இதுபோன்ற வெறுப்பு அரசியலுக்கு கேரளாவில் இடமில்லை' என்று தெரிவித்திருக்கிறார்.

    இதேபோன்று பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் ரசிகர்கள் நடிகர் மம்முட்டிக்கு ஆதரவு தெரிவித்து சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்துள்ளனர்.

    • நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், அத்தாளபூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெறும்.
    • 5 நாட்களும் காலை முதல் மதியம் வரையிலும், மாலை முதல் இரவு வரையிலும் கோவில் நடை திறந்திருக்கும் நேரத்தில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப் படுவார்கள்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை மிகவும் பிரசித்தி பெற்ற தாகும். இந்த சீசன் காலத்தில் 2 மாதங்களுக்கு மேலாக கோவில் நடை திறந்திருக்கும்.

    அப்போது ஐயப்ப சுவாமிக்கு விரதம் இருக்கும் லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்வார்கள். மண்டல மற்றும் மகரவிளக்கு சீசன் மட்டுமின்றி ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் 5 நாட்கள் மாதாந்திர பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படும்.

    அதன்படி வைகாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. கோவில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்துகிறார்.

    அதன் பிறகு பதினெட்டாம் படிக்கு அருகே உள்ள கற்பூர ஆழியில் தீ மூட்டப்படும். இன்று மாலை நடை திறந்த பிறகு சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது. இரவில் அரிவராசனம் பாடப்பட்டு நடை சாத்தப்படும். பின்பு நாளை (15-ந்தேதி) அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படும்.

    நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், அத்தாளபூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெறும். அது மட்டுமின்றி நாளை முதல் வருகிற 19-ந்தேதி வரை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, கலச பூஜை, களபாபிஷேகம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகளும் நடைபெறும்.

    இந்த 5 நாட்களும் காலை முதல் மதியம் வரையிலும், மாலை முதல் இரவு வரையிலும் கோவில் நடை திறந்திருக்கும் நேரத்தில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப் படுவார்கள். பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற 19-ந்தேதி இரவில் அத்தாள பூஜைக்கு பிறகு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு இரவு 10:30 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும்.

    சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப் படுவதை முன்னிட்டு கேரள அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பம்பைக்கு பல்வேறு இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. மேலும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு சார்பில் பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட் டுள்ளன.

    வருகிற 19-ந்தேதி அன்று சபரிமலை ஐயப்பன் கோவிலில் சிலை பிரதிஷ்டை தின விழாவும் நடைபெற உள்ளது குறிப்பிட த்தக்கது. 

    • இருசக்கர வாகனத்தில் வந்த அந்த நபர்கள், ஹரிஹரனின் வீட்டின் மீது சரமாரியாக வெடிகுண்டுகளை வீசியிருக்கின்றனர்.
    • வெடிகுண்டு கண்டறியும் பிரிவினரும் வந்து சம்பவ இடத்தில் இருந்து தடயங்களை சேகரித்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் உள்ள 20 மக்களவை தொகுதிகளுக்கு கடந்தமாதம் 26-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டது. வடகரை தொகுதியில் கேரள மாநில சுகாதாரத்துறை முன்னாள் மந்திரி சைலஜா இடதுசாரி ஜனநாயக முன்னணி சார்பில் களமிறக்கப்பட்டார்.

    அவருடன் அந்த தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் பிரபுல் கிருஷ்ணன், காங்கிரஸ் கட்சி சார்பில் ஷாபி பரம்பில் என மொத்தம் 10 பேர் போட்டியிட்டனர். தேர்தல் பிரசாரத்தின் போது சமூகவலைதளங்களில் சைலஜாவின் மார்பிங் செய்யப்பட்ட வீடியோ வெளியானது.

    அதனை ஐக்கிய ஜனநாயக முன்னணி தான் வெளியிட்டது என்று இடதுசாரி ஜனநாயக முன்னணி குற்றம் சாட்டியது. ஆனால் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக அந்த கட்சியே இதுபோன்ற செயலில் ஈடுபட்டதாக ஐக்கிய ஜனநாயக முன்னணி கருத்து தெரிவித்தது.

    இதற்கிடையே மக்களவை தேர்தல் நடந்து முடிந்த நிலையில், தங்களுக்கு எதிராக தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஐக்கிய ஜனநாயக முன்னணியின் சார்பில் வடகராவில் கூட்டம் நடத்தப்பட்டது.

    அந்த கூட்டத்தில் பங்கேற்று பேசிய புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர் ஹரிஹரன், முன்னாள் மந்திரி சைலஜா மற்றும் நடிகை மஞ்சுவாரியர் ஆகியோரின் பெயர்களை குறிப்பிட்டு ஆபாசமான கருத்துக்களை தெரிவித்தார்.

    கேரள சட்டசபையின் எதிர்க்கட்சி தலைவர் சதீசன் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்த கூட்டத்தில் ஹரிஹரன் பேசிய இந்த பேச்சு சமூக வலைதளங்களில் பரவியது. அவரது பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் அவரது பேச்சு கேரளாவில் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்தநிலையில் முன்னாள் மந்திரி சைலஜா பற்றி ஆபாசமாக பேசிய ஹரிஹரன் மீது பெண்களை அவமானப்படுத்துதல் (ஐபிசி 509), பாலியல் துன்புறுத்தல் (ஐபிசி 354 ஏ) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுக்கக்கோரி கேரள மாநில காவல்துறை தலைவரிடம் இந்திய ஜனநாயக இளைஞர் கூட்டமைப்பு மாநில செயலாளர் சனோஜ் புகார் அளித்தார்.

    மேலும் கோழிக்கோடு காவல் கண்காணிப்பாளரிடம், இந்திய ஜனநாயக இளைஞர் கூட்டமைப்பு வடகரா தொகுதி செயலாளர் விகேஷ் என்பவரும் புகார் கூறியிருக்கிறார். அவர்களது புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஹரிஹரனின் பேச்சுக்கு சமூகவலைதளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்ததால் தனது முகநூல் பக்கத்தில் அவர் வருத்தம் தெரிரிவித்துள்ளார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில் 'வடகரையில் நான் பேசிய உரையில் தகாத கருத்தை தெரிவித்ததாக நண்பர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் எனது கவனத்துக்கு கொண்டு வந்தனர். அந்த கருத்தை தெரிவித்ததற்கு நான் மிகவும் வருந்துகிறேன்' என்று தெரிவித்துள்ளார்.

    இந்த நிலையில் கோழிக்கோட்டில் உள்ள ஹரிஹரனின் வீட்டில் மர்ம நபர்கள் நேற்று இரவு வெடிகுண்டுகளை வீசினர். இருசக்கர வாகனத்தில் வந்த அந்த நபர்கள், ஹரிஹரனின் வீட்டின் மீது சரமாரியாக வெடிகுண்டுகளை வீசியிருக்கின்றனர். ஆனால் அந்த குண்டுகள் வீட்டின் சுற்றுச்சுவரில் விழுந்து வெடித்தன.

    இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் வெடிகுண்டு கண்டறியும் பிரிவினரும் வந்து சம்பவ இடத்தில் இருந்து தடயங்களை சேகரித்தனர்.

    முன்னாள் மந்திரி சைலஜா மற்றும் நடிகை மஞ்சு வாரியர் பற்றி ஆபாசமான கருத்துக்களை தெரிவித்த நிலையில, புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சி தலைவரின் வீட்டில் வெடிகுண்டுகள் வீசப்பட்ட சம்பவம் கோழிக்கோட்டில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    • பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட இவர், தான் இந்த தொகுதியில் நிச்சயம் வெற்றி பெறுவேன் என உறுதி அளித்தார்.
    • தொழிலாளர்களின் கணிசமான வாக்குகள் அவருக்கு கிடைத்துள்ளன என்றும் அவர்கள் நம்புகின்றனர்.

    திருவனந்தபுரம்:

    பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் 2-வது கட்ட தேர்தலின் போது கேரளாவில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இங்கு எப்படியும் வெற்றி பெற்று தனது வெற்றிக் கணக்கை தொடங்க வேண்டும் என பாரதிய ஜனதா திட்டமிட்டு தேர்தல் பணியாற்றியது. இதற்காக முக்கிய பிரமுகர்களை களம் இறக்கியது. இதில் முக்கியமானவர் நடிகர் சுரேஷ்கோபி.

    திருச்சூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட இவர், தான் இந்த தொகுதியில் நிச்சயம் வெற்றி பெறுவேன் என உறுதி அளித்தார். இதனை உறுதி செய்துள்ள பாரதிய ஜனதா நிர்வாகிகள், திருச்சூர் தொகுதியில் 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் சுரேஷ்கோபி வெற்றி பெறுவார் என தெரிவித்துள்ளனர்.

    இந்து வாக்குகள் அனைத்தும் சுரேஷ்கோபி மீது குவிந்துள்ளதாக தெரிவிக்கும் பாரதிய ஜனதா, ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் சுரேஷ்கோபிக்கு கணிசமான வாக்குகள் கிடைத்துள்ளன. தொழிலாளர்களின் கணிசமான வாக்குகள் அவருக்கு கிடைத்துள்ளன என்றும் அவர்கள் நம்புகின்றனர். திருச்சூர் சட்டமன்ற தொகுதியில் மட்டும் அவருக்கு 10 ஆயிரம் வாக்குகள் முன்னிலை கிடைக்கும் என்று பாரதிய ஜனதா தெரிவித்துள்ளது.

    • போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் பணிக்கு திரும்ப தொடங்கியிருப்பதால் கேரளாவில் பெரும்பாலான சர்வதேச சேவைகள் நேற்று மாலை தொடங்கப்பட்டன.
    • கொச்சி விமான நிலையத்திலும் பல விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

    திருவனந்தபுரம்:

    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுனத்தில் பணிபுரியும் கேபின் ஊழியர்களில் ஒரு பிரிவினர் கடந்த 7-ந்தேதி இரவில் திடீரென போராட்டத்தில் குதித்தனர். நிர்வாகம் தங்களை தவறாக நடத்துவதாக கூறி 200-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஒட்டுமொத்தமாக விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் அன்றைய தினம் ஏர் இந்தியாவின் 85 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில் வேலைக்கு திரும்புவதாக ஊழியர்கள் கூறினர். ஆனால் அவர்கள் பணிக்கு திரும்பாத காரணத்ததால் நேற்று 75 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

    ஏர் இந்தியா விமான சேவைகள் ரத்து கேரள மாநிலத்தில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கேரள மாநில விமான நிலையங்களில் சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான சேவைகள் இயல்புநிலைக்கு திரும்பவில்லை. அங்குள்ள திருவனந்தபுரம், கண்ணூர், கரிப்பூர், கொச்சி ஆகிய 4 விமான நிலையங்களில் பல விமானங்களின் சேவை நேற்று ரத்து செய்யப்பட்டது.

    போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் பணிக்கு திரும்ப தொடங்கியிருப்பதால் கேரளாவில் பெரும்பாலான சர்வதேச சேவைகள் நேற்று மாலை தொடங்கப்பட்டன. ஆனாலும் திருவனந்தபுரத்தில் இருந்து நேற்று மாலை புறப்பட வேண்டிய மஸ்கட் விமானம் இயக்கப்படவில்லை.

    இதேபோல் ஷார்ஜா விமான சேவையும் பாதிக்கப்பட்டது. கண்ணூர் விமான நிலையத்தில் இருந்து துபாய், அபுதாபி, ஷார்ஜா, மஸ்கட், ரியாத், ராசல் கைமா, தம்மாம் , தோஹா ஆகிய நகரங்களுக்கு செல்லும் விமான சேவை ரத்து செய்யப்பட்டன.

    கரிப்பூர் விமான நிலையத்தில் இருந்து துபாய், குவைத், தோஹா, பஹ்ரைன், ராசல்ஹைமா ஆகிய விமான சேவைகள் ரத்தாகின. இதேபோன்று கொச்சி விமான நிலையத்திலும் பல விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

    திருவனந்தபுரம் விமான நிலையத்தில் 4, கண்ணூரில் 8, கரிப்பூரில் 6, கொச்சியில் 4 என 22 விமான சேவைகள் கேரளாவில் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன. இதனால் கேரளாவில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்பவர்களும், அங்கிருந்து கேரளாவுக்கு திரும்பி வருபவர்கள் தவிப்புக்குள்ளாகி இருக்கின்றனர்.

    • மாற்றாக மருத்துவ குணங்கள் நிறைந்த துளசி இலை மற்றும் பூ இனங்களை பயன்படுத்த வேண்டும்.
    • கோவில் வளாகத்தில் அரளி செடி அல்லாத பூந்தோட்டம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹரிப்பாட்டை சேர்ந்த இளம்பெண் சூர்யா சுரேந்திரன் அரளிப்பூவை எதேச்சையாக தின்ற காரணத்தால் மரணம் அடைந்தார்.

    அதாவது நர்சு பணிக்காக இங்கிலாந்து செல்ல நெடும்பாசேரி விமான நிலையம் வந்தடைந்த நேரத்தில் அவர் மரணம் அடைந்த சம்பவம் கேரளாவை உலுக்கி இருந்தது. இதை தொடர்ந்து அரளி செடியின் தழைகளை தின்ற பசுவும், கன்றும் இறந்த சம்பவம் நிகழ்ந்தது. மேலும் அரளி இலை மற்றும் பூ விஷத்தன்மை கொண்ட தாவரம் என்பதை மருத்துவ நிபுணர்களும் உறுதி செய்தனர். இதனை தொடர்ந்து திருவனந்தபுரத்தில் திருவிதாங்கூர் தேவஸ்தானத்தின் அவசர கூட்டம் நந்தன்கோடு தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    திருவிதாங்கூர் தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவில் உள்பட அனைத்து கோவில்களிலும் பூஜைகள், வழிபாடுகள், நிவேத்தியங்களில் இனி அரளிப்பூவை பயன்படுத்த கூடாது. அதற்கு மாற்றாக மருத்துவ குணங்கள் நிறைந்த துளசி இலை மற்றும் பூ இனங்களை பயன்படுத்த வேண்டும்.

    இதற்காக கோவில் வளாகத்தில் அரளி செடி அல்லாத பூந்தோட்டம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    திருவிதாங்கூர் தேவஸ்தான கோவில்களில் பூந்தோட்டம் அமைக்கும் பொறுப்பு தேவஸ்தானத்தின் உதவி அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 11 மாவட்டங்களில் மழையுடன் காற்றின் வேகமும் அதிகமாக இருக்கும். மணிக்கு 30 முதல் 40 கி.மீட்டர் வேகத்தில் இது இருக்கும்.
    • பொதுமக்கள் நீர் நிலைகள் பகுதிக்கு செல்ல வேண்டாம். வீட்டில் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் கடந்த சில மாதங்களாக கடும் வெப்பம் நிலவி வருகிறது. வெயிலின் தாக்கம் அதிகமானதால் மின் நுகர்வும் அதிகரித்தது. இதனால் மின் நுகர்வுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வெப்பத்தின் தாக்கம் குறைந்து வருகிறது. வரும் நாட்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக இந்திய வானிலை மையம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், வருகிற 13-ந்தேதி வரை கேரளாவில் ஓரிரு இடங்களில் இடி-மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

    திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம் திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம் மற்றும் வயநாடு ஆகிய 11 மாவட்டங்களில் மழையுடன் காற்றின் வேகமும் அதிகமாக இருக்கும். மணிக்கு 30 முதல் 40 கி.மீட்டர் வேகத்தில் இது இருக்கும்.

    எனவே பொதுமக்கள் நீர் நிலைகள் பகுதிக்கு செல்ல வேண்டாம். வீட்டில் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    • கேரள சைபர் கிரைம் போலீசார், ரகசியமாக கண்காணித்து மோசடி ஆசாமியை கைது செய்தனர்.
    • குற்றத்தில் ஈடுபட்டவர்கள், பெரிய நெட்வொர்க் அமைத்து செயல்பட்டுள்ளனர்.

    திருவனந்தபுரம்:

    நாடு முழுவதும் ஆன்லைன் மோசடி சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதில் ஏராளமானோர் பணத்தை இழந்து தவித்து வருகின்றனர். இந்த மோசடிக்கு செல்போன்கள், சிம்கார்டுகள் தான் முக்கிய பங்காற்றி வருகின்றன.

    கேரள மாநிலம் வெங்கரையைச் சேர்ந்த ஒருவர் ஆன்லைன் ஷேர்மார்க்கெட் தளத்தில் முதலீடு செய்துள்ளார். இதில் ரூ. 1 கோடியே 8 லட்சத்தை இழந்த அவர், இது குறித்து போலீசில் புகார் செய்தார். அதன்பே ரில் மலப்புரம் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    இதில் கர்நாடக மாநிலம் ஹரனபள்ளியில் வசிக்கும் ஒருவர் தான் ஆன்லைன் மோசடியில் முக்கிய குற்றவாளி என தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அங்கு சென்ற கேரள சைபர் கிரைம் போலீசார், ரகசியமாக கண்காணித்து மோசடி ஆசாமியை கைது செய்தனர். அவரிடம் இருந்து 40 ஆயிரம் சிம்கார்டுகள், 180 செல்போன்கள் மற்றும் 6 பயோ மெட்ரிக் ரீடர்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

    விசாரணையில் அவரது பெயர் அப்துல் ரோஷன் (வயது 46) என்பதும், டெல்லியைச் சேர்ந்த இவர், கர்நாடகாவின் மடிக்கேரியில் வாடகை வீடு எடுத்து வசித்து வந்து இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளார் என தெரியவந்தது. தனியார் மொபைல் நிறுவனத்தின் சிம் விநியோகஸ்தரான இவர், வாடிக்கையாளர் புதிய சிம் கேட்டு வரும்போது, அவர்களது கைரேகைகளை, 2 அல்லது 3 முறை பதிவு செய்து அவர்களுக்கு தெரியாமல் அதனை சேகரித்து விடு வாராம். பின்னர் அதனை வைத்து புதிய சிம்கார்டுகள் ஒவ்வொன்றும் ரூ.50-க்கு வாங்கி ஆன்லைன் மோசடி செய்பவர்களுக்கும் விற்றுள்ளார்.

    இந்த சைபர் குற்றம் குறித்து கைதான ரோஷனிடம் போலீசார் தொட ர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த குற்றத்தில் ஈடுபட்டவர்கள், பெரிய நெட்வொர்க் அமைத்து செயல்பட்டுள்ளனர், அவர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் செயல்படுவதாக மலப்புரம் மாவட்ட போலீஸ் அதிகாரி சசிதரன் தெரிவித்துள்ளார். அவர்களையும் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். 

    ×