search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    • ஊட்டிக்கு சீசன் நேரங்களில் தினமும் 20 ஆயிரத்து 11 வாகனங்களும், சீசன் இல்லாத நாட்களில் 2 ஆயிரத்து 2 வாகனங்களும் வந்து செல்கின்றன.
    • இ-பாஸ் நடைமுறை என்று வரும்போது ஒரு நாளைக்கு இத்தனை பேர் செல்லலாம் என்று அறிவிக்க வாய்ப்புள்ளது.

    ஊட்டி:

    மலைகளின் அரசியான நீலகிரி மாவட்டத்திற்கு தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் சுற்றுலா வந்த வண்ணம் இருப்பார்கள். குறிப்பாக கோடை மாதமான ஏப்ரல், மே மாதங்களில் கூட்டம் அலைமோதும்.

    தற்போது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெயில் கொளுத்தி வருவதாலும், பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதாலும், வெயிலில் இருந்து தப்பிக்க இதமாக சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பத்தினருடன் ஊட்டிக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர்.

    கடந்த சில நாட்களாக நீலகிரியில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. இன்னும் சில தினங்களில் நீலகிரியில் கோடைவிழாவும் தொடங்க உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

    ஊட்டிக்கு சீசன் நேரங்களில் தினமும் 20 ஆயிரத்து 11 வாகனங்களும், சீசன் இல்லாத நாட்களில் 2 ஆயிரத்து 2 வாகனங்களும் வந்து செல்கின்றன. இதன் காரணமாக எப்போதுமே நீலகிரியில் உள்ள அனைத்து சாலைகளிலுமே போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்படும்.

    அதிலும் குறிப்பாக ஊட்டி-மேட்டுப்பாளையம், கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலை, ஊட்டி நகர பகுதிகளில் உள்ள சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் நீண்ட தூரத்திற்கு அணிவகுத்து நிற்பதையும் காண முடியும். இந்த வாகன நெரிசலை கட்டுப்படுத்துவது என்பது பெரிய சவாலாகவே இருந்து வருகிறது.

    இந்த கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில், வருகிற 7-ந் தேதி முதல் ஜூன் 30-ந் தேதி வரை ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு செல்ல கொரோனா காலகட்டத்தில் பயன்பாட்டில் இருந்ததை போன்று இ-பாஸ் நடைமுறையை அமல்படுத்த சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

    இதையடுத்து இ-பாஸ் நடைமுறையை அமல்படுத்துவது மற்றும் என்னென்ன மாதிரியான நடைமுறைகளை கொண்டு வருவது என வருவாய்த்துறை, வனத்துறை, சுற்றுலாத்துறையை சேர்ந்த உயர் அதிகாரிகள் ஒன்றாக இணைந்து ஆலோசனை நடத்த உள்ளனர். இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு விரைவில் இ-பாஸ் நடைமுறைக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும் என தெரிகிறது. இதேபோல் இ-பாஸ் பெறுவதற்காக என்று தனியாக இணைய தளமும் தொடங்கப்பட்டும், அதுவும் விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என தெரிகிறது.

    ஊட்டிக்கு செல்வோர் இ-பாஸ் எடுத்து வர வேண்டும் என்ற நடைமுறையானது உள்ளூர் மக்களிடையே வரவேற்பினை பெற்றுள்ளது. இது தொடர்பாக பொதுமக்கள் கூறியதாவது:-

    மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகிறார்கள். கோடை சீசனில் அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருவதால் இங்குள்ள அனைத்து சாலைகளிலுமே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.

    இதனால் உள்ளூர் பொதுமக்களாகிய நாங்கள் அவரச தேவைக்கு எங்காவது புறப்பட்டால் கூட போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்க வேண்டிய நிலை உள்ளது. அத்துடன் வாகனங்கள் அதிகளவில் வருவதால், அதில் இருந்து வெளியேறும் நச்சுப்புகையானது இங்குள்ள இயற்கை வளங்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

    தற்போது ஐகோர்ட்டு அறிவித்துள்ள இந்த இ-பாஸ் நடைமுறையை நாங்கள் வரவேற்கிறோம். இதன் மூலம் நீலகிரிக்குள் ஒரு நாளைக்கு எத்தனை வாகனங்கள் வந்து செல்கின்றன என்பது தெரியும். போக்குவரத்து நெரிசலும் குறையும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    உள்ளூர் பொதுமக்கள் இ-பாஸ் நடைமுறைக்கு வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில் இந்த அறிவிப்பானது நீலகிரியில் உள்ள வியாபாரிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

    சுற்றுலாவை நம்பிதான் ஏராளமானோர் வியாபாரம் செய்து வருகிறார்கள். சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்தால் தான் இவர்களுக்கு வியாபாரம் இருக்கும். இ-பாஸ் நடைமுறை என்று வரும்போது ஒரு நாளைக்கு இத்தனை பேர் செல்லலாம் என்று அறிவிக்க வாய்ப்புள்ளது.

    அதன் மூலம் சுற்றுலா பயணிகள் வருகை குறையும் நிலை உள்ளதாலும், அதனால் தங்களது வியாபாரம் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் பாதிக்கும் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

    இந்த விவகாரத்தில் அரசு, வியாபாரிகள் கருத்தையும் நலனில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இ-பாஸ் நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் போராட்டங்களை நடத்த முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

    • விவசாயம் செய்து வருபவர்கள் வளர்க்கும் ஆடு, மாடுகள் நீர் நிலைப்பாதைகளில் கொட்டி இருக்கும் தேவையற்ற கழிவுகளை உண்டு நோய்வாய்ப்பட்டு இறக்கின்றன.
    • பலமுறை ஊராட்சி நிர்வாகத்திற்கு புகார் அளித்தும் குப்பைகள் கொட்டுவதை நிறுத்தாததால், பல்லடம் தாலுகா சமூக ஆர்வலர் கூட்டமைப்பு சார்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகா அலுவலகத்திற்கு, சமூக ஆர்வலர் கூட்டமைப்பு தலைவர் அண்ணாதுரை தலைமையில் சுமார் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மனு கொடுக்க வந்தனர். இதில் சிலர் குப்பைகளுடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் தாசில்தார் ஜீவா மற்றும் அதிகாரிகளை சந்தித்து கரைப்புதூர் ஊராட்சி குப்பை கிடங்கை அகற்றக்கோரி நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் அப்புறப்படுத்தவில்லை. எனவே உடனடியாக குப்பை கிடங்கை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்தனர்.

    அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    பல்லடம் அருகே உள்ள கரைப்புதுார் பஞ்சாயத்து நிர்வாகத்தினர் கரைப்புதூர் - உப்பிலிபாளையம் செல்லும் ரோட்டில் உள்ள நீர்நிலை முழுவதிலும் குப்பைகள், கழிவுகளைக் கொட்டி வருகின்றனர். ஊருக்குள் இருக்கும் அனைத்து கழிவுகளையும் கொண்டு வந்து மேற்படி நீர் நிலைப்பாதையில் கொட்டி வருகிறார்கள். இதனால் அந்தப் பகுதி மிகவும் அசுத்தம் ஏற்பட்டு சுகாதாரக்கேடு நிறைந்த பகுதியாக காட்சியளிக்கிறது. மேலும் அந்தப் பகுதியில் குடியிருப்போருக்கும் சுகாதாரமற்ற சூழல் ஏற்பட்டு நோய்வாய்ப்படும் ஆபத்தும் ஏற்பட்டுள்ளது.

    விவசாயம் செய்து வருபவர்கள் வளர்க்கும் ஆடு, மாடுகள் நீர் நிலைப்பாதைகளில் கொட்டி இருக்கும் தேவையற்ற கழிவுகளை உண்டு நோய்வாய்ப்பட்டு இறக்கின்றன. இதுகுறித்து பலமுறை ஊராட்சி நிர்வாகத்திற்கு புகார் அளித்தும் குப்பைகள் கொட்டுவதை நிறுத்தாததால், பல்லடம் தாலுகா சமூக ஆர்வலர் கூட்டமைப்பு சார்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

    வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் 8 வாரங்களுக்குள் குப்பைகளை அகற்ற வேண்டும் என திருப்பூர் மாவட்ட நிர்வாகம், கரைப்புதூர் பஞ்சாயத்து நிர்வாகம் உள்ளிட்ட அரசு துறைகளுக்கு உத்தரவிட்டது. ஆனால் 8 வாரங்கள் ஆகியும் குப்பைகளை அகற்றாமல், மீண்டும் அதே இடத்தில் குப்பைகளை கொட்டி வருகின்றனர். எனவே உயர்நீதிமன்ற உத்தரவிற்கு கட்டுப்பட்டு குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் கூற ப்பட்டுள்ளது.

    • இலங்கை கடற்கொள்ளையர்களின் அத்துமீறிய செயலை மத்திய, மாநில அரசுகள் கண்டிக்க வேண்டும்.
    • மத்திய, மாநில அரசுகள் தமிழக மீனவர்களின் மீன்பிடித்தொழில் பாதுகாப்பாக நடைபெற தொடர் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடல் கொள்ளையர்களின் தாக்குதல் மிகவும் கண்டிக்கத்தக்கது.

    நேற்று இரவு தமிழகத்தின் நாகை மாவட்ட மீனவர்கள் பைபர் படகில் கோடியக்கரை அருகே நடுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் மீனவர்கள் மீது இரும்பு கம்பி, கட்டை ஆகியவற்றைக் கொண்டு கடுமையாக தாக்கினர். இதனால் மீனவர் ஒருவர் படுகாயமடைந்தார்.

    இலங்கை கடற்கொள்ளையர்களின் அத்துமீறிய செயலை மத்திய, மாநில அரசுகள் கண்டிக்க வேண்டும்.

    மேலும் மத்திய, மாநில அரசுகள் தமிழக மீனவர்களின் மீன்பிடித்தொழில் பாதுகாப்பாக நடைபெற தொடர் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தற்போது இந்தியா முழுவதும் நடத்தப்பட்டு வரும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது.
    • கடைசி கட்ட பாராளுமன்ற தேர்தல் ஜூன் 1-ந்தேதி நடைபெறுகிறது.

    சென்னை:

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த புகழேந்தி, உடல்நலக்குறைவு காரணமாக கடந்த மாதம் 6-ந்தேதி உயிரிழந்தார். இதனை தொடர்ந்து 8-ந்தேதி விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

    பொதுவாகவே ஒரு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. உயிரிழந்தாலோ அல்லது ராஜினாமா செய்தாலோ 6 மாதத்துக்குள் இடைத்தேர்தல் நடத்தப்படும்.

    தற்போது இந்தியா முழுவதும் நடத்தப்பட்டு வரும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் ஒரே கட்டமாக கடந்த 19-ந்தேதி தமிழகத்தில் தேர்தல் நடந்து முடிந்துள்ளது.

    இந்த நிலையில் கடைசி கட்ட பாராளுமன்ற தேர்தல் ஜூன் 1-ந்தேதி நடைபெறுகிறது.

    இந்த இடைப்பட்ட காலத்தில் விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தி விடலாம் என இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

    எனவே எப்போது தேர்தல் நடத்தலாம் என்பது தொடர்பான அறிவிப்பை இந்த வாரத்தில் தேர்தல் ஆணையம் வெளியிட வாய்ப்பு உள்ளதாக டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

    • வெப்பம் தணியாமல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் நோய்வாய்ப்பட்டவர்கள் மருத்துவ உதவி பெற வேண்டும்.
    • கருப்பு நிற ஆடை அணிந்து வெளியே செல்ல வேண்டாம்.

    சென்னை:

    சென்னையில் கடுமையான வெப்பம் தாக்குவதால் வெப்பத்தால் ஏற்படும் பாதிப்புகளுக்கு அவசர சிகிச்சை அளிப்பதற்காக நகரில் உள்ள 140 நகர்ப்புற சுகாதார நிலையங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

    இந்த ஆஸ்பத்திரிகளை மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ராதாகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    வெப்பம் தணியாமல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் நோய்வாய்ப்பட்டவர்கள் மருத்துவ உதவி பெற வேண்டும். சென்னையில் மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள 140 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நலவாழ்வு மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. 'ஹீட் ஸ்ட்ரோக்' ஏற்பட்டால் உடனடியாக சிகிச்சை அளிக்கப்படும். இதற்காக நகர் முழுவதும் தேவையான வழிகாட்டி பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.

     

    நகரில் 188 இடங்களில் கவுண்டர் அமைத்து வாய் வழி ரீ-ஹைட்ரஜன் (ஓ.ஆர்.எஸ்.) கரைசல் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இணைநோய் உள்ளவர்கள் மிக கவனமாக இருக்க வேண்டும். நண்பகல் 11 மணி முதல் மாலை 3 மணி வரை வெயிலில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும்.

    கருப்பு நிற ஆடை அணிந்து வெளியே செல்ல வேண்டாம். தலையில் தொப்பி அல்லது தலைப்பாகை அணிந்து வெளியில் செல்ல வேண்டும்.

    வெயிலில் குழந்தைகளை விளையாட அனுமதிக்கக்கூடாது. நிறைய தண்ணீர் அருந்த வேண்டும். காரமான உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். தர்பூசணி, இளநீர், பழச்சாறுகள் அருந்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இ-பாஸ் நடைமுறைகளை வகுப்பது குறித்து உயர் அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.
    • ஊட்டி-கொடைக்கானலுக்கு செல்ல ஆன்லைனில் விண்ணப்பிக்கும் நடைமுறை கொண்டு வரப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சென்னை:

    ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு 7-ந்தேதி முதல் இ-பாஸ் கட்டாயம் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

    இது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை ஓரிரு நாளில் வெளியிட தமிழக அரசு ஏற்பாடு செய்து வருகிறது.

    இதற்காக வருவாய் துறை, சுற்றுலா, வனத்துறை, காவல்துறை, போக்குவரத்து மாவட்ட நிர்வாகம் உள்ளிட்ட துறைகளை ஒருங்கிணைத்து இ-பாஸ் நடைமுறைகளை வகுப்பது குறித்து உயர் அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

    கொரோனா காலத்தில் ஒரு மாவட்டத்தில் இருந்து இன்னொரு மாவட்டத்துக்கு செல்வதற்கு இ-பாஸ் விண்ணப்பித்தது போன்று ஊட்டி-கொடைக்கானலுக்கு செல்ல ஆன்லைனில் விண்ணப்பிக்கும் நடைமுறை கொண்டு வரப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    தலைமைச் செயலாளர் வழிகாட்டுதல் அடிப்படையில் அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் கண்காணிப்பில் வருவாய்த்துறை மூலமாக இ-பாஸ் நடைமுறைகள் விரைவில் வெளியிடப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • ஒவ்வொரு வார்டிலும் எத்தனை ஓட்டுகள் விழும் என்று ஆய்வு செய்ய வேண்டும்.
    • தற்போது வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.

    கோவை:

    கோவை பாராளுமன்ற தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபட்ட பா.ஜ.க. நிர்வாகிகள், தொண்டர்களுடனான கலந்துரையாடல் கூட்டம் கோவையில் நடந்தது. இந்த கூட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 500 நாட்களே உள்ளன. நாம் அனைவரும் களத்தில் முன்கூட்டியே பணிபுரிய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளோம். இவை அனைத்திற்கும் அடிப்படை களப்பணி தேவை. நம் தொண்டர்கள் ஒவ்வொருவரும் களத்தில் இருக்க வேண்டும். வாக்காளர் பட்டியலை சரிபார்க்க வேண்டும். விடுபட்டவர்களை இணைக்க வேண்டும். முகவரி மாறியவர்களை கண்டறிந்து பட்டியலில் சேர்க்க வேண்டும். இறந்தவர்களை நீக்க வேண்டும். ஓட்டு இல்லாதவர்களுக்கு ஓட்டு பெற்றுத்தர வேண்டும். பூத் லெவல் கமிட்டிகளை பலமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    ஒவ்வொரு வார்டிலும் எத்தனை ஓட்டுகள் விழும் என்று ஆய்வு செய்ய வேண்டும். ஆதரவாளர்கள், நடுநிலையாளர்கள், எதிர்பார்ப்பாளர்கள் என்று மூன்று விதமாக பிரித்து களப்பணி மேற்கொள்ள வேண்டும். பூத் கமிட்டிகளை வலுப்படுத்துவது அவசியம். மத்திய அரசு திட்டங்கள், அனைத்து தரப்பு மக்களிடமும் போய் சேர வேண்டும். ஒவ்வொரு பகுதிக்கும் பூத் கமிட்டி பொறுப்பாளர்களை நியமிக்க வேண்டும். ஒரு கட்சியின் வளர்ச்சி என்பது அடிப்படை கட்டமைப்பை மேம்படுத்துவதில் தான் உள்ளது. அதை கட்சி நிர்வாகிகள் ஒவ்வொருவரும் கற்றுக் கொள்வது அவசியம் ஆகும்.

    தற்போது வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இதில் கோவை நிர்வாகிகளும் பங்கேற்று பிரசாரம் மேற்கொள்ள வேண்டும். இதன் வாயிலாக அங்கு களப்பணி எப்படி மேற்கொள்ளப்படுகிறது. எந்தெந்த நடைமுறைகளை, எப்படியெல்லாம் பின்பற்றுகின்றனர் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தங்கம் விலை கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து 6 ஆயிரத்து 750 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
    • வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது.

    சென்னை:

    தங்கம் விலை கடந்த சில வாரமாக ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. நேற்று தங்கம் விலை சவரன் ரூ.53,920-க்கு விற்கப்பட்டது.

    இந்நிலையில் சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து 54 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து 6 ஆயிரத்து 750 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 50 காசுகள் குறைந்து 87 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    • வேதாரண்யத்தில் உள்ள உப்பு சத்தியாகிரக நினைவு கட்டிடத்தில் இருந்து பேரணி புறப்பட்டது.
    • உப்பு சத்தியாகிரக நினைவு ஸ்தூபியில் உப்பு அள்ளி வந்தே மாதரம் என முழக்கமிட்டனர்.

    வேதாரணயம்:

    இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் திருப்புமுனை ஏற்படுத்திய வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக 93-வது நினைவு பேரணி திருச்சியில் உப்பு சத்தியாகிரக ராஜன் நினைவு இல்லம் அருகே இருந்து உப்பு சத்தியகிரக யாத்திரை கமிட்டி தலைவர் சக்திசெல்வ கணபதி தலைமையில் தொடங்கியது.

    அந்த பேரணி கல்லணை, திருக்காட்டுப்பள்ளி, திருவையாறு , தஞ்சை, பாபநாசம், ஆலங்குடி மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி தகட்டூர் ஆயக்காரன்புலம், கருப்பம்புலம் வழியாக நேற்று வேதாரண்யத்திற்கு வந்தடைந்தது.

    வேதாரண்யம் வடக்கு வீதியில் உள்ள உப்பு சத்தியாகிரக நினைவு கட்டிடத்தில் யாத்திரை குழுவினர் உபவாசம் (உண்ணாவிரதம்) இருந்தனர்.

    இன்று வேதாரண்யத்தில் உள்ள உப்பு சத்தியாகிரக நினைவு கட்டிடத்தில் இருந்து பேரணி புறப்பட்டது.

    வேதாரண்யம் வடக்கு வீதி உப்பு சத்தியாகிரக நினைவு கட்டிடத்திலிருந்து பாதயாத்திரையாக சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் உள்ள அகஸ்தியன்பள்ளிக்கு நடந்து சென்றனர்.

    தொடர்ந்து உப்பு சத்தியாகிரக நினைவு ஸ்தூபியில் உப்பு அள்ளி வந்தே மாதரம் என முழக்கமிட்டனர். பின்னர் உப்பு சத்தியாகிரக நினைவு நினைவு ஸ்தூபியில் மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தி தேசபக்தி பாடல்களை பாடினர். இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வ பெருந்தகை, முன்னாள் தலைவர் தங்கபாலு, முன்னாள் எம்.பி. ராஜேந்திரன், சுதந்திரப் போராட்ட தியாகி சர்தார் பேரன் வேதரத்தினம், கேடிலியப்பன்உள்ளிட்ட நூற்றுக்கணக்கான காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    • தமிழ்நாட்டில் ஆட்சிப் பொறுப்பேற்ற காலங்களில் எல்லாம் தொழிலாளர்களின் நலம் நாடிப் பல்வேறு திட்டங்களை உருவாக்கிச் செயல்படுத்தி வருகிறது.
    • நமது திராவிட மாடல் அரசு பொறுப்பேற்றது முதல் தொழிலாளர்களின் தோழனாக பல்வேறு புதிய திட்டங்களைக் கடந்த மூன்றாண்டுகளில் நிறைவேற்றி வருகிறோம்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள மே தின வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-

    தொழிலாளர் சமுதாயம் 8 மணி வேலை, முறையான ஊதியம் ஆகியவற்றை வலியுறுத்தி ரத்தம் சிந்திப் போராடி, உயிர்ப் பலி தந்து தொழிலாளர் சமுதாயம் பெற்ற உரிமை வரலாற்றை நினைவுபடுத்தும் நாள் தான் மே நாள்! திராவிட முன்னேற்றக் கழகம், தொழிலாளர்களை உயிராக மதிக்கும் இயக்கம்.

    தமிழ்நாட்டில் ஆட்சிப் பொறுப்பேற்ற காலங்களில் எல்லாம் தொழிலாளர்களின் நலம் நாடிப் பல்வேறு திட்டங்களை உருவாக்கிச் செயல்படுத்தி வருகிறது.

    நமது திராவிட மாடல் அரசு பொறுப்பேற்றது முதல் தொழிலாளர்களின் தோழனாக பல்வேறு புதிய திட்டங்களைக் கடந்த மூன்றாண்டுகளில் நிறைவேற்றி வருகிறோம்.

    கடைகள் மற்றும் நிறுவனங்களில் அனைத்துப் பணியாளர்களும் அமர்வதற்கு, பணிபுரியும் இடங்களில் இருக்கை வசதிகள் ஏற்படுத்தித் தருதல் குடிநீர், கழிப்பிடம், ஓய்வு அறை, உணவருந்தும் அறை மற்றும் முதலுதவி வசதிகள் ஆகியவற்றை உறுதி செய்யும் வகையில் 1947 ஆம் ஆண்டைய தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டு தொழிலாளர் நலன்கள் இந்த அரசினால் பாதுகாக்கப்பட்டுள்ளன.

    தொழிலாளர்கள் நலனில் முழு அக்கறை செலுத்தி தொழிலாளர்களையும், அவர்களின் குடும்பங்களையும் காத்து வரும் திராவிட மாடல் அரசின் சார்பில் தொழிலாளர் சமுதாயம் நல வாழ்விலும், பொருளாதார மேம்பாட்டிலும் முன்னேற்றங்கள் பல கண்டு உயர்ந்திட என் நெஞ்சம் நிறைந்த "மே" தின நல்வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • காணிக்கையாக செலுத்திய 300 ஆடுகளை வெட்டி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
    • விழாக்குழுவினர் ஏராளமானோர் கலந்து கொண்டு அசைவ உணவை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

    பழனி:

    திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே, மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் கோம்பையட்டிகிராமம் உள்ளது. இங்கு 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில், பழமை வாய்த்த பிரசித்தி பெற்ற பெரியதுரையான் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான சித்திரைத் திருவிழா தீர்த்தம் கொண்டு வருதல் நிகழ்ச்சி நடந்தது. இதைத்தொடர்ந்து கோவிலில் உள்ள விநாயகர், கருப்பண்ணசாமி, மூலவர், நவகிரக சாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பக்தர்களுக்கு மாபெரும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதற்காக காணிக்கையாக செலுத்திய 300 ஆடுகளை வெட்டி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். இதேபோல் கோழிகளையும் பக்தர்கள் கருப்பண்ணசாமிக்கு பலியிட்டனர். இதைத்தொடர்ந்து அருகிலேயே ஆடுகள் உறிக்கப்பட்டு இறைச்சியாக்கப்பட்டது. கோழி இறைச்சியும் தயாரானது. அதன்பிறகு கோவில் வளாகத்திலேயே சமையல் செய்யும் பணியும் நடந்தது. இதற்காக விழாக்குழுவினர் ஏராளமானோர் கலந்து கொண்டு அசைவ உணவை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

    மேலும் அங்கு சாப்பாடு சமைக்கப்பட்டு மலை போல் குவித்து வைக்கப்பட்டது. ஆட்டிறைச்சி, கோழி இறைச்சி குழம்பும் தயாரானது. இதைத்தொடர்ந்து அன்னதானம் தொடங்கியது. மதியம் தொடங்கிய அன்னதானம் மாலை வரை நடைபெற்றது. இதில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். இது குறித்து கோம்பைப்பட்டி பகுதியை சேர்ந்த துரைச்சாமி என்பவர் கூறுகையில், சித்திரை திருவிழா அன்று மழை வேண்டி 100க்கும் மேற்பட்ட கிடாய்கள் வெட்டப்படும். இந்த ஆண்டு நடைபெற்ற திருவிழாவின் போது நேற்று மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மற்றும் கோம்பைப்பட்டி பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர் என்றார்.

    • 14 மாவட்டங்களில் வெப்ப அலையின் தாக்கம் கடுமையாக இருக்கும் என்று வானிலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    • காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் கோடை மழை பரவலாக பெய்யும்.

    சென்னை:

    தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் வரை வெயில் கொளுத்துவதால் மக்கள் கடுமையான சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.

    குறிப்பாக வடதமிழக உள் மாவட்டங்களில் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்தே வெப்ப அலை வீசி வருகிறது. தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் படிப்படியாக பெரும்பாலான மாவட்டங்களிலும் ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப்பகுதிகளிலும் வெப்பம் அதிகரித்தது.

    ஈரோடு, கரூர், சேலம், வேலூர், திருப்பூர் உள்ளிட்ட வட உள் மாவட்டங்களில் இயல்பைவிட வெப்பம் அதிகமாக இருந்து வருகிறது.

    தமிழகத்தில் 15 மாவட்டங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக ஈரோட்டில் 109 டிகிரி வெயில் நேற்று பதிவானது.

    இந்த நிலையில் இன்று முதல் வெப்பத்தின் தாக்கம் மேலும் அதிகரிக்கும். வெப்ப அலையின் தாக்கம் வட உள் மாவட்டங்களில் இயல்பைவிட 5 டிகிரி செல்சியசை விட அதிகரிக்கும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.

    இன்று முதல் 4 நாட்களுக்கு வெப்ப அலை கடுமையாக வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இன்று முதல் 3-ந்தேதி வரை தமிழக உள் மாவட்டங்களில் இயல்பைவிட வெப்ப நிலை அதிகமாக இருக்கும். 109 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தக் கூடும் என்பதால் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    கடலோரம் இல்லாத இந்த மாவட்டங்களில் உஷ்ணம் அதிகமாக இருக்கும். இதனால் அசவுகரியமான சூழல் ஏற்படக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 14 மாவட்டங்களில் வெப்ப அலையின் தாக்கம் கடுமையாக இருக்கும் என்று வானிலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கூறியதாவது:-

    கோடை வெயிலின் தாக்கம் வருகிற 3 நாட்கள் கடுமையாக இருக்கும். இன்று வெப்ப அலை கடுமையாக இருக்க வாய்ப்புள்ளது. மே 1 முதல் 3-ந்தேதி வரை வட உள் மாவட்டங்களில் 43 டிகிரி செல்சியஸ் வரை வெப்பத்தின் தாக்கம் இருக்கும். அதாவது இயல்பைவிட 5 செல்சியஸ் அதிகமாகக் கூடும். 110 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பம் பதிவாக வாய்ப்பு உள்ளது.

    மே 4-ந்தேதி முதல் கோடை மழை பெய்யக்கூடும். கடலோரப் பகுதிகள் தவிர வட மாவட்டங்கள் உள் மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் இடி-மின்னலுடன் கோடை மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது.

    கோடை மழை மே 2-வது வாரம் வரை தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் பெய்யக்கூடும் என்பதால் வெப்பத்தின் தாக்கம் குறையும். சென்னையில் 50 சதவீதம் தான் மழைக்கு வாய்ப்பு உள்ளது. காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் கோடை மழை பரவலாக பெய்யும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×