search icon
என் மலர்tooltip icon

    திருப்பூர்

    • தற்போது முறையாக தண்ணீர் வினியோகம் செய்ய மின்சாரம் இல்லாத தன் காரணமாக பயிர்கள் கருகுவதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.
    • விவசாயிகளிடம் கோரிக்கையை கேட்டு அறிந்த கலெக்டர் கிறிஸ்துராஜ் உடனடியாக மின்வாரிய அலுவலர்களுடன் பேசி விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

    திருப்பூர்:

    திருப்பூர் மின் பகிர்மானம் வட்டம் அவிநாசி, கானூர், கருவலூர், சேவூர் உள்ளிட்ட கிராமங்களில் கடந்த 19-ந்தேதி முதல் விவசாய நிலங்களில் உள்ள மின் இணைப்புகளுக்கு சீரான முறையில் மும்முனை மின்சாரம் வழங்காததாலும், குறைந்த அழுத்த மின்சாரம் வழங்கப்பட்டதாலும் இந்த பகுதியில் பயிரிடப்பட்ட வாழை, தென்னை, கரும்பு, காய்கறி, மரவள்ளி உள்ளிட்ட பயிர்கள் முற்றிலும் கருகி வரும் சூழல் உரு வாகி உள்ளது.

    ஏற்கனவே கொடுத்து வரும் மின்சாரம் குறைந்த அழுத்த மின்சாரமாக அதுவும் சீர் இல்லாமல் இருப்பதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. பல வகையில் நிதி திரட்டி கடன் பெற்று பயிர் செய்து அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் தற்போது முறையாக தண்ணீர் வினியோகம் செய்ய மின்சாரம் இல்லாத தன் காரணமாக பயிர்கள் கருகுவதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.

    எனவே விவசாயிகளின் உரிமை மின்சாரத்தை முறைப்படுத்தி வழங்க வேண்டும், 8 மணி நேரம் வழங்கப்பட்டு வந்த மும்முனை மின்சாரம் தற்போது 2 மணி நேரம் மட்டுமே வழங்கப்படுவதால் எப்போதும் போல் வழங்க வேண்டும், குறைந்த அழுத்தம் மின்சார விநியோகத்தை சீர் செய்ய வேண்டும் என வலியுறுத்தி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் 100க்கும் மேற்பட்டோர் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனைத்தொடர்ந்து கலெக்டரிடம் விவசாயிகள் நேரடியாக தங்கள் கோரிக்கை மனுவை அளித்தனர். விவசாயிகளிடம் கோரிக்கையை கேட்டு அறிந்த கலெக்டர் கிறிஸ்துராஜ் உடனடியாக மின்வாரிய அலுவலர்களுடன் பேசி விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதனைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கலைந்து சென்றனர்.

    • அமராவதி அணையிலும் நீா் இருப்பு குறைந்து காணப்படுவதால், யானைகள் அவதியடைந்து வருகின்றன.
    • தண்ணீா் கிடைக்காமல் யானைகள் அலையும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

    உடுமலை:

    திருப்பூா் மாவட்டம், உடுமலை மற்றும் அமராவதி வனப் பகுதியில் கடுமையான வறட்சி நிலவி வருவதால், யானைகள் குடிநீருக்காக அலையும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.

    ஆனைமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகத்தில் புலி, சிறுத்தை, யானை, மான், காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் உள்ளன.

    இந்நிலையில் கோடைக் காலம் தொடங்கியுள்ளதால் வனப் பகுதியில் உள்ள ஓடைகள், ஆறுகள் வறண்டு போயுள்ளன. மேலும், புற்கள் காய்ந்து வன விலங்குகளுக்கு உணவு கிடைப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் உணவு, குடிநீா் தேடி வன விலங்குகள் வனத்தைவிட்டு கூட்டம் கூட்டமாக வெளி யேறத் தொடங்கியுள்ளன.

    அதன்படி தமிழக எல்லைக்குட்பட்ட காமனூத்து, பூங்கன் ஓடை, சரக்குப்பட்டி, ஏழுமலையான் கோவில் வளைவு உள்ளிட்ட பகுதிகளுக்கு யானைகள் வரத் தொடங்கியுள்ளன. குறிப்பாக, குடிநீா்த் தேவைக்காக உடுமலை-மூணாறு சாலையைக் கடந்து அமராவதி அணையை நோக்கி யானைகள் படையெடுத்து வருகின்றன. ஆனால், அமராவதி அணையிலும் நீா் இருப்பு குறைந்து காணப்படுவதால், யானைகள் அவதியடைந்து வருகின்றன.

    உடுமலை மற்றும் அமராவதி வனப்பகுதியில் வனத்துறையினரால் அமைக்கப்பட்டுள்ள தடுப்பணைகளும் வறண்டு காணப்படுகின்றன. இதனால், தண்ணீா் கிடைக்காமல் யானைகள் அலையும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

    இது குறித்து உடுமலை மற்றும் அமராவதி வனச் சரக அதிகாரிகள் கூறியதாவது:- வனப்பகுதியில் தற்போது கடுமையான வறட்சி நிலவி வருகிறது. தடுப்பணைகளும் வறண்டு போனதால் யானைகள் வனத்தைவிட்டு வெளியே சுற்றி வருகின்றன. தற்போது, அமராவதி அணையை நோக்கி யானைகள் கூட்டம்கூட்டமாக வருகின்றன. அங்கும் நீா்ப் பற்றாக்குறை உள்ளது. மழை பெய்தால் மட்டுமே இதற்குத் தீா்வு கிடைக்கும் என்றனா்.

    • இதில் 500க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் குழந்தைகள் பங்கேற்றனர்
    • நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக நடிகர் ரஞ்சித் பங்கேற்றார்.

    திருப்பூர் மாவட்டம் உடுமலையில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி பவளக்கொடி கும்மியாட்டம் அரங்கேற்ற நிகழ்ச்சி உடுமலை குட்டை திடலில் நடைபெற்றது.

    இதில் 500க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் குழந்தைகள் பங்கேற்று உற்சாக நடனத்தினை இசைக்கேற்றார் போலும் ,பாடலுக்கு ஏற்றார் போலும் வெளிப்படுத்தினர்.

     

    நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக நடிகர் ரஞ்சித் பங்கேற்றார். தற்போதைய இளைய தலைமுறையினர் சினிமா, ஆடல் பாடல் என கவனம் செலுத்தி வரும் நிலையில் அழிந்து வரக்கூடிய இந்த பாரம்பரிய கலையினை மேற்கொள்ளும் அனைவருக்கும் நன்றி என தெரிவித்தார்.மேலும் இந்த மாதிரியான பாரம்பரிய கலையினை மேற்கொள்ளும் கலைஞர்களுக்கு தமிழக அரசு உதவிட முன்வர வேண்டும் என்றார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • அதிக அளவில் அந்நிய செலாவணியை ஈட்டித்தரும் பெருநகரமாக இருந்தாலும் கூட அதற்கான எந்திரங்களை இறக்குமதி செய்யவேண்டிய நிலையிலேயே திருப்பூர் இருக்கிறது.
    • தொழிலை முன்னெடுத்து செல்லும் முயற்சியாக ஏற்றுமதியாளர்கள் சங்கத்தினர் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

    திருப்பூா்:

    பின்னலாடை உற்பத்தியில் பல்வேறு நிலைகளான நிட்டிங், சாய ஆலை, பதப்படுத்துதல், பினிஷிங், எம்ப்ராய்டரி, பிரிண்டிங், தையல் உள்ளிட்ட செயல்பாடுகளுக்கு வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட எந்திரங்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் பிரச்சினைகளை களைய உள்நாட்டிலேயே பின்னலாடை எந்திர உதிரிபாகங்களை தயாரிக்க ஏற்றுமதியாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

    இதற்கான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் கே.எம்.சுப்பிரமணியன் கூறுகையில், திருப்பூரில் ரூ.34 ஆயிரத்து 350 கோடி பின்னலாடை ஏற்றுமதி, ரூ.30 ஆயிரம் கோடி அளவிலான உள்நாட்டு வர்த்தகம், 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உள்பட அதிக அளவில் அந்நிய செலாவணியை ஈட்டித்தரும் பெருநகரமாக இருந்தாலும் கூட அதற்கான எந்திரங்களை இறக்குமதி செய்யவேண்டிய நிலையிலேயே திருப்பூர் இருக்கிறது.

    பாதுகாப்புத்துறை மற்றும் சந்திராயன்-3 செயற்கைகோள் ஆகியவற்றின் பங்களிப்பிற்காக எந்திரங்களுக்கு தேவையான உபகரணங்கள் தயாரிப்பதற்காக, அரசு தேர்வு செய்த நகரம் கோவை ஆகும்.

    பின்னலாடை தொழில் துறைக்கு தேவையான நிட்டிங், சாய ஆலை, பதப்படுத்துதல், பினிஷிங், எம்பிராய்டரி, பிரிண்டிங், தையல் உள்ளிட்ட செயல்பாடுகளுக்கு தேவையான அனைத்து வகையான எந்திரங்கள் மற்றும் உதிரி பாகங்கள் இறக்குமதி செய்வதில் ஏற்படும் பிரச்சினைகளான எந்திரங்களின் விலை உயர்வு, அதற்கான அதிக முதலீடு, எந்திரங்கள் வந்து சேர்வதில் காலதாமதம் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளை நீக்கும் முயற்சியாகவும், முதல் கட்டமாக எந்திரங்களின் உதிரி பாகங்கள் தயாா் செய்ய கவனம் செலுத்துவதில் தொடங்கி அடுத்த கட்ட வளர்ச்சிக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றார்.

    நிட்மா சங்கத்தின் தலைவர் அகில் எஸ்.ரத்தினசாமி பேசும்போது, தொழில்துறை உள்நாட்டு வர்த்தகத்தில் இருந்து ஏற்றுமதிக்கு வளர்ச்சி அடைந்திருந்தாலும் எந்திர உதிரி பாகங்கள் வாங்குவதிலும் அதற்கான செயல்பாடுகளும் நாம் வெளிநாட்டையே எதிர்நோக்கி இருக்கும் நிலை மாறி தொழிலை முன்னெடுத்து செல்லும் முயற்சியாக ஏற்றுமதியாளர்கள் சங்கத்தினர் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றார்.

    • கருங்காலி வலசு கிராமத்தை சேர்ந்த மாணவிகள் 2 பேர் 6-ம் வகுப்பு படித்து வருகின்றனர்.
    • பள்ளி தலைமை ஆசிரியை இளமதி ஈஸ்வரி மற்றும் ஆசிரியை சித்ரா ஆகியோர் பள்ளி கழிவறையை மாணவிகள் மூலம் சுத்தம் செய்ய வைத்ததாக புகார் எழுந்தது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள கொளத்துப்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட குமாரபாளையத்தில் அரசு நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு கருங்காலி வலசு கிராமத்தை சேர்ந்த மாணவிகள் 2 பேர் 6-ம் வகுப்பு படித்து வருகின்றனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன் பள்ளி தலைமை ஆசிரியை இளமதி ஈஸ்வரி மற்றும் ஆசிரியை சித்ரா ஆகியோர் பள்ளி கழிவறையை மாணவிகள் மூலம் சுத்தம் செய்ய வைத்ததாக புகார் எழுந்தது. அது தொடர்பாக சிறுமிகள் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

    இந்த விவகாரம் திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்து ராஜ் கவனத்துக்கு சென்றது. உடனடியாக தாராபுரம் கோட்டாட்சியர் செந்தில் அரசன், தாசில்தார் கோவி ந்தசாமி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா ஆகியோரை, சம்பந்தப்பட்ட குமாரபாளையம் அரசு நடுநிலைப்பள்ளிக்கு சென்று விசாரிக்குமாறு உத்தரவிட்டார்.

    விசாரணையில் மாணவிகள் இருவரையும் பள்ளி ஆசிரியைகள் கடந்த ஒரு மாதமாக பள்ளியின் கழிவறையை சுத்தம் செய்ய வைத்தது தெரியவந்தது. இதையடுத்து சம்பந்தப்பட்ட அரசு பள்ளி ஆசிரியைகள் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்தார்.

    • தெப்ப குளத்தில் தெப்ப தேர் விழா நடந்தது.
    • தேரோட்டம் 3 நாட்கள் நடைபெற்றது.

    அவினாசி:

    திருப்பூர் மாவட்டம் அவினாசிலிங்கேசுவரர் கோவில் சித்திரை தேரோட்ட திருவிழா கடந்த 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பின்னர் பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு, 63 நாயன்மார்களுக்கு காட்சியளித்தல் நடந்தது.

    திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக தேரோட்டம் 3 நாட்கள் நடைபெற்றது. நேற்று இரவு அவினாசிலிங்கேசுவரர் கோவில் எதிரே உள்ள தெப்ப குளத்தில் தெப்ப தேர் விழா நடந்தது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் மின் ஒளியில் சந்திரசேகர் - அம்பாள் சாமிகள் சிறப்பு அலங்கார தோற்றத்தில் தெப்ப குளத்தில் வளம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

    தெப்ப தேர் விழாவை காண குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் தெப்ப குளத்தின் படிக்கட்டிலும், குளத்தின் மதில் சுவர் மீதும் அமர்ந்து கண்டுகளித்தனர்.

    • மத்திய பா.ஜ.க., அரசு கடந்த 10 ஆண்டுகளில் செய்த சாதனைகளை சொல்லி நடந்து வரும் தேர்தலில் வாக்குகளை சேகரிக்கிறோம்.
    • வாக்காளர்கள் தமிழகம் முழுவதும் விடுபட்டுள்ளார்கள்.

    திருப்பூர்:

    பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச்செயலாளரும், திருப்பூர் பாராளுமன்ற தொகுதி பா.ஜ.க., வேட்பாளருமான ஏ.பி.முருகானந்தம் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பாரதிய ஜனதா கட்சிக்கு முதல் வெற்றி குஜராத்தில் தொடங்கியுள்ளது. சூரத் தொகுதியில் பா.ஜ.க., வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். இந்த தேர்தலில் 400 இடங்களுக்கு அதிகமாகவே பா.ஜ.க. கைப்பற்றும்.

    தமிழகத்தில் பா.ஜ.க., தலைவர்கள் முதல் பிரதமர் மோடி தொடங்கி அண்ணாமலை வரை அனைவரின் சுற்றுப்பயணம் தமிழகத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 39 தொகுதிகளிலும் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசியல் புரட்சியை பா.ஜ.க., மேற்கொண்டுள்ளது. ஜூன் 4-ந்தேதி வாக்கு எண்ணிக்கை முடிவில் இது தெரியும்.

    மத்திய பா.ஜ.க., அரசு கடந்த 10 ஆண்டுகளில் செய்த சாதனைகளை சொல்லி நடந்து வரும் தேர்தலில் வாக்குகளை சேகரிக்கிறோம். தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையம் எந்த வேலையையும் செய்யவில்லை. வாக்காளர்கள் தமிழகம் முழுவதும் விடுபட்டுள்ளார்கள். இது எங்களுக்கு மிகப்பெரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. பா.ஜ.க., வாக்கு வங்கி உள்ள பகுதிகளில் இது நடந்திருக்குமோ என்ற சந்தேகம் உள்ளது. இது ஆளுங்கட்சி தலையீடாக கூட இருக்கலாம்.

    ராகுல் காந்தி- பிரியங்கா ஆகியோர் கோவிலுக்கு செல்வது தேர்தல் காலத்தில் மட்டும்தான். இந்தியா கூட்டணி என்பது ஒன்றுமில்லாத ஒன்று.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது மாவட்ட தலைவர் செந்தில்வேல் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • குரூப் 1 தேர்வில் 35-ம் இடத்தை பிடித்து வணிக வரித்துறையில் உதவி ஆணையராக பொறுப்பேற்க உள்ளார்.
    • இன்றைக்கு அதையும் கடந்து குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பித்து, கிடைக்கும் நேரங்களில் படித்து தற்போது 10-ம் இடத்தை பிடித்து உதவி ஆட்சியராக பொறுப்பேற்க உள்ளார்.

    திருப்பூர்:

    ஈரோடு மாவட்டம் நம்பியூர் சின்ன செட்டிபாளையத்தை சேர்ந்தவர் சுபாஷினி ( வயது 26). பொறியியல் பட்டதாரி. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 2 தேர்வில் வெற்றி பெற்று, கடந்த 2020-ம் ஆண்டு முதல் திருப்பூர் கூட்டுறவு துறையில் முதுநிலை ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்.

    இந்நிலையில் வேலைக்கு இடையே, தொடர்ந்து போட்டித்தேர்வுக்கான படிப்பையும் கைவிடாது படித்து இன்றைக்கு, தேர்வாணையத்தின் குரூப்-1 தேர்வில் தமிழ்நாட்டில் 49-ம் இடம்பிடித்து கூட்டுறவுத்துறையிலேயே, துணைப் பதிவாளர் பணிக்கு தேர்வாகி உள்ளார். இவரது தந்தை காளியப்பசாமி, விவசாயி. தாய் உமா மகேஸ்வரி. தம்பி, தங்கை உள்ளனர்.

    சுபாஷினி கூறும்போது, வேலைக்கு சென்று வந்த எஞ்சிய நேரத்தில் தான் படித்தேன். திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சுரேஷ் உள்ளிட்டோர் தந்த ஊக்கமும், பயிற்சியும் எனக்கு பக்கபலமாக இருந்தன. இன்றைக்கு நான் வெற்றி பெற்றதை பார்த்து என் தங்கை இன்றைக்கு போட்டித்தேர்வுக்கு தீவிரமாக படித்து வருகிறாள்." இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    உடுமலையை சேர்ந்தவர் இந்திரா பிரியதர்ஷினி (28). பிஎஸ்சி., வேளாண்மை படித்தவர். திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தில் வேளாண்மை அலுவலராக கடந்த 2019-ம் ஆண்டு பணிக்கு சேர்ந்தவர். தற்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றுகிறார்.

    தொடர்ந்து குரூப் 1 தேர்வில் 35-ம் இடத்தை பிடித்து வணிக வரித்துறையில் உதவி ஆணையராக பொறுப்பேற்க உள்ளார். இந்திரா பிரியதர்ஷினி கூறும்போது, "வேளாண்மை அலுவலராக இருந்ததால், பல்வேறு பகுதிகளில் பணியிடங்களுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பவே தாமதமாகும். ஆனால் தொடர்ந்து குரூப் 1 தேர்வுக்கு கிடைக்கும் நேரங்களில் எல்லாம் படித்து வந்தேன். இன்றைக்கு வெற்றி பெற்றுள்ளேன் என்றார். இவரது தந்தை கேசவன், தொழில் செய்து வருகிறார். தாய் ரேகாதேவி செஞ்சேரிப்புத்தூர் அரசுப் பள்ளி ஆசிரியையாக உள்ளார்.

    தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 4-ல் வெற்றிபெற்று இளநிலை உதவியாளராக கடந்த 2020-ம் ஆண்டு பணிக்கு சேர்ந்தவர் நித்யா (26). பிஎஸ்சி., வேளாண்மை படித்தவர். அரசு வேலை கிடைத்துவிட்டது என தேங்கிவிடாமல், தொடர்ந்து படித்து வேளாண்மை அலுவலராக குரூப் 2 தேர்வில் தேர்ச்சி பெற்று, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றுகிறார்.

    இன்றைக்கு அதையும் கடந்து குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பித்து, கிடைக்கும் நேரங்களில் படித்து தற்போது 10-ம் இடத்தை பிடித்து உதவி ஆட்சியராக பொறுப்பேற்க உள்ளார். இவர் ஈரோடு மாவட்டம் பெருந்துறை துடுப்பதி கிராமத்தை சேர்ந்த விவசாயி பழனிசாமி-பழனியம்மாளின் மகள் ஆவார்.

    3 பேரும் கூறும்போது, தமிழ்நாட்டில் குரூப் 1-ல் 95 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் 3 பேர் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வருவது எங்களுக்கு ஆச்சர்யம். அரசு வேலை கிடைத்த பின்பும், மனம் தளராமல் தொடர்ந்து படித்தோம். வாழ்க்கையின் எந்த இடத்திலும் நாங்கள் தேங்கவில்லை. எங்களின் அடுத்தடுத்த முயற்சிகளே தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 1- வெற்றிக்கு மிக முக்கிய காரணம் என்றனர்.

    • மாரியம்மன் சூலத்தேவர் திருக்கல்யாண வைபவம் நேற்று நடந்தது.
    • தேரோட்டம் இன்று மாலை 4.15 மணிக்கு தொடங்குகிறது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை மாரியம்மன் கோவில் சித்திரை தேரோட்டம் இன்று மாலை விமரிசையாக நடைபெறுகிறது.

    கடந்த 9-ந்தேதி பூச்சொரிதல் மற்றும் நோம்பு சாட்டுதலுடன் தொடங்கிய இந்த விழாவில் அடுத்தடுத்த நிகழ்வுகளாக கொடியேற்றம், பூவோடு, மாவிளக்கு எடுத்தல், அலகு குத்துதல், கண்மலர் செலுத்துதல், பறவை காவடி தீர்த்தம், பால்குடம் எடுத்தல் நடைபெற்றது.

    பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து பயபக்தியுடன் நேர்த்திக் கடன்களை மாரியம்மனுக்கு செலுத்தினார்கள்.

    நாள்தோறும் இரவு 7 மணி அளவில் மாரியம்மன் சூலத் தேவருடன் வெவ்வேறு வாகனங்களில் உடுமலை நகருக்குள் உலா வந்து பக்தர்களுக்கு அருள் புரிந்தார். தேரோட்டத்திற்கு முந்தைய முக்கிய நிகழ்வாக மாரியம்மன் சூலத்தேவர் திருக்கல்யாண வைபவம் நேற்று கோவில் வளாகத்தில் கோலாகலமாக நடைபெற்றது.

    முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று (வியாழக்கிழமை) மாலை 4.15 மணியளவில் கோவில் வளாகத்தில் தொடங்குகிறது. தேரானாது உடுமலை-பொள்ளாச்சி சாலை, தளிரோடு, சதாசிவம் வீதி, தலைகொண்ட அம்மன் கோவில், தங்கம்மாள் ஓடை வழியாக பொள்ளாச்சி-உடுமலையை சாலையை அடைந்து கோவிலை வந்தடைகிறது.

    தேரோட்டத்தை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் குவிந்து ள்ளனர். இதை யடுத்து அங்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

    • தனியார் பஸ் டிரைவர் நடுரோட்டில் நிறுத்தி ஆட்களை ஏற்றினார்.
    • போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்களை எச்சரித்து பஸ்சை எடுத்து செல்லும்படி கூறினர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மத்திய பஸ் நிலையத்தில் இருந்து திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதேப்போல் ஈரோடு, கோபி, சத்தியமங்கலம், மேட்டுப்பாளையம், கோவை போன்ற ஊர்களுக்கும் பஸ்கள் சென்று வருகின்றன. இதனால் மத்திய பஸ் நிலையத்தில் எப்போதும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும்.

    இந்தநிலையில் இன்று காலை திருப்பூரில் இருந்து சத்தியமங்கலம் வழியாக பண்ணாரிக்கு செல்லும் தனியார் பஸ் குறிப்பிட்ட நேரத்தில் செல்லாமல் பஸ் நிலையத்தில் நின்று பயணிகளை ஏற்றி வந்தனர்.

    இதனை பார்த்த அடுத்து செல்ல வேண்டிய அரசு பஸ் டிரைவர்- கண்டக்டர் பஸ்சை எடுக்கும்படி கூறினர். ஆனால் தனியார் பஸ் டிரைவர் நடுரோட்டில் நிறுத்தி ஆட்களை ஏற்றினார். இதனால் அரசு மற்றும் தனியார் பஸ் டிரைவர்- கண்டக்டர்கள் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

    சுமார் அரை மணி நேரத்துக்கு மேலாக நடுரோட்டில் பஸ்சை நிறுத்தி மோதலில் ஈடுபட்டதால் மற்ற பஸ்கள் பஸ் நிலையத்திற்குள் வர முடியாமல் நீண்ட வரிசையில் நின்றது. இதனால் பயணிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளானார்கள்.

    தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்களை எச்சரித்து பஸ்சை எடுத்து செல்லும்படி கூறினர். இதனையடுத்து வாக்குவாதத்தை கைவிட்டு பஸ்சை எடுத்துச்சென்றனர். இதனால் மத்திய பஸ் நிலையத்தில் இன்று காலை பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

    • கிராம நிர்வாக அதிகாரி தற்கொலை செய்த சம்பவம் உடுமலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை கணக்கம்பாளையம் கிராம நிர்வாக அலுவலராக கருப்புச்சாமி என்பவர் பணியாற்றி வந்தார். இவரது சொந்த ஊர் கோமங்கலம் அடுத்துள்ள கூலநாய்க்கன்பட்டி.

    இந்தநிலையில் இன்று காலை கருப்புச்சாமி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த தகவல் அறிந்ததும் உடுமலை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

    மன உளைச்சல் காரணமாக கருப்புச்சாமி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கிராம நிர்வாக அதிகாரி தற்கொலை செய்த சம்பவம் உடுமலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • நேற்று முன்தினம் பெரிய தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது.
    • இன்று காலை அம்மன் தேட்ரோட்டம் நடைபெற்றது.

    அவினாசி:

    திருப்பூர் மாவட்டம் அவினாசியில் புகழ்பெற்ற கருணாம்பிகை உடனமர் அவினாசிலிங்கேசுவரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் தேர்த்திருவிழா நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டும் கடந்த 14-ந்தேதி கொடியேற்றத்துடன் தேர்த்திருவிழா தொடங்கியது.

    நேற்று முன்தினம் பெரிய தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. பின்னர் அந்த தேர் வடக்கு ரத வீதி சந்திப்பில் நிறுத்தப்பட்டது.

    இதையடுத்து நேற்று 2-வது நாள் தேரோட்டம் நடந்தது. காலை 10 மணி அளவில் மீண்டும் திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டு வடக்கு ரத வீதி, கிழக்குரத வீதி, கடைவீதி வழியாக மதியம் 2 மணி அளவில் நிலைக்கு வந்து சேர்ந்தது. அப்போது பக்தர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். இதையடுத்து பக்தர்கள் ரதத்தின் மீது ஏறி சென்று சாமி தரிசனம் செய்தனர்.

    இன்று (செவ்வாய்க்கிழமை) காலை அம்மன் தேட்ரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்தனர். முன்னதாக கருணாம்பிகை அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மேலும் சிறிய தேர் வடம் பிடித்து நான்கு ரத வீதி வழியாக வலம் வந்து நிலையை அடைகிறது. இரவு 10 மணிக்கு வண்டித்தாரை நிகழ்ச்சி நடக்கிறது.

    நாளை (புதன்கிழமை) பரிவேட்டையும், 25-ந்தேதி தெப்பத்தேர் விழாவும், 26-ந்தேதி நடராஜ பெருமாள் மகா தரிசனம் நடக்கிறது. 27-ந்தேதி மஞ்சள் நீர் விழாவுடன் தேர்த்திருவிழா நிறைவுபெறுகிறது.

    ×