search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    • இ-பாஸ் நடைமுறைகளை வகுப்பது குறித்து உயர் அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.
    • ஊட்டி-கொடைக்கானலுக்கு செல்ல ஆன்லைனில் விண்ணப்பிக்கும் நடைமுறை கொண்டு வரப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சென்னை:

    ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு 7-ந்தேதி முதல் இ-பாஸ் கட்டாயம் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

    இது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை ஓரிரு நாளில் வெளியிட தமிழக அரசு ஏற்பாடு செய்து வருகிறது.

    இதற்காக வருவாய் துறை, சுற்றுலா, வனத்துறை, காவல்துறை, போக்குவரத்து மாவட்ட நிர்வாகம் உள்ளிட்ட துறைகளை ஒருங்கிணைத்து இ-பாஸ் நடைமுறைகளை வகுப்பது குறித்து உயர் அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

    கொரோனா காலத்தில் ஒரு மாவட்டத்தில் இருந்து இன்னொரு மாவட்டத்துக்கு செல்வதற்கு இ-பாஸ் விண்ணப்பித்தது போன்று ஊட்டி-கொடைக்கானலுக்கு செல்ல ஆன்லைனில் விண்ணப்பிக்கும் நடைமுறை கொண்டு வரப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    தலைமைச் செயலாளர் வழிகாட்டுதல் அடிப்படையில் அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் கண்காணிப்பில் வருவாய்த்துறை மூலமாக இ-பாஸ் நடைமுறைகள் விரைவில் வெளியிடப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • கடந்த சனிக்கிழமை ரேபரேலி, அமேதி தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரை தேர்வு செய்ய காங்கிரஸ் தேர்தல் குழுவின் ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • வயநாடு தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தி மீண்டும் அமேதியில் மத்திய மந்திரி ஸ்மிருதிஇரானியை எதிர்த்து களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    புதுடெல்லி:

    உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதி காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு மிக்க கோட்டையாக திகழும் தொகுதி ஆகும்.

    1951-ம் ஆண்டு தேர்தல் முதல் இந்த தொகுதியை காங்கிரஸ் கட்சி தனது வசம் வைத்திருக்கிறது. இந்திய அரசியலில் எத்தனையோ அரசியல் மாற்றங்களும், புயல்களும் வீசினாலும் இந்த தொகுதி காங்கிரசுக்கு விசுவாசமிக்க தொகுதியாக உள்ளது.

    மறைந்த முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி ரேபரேலி தொகுதியில் இருந்து 3 முறை பாராளுமன்றத்துக்கு எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவரது கணவர் பெரோஸ் 1952-ம் ஆண்டு முதல் 1957-ம் ஆண்டு வரை இந்த தொகுதியில் எம்.பி.யாக இருந்து உள்ளார்.

    இவர்களை தொடர்ந்து ரேபரேலி தொகுதியில் சோனியா அடுத்தடுத்து போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் அந்த தொகுதியில் 4 தடவை தொடர்ந்து எம்.பி.யாக இருந்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    தற்போது சோனியா பாராளுமன்ற மேல்சபை எம்.பி.யாக தேர்வாகி உள்ளார். ரேபரேலி தொகுதியில் போட்டியிடவில்லை என்பதை அவர் கடந்த ஆண்டே அறிவித்து விட்டார். இதனால் ரேபரேலி தொகுதியில் யார் போட்டியிடுவார் என்பதில் எதிர்பார்ப்பு நிலவியது.

    இந்திரா, சோனியாவை தொடர்ந்து பிரியங்காவை அந்த தொகுதியில் களம் இறக்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அனைவரும் விருப்பம் தெரிவித்தனர். ரேபரேலி தொகுதியில் இருந்தும் பிரியங்காவை வரவேற்று கடிதங்கள் அனுப்பப்பட்டன. எனவே பிரியங்கா ரேபரேலி காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்தது.

    கடந்த சனிக்கிழமை ரேபரேலி, அமேதி தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரை தேர்வு செய்ய காங்கிரஸ் தேர்தல் குழுவின் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில் அந்த 2 தொகுதிகளுக்கும் வேட்பாளரை அறிவிக்கும் அதிகாரம் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வசம் ஒப்படைக்கப்பட்டது.

    இந்த 2 தொகுதிகளிலும் மே 20-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வருகிற 3-ந்தேதி மனுதாக்கலுக்கு கடைசி நாளாகும்.


    எனவே ஓரிரு நாளில் ரேபரேலி தொகுதி வேட்பாளராக பிரியங்கா அறிவிக்கப்படலாம் என்று எதிர் பார்க்கப்பட்டது. இந்த நிலையில் திடீர் திருப்பமாக பிரியங்கா பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பம் இல்லை என்று கூறி விட்டதாக தெரிய வந்துள்ளது. தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கி இருந்து பிரசார பணிகளை மட்டும் மேற்கொள்ள அவர் முடிவு செய்திருப்பதாக தெரிய வந்துள்ளது.

    இதையடுத்து ரேபரேலி தொகுதியில் யார் போட்டியிடுவார் என்ற கேள்விக்குறி எழுந்தது. அதற்கு விடை அளிக்கும் வகையில் இன்று காலை காங்கிரஸ் வட்டாரங்களில் இருந்து பரபரப்பு தகவல் வெளியானது. அதன்படி ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ராகுல் களம் இறக்கப்படுவார் என்று தெரிகிறது.

    இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இன்று வெளியிட உள்ளார். இந்த திடீர் திருப்பத்தால் ரேபரேலி தொகுதி காங்கிரஸ் நிர்வாகிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    அந்த தொகுதியில் ரோடு ஷோ நடத்தி ராகுல் வேட்பு மனு தாக்கல் செய்வார் என்று தெரிகிறது.

    வயநாடு தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தி மீண்டும் அமேதியில் மத்திய மந்திரி ஸ்மிருதிஇரானியை எதிர்த்து களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதே சமயத்தில் அமேதி தொகுதியில் ஸ்மிருதிஇரானியை எதிர்த்து வெற்றி பெற இயலுமா? என்பதிலும் ராகுலுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    இதனால் அவர் அமேதியில் களம் இறங்க சற்று தயக்கத்துடன் இருந்து வந்தார். அதை உறுதிபடுத்தும் வகையில் அமேதியில் போட்டியிட தயாராக இருப்பதாக பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேரா அடிக்கடி சொல்லி வந்தார்.

    ஆனால் ராபர்ட் வதேராவுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்பட மாட்டாது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. அவருக்கு வாய்ப்பு கொடுத்தால் அது மேலும் சர்ச்சையை உருவாக்கி விடும் என்று சோனியா குடும்பத்தினர் கருதுகிறார்கள்.

    இந்த நிலையில் அமேதி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் புதுமுகம் களம் இறங்குவார் என்று எதிர் பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ஷீலா கவுலின் பேரனுக்கு வாய்ப்பு கொடுக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

    ஷீலா கவுலும் சோனியா குடும்பத்து உறவினர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • உடனடியாக பணம் கொண்டு வந்த 2 வாலிபர்களையும் போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
    • வாலிபர்கள் கொண்டு வந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் வாலிபர்களை கைது செய்தனர்.

    தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில் இருந்து நெல்லூருக்கு வந்தே பாரத் ரெயில் நேற்று இரவு வந்து கொண்டிருந்தது. ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் ரெயில் பெட்டிகளில் பயணிகளின் உடைமைகளை சோதனை செய்தனர்.

    2 வாலிபர்கள் வைத்திருந்த சூட்கேஸை போலீசார் சோதனை செய்தபோது அதில் கட்டு கட்டாக பணம் இருந்தது. உடனடியாக பணம் கொண்டு வந்த 2 வாலிபர்களையும் போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். பணத்தை எண்ணிப் பார்த்ததில் ரூ.50 லட்சம் கொண்டு வந்தது தெரிய வந்தது.

    விசாரணையில் ஆந்திர மாநிலம் ஆத்மகூரு சட்டமன்றத் தொகுதியில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி சார்பில் எம்.எல்.ஏ. வேட்பாளராக போட்டியிடும் மேகவதி விக்ரம் ரெட்டிக்கு சொந்தமான பணம் என தெரிவித்தனர்.

    இதுகுறித்து வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். வருமானவரித்துறை அதிகாரிகள் போலீஸ் நிலையத்திற்கு வந்து ரூ.50 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.

    வாலிபர்கள் கொண்டு வந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் வாலிபர்களை கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா எம்.பி. மீது பாலியல் புகார் கூறப்பட்டது.
    • இதுகுறித்து விசாரிக்க எஸ்ஐடி குழு அமைத்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

    புதுடெல்லி:

    முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், முன்னாள் மந்திரி ரேவண்ணாவின் மகனுமான பிரஜ்வல் ரேவண்ணா எம்.பி. மீது பாலியல் புகார் கூறப்பட்டது. இதுதொடர்பான ஆபாச வீடியோக்கள் வெளியாகின. இதுகுறித்து விசாரிக்க எஸ்ஐடி குழு அமைத்து மாநில அரசு உத்தரவிட்ட நிலையில், அவரை கட்சியிலிருந்து நீக்க முடிவுசெய்துள்ளதாக குமாரசாமி தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், உள்துறை மந்திரி அமித் ஷா இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    நாட்டின் மாத்ரு சக்தியுடன் நாங்கள் நிற்கிறோம் என்பதில் பா.ஜ.க.வின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது.

    காங்கிரசிடம் நான் கேட்க விரும்புவது அங்கு யாருடைய ஆட்சி நடைபெறுகிறது? காங்கிரஸ் கட்சியின் ஆட்சி. அவர்கள் ஏன் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை?

    இது மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை என்பதால் நாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டியதில்லை. மாநில அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    விசாரணைக்கு நாங்கள் ஆதரவாக உள்ளோம் என எங்கள் கூட்டாளியான மதசார்பற்ற ஜனதா தளம் அறிவித்துள்ளது. இன்று அவர்களது குழு கூட்டம் கூடி அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்தார்.

    • ஒவ்வொரு வார்டிலும் எத்தனை ஓட்டுகள் விழும் என்று ஆய்வு செய்ய வேண்டும்.
    • தற்போது வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.

    கோவை:

    கோவை பாராளுமன்ற தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபட்ட பா.ஜ.க. நிர்வாகிகள், தொண்டர்களுடனான கலந்துரையாடல் கூட்டம் கோவையில் நடந்தது. இந்த கூட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 500 நாட்களே உள்ளன. நாம் அனைவரும் களத்தில் முன்கூட்டியே பணிபுரிய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளோம். இவை அனைத்திற்கும் அடிப்படை களப்பணி தேவை. நம் தொண்டர்கள் ஒவ்வொருவரும் களத்தில் இருக்க வேண்டும். வாக்காளர் பட்டியலை சரிபார்க்க வேண்டும். விடுபட்டவர்களை இணைக்க வேண்டும். முகவரி மாறியவர்களை கண்டறிந்து பட்டியலில் சேர்க்க வேண்டும். இறந்தவர்களை நீக்க வேண்டும். ஓட்டு இல்லாதவர்களுக்கு ஓட்டு பெற்றுத்தர வேண்டும். பூத் லெவல் கமிட்டிகளை பலமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    ஒவ்வொரு வார்டிலும் எத்தனை ஓட்டுகள் விழும் என்று ஆய்வு செய்ய வேண்டும். ஆதரவாளர்கள், நடுநிலையாளர்கள், எதிர்பார்ப்பாளர்கள் என்று மூன்று விதமாக பிரித்து களப்பணி மேற்கொள்ள வேண்டும். பூத் கமிட்டிகளை வலுப்படுத்துவது அவசியம். மத்திய அரசு திட்டங்கள், அனைத்து தரப்பு மக்களிடமும் போய் சேர வேண்டும். ஒவ்வொரு பகுதிக்கும் பூத் கமிட்டி பொறுப்பாளர்களை நியமிக்க வேண்டும். ஒரு கட்சியின் வளர்ச்சி என்பது அடிப்படை கட்டமைப்பை மேம்படுத்துவதில் தான் உள்ளது. அதை கட்சி நிர்வாகிகள் ஒவ்வொருவரும் கற்றுக் கொள்வது அவசியம் ஆகும்.

    தற்போது வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இதில் கோவை நிர்வாகிகளும் பங்கேற்று பிரசாரம் மேற்கொள்ள வேண்டும். இதன் வாயிலாக அங்கு களப்பணி எப்படி மேற்கொள்ளப்படுகிறது. எந்தெந்த நடைமுறைகளை, எப்படியெல்லாம் பின்பற்றுகின்றனர் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தங்கம் விலை கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து 6 ஆயிரத்து 750 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
    • வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது.

    சென்னை:

    தங்கம் விலை கடந்த சில வாரமாக ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. நேற்று தங்கம் விலை சவரன் ரூ.53,920-க்கு விற்கப்பட்டது.

    இந்நிலையில் சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து 54 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து 6 ஆயிரத்து 750 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 50 காசுகள் குறைந்து 87 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    • சுமார் 3 மணி நேரத்திற்கு மேல் விட்டு விட்டு பெய்த சாரல் மழை காரணமாக கடுமையான வெப்பத்தில் தவித்த மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
    • பல்வேறு பகுதிகளிலும் மாலை நேரங்களில் வெயிலின் தாக்கம் அடியோடு குறைந்து குளிர்ந்த காற்று வீசியது.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் கடந்த சில வாரங்களாக கோடை வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது.

    சுமார் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் கொளுத்திய நிலையில் பொதுமக்கள் பகல் பொழுதில் வெளியே வரவே மிகுந்த அச்சம் கொண்டனர்.

    வயதான முதியவர்கள், குழந்தைகள் கோடை வெயிலின் தாக்கம் காரணமாக மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.

    பல்வேறு இடங்களில் மலைப்பகுதிகளில் காட்டுத் தீயும் பற்றி எரிந்து வந்தது. இந்நிலையில் நேற்று இரவு சுமார் 9 மணியளவில் குளிர்ந்த காற்று வீசத் தொடங்கிய பின்னர் சாரல் மழையாக பெய்ய தொடங்கியது.

    சுமார் 3 மணி நேரத்திற்கு மேல் விட்டு விட்டு பெய்த சாரல் மழை காரணமாக கடுமையான வெப்பத்தில் தவித்த மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். தொடர்ந்து இது போல் மழை பெய்து வெயிலின் தாக்கம் குறைய வேண்டும் என்று எதிர்நோக்கி உள்ளனர்.

    தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மாலை நேரங்களில் வெயிலின் தாக்கம் அடியோடு குறைந்து குளிர்ந்த காற்று வீசியது. ஆனால் மழை பெய்யவில்லை. மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் அடுத்து வரும் நாட்களில் மழை பெய்யும் என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 115.15 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 105 கன அடி நீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 1754 மி.கன அடியாக உள்ளது. வைகை அணையின் நீர்மட்டம் 57.22 அடி. நீர் திறப்பு 72 கன அடி. இருப்பு 3092 மி.கன அடி. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 40.50 அடியாகவும், சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 102.53 அடியாகவும் உள்ளது.

    பெரியாறு 3.2, போடி 10.2 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    • சந்திரபாபு நாயுடு தனது தேர்தல் பிரசாரத்தை முடித்ததும் அவரது வாகனம் புறப்பட இருந்தது.
    • சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    திருப்பதி:

    ஆந்திர முன்னாள் முதல் மந்திரியும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு டான் சபாவில் வாகனத்தில் இருந்தபடி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

    இதில் ஆயிரக்கணக்கான கட்சித் தொண்டர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    சந்திரபாபு நாயுடு தனது தேர்தல் பிரசாரத்தை முடித்ததும் அவரது வாகனம் புறப்பட இருந்தது.

    அப்போது மர்ம நபர்கள் அப்பகுதியில் வைக்கப்பட்டு இருந்த தடுப்புகளை தாண்டி திடீரென சந்திரபாபு நாயுடுவின் பிரசார வாகனத்தில் மீது ஏறினர்.

    இதனைக்கண்ட பாதுகாப்பு படையினர் அவர்களை தடுத்து நிறுத்தி விரட்டி அடித்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • வட கர்நாடகாவின் 14 பாராளுமன்ற தொகுதிகளுக்கு மே 7-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
    • திருமண அழைப்பிதழில் பிரதமர் மோடியின் பெயரை சேர்த்த மணமகன் சிக்கலில் தவிக்கிறார்.

    பெங்களூரு:

    கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 பாராளுமன்ற தொகுதிகளில் 14 தொகுதிகளுக்குதான் கடந்த 26-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. வட கர்நாடகாவின் 14 பாராளுமன்ற தொகுதிகளுக்கு மே 7-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

    இந்நிலையில், கர்நாடகாவின் தட்சிண கன்னடா மாவட்டத்திற்கு உட்பட்ட புத்தூர் தாலுகாவை சேர்ந்த உப்பினங்கடி போலீசாருக்கு புகார் ஒன்று வந்தது. இதில் சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட மணமகன் ஒருவர் தேர்தல் நன்னடத்தை விதிகளுக்கு எதிராக நடந்து கொண்டார் என சர்ச்சை எழுந்தது.

    பிரதமர் மோடியை மீண்டும் தேர்ந்தெடுப்பதே தம்பதிக்கு நீங்கள் அளிக்கும் சிறந்த பரிசாக இருக்கும் என்ற வரியை திருமண அழைப்பிதழில் இடம்பெறச் செய்திருந்தார். இதையடுத்து, தேர்தல் ஆணையத்திடம் மணமகன் உறவினர் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

    இதனையடுத்து, தேர்தல் ஆணைய அதிகாரிகள் மணமகனின் வீட்டுக்கு நேரில் சென்றுள்ளனர். அப்போது அவர்களிடம், தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னரே, மார்ச் 1-ம் தேதி திருமண வரவேற்பிதழ் அச்சடிக்கப்பட்டது. அந்த வரியானது பிரதமர் மோடி மற்றும் நாட்டின் மீது கொண்ட அன்பால் சேர்க்கப்பட்டது என விளக்கம் அளித்திருக்கிறார்.

    அந்நபருக்கு கடந்த 18-ம் தேதி திருமணம் நடந்தது. அவர் விளக்கம் அளித்தபோதும் கடந்த 26-ம் தேதி போலீசில் தேர்தல் ஆணையம் புகார் ஒன்றை அளித்தது. இதனை தொடர்ந்து எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது. திருமண அழைப்பிதழை அச்சடித்த உரிமையாளரிடம் தேர்தல் ஆணையமும், போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வேதாரண்யத்தில் உள்ள உப்பு சத்தியாகிரக நினைவு கட்டிடத்தில் இருந்து பேரணி புறப்பட்டது.
    • உப்பு சத்தியாகிரக நினைவு ஸ்தூபியில் உப்பு அள்ளி வந்தே மாதரம் என முழக்கமிட்டனர்.

    வேதாரணயம்:

    இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் திருப்புமுனை ஏற்படுத்திய வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக 93-வது நினைவு பேரணி திருச்சியில் உப்பு சத்தியாகிரக ராஜன் நினைவு இல்லம் அருகே இருந்து உப்பு சத்தியகிரக யாத்திரை கமிட்டி தலைவர் சக்திசெல்வ கணபதி தலைமையில் தொடங்கியது.

    அந்த பேரணி கல்லணை, திருக்காட்டுப்பள்ளி, திருவையாறு , தஞ்சை, பாபநாசம், ஆலங்குடி மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி தகட்டூர் ஆயக்காரன்புலம், கருப்பம்புலம் வழியாக நேற்று வேதாரண்யத்திற்கு வந்தடைந்தது.

    வேதாரண்யம் வடக்கு வீதியில் உள்ள உப்பு சத்தியாகிரக நினைவு கட்டிடத்தில் யாத்திரை குழுவினர் உபவாசம் (உண்ணாவிரதம்) இருந்தனர்.

    இன்று வேதாரண்யத்தில் உள்ள உப்பு சத்தியாகிரக நினைவு கட்டிடத்தில் இருந்து பேரணி புறப்பட்டது.

    வேதாரண்யம் வடக்கு வீதி உப்பு சத்தியாகிரக நினைவு கட்டிடத்திலிருந்து பாதயாத்திரையாக சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் உள்ள அகஸ்தியன்பள்ளிக்கு நடந்து சென்றனர்.

    தொடர்ந்து உப்பு சத்தியாகிரக நினைவு ஸ்தூபியில் உப்பு அள்ளி வந்தே மாதரம் என முழக்கமிட்டனர். பின்னர் உப்பு சத்தியாகிரக நினைவு நினைவு ஸ்தூபியில் மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தி தேசபக்தி பாடல்களை பாடினர். இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வ பெருந்தகை, முன்னாள் தலைவர் தங்கபாலு, முன்னாள் எம்.பி. ராஜேந்திரன், சுதந்திரப் போராட்ட தியாகி சர்தார் பேரன் வேதரத்தினம், கேடிலியப்பன்உள்ளிட்ட நூற்றுக்கணக்கான காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    • தனது ஆசையை தனது கணவரிடம் கூற இந்த வயதில் தாலி கட்டி என்ன செய்யப் போகிறோம் எனக் கூறினார்.
    • விடாப்பிடியாக மூதாட்டி தனது ஆசையை நிறைவேற்றியே தீர வேண்டும் என அடம்பிடித்தார்.

    தெலுங்கானா மாநிலம் மாவட்டம் மகபூபாபாத் தாண்டா கிராமத்தைச் சேர்ந்தவர் சமீதா நாயக் (வயது 80). இவரது மனைவி கோகுலத் லாலி (70).

    தம்பதியினர் கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பாக காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

    அப்போது காதல் வயப்பட்ட இருவரும் பெற்றோரின் கடும் எதிர்ப்பை தாண்டி திருமணம் செய்து கொண்டனர். ஆனால் அவர்களது பெற்றோர் அவர்களை சேர்த்துக் கொள்ளவில்லை. இருவரும் அந்த காலத்தில் கந்தர்வ முறைப்படி மாலை மாற்றி மட்டும் திருமணம் செய்து கொண்டு ஒன்றாக வாழ்ந்து வந்தனர்.

    காலப்போக்கில் கடுமையாக உழைத்து மனைவியை காப்பாற்றி வந்த நாயக் அதன் பிறகு மகன்கள், மகள்களுக்கு, திருமணம் செய்து வைத்தார்.

    இப்படியே காலம் உருண்டோட குடும்பம் பேரன், பேத்திகள் என பெரிதாகி விட்டது. 60 ஆண்டுகள் ஆனாலும் தனது கணவர் தனக்கு தாலி கட்டவில்லையே என்ற ஏக்கம் கோகுலத் லாலிக்கு ஏற்பட்டது.

    தனது ஆசையை தனது கணவரிடம் கூற இந்த வயதில் தாலி கட்டி என்ன செய்யப் போகிறோம் எனக் கூறினார்.

    ஆனாலும் விடாப்பிடியாக மூதாட்டி தனது ஆசையை நிறைவேற்றியே தீர வேண்டும் என அடம்பிடித்தார்.

    இதையடுத்து தனது பிள்ளைகளிடமும் பேரன், பேத்திகளிடமும் கூற அவர்களும் மகிழ்ச்சியுடன் இதனை ஏற்றுக்கொண்டனர். தொடர்ந்து உறவினர்கள் புடை சூழ திருமணம் நடந்தது. 60 ஆண்டுகளாக தன்னுடன் மனைவியாக வாழ்ந்த மூதாட்டிக்கு உற்றார் உறவினர் மட்டுமல்லாது தான் பெற்ற பிள்ளைகள், பேரன், பேத்திகள் முன்னிலையில் கை நடுங்கியபடி முதியவர் தாலி கட்டினார்.

    அப்போது மணப்பெண் அலங்காரத்தில் இருந்த மூதாட்டி வெட்கத்தில் தலை குனிந்தார்.

    தொடர்ந்து அக்கினியை வலம் வந்து தனது மனைவியாக ஏற்றுக்கொண்டார்.

    தொடர்ந்து அம்மி மிதித்து அருந்ததி பார்த்து பாரம்பரிய முறைப்படி திருமணம் நடைபெற்றது.

    இதில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு தம்பதியை வாழ்த்தினர்.

    அவர்களிடம் மகன், மகள்கள், பேரன், பேத்திகள் ஆசிபெற்றனர்.

    • தமிழ்நாட்டில் ஆட்சிப் பொறுப்பேற்ற காலங்களில் எல்லாம் தொழிலாளர்களின் நலம் நாடிப் பல்வேறு திட்டங்களை உருவாக்கிச் செயல்படுத்தி வருகிறது.
    • நமது திராவிட மாடல் அரசு பொறுப்பேற்றது முதல் தொழிலாளர்களின் தோழனாக பல்வேறு புதிய திட்டங்களைக் கடந்த மூன்றாண்டுகளில் நிறைவேற்றி வருகிறோம்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள மே தின வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-

    தொழிலாளர் சமுதாயம் 8 மணி வேலை, முறையான ஊதியம் ஆகியவற்றை வலியுறுத்தி ரத்தம் சிந்திப் போராடி, உயிர்ப் பலி தந்து தொழிலாளர் சமுதாயம் பெற்ற உரிமை வரலாற்றை நினைவுபடுத்தும் நாள் தான் மே நாள்! திராவிட முன்னேற்றக் கழகம், தொழிலாளர்களை உயிராக மதிக்கும் இயக்கம்.

    தமிழ்நாட்டில் ஆட்சிப் பொறுப்பேற்ற காலங்களில் எல்லாம் தொழிலாளர்களின் நலம் நாடிப் பல்வேறு திட்டங்களை உருவாக்கிச் செயல்படுத்தி வருகிறது.

    நமது திராவிட மாடல் அரசு பொறுப்பேற்றது முதல் தொழிலாளர்களின் தோழனாக பல்வேறு புதிய திட்டங்களைக் கடந்த மூன்றாண்டுகளில் நிறைவேற்றி வருகிறோம்.

    கடைகள் மற்றும் நிறுவனங்களில் அனைத்துப் பணியாளர்களும் அமர்வதற்கு, பணிபுரியும் இடங்களில் இருக்கை வசதிகள் ஏற்படுத்தித் தருதல் குடிநீர், கழிப்பிடம், ஓய்வு அறை, உணவருந்தும் அறை மற்றும் முதலுதவி வசதிகள் ஆகியவற்றை உறுதி செய்யும் வகையில் 1947 ஆம் ஆண்டைய தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டு தொழிலாளர் நலன்கள் இந்த அரசினால் பாதுகாக்கப்பட்டுள்ளன.

    தொழிலாளர்கள் நலனில் முழு அக்கறை செலுத்தி தொழிலாளர்களையும், அவர்களின் குடும்பங்களையும் காத்து வரும் திராவிட மாடல் அரசின் சார்பில் தொழிலாளர் சமுதாயம் நல வாழ்விலும், பொருளாதார மேம்பாட்டிலும் முன்னேற்றங்கள் பல கண்டு உயர்ந்திட என் நெஞ்சம் நிறைந்த "மே" தின நல்வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    ×