search icon
என் மலர்tooltip icon

    பீகார்

    • பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.
    • அரசியல் கட்சி தலைவர்கள், திரைபிரபலங்கள் என பலரும் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.

    பாராளுமன்ற தேர்தலில் 5-ம் கட்ட வாக்குப்பதிவு 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளில் நடந்து வருகிறது.

    5-ம் கட்டமாக இன்று நடைபெற்று வரும் தேர்தலில் உத்தரபிரதேசத்தில் 14, மகாராஷ்டிராவில் 13, மேற்கு வங்கத்தில் 7, பீகாா், ஒடிசாவில் தலா 5, ஜார்க்கண்டில் 3, ஜம்மு-காஷ்மீா் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களில் தலா ஒரு தொகுதி அடங்கி உள்ளன. இந்த தொகுதிகளில் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதனால் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோல் அரசியல் கட்சி தலைவர்கள், திரைபிரபலங்கள் என பலரும் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.

    இந்த நிலையில், பிற்பகல் 1 மணி நிலவரப்படி 5-ம் கட்ட தேர்தலில் 36.73 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

    பீகார் - 34.62 சதவீதம்

    மகாராஷ்டிரா- 27.78 சதவீதம்

    மேற்கு வங்காளம்- 48.41 சதவீதம்

    ஒடிசா - 35.31 சதவீதம்

    ஜார்கண்ட்- 41.89 சதவீதம்

    ஜம்மு காஷ்மீர்- 34.79 சதவீதம்

    லடாக்- 52.02 சதவீதம்

    உத்தரபிரதேசம்- 38.55 சதவீதம்


    • பீகாரில் போலீஸ் கஸ்டடியில் இருந்த கணவன் மனைவி மர்மமான முறையில் உயிரிழந்ததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் காவல் நிலையத்தை தீவைத்து எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்ப்டுத்தியுள்ளது.
    • மைனர் பெண்ணை திருமணம் செய்ததற்காக கணவனை கைது செய்து பெண்ணையும் கணவனையும் போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளனர்.

    பீகாரில் போலீஸ் கஸ்டடியில் இருந்த கணவன் மனைவி மர்மமான முறையில் உயிரிழந்ததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் காவல் நிலையத்தை தீவைத்து எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்ப்டுத்தியுள்ளது. பீகார் மாநிலம் அராரியா மாவட்டத்தில் உள்ள தார்பாரி கிராமத்தில் தனது மனைவி இறப்பதற்கு 2 நாட்கள் முன்பு அவரது 14 வயதுடைய தங்கையை கணவனர் திருமணம் செய்துகொண்டுள்ளார்.

    மைனர் பெண்ணை திருமணம் செய்ததற்காக கணவனை கைது செய்து பெண்ணையும் கணவனையும் போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று (மே 17) மதியம் கைது செய்யப்பட்ட அவர்கள் இருவரும் காவல் நிலையத்தில் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

    இதுதொடர்பாக கிடைத்துள்ள சிசிடிவி பதிவில் ஒரு நபர் தூக்கில் தொங்குவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இதற்கிடையே அவர்கள் போலீசாரால் தாக்கப்பட்டதாலேயே உயிரிழந்துள்ளதாக கிராம மக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

    காவலர்களை கல்லால் தாக்கிய பொதுமக்கள் அங்குள்ள பொருட்களையும் ஜன்னல்களையும் அடித்து நொறுக்கி காவல் நிலையத்தை மொத்தமாக தீவைத்து எரித்தனர். இந்த சம்பவத்தில் 5 போலீசார் படுகாயமடைந்துள்ளனர். மேலும் அந்த பகுதியில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பதற்றமான சூழல் நிலவுகிறது. 

    • வாக்கு வங்கியைக் கண்டு பா.ஜ.க. பயப்படவில்லை.
    • பீகாருக்கு தேவை காட்டாட்சியல்ல. வளர்ச்சிக்கான அரசியல்தான் தேவை.

    பாட்னா:

    பீகாரில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசார பேரணியில் கலந்து கொண்ட மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா, பா.ஜ.க. வெற்றி பெற்றால் சீதாமர் ஹியில் அன்னை சீதா தேவிக்கு பிரமாண்டமான முறையில் கோவில் கட்டுவோம் என வாக்குறுதி அளித்தார்.

    வாக்கு வங்கியைக் கண்டு பா.ஜ.க. பயப்படவில்லை. பிரதமர் மோடியால் தான் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது சாத்தியமானது. அதேபோல் சீதா அன்னை பிறந்த இடமான சீதாமர்ஹியில் அவருக்கு கோவில் கட்ட வேண்டிய கடமை நமக்கு பாக்கி இருக்கிறது. இதனை நிறைவேற்ற பிரதமர் மோடியால் மட்டும்தான் முடியும். நம்மை ஒதுக்கி வைத்தவர்கள் யாரும் இதனை செய்து முடிக்க முடியாது.

    லாலு பிரசாத் யாதவ் அதிகார அரசியலுக்காக தன் மகனை முதல்வராக்குவதற்காக பிற்படுத்தப் பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோரை எதிர்ப்பதையே வாழ்நாள் கடமையாக கொண்டிருந்த காங்கிரஸ் கட்சியின் மடியில் போய் அமர்ந்துள்ளார்.

    பீகார் முன்னாள் முதல்வர் கர்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா விருது வழங்குவோம் என்று காங்கிரசும், ராஷ்டிரிய ஜனதா தளமும் ஒருபோதும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள். அதை மோடி அரசு செய்து முடித்தது. பீகாருக்கு தேவை காட்டாட்சியல்ல. வளர்ச்சிக்கான அரசியல்தான் தேவை.

    இவ்வாறு அமித்ஷா பேசினார்.

    இந்து புராணங்களின்படி, ராஜா ஜனகன் சீதாமர்ஹிக்கு அருகில் வயலில் உழுது கொண்டிருந்த போது ஒரு மண்பானையில் இருந்து ராமனின் மனைவியான சீதை உயிர்பெற்றாக கூறப்பட்டுள்ளது.

    பீகாரில் உள்ள சீதாமர்ஹி தொகுதிக்கு மே 20-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 2019 பாராளுமன்ற தேர்தலில் பீகாரில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 39 இடங்களில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

    • பசுவதை தொடர்பான வழக்குகள் அதிக அளவில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
    • பாஜக ஆட்சிக்கு வந்தால் பசுவதை மற்றும் பசு கடத்தலை அனுமதிக்காது.

    பீகார் மாநிலத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். மதுபானி நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், "அயோத்தியில் ராமர் கோவில் காட்டியது போல பீகார் மாநிலத்தில் சீதா கோவில் கட்டப்படும் என்று வாக்குறுதி அளித்தார்.

    மோடி மூன்றாவது முறையாக பிரதமராக வர வேண்டும் என்று இந்திய மக்கள் முடிவு செய்துள்ளனர். இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார்? மு.க.ஸ்டாலினா மம்தா பேனர்ஜியா லாலு பிரசாத் யாதவா? என்று கேள்வி எழுப்பினார்.

    காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி விடுமுறையை பேங்காக்கில் செலவிடுகிறார். பிரதமர் மோடி தீபாவளி பண்டிகையை இந்திய ராணுவத்தினருடன் கொண்டாடுகிறார். மஹாபாரதத்தை போலவே இங்கும் 2 முகாம்கள் உள்ளன. ஒன்று பாண்டவர்கள் முகாம், இன்னொன்று கௌரவர்கள் முகாம்.

    இப்பகுதியில் பசுவதை தொடர்பான வழக்குகள் அதிக அளவில் பதிவு செய்யப்பட்டுள்ளன. பாஜக ஆட்சிக்கு வந்தால் பசுவதை மற்றும் பசு கடத்தலை அனுமதிக்காது.

    சீதையின் தேசமான இங்கு, பசுவதையை ஏற்க முடியாது. மூன்றாவது முறையாக மோடி பிரதமராக வந்தால், பசுவதை செய்வோரை தலை கீழாக தொங்க விடுவோம் என உறுதியளிக்கிறேன்" என்று தெரிவித்தார்.

    பாஜக ஆட்சிக்கு வந்த கடந்த 10 ஆண்டுகளில் பசுக்களை கடத்தியதாக பல பேரை பசு பாதுகாப்பு கும்பல் அடித்து கொலை செய்துள்ளது. இந்நிலையில், பசு பாதுகாப்பு கும்பலின் கொலைகளை ஆதரிக்கும் விதமாக, பீகாரில் தேர்தல் பரப்புரையில் அமித்ஷா பேசியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

    • வெற்றிக்காக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
    • லல்லு, மகளின் வெற்றிக்காக கடுமையாக உழைத்து வருகிறார்.

    குடும்ப அரசியலுக்கு பெயர் போனது பீகார் முன்னாள் முதல்-மந்திரி லல்லு பிரசாத் யாதவின் குடும்பம். அவரது குடும்ப உறுப் பினர்கள் 6 பேரும் அரசியலில் களம் கண்டிருக்கிறார்கள்.

    2019-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.-ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி வெற்றி பெற்றதால் ராஷ்டீரிய ஜனதா தளம் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறமுடியவில்லை.

    அதன் பிறகு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் லல்லுவின் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றது.

    இதனையடுத்து, நிதீஷ் குமாரின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி அமைத்தார்.

    சமீபத்தில் நிதிஷ் குமார் மீண்டும் தனது கூட்டணியை மாற்றி பா.ஜ.க.வுடன் இணைந்ததால் மந்திரிகளாக இருந்த லல்லுவின் மகன்கள் தற்போது எம்.எல்.ஏ.க்களாக மட்டும் உள்ளனர்.

    இந்நிலையில் இந்த பாராளுமன்ற தேர்தலில் லல்லுவின் மற்றொரு மகள் ரோகிணி ஆச்சார்யாவை ராஷ்டீரிய ஜனதா தளம் களம் இறக்கியுள்ளது, அவர் லல்லுவின் 4-வது அரசியல் வாரிசாகும். தேஜஸ்வி யாதவ் தவிர, தேஜ் பிரதாப் யாதவ், மிசா பாரதி ஆகியோர் அரசியலில் உள்ளனர். மிசா பாரதி மேல்- சபை எம்.பி.யாவார்.

    44 வயது டாக்டரான ரோகினி ஆச்சார்யா லல்லுவின் 2-வது மகள் ஆவார். அவர் சரன் தொகுதியில் போட்டியிடு கிறார். இந்த தொகுதி முன்பு சாப்ரா தொகுதியாக இருந்தது.

    இந்த இடம் லல்லுவின் குடும்ப தொகுதியாகும். லல்லு பிரசாத் யாதவ் இந்த தொகுதியில் 4 முறை வெற்றி பெற்று இருக்கிறார். கடைசியாக 2009 தேர்தலில் அவர் சரன்தொகுதியில் 51,815 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.

    ஆனால் கடந்த இரண்டு தேர்தலிலும் ராஷ்டீரிய ஜனதா தளம் அந்த தொகுதியில் தோல்வியை தழுவியது. 2014 தேர்தலில் லல்லுவின் மனைவி ராப்ரி தேவி 40,948 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார்.

    கடந்த முறை (2019) லல்லுவின் சம்மந்தி சந்திரிகா ராய் (தேஜ் பிரதாப் யாதவின் மாமனார்) 1.38 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார். இந்த 2 முறையும் முன்னாள் மத்திய மந்திரி யும், பா.ஜனதா மூத்த தலைவருமான ராஜீவ் பிரதாப் ரூடி வெற்றி பெற்றார்.

    பா.ஜனதாவை இந்த தடவையாவது வீழ்த்தி விட வேண்டும் என்ற வேட்கையில் லல்லு தனது மகள் ரோகினையை களத்தில் இறக்கி உள்ளார். இந்த மகள் மீது அவருக்கு அளவு கடந்த பாசம் உண்டு.

    லல்லு உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவ மனையில் இருந்தபோது அவரை கவனித்து கொண்டவர் ரோகினி. மேலும் தந்தைக்கு சிறுநீரகத்தை தானமாக அளித்து பாசத்தை காட்டி மக்கள் இடையே பெரும் பாராட்டை பெற்றார்.

    தனக்கு சிறுநீரகத்தை தானமாக வழங்கிய மகளை தேர்தலில் வெற்றிபெற வைத்து அதை பரிசாக வழங்க லல்லு தீவிர முயற்சியில் இறங்கி உள்ளார். மகளின் வெற்றிக் காக அவர் கடுமையாக உழைத்து வருகிறார். உடல் நல பிரச்சினைகள் இருந்த போதிலும் லல்லு பல பொதுக் கூட்டங்களில் பேசி ஆதரவு திரட்டி வருகிறார்.

    அதோடு ராஷ்டிரிய ஜனதா தள கட்சி நிர்வாகிகளையும் அடிக்கடி சந்தித்து தேர்தல் வியூகத்தில் ஈடுபட்டுள்ளார். லல்லு அந்த தொகுதியில் 4 முறை வெற்றி பெற்று இருந்ததால் மகளை வெற்றி பெற வைக்க முடியும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்.

    ஆனால் பா.ஜனதா வேட்பாளரும், மூத்த அரசியல்வாதியுமான ராஜீவ் பிரதாப் ரூடியை தோற்கடிப்பது சவாலான தாகும்.

    62 வயதான ரூடி மறைந்த வாஜ்பாய், பிரதமர்மோடி ஆகியோருக்கு நெருக்கமாக இருந்தவர். மத்திய மந்திரியாகவும் பணியாற்றினார். 1996-ம் ஆண்டில் இருந்தே அவர் அந்த தொகுதிக்கு அறிமுகமானவர்.

    1996, 1999, 2014 2019 தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். தற்போது சரன்தொகுதியில் ஹாட்ரிக் வெற்றி பெறும் ஆர்வத்தில் ராஜீவ் பிரதாப் ரூடி உள்ளார்.

    அனுபவம் வாய்ந்த ரூடியுடன் போட்டியிடுவது குறித்து ரோகினி கூறும்போது, 'நான் தொகுதிக்கு புதிது அல்ல. பீகாரில் என்ன நடக்கிறது என்பதை அறிவேன். எனது அரசியல் குருவான தந்தையிடம் இருந்து நான் அரசியலின் நுணுக்கங் களைக் கற்றுக்கொண்டேன்" என்றார்.

    ரூடி கூறும் போது. "போட்டியில் ரோகினி இல்லை. திரைக்குப் பின்னால் இருந்து போராடும் லல்லுதான் உண்மையான எதிரி" என்றார்.

    ரோகினி பாரம்பரிய முஸ்லிம்-யாதவ் வாக்கு வங்கிகளை நம்பி இருக்கிறார். தந்தையின் பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்லும் கடினமான பணி அவருக்கு உள்ளது. ஆனால் சரன் தொகுதி அரசியல் களம் இப்போது லல்லு ஆட்சிக் காலத்தைப் போல் இல்லை.

    சரன்தொகுதியில் வருகிற 20-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இந்த தொகுதியில் கடும் போட்டி நிலவுகிறது. இருவரும் வெற்றிக்காக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    • சுஷில்குமார் மோடி மூன்று தசாப்தங்களாக அரசியல் களத்தில் இருந்தவர்.
    • எம்.எல்.ஏ, எம்.எல்.சி, மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்.பி ஆகவும் பதவி வகித்துள்ளார்.

    பாட்னா:

    பீகார் முன்னாள் துணை முதல்மந்திரியும், பா.ஜ.க. மூத்த தலைவருமான சுஷில்குமார் மோடி (72), டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் நேற்று காலமானார். அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடந்த ஒரு மாதமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

    1952-ம் ஆண்டு பிறந்த சுஷில்குமார் மோடி மூன்று தசாப்தங்களாக அரசியல் களத்தில் இருந்தவர். கடந்த 2005 முதல் 2013 வரை மற்றும் 2017 முதல் 2020 வரை பீகார் துணை முதல்மந்திரியாகவும், நிதி மந்திரியாகவும் பதவி வகித்தார். இதுதவிர எம்.எல்.ஏ., எம்.எல்.சி., மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்.பி ஆகவும் பதவி வகித்துள்ளார்.

    கடந்த ஏப்ரல் மாதம் தனக்கு புற்றுநோய் இருப்பது தெரியவந்ததை அடுத்து, 2024 மக்களவை தேர்தலில் இருந்து விலகுவதாக சுஷில் குமார் மோடி சமூக வலைதளத்தில் அறிவித்திருந்தார்.

    இந்நிலையில், டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுஷில்குமார் மோடி சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். அவரது இறுதிச்சடங்குகள் இன்று பாட்னாவில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறுமென தெரிவிக்கப்பட்டது.

    சுஷில்குமார் மோடி மறைவுக்கு பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித் ஷா உள்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    இதுதொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், பல தசாப்தங்களாக எனது நண்பராக இருந்தவரான சுஷில் மோடியின் மறைவு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பீகாரில் பா.ஜ.க.வின் எழுச்சி மற்றும் வெற்றியில் அவர் முக்கிய பங்கு வகித்துள்ளார். எமர்ஜென்சியை கடுமையாக எதிர்த்து, மாணவர் அரசியலில் தனக்கென ஒரு பெயரை உருவாக்கினார். அரசியல் தொடர்பான விஷயங்களை ஆழமாகப் புரிந்துகொண்டவர். ஜி.எஸ்.டி.யை நிறைவேற்றுவதில் அவர் ஆற்றிய பங்கு எப்போதும் நினைவுகூரப்படும். இந்த துயரமான நேரத்தில் அவரது குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்களுக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

    • பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்துக்காக பிரதமர் மோடி பீகார் சென்றுள்ளார்.
    • பாட்னாவில் உள்ள சீக்கியர்களின் புனித தலமான குருத்வாரா சென்று பிரதமர் மோடி வழிபாடு நடத்தினார்.

    பாட்னா:

    பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்துக்காக பிரதமர் நரேந்திர மோடி பீகார் சென்றுள்ளார்.

    இந்நிலையில், இன்று காலை பாட்னாவில் உள்ள சீக்கியர்களின் புனித தலமான குருத்வாராவுக்கு பிரதமர் மோடி சென்றார். அங்கு வழிபாடு நடத்திய பிரதமர் மோடி அங்குள்ள உணவுக் கூடத்தில் சில உணவுகளை சமைத்தார். அதன்பின் அங்கிருந்த சீக்கியர்களுக்கு உணவு பரிமாறினார்.

    இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன. அப்போது பிரதமர் மோடி ஆரஞ்சு நிற தலைப்பாகை அணிந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஒரு மாணவருக்கு ரூ.5 லட்சம் பணம் வாங்கிக்கொண்டு பல தேர்வர்களுக்கு பதிலாக வேறு ஒருவர் தேர்வு எழுதியதும் தெரியவந்தது.
    • தேர்வுக்கு ஒரு நாளைக்கு முன்பே சுமார் 20 மாணவர்களுக்கு வினாத்தாள் வழங்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

    பாட்னா:

    இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வை கடந்த 5-ந் தேதி நாடு முழுவதும் சுமார் 24 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதினர்.

    இந்நிலையில் ராஜஸ்தான், டெல்லி, பீகார் உள்ளிட்ட சில மாநிலங்களில் நீட் தேர்வில் பல்வேறு மோசடிகள் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகின.

    பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள ஒரு தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய மாணவர் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியது கண்டு பிடிக்கப்பட்டது. அந்த மாணவரை பிடித்து விசாரித்த போது, ஒரு மாணவருக்கு ரூ.5 லட்சம் பணம் வாங்கிக்கொண்டு பல தேர்வர்களுக்கு பதிலாக வேறு ஒருவர் தேர்வு எழுதியதும் தெரியவந்தது.

    இந்த விவகாரத்தில் பீகார் போலீசார் பல்வேறு லாட்ஜூகளில் சோதனை நடத்தி மோசடியில் ஈடுபட்ட நபர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் தேர்வுக்கு ஒரு நாளைக்கு முன்பே சுமார் 20 மாணவர்களுக்கு வினாத்தாள் வழங்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

    இதுதொடர்பாக சமஸ்திபூர் மாவட்டத்தை சேர்ந்த சிக்கந்தர் யாகவேந்து (வயது 56) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர் பீகாரில் பல்வேறு இடங்களில் இருந்து தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த 20 மாணவர்களை ராம கிருஷ்ணா நகரில் உள்ள ஒரு விடுதிக்கு அழைத்து வந்து அவர்களுக்கு ஒரு நாள் முன்னதாகவே வினாத்தாள் வழங்கியதும் கண்டு பிடிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக 4 மாணவர்களும், அவர்களது பெற்றோர்கள் உள்பட 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

    • பீகார் மக்களுக்காக அவர்கள் ஏதும் செய்யவில்லை. இந்த முறை பா.ஜனதாவின் நிலை மிகவும் மோசமாக உள்ளது.
    • மோடியின் பொய் வாக்குறுதிகளை கேட்டு மக்கள் சோர்ந்துவிட்டனர். அவர்கள் உண்மையை பேசுமாறு கேட்கிறார்கள்.

    பிரதமர் மோடி இளவரசர் எனக் குறிப்பிட்டுள்ள நிலையில் ராஷ்டிரிய கட்சி தலைவரும், லாலு பிரசாத் யாதவின் மகனுமான தேஜஸ்வி யாதவ் பதில் அளித்து கூறியிருப்பதாவது:-

    பிரதமர் மோடி பீகார் மாநிலம் தர்பங்காவில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் டெல்லி மற்றும் பீகாரின் இளவரசர் எனக் குறிப்பிட்டுள்ளார். அவர் பிரதமர். அவரால் எதையும் சொல்ல முடியும். அவர் எங்களுடைய மூத்த நபர். நாங்கள் சிறிய மக்கள். அவர் என்ன விரும்புகிறாரோ, அதை பேச அவருக்கு உரிமை உண்டு.

    அவர் பிர்ஜாடா (pirzada). ஆனால் உண்மையை விட பொய்களைத்தான் நிறைய பேசுகிறார். அவர் தர்பங்காவிற்கு வந்திருக்கிறார். அதனால் பயனுள்ள விசயங்களை பேச வேண்டும். மித்திலா மக்கள் அறிவுஜீவிகள். அவர்கள் பயனுள்ள விசயங்களை கேட்க விரும்புவார்கள். பயனற்ற விசயங்களை கேட்க விரும்பமாட்டார்கள்.

    இங்குள்ள மக்களுக்காக அவர்கள் ஏதும் செய்யவில்லை. இந்த முறை பா.ஜனதாவின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. மோடியின் பொய் வாக்குறுதிகளை கேட்டு மக்கள் சோர்ந்துவிட்டனர். அவர்கள் உண்மையை பேசுமாறு கேட்கிறார்கள். பீகாரை அவர்கள் மாற்றாந்தாய் பிள்ளையாகவே பார்க்கிறார்கள். பீகாருக்காக எதையும் செய்யவில்லை. பா.ஜனதாவுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என மக்கள் புரிந்து கொண்டுள்ளனர்.

    பெரிய பொய்யர் கட்சியைச் (Badka Jhootha Party) சேர்ந்தவர்களை தோற்கடித்து, மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்க பீகார் மக்கள் முடிவு செய்துள்ளனர்.

    இவ்வாறு தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.

    • பிரதமர் மோடிக்கு தற்போது மிகவும் பிடித்த வார்த்தைகள்... பாகிஸ்தான், சுடுகாடு, இந்து- முஸ்லிம், கோயில்- மசூதி, தாலி, பசு, எருமை.
    • 2-வது கட்ட வாக்குப்பதிவு வரையே இந்த பட்டியல். போகப்போக இதில் புதிய வார்த்தைகள் சேரும்.

    பிரதமர் மோடி கடந்த 10 ஆண்டு ஆட்சி காலத்தில் அவர்களுடைய செயல்பாடுகளை சுட்டிக்காட்டி வாக்கு கேட்காமல் வெறுப்பு வார்த்தைகளை பயன்படுத்தி வாக்கு கேட்பதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

    குறிப்பாக எஸ்.டி., எஸ்.சி., ஓபிசி-க்களின் இடஒதுக்கீடு இடங்களை முஸ்லிம்களுக்கு வழங்க காங்கிரஸ் முயற்சிப்பதாக குற்றம்சாட்டி வருகிறார். மேலும், நாட்டில் உள்ள தாய்மார்கள், சகோதரிகளின் சொத்துகளை பறிமுதல் செய்து ஊடுருவியவர்களுக்கு பகிர்ந்து அளிக்க முயல்வதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

    இந்த நிலையில் பிரதமர் மோடி பேச்சு குறித்து ராஷ்டிரிய ஜனதா தள கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ் கருத்து தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக லாலு பிரசாத் யாதவ் கூறியதாவது:-

    இந்தியில் கிட்டதட்ட 1.5 லட்சம் வார்த்தைகள் உள்ளன. டெக்னிக்கல் மற்றும் படிப்பு தொடர்பான அனைத்து பிரிவுகள் உள்பட ஏறத்தாழ 6.5 லட்சம் வார்த்தைகள் உள்ளன. ஆனால் பிரதமர் மோடிக்கு தற்போது மிகவும் பிடித்த வார்த்தைகள்... பாகிஸ்தான், சுடுகாடு, இந்து- முஸ்லிம், கோவில்- மசூதி, தாலி, பசு, எருமை.

    2-வது கட்ட வாக்குப்பதிவு வரையே இந்த பட்டியல். இன்னும் ஏழு கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற இருக்கும் நிலையில், போகப்போக இதில் புதிய வார்த்தைகள் சேரும். வேலைவாய்ப்பு, ஏழைகள், விவசாயிகள், விலைவாசி, வளர்ச்சி, இளைஞர்கள், அறிவியல், முதலீடு போன்ற வார்த்தைகளை அவர் மறந்துவிட்டார்.

    இவ்வாறு லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பணவீக்கம் இப்படியே உயர்ந்து கொண்டே போனால் ஏழைகள் என்ன சாப்பிடுவார்கள்
    • தேவைப்பட்டால் பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என்றும் மோடி அப்போது உறுதியளித்தார்

    நேற்று பீகார் மாநிலம் மதுபானியில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது, கடந்த காலங்களில் மோடி பேசிய வாக்குறுதிகளை கையடக்க புளூடூத் ஸ்பீக்கரில் ஒலிபரப்பினார்.

    பீகாரில் 2014 பொதுத் தேர்தல் பிரச்சாரத்தின் போது அப்போதைய குஜராத் முதல்வர் மோடி ஆற்றிய பல உரைகளின் தொகுப்பை தேஜஸ்வி ஒலிபரப்பினார்.

    மோடி பேசும் அந்த ஆடியோவில், "பணவீக்கம் இப்படியே உயர்ந்து கொண்டே போனால் ஏழைகள் என்ன சாப்பிடுவார்கள். இப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் பணவீக்கம் என்ற வார்த்தையை உச்சரிக்க கூட தயாராக இல்லை.

    நாட்டின் தலைவர்கள் ஏழைகளைப் பற்றிக் கூட கவலைப்படுவதில்லை. நீங்கள் அவர்களுக்கு வாக்களிக்க விரும்பினால், உங்கள் வீட்டில் இருக்கும் கேஸ் சிலிண்டருக்கு நமஸ்காரம் செய்யுங்கள். ஏனெனில் அவர்கள் உங்கள் வீட்டிலிருக்கும் கேஸ் சிலிண்டர்களை பிரித்துள்ளனர்.

    பாஜக ஆட்சிக்கு வந்தால், பீகாரின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண ரூ.1.25 லட்சம் கோடி நிதி வழங்குவதாகவும், தேவைப்பட்டால் பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும்" என்று மோடி பேசியுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மனைவி இறந்த நிலையிலும் சிக்கந்தர் அங்கேயே இருந்து வந்துள்ளார்.
    • இருவரின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் அவர்களை விசாரித்தனர்.

    பாட்னா:

    பீகாரில் பங்கா மாவட்டம் ஹீர்மோதி காவுன் அருகே சத்ராபால் கிராமத்தை சேர்ந்தவர் சிக்கந்தர். அதே கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண்ணுடன் இவருக்கு திருமணமானது.

    இதற்கிடையே, மனைவி இறந்த நிலையிலும் சிக்கந்தர் அங்கேயே இருந்து வந்துள்ளார். அங்கு தன் மாமியாருடன் சிக்கந்தர் நெருங்கி பழகிவந்துள்ளார். இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளனர்.

    இருவரின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் சிக்கந்தரின் மாமனார் உள்பட உறவினர்கள் அவர்களை விசாரித்தனர். அதில் மாமியாருடன் சிக்கந்தருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதனால் அங்கு பஞ்சாயத்தை கூட்டினர். அதில் இருவரும் ஒப்புக் கொள்ளவே, கிராமத்தினர் முன்னிலையில் அவர்கள் திருமணம் செய்துகொண்டனர். மேலும், இருவரும் நீதிமன்றத்திலும் திருமணம் நடத்தியுள்ளதாக தகவல் வெளியானது.

    இந்நிலையில், மாமியாரை மருமகன் செய்து கொண்ட திருமண செய்தி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

    ×