search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • இருளஞ்சந்தை, குருவிநத்தம், கரிக்கலாம்பாக்கம் மற்றும் அதனையொட்டிய தமிழக பகுதியிலும் அறுவடை பணிகள் மும்முரமாக நடக்கிறது.
    • நெற்பயிர்கள் பசுமையாக பூ வைத்த நிலையில் உள்ள கதிர்களில் அண்மையில் பெய்த மழையால் பூச்சிகள் பாதிப்பு அதிகமாகும்.

    புதுச்சேரி:

    புதுவையின் நெற்களஞ்சியமான பாகூர் பகுதியில் தாளடி நவரை பருவத்தில் சுமார் ஆயிரம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

    ஏ.டி.டி-51, என்.எல்.ஆர். ரக நெற்பயிர்களை அதிகளவில் விவசாயிகள் பயிரிட்டுள்ளனர்.

    பயிர்களில் கதிர்பிடித்து தற்போது நெல்மணிகள் வளர்ந்துள்ளன. அடுத்த ஒருவாரத்தில் அறுவடை செய்ய விவசாயிகள் முடிவு செய்திருந்தனர். இந்த நிலையில் பாகூர் சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது.

    23-ந் தேதி வரை கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அவ்வாறு பலத்த மழை பெய்தால் விளைந்த நெற்பயிர்கள் மடிந்து சேதமடையும்.

    எனவே அறுவடைக்கு தயாராக உள்ள நெற்பயிர்கள் மற்றும் சற்று பசுமையாக உள்ள நெற்பயிர்களை விவசாயிகள் முன்கூட்டியே அறுவடை செய்து வருகின்றனர். இருளஞ்சந்தை, குருவிநத்தம், கரிக்கலாம்பாக்கம் மற்றும் அதனையொட்டிய தமிழக பகுதியிலும் அறுவடை பணிகள் மும்முரமாக நடக்கிறது.

    இதுகுறித்து பாகூர் பகுதி விவசாயிகளிடம் கேட்டபோது, மழை பெய்து வருவதால் முன்கூட்டியே அறுவடை செய்தால் ஓரளவாது நஷ்டம் ஏற்படாமல் தப்பித்துக் கொள்ளலாம் என்ற நோக்கத்தில் முன்கூட்டியே அறுவடை நடந்து வருகிறது.

    ஏற்கனவே பெய்த மழையால் வயல்களில் தண்ணீர் தேங்கி சேறும் சகதியுமாக இருப்பதால், செயின் போட்ட அறுவடை எந்திரம் மூலம் பணிகள் நடக்கிறது.

    நெற்பயிர்கள் பசுமையாக பூ வைத்த நிலையில் உள்ள கதிர்களில் அண்மையில் பெய்த மழையால் பூச்சிகள் பாதிப்பு அதிகமாகும். இதனால் மகசூல் பாதிக்க வாய்ப்புள்ளதாக கூறினர்.

    • திடக்கழிவு மேலாண்மை குறித்த ஆய்வுக் கூட்டம் கவர்னர் மாளிகையில் நடந்தது.
    • முறையாக குப்பைகள் அகற்றப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் தனியார் நிறுவனங்கள் சார்பில் குப்பை அகற்றும் பணி நடந்து வருகிறது. இந்த நிறுவனங்கள் சரிவர குப்பையை அகற்றுவதில்லை என்று புகார்கள் எழுந்துள்ளது.

    இதனிடையே குப்பை அள்ளும் நிறுவனங்களுக்கு நிதி வழங்குவதற்கான கோப்பு கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு சென்றது. ஆனால் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் சரிவர குப்பை அள்ளாததால் அந்த கோப்புக்கு கையெழுத்திடவில்லை. இதனால் அதிகாரிகள் மட்டத்தில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் திடக்கழிவு மேலாண்மை குறித்த ஆய்வுக் கூட்டம் கவர்னர் மாளிகையில் கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் தலைமையில் நடந்தது.

    கூட்டத்தில் உள்ளாட்சித்துறை இயக்குனர் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர், நகராட்சி ஆணை யர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கி கவர்னர் சி.பி.ராதா கிருஷ்ணன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தூர் நகரம் தற்போது இந்தியாவின் தூய்மையான நகரமாக அடையாளம் காணப்படுகிறது.

    வரும் ஆண்டுகளில் இந்தியாவின் தூய்மையான நகரமாக புதுச்சேரியை கொண்டு வருவதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும். அதற்கான செயல் திட்டத்தை அடுத்த 15 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

    நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் உருவாகும் குப்பைகளில் இதுவரை 85 சதவீதம் மட்டுமே அகற்றப்பட்டு வருகிறது. குப்பைகள் முழுமையாக அகற்றப்பட வேண்டும். உணவு விடுதிகள், தங்கும் விடுதிகள், திருமண மண்டபங்கள், கடை வீதிகள் போன்ற அதிக குப்பை சேரும் இடங்களில் இருந்து முறையாக குப்பைகள் அகற்றப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும்.

    கட்டிடம் இடிக்கப்பட்டால் இடிபாடுகள் அதற்கான இடங்களில் கொட்டப்பட வேண்டும் கழிவுநீர் வாய்க்கால்கள், கால்வாய்கள் ஆகியவற்றை முறையாக தூர்வாரி பராமரிக்க வேண்டும். தேவையான தொழில் நுட்பங்களை பயன்படுத்தி திடக்கழிவு மேலாண்மையை பலப்படுத்த வேண்டும்.

    குப்பை கிடங்கில் கொட்டப்படும் குப்பைகள் முறை யாக மறுசுழற்சி செய்யப் படுவதை உறுதி செய்து, அங்கு தயாரிக்கப்படும் உரம், வண்டல் மண் ஆகியவை விவசாயிகளுக்கு முறையாக கிடைக்க வழிவகை காண வேண்டும்.

    வீடுகளில் குப்பை கழிவுகள் வெளியேற்றப்படுவது தொடர்பாக பள்ளி மாண வர்கள் மத்தியில் கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அனைத்து துறைகளும் ஒருங்கி ணைந்து திட்டமிட்ட செயல்பாடு, பணியில் ஈடுபாடு ஆகியவற்றின் மூலமாக மக்கள் பணம் மக்களுக்கே முறையாக பயன்படுவதை உறுதிப்படுத்த வேண்டும்.

    தேர்தல் நடத்தை விதிகள் விலக்கி கொள்ளப்பட்டதும் முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்களோடு கலந்து ஆலோசனை செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மக்கள் பிரதிநிதிகளுடன் இணைந்து ஆய்வுகளும் மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • நடப்பாண்டு பிரம்மோற்சவ விழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • காலை 9 மணிக்கு செண்பக தியாகராஜசுவாமி திருத்தேரிலிருந்து எண் கால் மண்டபத்திற்கு எழுந்திரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    காரைக்கால்:

    காரைக்காலை அடுத்த திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் இன்று காலை தேரோட்டம் நடைபெற்றது.

    காரைக்காலை அடுத்த திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனி பகவான் கிழக்கு நோக்கி தனி சன்னதி கொண்டு அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில் சனிக்கிழமை தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர்களும் வருகை தந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

    இத்தகைய சிறப்பு வாய்ந்த கோவிலில் பிரம்மோற்சவ விழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். நடப்பாண்டு பிரம்மோற்சவ விழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து விநாயகர் உற்சவம், சுப்பிரமணியர் உற்சவம் நடை பெற்றுவந்தது. விழாவின் முக்கியநிகழ்வுகளில் ஒன்றான அடியார்கள் நால்வர் (சுந்தரர், திருஞானசம்பந்தர், மாணிக்கவாசர், திருநாவுக்கரசர் ) புஷ்ப பல்லக்கு வீதியுலா கடந்த 13-ந் தேதி இரவு நடை பெற்றது. தொடர்ந்து 17-ந் தேதி இரவு பஞ்சமூர்த்திகள் வாகனரூடராய் சகோபுர வீதியுலா(தங்க ரிஷப வாகன காட்சி), சிறப்பாக நடைபெற்றது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை 5.30 மணிக்கு தொடங்கியது. முதல்தேரில் விநாயகரும், 2-வது தேரில் முருகப்பெருமானும், 3-வது தேரில் சென்ப கத்தியாகராஜ சுவாமியும், 4-வது தேரில் நீலோத்பா லாம்பாளும், 5-வதுதேரில் சண்டிகேஸ்வரும் வரிசையாக கொண்டு செல்லப் பட்டது. காலை 9 மணிக்கு செண்பக தியாகராஜசுவாமி திருத்தேரிலிருந்து எண் கால் மண்டபத்திற்கு எழுந்திரும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில், புதுச்சேரி அமைச்சர் சாய் ஜெ. சரவணன் குமார், தொகுதி எம்.எல்.ஏ.சிவா, பா. ஜனதா மாநில துணைத் தலைவர் ராஜசேகரன், கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன், கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான்சுவாமிகள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.

    20-ந் தேதி சனிபகவான் தங்க காக்கை வாகனத்தில் வீதியுலாவும், 21-ந் தேதி தெப்போற்சவமும் நடை பெற உள்ளது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரி நாதன் தலைமையில் ஊழி யர்கள் செய்து வருகின்றனர்.

    • மாலை வேளையில் திறந்தவெளி மதுகூடாரமாக மாறியுள்ளது.
    • பண்டைய கலாசாரத்தை அறிய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கிறார்கள்.

    புதுச்சேரி:

    கடல் வாணிபத்தில் தமிழர்கள் கொடிகட்டிப் பறந்ததற்கு சான்றாக புதுச்சேரி அரியாங்குப்பம் அருகே காக்கையன்தோப்பில் உள்ள அரிக்கன்மேடு பகுதி இருக்கிறது.

    கடலில் இருந்து 3 கி.மீ. தூரத்தில் அமைந்திருக்கும் இங்கு கி.மு.வில் தொடங்கி கி.பி. வரை வாணிபம் நடந்ததற்கான ஆதாரங்கள் அகழாய்வு மூலம் கிடைத்துள்ளன. அதிலும் அங்கு ரோமானிய அரசன் அகஸ்டஸ் உருவம் பொறித்த நாணயங்கள், மணிகள், பொம்மைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

    மேலும், அங்கு கிடைத்த சாயத்தொட்டி, உறைகிணறு, மதுச்சாடி, பிராமி எழுத்து அமைந்த பானை ஓடு, யவனக் குடியிருப்பின் சுவர் ஆகியவை பண்டைய காலத்திலேயே அரிக்கமேடு வாணிபத்தில் சிறந்து விளங்கியதை தெரிவிக்கிறது.

    ஆனால், இங்கு அகழாய்வு நடத்த புதுச்சேரி அரசு பல முறை நிதி ஒதுக்கீடு செய்திருப்பதாக அறிவித்தாலும் இதுவரை பணிகள் தொடங்கவில்லை.பொன்னியின் செல்வன் படத்தில் சில காட்சிகள் அரிக்கன்மேடு பகுதியில் படமாக்கப்பட்டது.

    இதன்பிறகு அரிக்கன் மேடு பகுதி பிரபலமானது புதுச்சேரிக்கு சுற்றுலா வரும் பயணிகள் படகில் ஆற்றில் கடந்து வந்து இந்த பகுதியை பார்வையிடுகிறார்கள். ஆனால் இங்கு உள்ள வரலாற்று தகவல் எதுவும் சுற்றுலா பயணிகள் அறிந்து கொள்ளும் வகையில் குறிப்பிடப்படவில்லை.

    சுற்றுலா பயணிகளுக்கு தேவையான எந்த ஒரு வசதியும் இல்லை இதனால் அரிக்கன்மேட்டுக்கு வரும் சுற்றுலா பயணிகள் பழமையான பண்டைய கலாசாரத்தை அறிய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கிறார்கள்.

    எந்த ஒரு வரலாற்று தகவலையும் தெரிந்து கொள்ளாமல் பாழடைந்த பழமையான வெறும் சுண்ணாம்பு கட்டிடத்தை மட்டுமே பார்த்து செல்கின்றனர். விடுமுறை நாட்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தாலும் மற்ற நேரங்களிலும் மாலையிலும் இது சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி உள்ளது.

    இங்கு மாலை வேளையில் திறந்தவெளி மதுகூடாரமாக மாறியுள்ளது. இங்கு மதுபிரியர்கள் ஒன்றுகூடி இரவு வரை மது குடிக்கின்றனர் அவர்கள் விட்டுச் செல்லும் மதுபாட்டில் மற்றும் பிளாஸ்டிக் குப்பைகளை இங்கு உள்ள 2 ஊழியர்கள் தினமும் எடுத்துப் போடுவது முக்கிய வேலையாக உள்ளது.

    அரிக்கமேட்டின் பண்டைய வரலாற்று பொக்கிஷத்தை பாதுகாக்காததால் தற்போது சமூக விரோதிகளின் கூடாராமாக மாறியுள்ளது. 

    • பட்டபடிப்பு படிக்கும் மாணவர்களுக்கு பேராசிரியர்கள் தொல்லை தருவதாக புகார்.
    • விசாரணை நடத்த என்.சி. எஸ்.சி. முடிவு.

    புதுச்சேரி:

    புதுவை ஜிப்மர் மருத்துவ கல்லூரியில் மருத்துவ இளநிலை மற்றும் முதுநிலை பட்டபடிப்புகளில் நாட்டின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர்.

    இதில் முதுநிலை பட்டபடிப்பு படிக்கும் மாணவர்களுக்கு பேராசிரியர்கள் தொல்லை தருவதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக ஜனவரி மாதம் மருத்துவம் எம்.டி. மாணவர் ஒருவர் புதுவை கவர்னர், ஜிப்மர் டீன் ஆகியோரிடம் புகார் அளித்தார்.

    புகாரில் தங்களுடைய 3 ஆண்டு முதுநிலை படிப்பின் போது சாதி துஷ்பிரயோகம், உடல் ரீதியான துன்புறுத்தல் உள்ளிட்ட பல்வேறு வகையான கொடுமை களுக்கு தாங்கள் ஆளாக்கப் படுவதாகவும் தேர்வு முடிவில் வேண்டுமென்றே தோல்வி அடைய செய்யும் வகையில் பாரபட்சமாக செயல்பட்டு தற்கொலைக்கு தூண்டுவதாகவும் அந்த மாணவர் குறிப்பிட்டு இருந்தார்.

    இந்த புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஜிப்மர் நிர்வாகம் தெரிவித்திருந்தது. அதோடு உண்மையை கண்டறிய குழு அமைத்துள்ளதாக ஜிப்மர் அதிகாரிகள் தெரிவித் திருந்தனர். ஆனால் புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மாணவர்கள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்தது.

    அதோடு புகார் மீது எடுத்த முடிவுகள் குறித்து இதுவரை தனக்கு தெரிவிக் கப்படவில்லை என பாதிக்கப்பட்ட மாணவர் கடந்த வாரம் தேசிய பட்டியலின ஆணையத்திடம் புகார் செய்தார்.

    இந்த புகாரை ஏற்ற ஆணையம் புதுச்சேரி தலைமை செயலாளர், போலீஸ் டி.ஜி.பி., சீனியர் போலீஸ் சூப்பிரண்டு, ஜிப்மர் இயக்குனர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    அதில் ஜூனியர் ரெசிடென்ட் சம்பந்தப்பட்ட இந்த குற்றச்சாட்டுகளை விசாரிக்க மற்றும் விசாரணை நடத்த என்.சி. எஸ்.சி. முடிவு செய்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்திய அரசியல மைப்பின் 338-வது பிரிவின் கீழ் ஆணையத்துக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை கொண்டு விசாரணை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த விகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பான அறிக்கையை 15 நாட்களுக்குள் ஜிப்மர் தர வேண்டும். குறிப்பிட காலத்திற்குள் பதில் தர தவறினால் சிவில் நீதிமன்றங்களின் அதிகாரங்களை பயன்படுத்தி நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப் படும் என எச்சரித்துள்ளது.

    • பணிக்கு செல்வோர் குடை பிடித்தபடி சென்றனர்.
    • வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே வெயில் மக்களை வாட்டிவதைத்து வந்தது. இதனால் புதுச்சேரியில் 100.4 டிகிரிக்கு மேல் வெப்ப அலை வீசியது.

    இதற்கிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் லேசான மழை பெய்தது. கிராமப்புறங்களில் மழை அதிகம் பெய்ததால் மழை நீர் பல இடங்களில் தேங்கி நின்றது. இந்த மழை நகர்ப்புற மக்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை தந்தது.

    இந்நிலையில் புதுச்சேரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று அதிகாலை முதல் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.

    அதிகாலை முதல் புதுச்சேரி நகரப் பகுதியான கடற்கரை சாலை, உப்பளம், முத்தியால்பேட்டை, முதலியால்பேட்டை, புதிய பஸ் நிலையம் மற்றும் கிராமப் பகுதிகளான வில்லியனூர், பாகூர், திருக்கனூர், கன்னியகோவில், காலாப்பட்டு, மதகடிப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக சாரல் மழை பெய்து வருகிறது.

    தொடர்ந்து பெய்து வரும் சாரல் மழையால் கோடை விடுமுறையில் புதுச்சேரிக்கு வருகை புரிந்துள்ள சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    கடந்த சில நாட்களாக கடும் வெயிலால் வீட்டிலேயே முடங்கி கிடந்த மக்கள் வெளியில் மழையில் நனைந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மழையின் காரணமாக கல்லூரி மாணவர்கள் மற்றும் பணிக்கு செல்வோர் குடை பிடித்தபடி சென்றனர்.

    இதற்கிடையே லேசான கடல் சீற்றம் இருந்த புதுச்சேரி கடற்கரையில் கடலில் இறங்கி விளையாடிய சுற்றுலாப் பயணிகளுக்கு போலீசார் தடை விதித்தனர். மேலும் அங்கிருந்து வெளியேற்றினர். 

    • முழு பார்வையற்ற சண்முகப்பிரியா, ஒன்றாம் வகுப்பு முதல் சிறப்புப் பள்ளியில் படித்து வருகிறார்.‌
    • எங்களை போன்ற மாற்றுத்திறனாளி மாணவர்கள் படிப்பதற்கு இம்மாதிரியான பள்ளிகளை கட்டிய அரசுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

    புதுச்சேரி அடுத்த பிள்ளை சாவடியில் சமூக நலத்துறை சார்பில் செயல்பட்டு வரும் ஆனந்தரங்கப்பிள்ளை அரசு சிறப்புப் பள்ளியில் பயின்று வரும் கண் பார்வையற்ற மாணவி சண்முகப்பிரியா, 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 442 மதிப்பெண்கள் பெற்று அசத்தியுள்ளார்.

    முழு பார்வையற்ற சண்முகப்பிரியா, ஒன்றாம் வகுப்பு முதல் சிறப்புப் பள்ளியில் படித்து வருகிறார்.

    எங்களை போன்ற மாற்றுத்திறனாளி மாணவர்கள் படிப்பதற்கு இம்மாதிரியான பள்ளிகளை கட்டிய அரசுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

    மேலும், எதிர்காலத்தில் ஐஏஎஸ் அதிகாரி ஆக வேண்டும் என்பதே தனது இலக்கு என்று அவர் தெரிவித்துள்ளார். 

    • வங்கி மூலம் மகளிர் சுய உதவி கடன்கள், விவசாய கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
    • ரமேஷ் மற்றும் வங்கி மேலாளர் ஜெயக்குமார் ஆகியோர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதகடிப்பட்டு:

    புதுச்சேரி திருபுவனையில் விவசாயிகள் சேவை கூட்டுறவு சங்கம் இயங்கி வருகிறது. இச்சங்கத்தில் சுமார் 11 கிராம விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் உள்பட 6,500 பேர் வங்கி கணக்கு வைத்துள்ளனர்.

    வங்கி மூலம் மகளிர் சுய உதவி கடன்கள், விவசாய கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த வங்கியில் உறுப்பினராக உள்ள கலித்தீர்த்தாள் குப்பத்தை சேர்ந்த முருகன் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வங்கி சார்பில் வழங்கப்பட்டுள்ள கடன்கள் குறித்து தகவல் பெற்றார்.

    அதில் பெரும்பாலான நபர்கள் விவசாயிகளே இல்லாமல் கடன் பெற்றதும், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் ஆய்வாளர் ஆகியோரின் கையெழுத்து மற்றும் அரசு முத்திரைகள் இட்டு போலியாக சான்றிதழ்கள் பெறப்பட்டு அதன் மூலம் கடன் பெற்றது தெரியவந்தது.

    அதன் அடிப்படையில் கலிதீர்த்தாள் குப்பம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவரும் அந்த வங்கியில் மேலாளராக பணியாற்றும் ஜெயக்குமார் என்பவரும் 50 நபர்கள் மீது போலியான சான்றிதழ்களை சமர்ப்பித்து சுமார் ரூ.35 லட்சம் மோசடி செய்துள்ளது தெரிய வந்துள்ளது.

    இதனையடுத்து முருகன் திருபுவனை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதன் அடிப்படையில் திருபுவனை போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோ விசாரணை மேற்கொண்டதில் போலியாக சான்றிதழ் கொடுத்து கடன் பெற்றது தெரியவந்தது.

    இதையடுத்து ரமேஷ் மற்றும் வங்கி மேலாளர் ஜெயக்குமார் ஆகியோர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போலி சான்றிதழ் கொடுத்து வங்கியில் ரூ.35 லட்சம் மோசடி செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • பிரதமர் என்ற நிலையில் இருந்து தடுமாறியுள்ளார்.
    • ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி தரம்தாழ்ந்து பேசி வருகிறார். ராகுல்காந்தியையும், காங்கிரசையும் கடுமையான வார்த்தைகளால் விமர்சிக்கிறார். பிரதமர் என்ற நிலையில் இருந்து தடுமாறியுள்ளார்.

    தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் சாதனைகளை பற்றி பேசாமல், புலம்பி வருகிறார். தினமும் தன் நிலையிலிருந்து மாறி, மாறி பேசி தடம் புரண்டு வருகிறார்.

    நடந்த முடிந்த 3 கட்ட தேர்தலிலும் காங்கிரஸ் கூட்டணிக்கு அதிக இடங்கள் கிடைக்கும். 7 கட்ட தேர்தல் முடியும் நிலையில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும். யார் பிரதமர் என்பதை இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் ஒருங்கிணைந்து முடிவு செய்வார்கள். ராகுல்காந்தி பிரதமர் ஆக வேண்டும் என்பது எனது விருப்பம்.

    புதுவை பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் அமோக வெற்றி பெறும். லட்சக்கணக்கான வாக்கு வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் வெற்றி பெறுவார்.

    மோடி மீதான எதிர்ப்பு அலை, பா.ஜ.க. வேட்பாளரின் செயல்பாடு ஆகியவற்றின் மீதான அதிருப்தியால் காங்கிரஸ் வெற்றி உறுதியாகியுள்ளது.

    புதுவையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையிலான ஆட்சி 3 ஆண்டு முடிந்து 4-ம் ஆண்டை தொடங்கியுள்ளது. இந்த ஆட்சிக்கு பூஜ்ஜியம் மதிப்பெண்தான் அளிக்க முடியும். எந்த வளர்ச்சி திட்டமும் இல்லை. தேர்தலில்கூட முதல்-அமைச்சர் ரங்கசாமி, ஆட்சியின் சாதனைகளை பற்றி பேசவில்லை.

    புதிய தொழிற்சாலைகள், வேலைவாய்ப்பு ஆகியவை உருவாக்கப்படவில்லை. கஞ்சா, அபின் தாராளமாக விற்பனையாகிறது. விலை வாசி கட்டுக்கடங்காமல் உயர்ந்துள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. மக்கள் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் புதுவையில் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது.

    அதேபோல மாநில அரசு அளித்த வாக்குறுதிகளான மாநில அந்தஸ்து, நிதி கமிஷனில் சேர்ப்பது, கடன் தள்ளுபடி ஆகியவை நிறைவேற்றப் படவில்லை.

    தேசிய ஜனநாயக கூட்டணியின் 3 ஆண்டு ஆட்சி மக்களை வஞ்சித்துள்ளது. காங்கிரஸ் அரசு கொண்டுவந்த திட்டங்களை தேசிய ஜனநாயக கூட்டணி அரசு முடக்கி வைத்துள்ளது.

    ஆரம்ப கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை தாழ்த்தப்பட்டோருக்கு இலவச கல்வி வழங்கும் திட்டத்தை அமல்படுத்தி னோம். இந்த திட்டத்துக்கு ரூ.23 கோடி நிதி ஒதுக்கப்பட்டும் மாணவர் களுக்கு வழங்கப்பட வில்லை. இந்த நிதி கருவூலத்தில் உள்ளது. இதை திட்டமிட்டு மாணவர்களுக்கு கிடைக்கவிடாமல் செய்வதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

    பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கும் இலவச கல்வி வழங்க காங்கிரஸ் அமைச்சரவையில் முடிவெடுத்தோம். இந்த திட்டத்தையும் அரசு கிடப்பில் போட்டுள்ளது. நீட் தேர்வுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம்.

    தற்போது நீட் தேர்வு மூலம்தான் நர்சிங் மாணவர்களும் தேர்வு செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இது ஏழை, எளிய மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இதை புதுவையில் உள்ள அரசியல் கட்சிகள் இணைந்து எதிர்க்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சண்டைக் காட்சியில் பயன்படுத்துவதற்காக ஹெலிகாப்டர்கள் புதுச்சேரியில் சுற்றி வருகின்றன
    • இதில் கேரவேனில் ரஜினி வேட்டி சட்டையுடன் இறங்கி வரும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

    சூப்பர் ஸ்டார் ரஜினியின் 170-வது படம் 'வேட்டையன்' . இப்படத்தை இயக்குனர் ஞானவேல் இயக்கி வருகிறார். இதில் அமிதாப் பச்சன், பஹத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன் உட்பட பலர் நடிக்கின்றனர்.

    இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார். நெல்லை, குமரி, தூத்துக்குடி, சென்னை, ஆந்திரம், மும்பை பகுதிகளில் இதன் படப்பிடிப்புகள் நடந்து முடிந்தது.




    இந்நிலையில் இப்படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் தற்போது புதுச்சேரியில் படத்தின் சண்டைக் காட்சிகள் விறுவிறுப்பாக படமாக்கப்பட்டு வருகின்றன.

    புதுச்சேரி பழைய துறைமுகம் பகுதியில் 7 நாட்கள் இதன் படப்பிடிப்பு நடைபெறுகிறது. இதில் ரஜினி வெளிநாட்டவருடன் சண்டையிடுவது போன்ற காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.




    சண்டைக் காட்சியில் பயன்படுத்துவதற்காக ஹெலிகாப்டர்கள் புதுச்சேரியில் சுற்றி வருகின்றன. இதில் கேரவேனில் இருந்து ரஜினி வேட்டி சட்டையுடன் இறங்கி வரும் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

    இந்நிலையில் ரஜினியின் 'வேட்டையன்' படம் வருகிற அக்டோபர் மாதம் தியேட்டர்களில் 'ரிலீஸ்' செய்ய பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • விசாரணையில் பாதுகாப்பு குறைபாடு உறுதி செய்யப்பட்டது.
    • ரூ.1.60 லட்சம் வங்கி வழங்க குறைதீர்வு ஆணையம் தீர்ப்பு.

    புதுச்சேரி:

    புதுவை அரியாங் குப்பத்தை சேர்ந்தவர் ஜனார்த்தனன். அதே பகுதியில் இயங்கி வரும் புதுவை மாநில கூட்டுறவு வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருந்தார்.

    அந்த வங்கியில் பாதுகாப்பு பெட்டக வசதி சேவையை பணம் செலுத்தி பெற்றிருந்தார். அந்த பெட்டகத்தில் தனக்கு சொந்தமான சொத்துக் களின் 3 அசல் பத்திரம் வைத்திருந்தார். 2016-ல் அதை எடுக்க சென்றபோது கரையான் அரித்து சேதமடைந்திருந்தது.

    இதுகுறித்து வங்கி அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லை. இதனால் சேவை குறைபாடு ஏற்பட்டதால் நஷ்டஈடு கோரி புதுவை மாவட்ட நுகர்வோர் குறைதீர்வு ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆணைய தலைவர் முத்துவேல் மற்றும் உறுப்பினர்கள் கவிதா, ஆறுமுகம் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரணை நடத்தியது.

    விசாரணையில் பாதுகாப்பு குறைபாடு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து ஜனார்த்தனனுக்கு சேவை குறைபாடுக்கு ரூ.1 லட்சம் நஷ்டஈடு, மன உளைச்சலுக்கு ரூ.50 ஆயிரம், வழக்கு செலவுக்கு ரூ.10 ஆயிரம் என ரூ.1. 60 லட்சம் வங்கி வழங்க வேண்டும் என குறைதீர்வு ஆணையம் தீர்ப்பளித்தது.

    • ராம் பாபு மஹதே தலைமையிலான குழுசாத்தியக் கூறுகளை ஆய்வு செய்தனர்.
    • ஜூலை 1 முதல் இரு நகரங்களுக்கும் மீண்டும் விமானங்கள் இயக்கப்பட உள்ளது.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் இருந்து ஐதராபாத், பெங்களூரு நகரங்களுக்கு ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் தினசரி விமான சேவையை வழங்கி வந்தது.

    இதற்கிடையே இந்தாண்டு மார்ச் மாதம் முதல் தற்காலிகமாக விமான சேவை நிறுத்தப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதற்கிடையே புதுச்சேரியில் இருந்து விமான சேவையை தொடங்க புதுச்சேரி அரசு பல்வேறு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்தது.

    தொடர்ந்து இண்டிகோ-ஏர் நிறுவனம் புதுச்சேரியில் இருந்து ஐதராபாத், பெங்களூருவுக்கு விமானங்களை இயக்க முன் வந்துள்ளது.

    ஜூலை 1-ந் தேதி முதல் இந்த இரு நகரங்களுக்கு மீண்டும் விமானங்கள் இயக்கப்பட உள்ளது.

    இதன் ஒரு பகுதியாக இண்டிகோ நிறுவனத்தின் பிரதிநிதிகள் விமான நிலையத்தில் ஆய்வு நடத்தினர். விமான நிலையத் தின் முனைய கட்டிடம், ஓடுபாதை மற்றும் கட்டுப்பாட்டு கோபுரம் ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன் இண்டிகோ நிறுவனத்தின் மூத்த மேலாளர் ராம் பாபு மஹதே தலைமையிலான குழுவினரும் விமானங்களை இயக்குவதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்தனர்.

    இதுகுறித்து புதுச்சேரி விமான நிலையத்தின் இயக்குநர் ராஜசேகர் ரெட்டி கூறியதாவது:-

    பயணிகள் முனைய கட்டிடம், ஓடுபாதை, விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு கோபுரம், வானிலை ஆய்வுத்துறை அலுவலகங்கள், தீயணைப்பு, எரிபொருள் நிலையம் மற்றும் செயல்பாட்டு பகுதிகளை இந்த குழுவினர் பார்வையிட்டனர்.

    விமானங்களை இயக்குவதற்கான வசதிகள் இருப்பது குறித்து குழு திருப்தி அடைந்துள்ளது.

    அதன்படி ஜூலை 1-ந் தேதி முதல் புதுச்சேரியில் இருந்து பெங்களூரு மற்றும் ஐதராபாத் வரை விமான சேவைகளை தொடங்க திட்டமிட்டுள்ளனர்.

    மேலும் சில வழித்தடங்களை இதில் சேர்க்க ஆபரேட்டர்கள் விரும்புகின்றனர். எந்தெந்த பகுதிக்கு என்பது விரைவில் முடிவு செய்யப்படும்.

    கவர்னர், முதல்-அமைச்சர் மற்றும் சுற்றுலா துறை அமைச்சர் ஆகியோர் விமான சேவையை விரைவில் தொடங்கவும், புதுச்சேரியை அதிக இடங்களுடன் விமானத்தின் மூலம் இணைக்கவும் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×