search icon
என் மலர்tooltip icon

    இஸ்ரேல்

    • காசாவின் மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டோர் ரபா நகரில் உள்ளனர்.
    • ரபாவில் இருந்து 6 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் முகாமிற்கு இடம் பெயர்ந்துள்ளனர்.

    இஸ்ரேல் ராணுவம் ரபா நகர் மீது தாக்குதலை நடத்த தொடங்கியுள்ளது. இதனால் மக்கள் தொகை அடர்ந்த ரபா நகரில் இருந்து சுமார் 6 லட்சம் மக்கள் முகாமிற்கு இடம் பெயர்ந்துள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.

    ரபா நகர் மீது தாக்குதல் நடத்தினால் ஆயுதம் வழங்கமாட்டோம் என இஸ்ரேலுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. முழு அளவில் ரபா மீது தரைவழி தாக்குதல் நடத்தக்கூடாது என அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகள் வலியுறுத்திய நிலையில் இஸ்ரேல், சிறிய அளவிலான வரையறுக்கப்பட்ட தாக்குதல் நடத்தப்படும் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில் ரபா மீதான தாக்குதல் தொடரும், கூடுதல் படைகள் ரபா நகருக்குள் நுழையும் என இஸ்ரேல் நாட்டின் பாதுகாப்புத்துறை மந்திரி யோவ் காலன்ட் தெரிவித்துள்ளார். மேலும், ரபாவில் உள்ள ஹமாஸ் அமைப்பின் சுரங்கங்களை அழித்து, 20-க்கும் மேற்பட்ட ஹமாஸ் அமைப்பினரை கொன்றதாகவும் தெரிவித்துள்ளார்.

    இதற்கிடையே ரபா மீது தாக்குதல் நடத்தப்படும் நிலையில் காசா முனையின் மற்ற பகுதிகளில் ஹமாஸ் அமைப்பினர் ஒன்றிணைந்து இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவதாக கூறப்படுகிறது. அப்படி தாக்குதல் நடத்துபவர்களை ஒழித்து கட்டியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

    ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக லெபனானில் இருந்துக்கு 20-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மூலம் இஸ்ரேல் நோக்கி தாக்குதல் நடத்தியதாக ஹிஸ்புல்லா அமைப்பு தெரிவித்துள்ளது.

    • தாக்குதலுக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
    • பலியானவரின் பெயர் விபரம் இன்னும் வெளியிடப்படவில்லை.

    காசா:

    இஸ்ரேல் காசா மீது தாக்குதல் நடத்த தொடங்கி 6 மாதங்களை கடந்துவிட்டது. இஸ்ரேல் படையினர் நடத்தி வரும் கடுமையான தாக்குதலுக்கு பெண்கள், குழந்தைகள் உள்பட பலியானவர்கள் எண்ணிக்கை 35 ஆயிரத்தை தாண்டி உள்ளது.

    இந்நிலையில் ஐக்கிய நாடுகள் சபையில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் காசாவின் ரபா நகரில் உள்ள மருத்துவமனைக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் பயணித்த கார் தாக்குதலுக்கு உள்ளானது. இதில் அவர் கொல்லப்பட்டார். 

    அவர் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புத் துறையின் (டி.எஸ்.எஸ்.) ஊழியர் ஆவார். பலியானவரின் பெயர் விபரம் இன்னும் வெளியிடப்படவில்லை. என்றாலும், அவர் இந்தியாவைச் சேர்ந்தவர் என்றும், முன்னாள் இந்திய ராணுவ வீரர் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அவருடன் பயணித்த மற்றொரு ஊழியர் படுகாயமடைந்தார். அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த தாக்குதலுக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:-

    ஐ.நா. பணியாளர்கள் மீதான அனைத்து தாக்குதல்களையும் நான் கண்டிக்கிறேன். மனிதாபிமான அடிப்படையில் உடனடியாக போரை நிறுத்தவும் அனைத்து பணயக் கைதிகளை விடுவிக்கவும் மீண்டும் வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இந்த தாக்குதல் குறித்து ஐ.நா. பொதுச்செயலாளரின் துணை செய்தி தொடர்பாளர் பர்ஹான் ஹக் கூறும்போது, "காசாவில் பாதுகாப்பு நிலைமைகளை மதிப்பிடுவதற்காக ஐநா ஊழியர்கள் வெவ்வேறு இடங்களுக்குச் செல்வார்கள். அவர்களின் வழக்கமான வேலையின் ஒரு பகுதியாக இருவரும் காரில் மருத்துவமனைக்குச் சென்றனர். அது ரபாவில் உள்ள ஐரோப்பிய மருத்துவமனை. அவர்களது வாகனம் எப்படி தாக்கப்பட்டது என்பது குறித்து விவரங்களை சேகரித்து வருகிறோம். சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இருந்து அறிக்கைகள் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்" என்றார்


    • மத்திய காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 8 குழந்தைகள் உட்பட 19 பேர் கொல்லப்பட்டனர்.
    • அடையாளம் காண்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    காசா:

    இஸ்ரேல் ராணுவத்தினருக்கும் பாலஸ்தீன ஆயுதக் குழுவினருக்கும் இடையே தீவிர சண்டை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தனது தாக்குதல் நடவடிக்கையை இஸ்ரேல் தீவிரப்படுத்தி உள்ளது. கரம் ஷாலோம் எல்லை வாசலில் 4 ராக்கெட்டுகள் வீசப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இதில் ஒன்று ராணுவத்தால் அழிக்கப்பட்டது. மீதமுள்ள 3 ராக்கெட்டுகள் வெறிச்சோடிய பகுதிகளில் விழுந்தன. இந்த தாக்குதலில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.


    காசா நகரில் அல்ஷிபா மருத்துவமனை வளாகத்தில் உள்ள 3 புதைகுழிகளில் இருந்து 80 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக காசா சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. மத்திய காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 8 குழந்தைகள் உட்பட 19 பேர் கொல்லப்பட்டனர்.

    இறந்தவர்களின் உடல்கள் அங்குள்ள ஆஸ்ப த்திரியில் வைக்கப்பட்டுள்ளன. அவர்களை அடையாளம் காண்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. காயம் அடைந்த சிறுவர்கள் உள்பட பலரும் ஆஸ்பத்திரி வளாகத்தில் திரண்டு, இறந்த உறவினர்களின் உடல்களை அடையாளம் காண்பதற்காக காத்து நின்றனர்.

    • போரை நிறுத்த வேண்டும் என உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.
    • ஒழிக்கும் வரை தாக்குதல் தொடரும் என நேட்டன் யாகு தெரிவித்தார்.

    காசா:

    காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினர் கடந்த அக்டோபர் மாதம் இஸ்ரேலுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினர். இதில் 1,200-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

    மேலும் அவர்கள் நூற்றுக்கணக்கானோரை பணய கைதிகளாகவும் கடத்திச் சென்றனர். இதற்கு பதிலடியாக காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. இந்த போர் 7 மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இதில் பாலஸ்தீனம் தரப்பில் இதுவரை சுமார் 34 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். மேலும் காசாவுக்குள் செல்லும் எல்லைகள் அனைத்தையும் இஸ்ரேல் முடக்கி உள்ளது. எனவே வெளிநாட்டு நிவாரண பொருட்கள் கிடைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டது.

    இதனால் அத்தியாவசிய பொருட்களுக்கு அங்கு கடும் பற்றாக்குறை நிலவுகிறது. இதற்கிடையே இந்த போரை நிறுத்த வேண்டும் என உலக நாடுகள் பலவும் வலியுறுத்தி வருகின்றன.

    அதன்படி காசா போர் நிறுத்தம் தொடர்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபட இஸ்ரேலுக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்திருந்தது.

    இதன்மூலம் போர் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்த்த நிலையில் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தினர். இதில் இஸ்ரேல் ராணுவ வீரர்கள் 3 பேர் பலியாகினர். மேலும் 10 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது.

    இதற்கு பதிலடியாக இஸ்ரேலும் காசாவின் ரபா பகுதியில் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் ஒரு குழந்தை உள்பட 19 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து காசா போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தையை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாகு நிராகரித்தார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில், இப்போது படைகளை பின்வாங்கினால் பதுங்கி இருக்கும் ஹமாஸ் அமைப்பினர் மீண்டும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவார்கள். எனவே அவர்களை முற்றிலும் ஒழிக்கும் வரை தாக்குதல் தொடரும் என நேட்டன் யாகு தெரிவித்தார்.

    மேலும் ரபா பகுதியில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறும் அவர் அறிவுறுத்தி உள்ளார். இதனால் ரபா நகருக்குள் ராணுவத்தை அனுப்பி தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டமிட்டு இருப்பதாக அங்குள்ள ஊடகங்கள் கூறுகின்றன.

    அமெரிக்காவின் எச்சரிக்கையையும் மீறி இஸ்ரேல் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதால் அங்கு பதற்றம் தீவிரம் அடைந்துள்ளது.

    • ஏழு மாதங்களாக இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போர் நடைபெற்று வரகிறது.
    • 150-க்கும் மேற்பட்ட பிணைக்கைதிகள் இன்னும் மீட்கப்படாமல் உள்ளனர்.

    அமெரிக்காவின் வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன் மத்திய கிழக்கு நாடுகளில் சுற்றுப் பயணம் செய்து வருகிறார். சவுதி அரேபியா சென்றிருந்த அவர், இன்று இஸ்ரேல் சென்றார்.

    இஸ்ரேல்- ஹமாஸ் இடையே சண்டை தொடங்கியதில் இருந்து ஏழாவது முறையாக இஸ்ரேல் சென்றுள்ளார். இஸ்ரேல் சென்றுள்ள அவர் அங்குள்ள முக்கிய தலைவர்கள் சந்தித்து பேசினார்.

    அப்போது இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் போர் நிறுத்தத்திற்கான உடன்படிக்கையை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

    மேலும், இது பிணைக்கைதிகளை விடுவிக்கவும், ஏழு மாதங்களாக நடந்து வரும் போரை நிறுத்துவதற்கும் வழிவகுக்கும்.

    பிணைக்கைதிகளை விடுவிக்கவும், போர்நிறுத்தத்தைப் கொண்டு வரவும், அதை இப்போதே நடைமுறை படுத்தவும் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். அது அடையப்படாமல் இருப்பதற்கு ஒரே காரணம் ஹமாஸ்தான்.

    பரிந்துரை மேசை மீது உள்ளது. தாமதம் இல்லை. சாக்குபோக்க இல்லை என நாங்கள் கூறுகிறோம். இதற்கான நேரம் இது. இஸ்ரேல்- ஹமாஸ் இடையிலான உடன்படிக்கை உணவு, மருந்து பொருட்கள், குடிநீர் போன்றவை காசாவிற்கு எடுத்துச் செல்ல அனுமதிக்கும். இவ்வாறு பிளிங்கள் தெரிவித்துள்ளார்.

    • ரபா மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் தீவிரம் காட்டி வருகிறது.
    • இஸ்ரேலின் நிபந்தனையை ஹமாஸ் அமைப்பு ஏற்குமா என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    காசா:

    பாலஸ்தீனத்தின் காசாமுனை மீது இஸ்ரேல் நடத்தி வரும் போர் 6 மாதங்களுக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது.

    ஹமாஸ் அமைப்பினர் குறிவைத்து நடத்தி வரும் தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உள்பட 34 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

    காசாவின் வடக்கு, மத்திய பகுதிகளில் தரைவழித் தாக்குதல் நடத்தியதுபோல் தற்போது தெற்கில் உள்ள ரபா நகரில் தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது.

    காசா மீதான தாக்குதலால் வடக்கு, மத்திய பகுதிகளில் இருந்து மக்கள் பெரும்பாலானோர் ரபா எல்லையில் தஞ்சமடைந்துஉள்ளனர். அங்கு தரைவழி தாக்குதல் நடத்துவது மிகப்பெரிய அளவில் உயிர் சேதத்தை ஏற்படுத்தும் என்று அமெரிக்கா, எகிப்து உள்ளிட்ட நாடுகள் எச்சரித்து உள்ளன.

    ஆனால் ரபா மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் தீவிரம் காட்டி வருகிறது. இதற்கிடையே ஹமாஸ் அமைப்பினரிடம் உள்ள இஸ்ரேல் பிணைக் கைதிகளை மீட்பதற்கான பேச்சுவார்த்தை நடந்து வரும் சூழலில், பிணைக் கைதிகளை விடுவிக்க ஹமாசுக்கு இதுவே கடைசி வாய்ப்பு என்று இஸ்ரேல் தெரிவித்து போர் நிறுத்த முன்மொழிவை அளித்துஉள்ளது.

    இந்த நிலையில் போர் நிறுத்தம் குறித்து ஹமாஸ் தரப்பு கூறும்போது, இஸ்ரேலின் சமீபத்திய போர்நிறுத்த முன்மொழிவை பெற்றோம். அதற்கு பதிலைச் சமர்ப்பிப்பதற்கு முன் அதை ஆய்வு செய்து வருகிறோம் என்று தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் நிபந்தனையை ஹமாஸ் அமைப்பு ஏற்குமா என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஏற்கனவே அமல்படுத்தப்பட்ட போர் நிறுத்தத்தின் போது 100-க்கும் மேற்பட்ட பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஹமாஸ் அமைப்பிற்கு எதிராக போர் பிரகடனம் செய்தது.
    • பொது மக்கள் அந்த பகுதியில் இருந்து வெளியேற உத்தரவு.

    கடந்த ஆண்டு அக்போடர் மாத துவக்கத்தில் இஸ்ரேல் நாட்டிற்குள் அத்துமீறி நுழைந்த ஹமாஸ் அமைப்பினர், கண்ணில் தென்பட்டவர்களை கண்மூடித்தனமாக சுட்டுக் கொன்றது. மேலும், 200-க்கும் மேற்பட்டோரை பிணைக்கைதிகளாக பிடித்து சென்றது.

    இந்த கொடூர சம்பவம் காரணமாக ஆத்திரம் அடைந்த இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பிற்கு எதிராக போர் பிரகடனம் செய்து காசா மீது தாக்குதல் நடத்த துவங்கியது. கடந்த ஏழு மாதங்களாக காசா மீது தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் காசா எல்லையின் வடக்கில் உள்ள பெய்ட் லஹியா நகரத்தில் வசிக்கும் பொது மக்கள் விரைந்து அந்த பகுதியில் இருந்து வெளியேற உத்தரவிட்டுள்ளது.

    புதிய திட்டமிடலின் கீழ் பெய்ட் லஹியாவில் உள்ள ஹமாஸ் உள்கட்டமைப்பு பகுதிகள் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்பட இருப்பதால் இந்த அறிவிப்பை இஸ்ரேல் பாதுகாப்பு படைகளின் செய்தி தொடர்பாளர் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    "நீங்கள் மிகவும் அபாயகரமான போர் மண்டலத்தில் இருக்கின்றீர்கள். உங்களை காப்பாற்றிக் கொள்ள உடனடியாக இந்த பகுதியில் இருந்து வெளியேறிவிடுங்கள்," என்று இஸ்ரேல் பாதுகாப்பு படைகளின் செய்தி தொடர்பாளர் அவிச்சே அட்ரே குறிப்பிட்டுள்ளார். 

    • ஹஸ்புல்லா இயக்கத்தினர் இஸ்ரேல் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.
    • லெபனானில் இருந்து வடக்கு இஸ்ரேல் பகுதிக்குள் 35 ஏவுகணைகள் வீசப்பட்டன.

    லெபனானில் செயல்படும் ஹஸ்புல்லா இயக்கத்தினர் இஸ்ரேல் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது. இந்த வடக்கு இஸ்ரேலில் உள்ள ராணுவ தலைமையகம் மீது ராக்கெட்டுகளை ஏவியதாக ஹஸ்புல்லா இயக்கம் தெரிவித்துள்ளது.

    தெற்கு லெபனானில் உள்ள கிராமங்களை குறி வைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்த இயக்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இஸ்ரேல் ராணுவம் கூறும்போது, லெபனானில் இருந்து வடக்கு இஸ்ரேல் பகுதிக்குள் 35 ஏவுகணைகள் வீசப்பட்டன. அந்த ஏவுகணைகளை இஸ்ரேல் ராணுவம் தாக்கி அழித்தது என்று தெரிவித்தது. 

    • கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7-ந்தேதி ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் நாட்டிற்குள் புகுந்து தாக்குதல்.
    • 1200 பேரை கொன்று குவித்ததுடன், 250 பேரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர்.

    ஹமாஸ் அமைப்பினர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7-ந்தேதி திடீரென காசா எல்லையைத் தாண்டி இஸ்ரேல் நாட்டிற்குள் நுழைந்தனர். இஸ்ரேல் நாட்டிற்குள் நுழைந்த அவர்கள் கண்ணில் தென்பட்டவர்களையெல்லாம் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர். மேலும், 250 பேரை பிணைக்கைதிகளை பிடித்துக் சென்றனர்.

    இதனால் ஆத்திரம் அடைந்த இஸ்ரேல், ஹமாஸ்க்கு எதிராக போர் பிரகடனம் செய்து காசா மீது தாக்குதல் நடத்திய தொடங்கியது. ஏழு மாதங்களாக இஸ்ரேல் காசா மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

    இஸ்ரேல் எல்லைக்குள் ஹமாஸ் அமைப்பினர் திடீரென புகுந்து தாக்குதல் நடத்தியதற்கு, இஸ்ரேல் ராணுவத்தின் உளவுத்துறை தோல்வியும் முக்கிய காரணம் என குற்றம் சாட்டப்பட்டு வந்தது. ஆனால், இதுவரை உயர்அதிகாரிகளும் பொறுப்பேற்று தங்களது பதவியை ராஜானாமா செய்யாமல் இருந்து வந்தனர்.

    இந்த நிலையில் இன்று ராணுவத்தின் உளவுத்துறை தலைவர் மேஜர் ஜெனரல் அஹரோன் ஹலிவா தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

    இஸ்ரேல் ராணுவத்தின் தலைசிறந்த பாதுகாப்பு அமைப்பை முறியடித்து இஸ்ரேல் நாட்டிற்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதை தடுக்க முடியாததற்கு தான் பொறுப்பேற்பதாக தாக்குதல் நடைபெற்ற பிறகு ஹலிவா தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    அக்டோபர் மாதம் 7-ந்தேதி ஹமாஸ் அமைப்பினர் நடத்திய கொடூர தாக்குதலில் 1200 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இஸ்ரேல் காசா மீது நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை 32 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இஸ்ரேல், ஈரான் நாடுகளுக்கு இடையே போர் மூள்வதற்கான சூழல் காணப்படுகிறது.
    • அமெரிக்க அரசு இஸ்ரேல் நாட்டிற்கு 13 பில்லியன் மதிப்பிலான ராணுவ உதவிக்கு ஒப்புதல் அளித்தது.

    டெல் அவிவ்:

    இஸ்ரேல் மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே சில வாரமாகவே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மத்திய கிழக்கு பகுதியில் போருக்கான பதற்ற நிலை நீடித்து வருகிறது.

    ஈரான் சில மாதங்களில் அணு ஆயுதங்களைக் கட்டமைக்க உள்ளது என இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் குற்றம்சாட்டின.

    இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ள ஈரான், நாங்கள் தற்போது மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள், அமைதிக்காகவும், குடிமக்களின் நன்மைக்காகவும் என தெரிவித்துள்ளது.

    ஈராக் நாட்டின் மத்திய பகுதியில் அமைந்த ராணுவ தளத்தின்மீது இரவோடு இரவாக இஸ்ரேல் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியது. இந்த தளத்தில் ராணுவ வீரர்கள், ஈரான் ஆதரவு பெற்ற துணைராணுவப் படையினர் தங்கி உள்ளனர். இஸ்ரேல், ஈரான் நாடுகளுக்கு இடையே போர் மூள்வதற்கான சூழல் காணப்படும் சூழலில் இது 3-வது உலகப்போருக்கு வழிவகுக்குமோ என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.

    இதற்கிடையே, இஸ்ரேலின் 'அயர்ன் டோம்' வான் பாதுகாப்பு அமைப்பு உள்பட இஸ்ரேல் ராணுவத்தின் பாதுகாப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, அமெரிக்க அரசு இஸ்ரேல் நாட்டிற்கு 13 பில்லியன் மதிப்பிலான ராணுவ உதவிக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

    இந்நிலையில், ராணுவ உதவிக்கு ஒப்புதல் அளித்துள்ள அமெரிக்க செனட் சபைக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஆகியோர் நன்றி தெரிவித்தனர்.

    இதனால் இஸ்ரேல், ஈரான் இடையிலான போர் பதற்றம் தணிவதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது.

    • வடக்கு இஸ்ரேலில் உள்ள ராணுவ தளத்தை குறிவைத்து ஹிஸ்புல்லா இயக்கம் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.
    • இஸ்ரேலின் மேற்கே கலிலீ பகுதியில் உள்ள பெத்வாயின் கிராமத்தில் சமூகநல கூடத்தின் மீது ஹிஸ்புல்லா இயக்கம் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.

    இஸ்ரேல்-காசாவின் ஹமாஸ் அமைப்பு இடையேயான போரில் ஹமாசுக்கு ஆதரவாக லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா இயக்கம் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

    இந்த நிலையில் வடக்கு இஸ்ரேலில் உள்ள ராணுவ தளத்தை குறிவைத்து ஹிஸ்புல்லா இயக்கம் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் 14 வீரர்கள் காயம் அடைந்தனர்.

    இதற்கிடையே இஸ்ரேலின் மேற்கே கலிலீ பகுதியில் உள்ள பெத்வாயின் கிராமத்தில் சமூகநல கூடத்தின் மீது ஹிஸ்புல்லா இயக்கம் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் 14 பேர் காயம் அடைந்தனர்.

    இதற்கு பதிலடியாக இஸ்ரேல் எல்லையையொட்டி உள்ள லெபனான் நாட்டின் ஐடா ஆஷ் ஷாப் கிராமத்தில் வளாகம் ஒன்றிற்குள் பதுங்கியிருந்த ஹிஸ்புல்லா அமைப்பினர் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது.

    • 17 இந்தியர்கள் உட்பட 25 மாலுமிகள் உள்ளனர்.
    • சரக்கு கப்பலை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தல்.

    இஸ்ரேல்- ஈரான் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதலை நடத்தியது. இதற்கிடையே நேற்று அரபிக்கடலில் ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் சென்றுகொண்டிருந்த சரக்கு கப்பலை ஈரான் சிறைபிடித்தது.

    இந்த கப்பல் இஸ்ரேலை சேர்ந்த தொழிலதிபருக்கு தொடர்புடையது. ஐக்கிய அரபு எமிரேட்சில் இருந்து இந்தியா நோக்கி சென்று கொண்டிருந்த கப்பலுக்குள் ஹெலிகாப்டர் மூலம் ஆயுதங்களுடன் இறங்கிய ஈரான் கடற்படை கமாண்டோக்கள் கப்பலை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இதில் 17 இந்தியர்கள் உட்பட 25 மாலுமிகள் உள்ளனர். அவர்களை ஈரான் கடற்படை சிறை பிடித்துள்ளது.

    கப்பலில் உள்ள இந்தியர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. இதற்காக பேச்சுவார்த்தை நடத்த ஈரானுடன் இந்தியா தொடர்பில் உள்ளது. இந்தியர்களின் பாதுகாப்பு, நலன் மற்றும் முன்கூட்டியே விடுதலை ஆகியவற்றை உறுதி செய்வதற்காக, ஈரான் மற்றும் புதுடெல்லியில் உள்ள தூதரகங்கள் மூலம் ஈரான் அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. 

    இந்தியாவின் கோரிக்கையை ஏற்று இந்திய மாலுமிகள் 17 பேரை ஈரான் விடுவிக்குமா என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே சரக்கு கப்பலை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் அட்ரியன் வாட்சன் கூறும்போது, "சர்வதேச கடற்பகுதியில் கப்பலை ஈரான் கைப்பற்றியதை நாங்கள் கடுமையாகக் கண்டிக்கிறோம். கப்பலின் குழுவில் இந்தியா, பிலிப்பைன்ஸ், பாகிஸ்தான், ரஷ்யா, எஸ்டோனிய நாட்டவர்கள் உள்ளனர். கப்பலையும் அதன் சர்வதேச பணியாளர்களையும் உடனடியாக விடுவிக்க ஈரானுக்கு அழைப்பு விடுக்கிறோம் என்றார்.

    ×