இந்தியா

கர்நாடகாவில் ஆட்சியை கவிழ்க்க பா.ஜ.க. பேரம் பேசியது உண்மை- டி.கே.சிவகுமார்

Published On 2024-11-15 06:21 GMT   |   Update On 2024-11-15 06:21 GMT
  • பா.ஜ.க. தலைவர்கள் எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்களிடம் பேரம் பேசியுள்ளனர்.
  • 50 பேரிடம் பேசி தலா ரூ.50 கோடி வழங்குவதாக கூறியுள்ளனர்.

பெங்களூரு:

முதல்-மந்திரி சித்தராமையா நேற்று முன்தினம் மைசூருவில் ஒரு நிகழ்ச்சியில் பேசினார். அவர் பேசுகையில், எனது அரசை கவிழ்க்க காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 50 பேரை விலைக்கு வாங்க தலா ரூ.50 கோடி வழங்க பா.ஜ.க. முன்வந்தது.

ஆனால் எங்கள் எம்.எல்.ஏ.க்கள் பணத்தை வாங்க மறுத்துவிட்டனர். இவ்வளவு பணம் பா.ஜ.க.வுக்கு எங்கிருந்து வந்தது ? என பரபரப்பு தகவலை வெளிப்படுத்தினார்.


இந்த நிலையில் இதை துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமாரும் ஒப்புக்கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் நேற்று பெங்களூவில் நிருபர்களிடம் கூறியதாவது:-

கர்நாடகாவில் 2008-ம் ஆண்டு ஆபரேசன் தாமரை திட்டத்தை கொண்டு வந்து 2019-ம் ஆண்டு காங்கிரஸ்-ஜே.டி.எஸ் கூட்டணி அரசாங்கத்தை கவிழ்த்தார்கள். இதில் 17 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க. செல்வாக்கின் கீழ் சென்றதால் பி.எஸ்.எடியூரப்பா தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நிர்வாகத்திற்கு வழிவகுத்தது.

தற்போது காங்கிரஸ் கட்சி 137 இடங்களில் பெரும்பான்மையுடன் உள்ளது. தற்போது மீண்டும் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க ஆபரேஷன் தாமரை தொடர்பாக பா.ஜ.க. தலைவர்கள் எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்களிடம் பேரம் பேசியுள்ளனர்.

50 பேரிடம் பேசி தலா ரூ.50 கோடி வழங்குவதாக கூறியுள்ளனர். இதுபற்றி எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் முதல்-மந்திரி சித்தராமையா மற்றும் என்னிடம் கூறினர். அதை தான் சித்தராமையா ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நான் பிறகு பேசுகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


இந்த குற்றச்சாட்டை கர்நாடக பா.ஜ.க. முற்றிலுமாக மறுத்துள்ளது. இதுகுறித்து கர்நாடக பா.ஜ.க. கட்சி தலைவர் விஜயேந்திரா பெங்களூருவில் நிருபர்களிடம் கூறியதாவது:-

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 50 பேருக்கு தலா ரூ.50 கோடி கொடுப்பதாக பா.ஜ.க.வினர் பேரம் பேசியதாக முதல்-மந்திரி சித்தராமையா மற்றும் துணை முதல்-மந்திரி டி.கே.சிவகுமார் ஆகியோர் குற்றம்சாட்டியுள்ளனர். இதற்கு ஏதாவது ஆதாரம் உள்ளதா?. நாங்கள் அவ்வாறு எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை.

இது பொய் குற்றச்சாட்டு என்பது குறைந்தபட்ச அரசியல் அறிவு உள்ளவர்களுக்கு தெரியும். பொய் செய்திகளை பரப்புவது காங்கிரசின் தொழிலாக மாறிவிட்டது. மூடா நில முறைகேடு விவகாரத்தில் விசாரணை தீவிரம் அடைந்துள்ளதால், சித்தராமையா இப்படி பேசி மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார். அதிகாரத்தை இழந்துவிடுவோம் என்ற பயத்தில் சித்தராமையா வாய்க்கு வந்தபடி பேசுகிறார்.

ரூ.50 கோடி விஷயத்தில் அமலாக்கத்துறையினர் உடனடியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி இதன் உண்மைகளை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News