வீட்டில் செல்லமாக வளர்த்த நாய்க்கு இறுதி சடங்கு
- நாய் இறந்ததால் நரசிம்மலு, அவரது மனைவி பத்மா கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.
- இறந்த நாயை குளிப்பாட்டி முறைப்படி இறுதி சடங்கு செய்தனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் சித்திபேட்டை அடுத்த கோபால்பூரை சேர்ந்தவர் நரசிம்மலு. இவரது மனைவி பத்மா. தம்பதிக்கு மானசா (வயது 14) என்ற மகள் இருந்தாள்.
மகள் பிறந்த போது நரசிம்மலு நாய் குட்டி ஒன்றை வாங்கி வந்து ஜாக்கி என பெயர் வைத்து செல்லமாக வளர்த்து வந்தனர்.
மானசா எப்போது ஜாக்கியிடம் விளையாடிய படி அதிக பாசத்துடன் இருந்தார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு மானசாவுக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டு இறந்தார். மகள் இறந்தது முதல் ஜாக்கியை மகளாகவே பாவித்து வளர்த்து வந்தனர். இந்த நிலையில் வயது முதிர்வு காரணமாக ஜாக்கி நேற்று முன்தினம் இறந்தது.
தாங்கள் மகளாக பாதித்து வளர்த்து வந்த நாய் இறந்ததால் நரசிம்மலு, அவரது மனைவி பத்மா கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.
தங்களின் மகள் இறந்த போது எப்படி இறுதி சடங்கு செய்தார்களோ அதே போல் ஜாக்கிக்கும் இறுதி சடங்கு செய்ய முடிவு செய்தனர்.
அதன்படி இறந்த நாயை குளிப்பாட்டி முறைப்படி இறுதி சடங்கு செய்தனர். மேலும் வரும் 10-ந் தேதி வரை இறந்த ஜாக்கியின் படத்தை வைத்து பாரம்பரிய முறைப்படி அனைத்து சடங்குகளையும் செய்ய தம்பதியினர் முடிவு செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.