கர்நாடகா பூங்காவில் 100 சிறுத்தை குட்டிகளுக்கு தாயாக மாறிய பெண்
- கடந்த 22 ஆண்டுகளாக சிறுத்தை குட்டிகளை வளர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
- சாவித்ரம்மா உள்ளே நுழைந்ததும் சிறுத்தை குட்டிகள் அவரை நோக்கி துள்ளி குதித்து ஓடி வருகின்றன.
கர்நாடக மாநிலம் பன்னர்கட்டா மிருககாட்சி சாலையில் ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. இந்த மிருகக்காட்சி சாலையில் தாயை இழந்த மற்றும் பிரிந்த காட்டு விலங்குகள் பராமரிக்கப்படுகின்றன.
சிங்கம், சிறுத்தை, புலி குட்டிகள் பராமரிப்பில் உள்ளன. இந்த பணியில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சாவித்ரம்மா என்ற பெண் ஈடுபட்டுள்ளார். கடந்த 22 ஆண்டுகளாக இவர் சிறுத்தை குட்டிகளை வளர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
ஒரே கடியால் மக்களை கொல்லும் காட்டு விலங்குகள் சாவித்ரம்மாவின் அன்பு பிடியில் குழந்தை போல நடந்து கொள்கின்றன.
சாவித்ரம்மா உள்ளே நுழைந்ததும் சிறுத்தை குட்டிகள் அவரை நோக்கி துள்ளி குதித்து ஓடி வருகின்றன. அவற்றை அப்படியே வாரி எடுத்து பால் குடிச்சிட்டியா பசிக்கிறதா என கேட்டு அன்பை பொழிகிறார். கடந்த 22 ஆண்டுகளில் இவர் 100க்கும் மேற்பட்ட சிங்கம் சிறுத்தை புலிக் குட்டிகளை வளர்த்துள்ளார்.
குட்டிகள் பெரிதாக வளர்ந்ததும் பூங்காக்கள் மற்றும் அடர்ந்த வனப்பகுதிகளில் விடப்படுகின்றன.
நானும் எனது கணவரும் மிருகக்காட்சி சாலையில் பாதுகாவலராக பணியாற்றி வந்தோம். 2000-ம் ஆண்டில் எனது கணவர் இறந்துவிட்டார்.
2 குழந்தைகளுடன் நான் தவித்து வந்தேன். அப்போதுதான் மிருகக்காட்சி சாலையில் குட்டி விலங்குகளை வளர்க்கும் பொறுப்பு எனக்கு கிடைத்தது. தாயிடமிருந்து பிரிக்கப்பட்ட காட்டு விலங்கு குட்டிகள் சில நாட்கள் சாப்பிடாமல் இருக்கும் .
அவற்றை அரவணைத்து பால் கொடுப்பேன். அரை மணி நேரத்திற்கு ஒரு முறை குட்டிகளுக்கு பால் கொடுக்க வேண்டும். குட்டிகளை சிறியதாக இருக்கும் போது பாதுகாப்பாக கவனிக்க வேண்டும்.
நான் வெளியூர் செல்லும் நாட்களில் இந்த குட்டிகள் சரியாக பால் குடிப்பதில்லை. அப்போது போன் மூலம் ஸ்பீக்கரில் என்னை பேச சொல்வார்கள். என்னுடைய சத்தத்தை கேட்ட பிறகு தான் பால் குடிக்கும்.
குட்டிகள் வளர்ந்த பிறகு கூண்டில் அடைக்கப்பட்டு சரணாலயம் மற்றும் காடுகளுக்கு கொண்டு செல்வார்கள். அப்போது குழந்தைகளை பிரிவது போன்ற ஏக்கம் எனக்குள் ஏற்படும்.
அந்த விலங்குகளிடமும் அதே உணர்வை காண முடியும். அதிக அளவில் சிறுத்தை குட்டிகள் தான் வளர்த்துள்ளேன்.
என்னை நம்பி விடுகிறார்கள் நான் அவற்றை வளர்த்து தைரியமாக வெளியே அனுப்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.