தமிழ்நாட்டில் 3-ம் வகுப்பு மாணவர்களில் பாதி பேருக்கு தமிழ் சரியாக படிக்க தெரியவில்லை: ஆய்வில் அதிர்ச்சி தகவல்
- 52 சதவீத மாணவர்களால் நாட்காட்டியில் தேதி மற்றும் மாதத்தை கூட சரியாக அடையாளம் காண முடியவில்லை.
- மாணவர்களுக்கு கடிதங்கள் வாசிப்பது மற்றும் வார்த்தைகளை படிப்பது ஆரம்ப நிலையில் ஒரு பிரச்சினையாக உள்ளது
சென்னை:
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி.) சமீபத்தில் நாடு முழுவதும் ஒரு ஆய்வை நடத்தியது. 86 ஆயிரம் மாணவர்களிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் தமிழ்நாட்டில் 336 பள்ளிகளை சேர்ந்த 3-ம் வகுப்பு மாணவர்கள் 2,937 பேர் கலந்து கொண்டனர்.
3-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் அடிப்படை கற்றல் ஆய்வு குறித்து நடத்தப்பட்ட இந்த ஆய்வில் தமிழ்நாட்டில் உள்ள 3-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பாதி பேருக்கு தமிழ் சரியாக படிக்க தெரியாது என்று தெரிய வந்துள்ளது.
மேலும் 20 சதவீதம் பேர் மட்டுமே 3-ம் நிலை தமிழ் உரையை புரிந்து கொள்வதில் குறைந்தபட்ச தேர்ச்சி பெற்றிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதேபோல தமிழ்நாட்டில் 23 சதவீதம் மாணவர்கள் மட்டுமே எண்களை கண்டறிதல், பெருக்கல், வகுத்தல், எண்கள் மற்றும் வடிவங்களை கொண்ட அடிப்படைகளை கண்டறிதல், காலண்டர்களில் தேதிகள் மற்றும் மாதங்களை கண்டறிதல் போன்ற குறைந்தபட்ச தேர்ச்சி பெற்றுள்ளனர்.
52 சதவீத மாணவர்களால் நாட்காட்டியில் தேதி மற்றும் மாதத்தை கூட சரியாக அடையாளம் காண முடியவில்லை. இதற்கு நேர்மாறாக தென்மாநிலங்களை சேர்ந்த 3-ம் வகுப்பு மாணவர்களில் 40 சதவீதத்துக்கும் அதிகமானோர் எண்ணிக்கையில் குறைந்தபட்ச தேர்ச்சி பெற்றுள்ளனர்.
என்.சி.இ.ஆர்.டி. தனது அறிக்கையில் 46 சதவீத மாணவர்களால் மட்டுமே 80 முதல் 100 எழுத்துக்களை தமிழில் சரியாகவும், சரளமாகவும் படிக்க முடிந்தது என்று கூறியுள்ளது. 47 சதவீத மாணவர்களால் மட்டுமே 80 சதவீத ஆங்கில வார்த்தைகளை சரளமாக படிக்க முடிந்தது என்று கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து நிபுணர்கள் கூறுகையில், தொற்று நோய் பரவலால் பொதுமுடக்கம் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்தது இதற்கு முக்கிய காரணம் ஆகும். மேலும் தொடக்கப்பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை மற்றும் கற்பித்தல், கற்றல் நடவடிக்கைகளில் கண்காணிப்பு இல்லாதது ஆகியவை இதற்கு முக்கிய காரணங்கள் ஆகும் என்றனர்.
பள்ளி கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், மாணவர்களுக்கு கடிதங்கள் வாசிப்பது மற்றும் வார்த்தைகளை படிப்பது ஆரம்ப நிலையில் ஒரு பிரச்சினையாக உள்ளது. எண்ணும் எழுத்தும் திட்டம் மாணவர்களின் இந்த பிரச்சினையை தீர்க்கும் என்று நம்புகிறோம் என்றார்.