பெண்களுக்கு சரியான உரிமை கிடைக்க பொது சிவில் சட்டம் அவசியம்- ஜார்க்கண்ட் கவர்னர் பேட்டி
- ஜார்க்கண்ட் மக்கள் சிறப்பாகவும், எளிமையாகவும் வாழ்கின்றனர்.
- இந்தியாவிலேயே அதிக தாது சுரங்கம் ஜார்க்கண்டில் தான் இருக்கிறது.
திருப்பூர்:
பா.ஜ.க.வை சேர்ந்த முன்னாள் எம்.பி.யான சி.பி.ராதாகிருஷ்ணன் ஜார்க்கண்ட் மாநில கவர்னராக நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றார். தற்போது சொந்த ஊரான திருப்பூருக்கு வந்துள்ள அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஜார்க்கண்ட் மக்கள் சிறப்பாகவும், எளிமையாகவும் வாழ்கின்றனர்.பெரிதாக ஆசைப்படுவதில்லை.ஆசைப்படாததால் மகிழ்ச்சிகரமாக வாழ்கின்றனர். சிறு, குறு தொழில்கள் அங்கு குறைவு. பெரிய இரும்பு ஆலைகள் இருந்தும், சுரங்கம் இருந்தும் மக்கள் பின்தங்கியுள்ளனர்.மரங்களை தெய்வமாக வணங்கும் உயர்ந்த கலா சாரம் உள்ளது. மரங்களுக்காக பெரிய பண்டிகை கொண்டாடுவதை பார்த்து அசந்து போனேன்.
இந்தியாவிலேயே அதிக தாது சுரங்கம் ஜார்க்கண்டில் தான் இருக்கிறது. தங்கம், வைர சுரங்கம் தவிர மற்ற சுரங்கங்கள் அதிகம் உள்ளன.அனைவருக்கும் இந்தி தெரிந்துள்ளது. அதுமட்டுமல்ல, ஒவ்வொரு குழு மக்களுக்கும் தனித்தனி மொழி இருக்கின்றன.
தி.மு.க.,வை பொறுத்த வரை, பல்வேறு நிலையில், பலவகை நிலைப்பாட்டை எடுக்கும் கட்சி. மது இல்லாத தமிழகம் இருந்தால் மாநில வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது. மதுவிலக்கால் 6 மாதம் அல்லது ஓராண்டு மட்டும் அரசுக்கு சிரமமாக இருக்கும். அதன்பின் ஜி.எஸ்.டி., வரி வருவாய் வாயிலாக நிலைமை சீராகி விடும். மது பழக்கத்தால் சாதாரண மக்களுக்கு எவ்வித பயனும் இல்லை. சாராய ஆலை அதிபர்கள் மட்டுமே பயனடைகின்றனர்.
பூரண மதுவிலக்கு வேண்டும் என்ற சிந்தனையை நோக்கி ஒன்றுப்பட்டு உழைக்க வேண்டும். பெண்களுக்கு சரியான உரிமை கிடைக்க பொது சிவில் சட்டம் அவசியம். குறிப்பாக பொது சிவில் சட்டம் இஸ்லாமிய பெண்களுக்கு முழுமையான பாதுகாப்பு வழங்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.