சென்னையில் ஹோலி பண்டிகை கோலாகல கொண்டாட்டம்
- பல வண்ணப் பொடிகளை ஒருவர் மீது ஒருவர் தூவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
- சிலர் வண்ணப் பொடிகளை தண்ணீரில் கலந்து நண்பர்கள் மீது பீய்ச்சியடித்து மகிழ்ந்தனர்.
ராயபுரம்:
ஹோலி பண்டிகை நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னையில் வட மாநிலத்தவர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் ஹோலி கொண்டாட்டம் கோலாகலமாக நடந்தது.
வடமாநிலத்தவர் அதிகம் வசிக்கும் இடங்களில் ஒன்றான சவுகார்பேட்டை பகுதியில் காலை முதலே வண்ணப் பொடிகளுடன் இளைஞர்கள், இளம்பெண்கள் ஹோலி பண்டிகையை கொண்டாட தொடங்கினர்.
பல வண்ணப் பொடிகளை ஒருவர் மீது ஒருவர் தூவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். கைகுலுக்கி ஹோலி வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். சிலர் வண்ணப் பொடிகளை தண்ணீரில் கலந்து நண்பர்கள் மீது பீய்ச்சியடித்து மகிழ்ந்தனர். மேலும் இளைஞர்கள் வண்ணப் பொடிகளை தூவியபடி மோட்டார் சைக்கிள்களில் வலம் வந்தனர்.
இதேபோல் வடமாநிலத்தவர் அதிகம் உள்ள புரசைவாக்கம், எழும்பூர், வேப்பேரி, வண்ணாரப்பேட்டை, ராயபுரம், துறைமுகம், தி.நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் ஹோலி பண்டிகை மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. பல இடங்களில் அடுக்குமாடி குடியிருப்புகளில் ஒலி பெருக்கிகள் மூலம் பாடல்களை இசைக்க விட்டு இளைஞர்கள் இளம்பெண்கள் நடனம் ஆடியும் வண்ணப்பொடிகளை தூவியும் மகிழ்ந்தனர்.