தமிழ்நாடு (Tamil Nadu)

கிளாம்பாக்கத்தில் கட்டப்படும் பஸ் நிலையத்தில் அமைச்சர் சேகர்பாபு நேரில் ஆய்வு

Published On 2022-12-15 04:38 GMT   |   Update On 2022-12-15 04:38 GMT
  • பொங்கலுக்கு முன்பு பஸ் நிலையத்தை திறக்க முடியுமா என்று முயன்று பார்க்கலாம்.
  • பணிகள் முடியாததால் குறிப்பிட்ட தேதியை நிர்ணயிக்க முடியாது.

சென்னை:

சென்னை வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் 88 ஏக்கர் பரப்பளவில், ரூ.393.74 கோடி மதிப்பீட்டில் புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பஸ் நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பஸ் நிலைய பணிகள் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது.

இந்த நிலையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபுவுக்கு கூடுதல் இலாகாவாக சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் (சி.எம்.டி.ஏ.) ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னை பெருநகர வளர்ச்சி குழும பொறுப்பு கூடுதலாக கிடைத்ததை தொடர்ந்து அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று சென்னை கிளாம்பாக்கத்தில் கட்டப்படும் பஸ் நிலையத்துக்கு இன்று காலை நேரில் சென்று ஆய்வு செய்தார்.

பஸ் நிலையம் முழுவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்த அவர் அங்கு நடைபெற்று வரும் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். என்னென்ன பணிகள் முடிந்துள்ளன என்றும் என்னென்ன பணிகள் பாக்கி உள்ளன என்பது பற்றியும் அமைச்சர் பி.கே.சேகர்பாபுவிடம் அதிகாரிகள் விளக்கி கூறினார்கள்.

இதையடுத்து பணிகளை விரைவுபடுத்தி முடித்து பஸ் நிலையத்தை விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று அதிகாரிகளிடம் அமைச்சர் பி.கே.சேகர்பாபு கேட்டுக்கொண்டார்.

மேலும் பஸ் நிலையத்தில் கூடுதலாக குடிநீர், கழிவறை, இருக்கை வசதிகளை செய்யவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

பின்னர் அமைச்சர் பி.கே.சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-

கிளாம்பாக்கத்தில் கட்டப்பட்டு வரும் புதிய பஸ் நிலைய பணிகளை ஆய்வு செய்தேன். இந்த பணிகளை எவ்வளவு விரைவாக செய்து முடிக்க முடியுமோ அவ்வளவு விரைவாக செய்து முடிக்க அதிகாரிகளுக்கும், இந்த பணியின் ஒப்பந்ததாரர்களுக்கும், துறையின் சார்பில் பல்வேறு அறிவுறுத்தல்களை சொல்லி இருக்கிறேன். அவர்கள் இந்த பணிகளை விரைவு படுத்தி முடிப்பதாக சொல்லி இருக்கிறார்கள்.

88 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த பஸ் நிலையத்தில் மாநகர பஸ்கள், வெளியூர் செல்லும் விரைவு பஸ்கள், ஆம்னி பஸ்கள் என 285 பஸ்களை நிறுத்த முடியும். இந்த திட்டம் பயணிகளுக்கு மிகவும் பேரூதவியாக இருக்கும்.

பொங்கலுக்கு முன்பு பஸ் நிலையத்தை திறக்க முடியுமா என்று முயன்று பார்க்கலாம். ஆனால் பணிகள் முடியாததால் குறிப்பிட்ட தேதியை நிர்ணயிக்க முடியாது.

தற்போது பஸ் நிலையத்தில் அதிகாரிகள் அறிவுறுத்தலின் பேரில் புதிய பணிகளையும் மேற்கொள்ள வேண்டி உள்ளது. ஆனாலும் எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக இந்த பஸ் நிலையத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News