2026-ல் திராவிட கட்சிகள், பா.ஜ.க.-வுக்கு போட்டியாக 'புதிய கூட்டணி'
- 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்கிற முனைப்போடு விஜய் அரசியல் களத்தில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.
- 2 அணிகளுக்கு போட்டியாக பாரதிய ஜனதா கட்சியின் தலைமையில் 3-வது அணியும் களம் காண்கிறது.
சென்னை:
பாராளுமன்ற தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் தமிழகத்தில் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன.
தமிழ் திரை உலகின் முன்னணி நடிகராக திகழும் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ள விஜய் தேர்தலை சந்திக்க முழு வீச்சில் தயாராகி வருகிறார்.
இதற்கு முன்னோட்டமாக கடந்த ஆண்டு முதல் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொது தேர்வில் சட்டமன்ற தொகுதி வாரியாக சிறந்த மதிப்பெண்களை பெற்ற மாணவ-மாணவிகளுக்கு தனது கையால் பரிசு வழங்கி வருகிறார்.
இந்த ஆண்டும் அதற்கான விழா வருகிற 28-ந் தேதியும், அடுத்த மாதம் 3-ந்தேதியும் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது.
விஜயின் இந்த உதவி மற்றும் பாராட்டு எதிர்கால இளம் வாக்காளர்களாகிய மாணவ-மாணவிகளின் மத்தியிலும், அவர்களது பெற்றோர்களின் மத்தியிலும் வரவேற்பை பெற்றுள்ளது.
வருகிற சட்டமன்ற தேர்தலில் ஓட்டு போடுவதற்கு தகுதிவாய்ந்த லட்சக்கணக்கான இளைஞர்கள் பலரும் விஜயின் தீவிர ரசிகர்களாக உள்ளனர். இதையெல்லாம் தனக்கு சாதகமாக பயன்படுத்தி 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்கிற முனைப்போடு விஜய் அரசியல் களத்தில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.
தமிழக அரசியல் களத்தில் தி.மு.க. தலைமையில் ஒரு கூட்டணியும், அ.தி.மு.க. தலைமையில் இன்னொரு அணியும் உள்ளன.
இந்த 2 அணிகளுக்கு போட்டியாக பாரதிய ஜனதா கட்சியின் தலைமையில் 3-வது அணியும் களம் காண்கிறது. இந்த அணிகளுக்கெல்லாம் கடும் போட்டியை ஏற்படுத்தும் வகையில் விஜயின் அரசியல் நடவடிக்கைகள் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லட்சக்கணக்கான ரசிகர்கள், பெண்கள் மற்றும் பொதுவான வாக்காளர்கள் என பலதரப்பட்டவர்களும் விஜயின் அரசியல் வருகையை மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
இதுவே வருகிற சட்டமன்ற தேர்தலில் விஜயின் வெற்றிக்கு கை கொடுக்கும் என்று அரசியல் நோக்கர்களும் கருத்துக்களை கூறி வருகிறார்கள். இதுபோன்ற வாக்காளர்களால் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் 20 சதவீதம் அளவுக்கு வாக்குகளை அள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதே நேரத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமானுடன் விஜய் கைகோர்க்க வாய்ப்பு இருப்பதாகவும் பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டு நாம் தமிழர் கட்சி 8 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. இதனால் விஜய்யும், சீமானும் ஒன்று சேர்ந்து தேர்தலில் சந்தித்தால் அது தமிழக அரசியல் களத்தில் மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் என்றே கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இப்படி தமிழக வெற்றிக் கழகமும், நாம் தமிழர் கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிட்டால் அது நிச்சயம் திராவிட கட்சிகள் மற்றும் பா.ஜ.க.வுக்கு எதிரான புதிய கூட்டணியாக இருக்கும் என்றே கணிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் 28 சதவீத வாக்குகளை பெற்று இந்த புதிய கூட்டணி ஆட்சியை கைப்பற்றி ஆச்சரியத்தை ஏற்படுத்தவும் வாய்ப்பு இருப்பதாக அரசியல் நிபுணர்கள் கூறியுள்ளனர்.
விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் இருப்பவர்கள் அரசியல் களத்துக்கு புதியவர்கள். இதனால் அனுபவம் வாய்ந்த பலரையும் விஜய் தனது அரசியல் பயணத்துக்கு துணையாக சேர்த்துக் கொள்ள திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. அந்த வகையில் சீமானின் அரசியல் அனுபவம் விஜயின் தேர்தல் வெற்றிக்கு நிச்சயம் உதவும் என்றும் கூறப்படுகிறது.
கடந்த சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சியோடு கூட்டணி அமைப்பதற்கு அ.தி.மு.க. பெரிதும் விரும்பியது. ஆனால் சீமான் அதற்கு விருப்பம் தெரிவிக்கவில்லை. திராவிட கட்சிகளுடனும், தேசிய கட்சிகளுடனும் கூட்டணி இல்லை என்று தெரிவித்துள்ள விஜய் புதியவர்களோடு சேர்ந்து அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்று ஏற்கனவே கூறியுள்ளார்.
எனவே விஜயுடனான கூட்டணி என்பதில் சீமானுக்கும் எந்தவித சங்கடத்தையும் ஏற்படுத்தாது என்பதே நாம் தமிழர் கட்சியினரின் கருத்தாக உள்ளது.
இப்படி இருவரும் கைகோர்த்தால் 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் களத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. இதனால் தமிழகத்தில் புதிய அரசியல் மாற்றம் ஏற்படுமா? என்கிற எதிர்பார்ப்பும் ஏற்படத் தொடங்கி உள்ளது.