முதல் அரையாண்டு சொத்துவரி அபராதம் இல்லாமல் செலுத்த இன்று கடைசிநாள்
- முதல் அரையாண்டுக்கான சொத்துவரி செப்டம்பர் மாதம் செலுத்தி இருக்க வேண்டும்.
- தற்போது 2-வது அரையாண்டு நடந்து வருகிறது.
சென்னை:
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடுகள், வணிக கட்டிடங்கள் மூலம் பெறப்படும் சொத்துவரி மாநகராட்சிக்கு முக்கிய வருவாயாக உள்ளது. வருடத்திற்கு 2 முறை அரையாண்டு வீதம் சொத்து வரி வசூலிக்கப்படுகிறது.
முதல் அரையாண்டுக்கான சொத்துவரி செப்டம்பர் மாதம் செலுத்தி இருக்க வேண்டும். தற்போது 2-வது அரையாண்டு நடந்து வருகிறது. முதல் அரையாண்டில் சொத்து வரி செலுத்தாதவர்களுக்கு அபராதம் இல்லாமல் கட்ட இன்று (15-ந் தேதி) வரை மாநகராட்சி அவகாசம் கொடுத்து இருந்தது.
நாளையில் இருந்து செலுத்த வேண்டிய தொகைக்கு அபராதம் சேர்த்து வசூலிக்கப்படும்.
இதற்கிடையில் பொதுமக்கள் ஆன்லைன் மற்றும் நேரடியாக சொத்துவரி செலுத்து வருகின்றனர்.
ஆனாலும் சிலர் இறுதி நாளான இன்று சொத்துவரி செலுத்தினர். மாநகராட்சி சொத்துவரி மையங்களிலும், வங்கிகள் மற்றும் இணைய தளம் வழியாகயும் செலுத்தினார்கள். அபராதத்தை தவிர்க்கும் வகையில் சொத்தின் உரிமையாளர்கள் இன்று கடைசி நேரத்தில் வரி செலுத்தி வருகிறார்கள்.
இது குறித்து மாநகராட்சி வருவாய் அதிகாரிகள் கூறும்போது, மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியை காலத்திற்குள் செலுத்தி அபராதத்தை தவிர்க்க வேண்டும். முதல் அரையாண்டு கால சொத்து வரி இன்று இரவு வரை ஆன்லைனில் செலுத்தலாம். நாளை முதல் அபராதம் வசூலிக்கப்படும்.
மேலும் பெரும் தொகையை நீண்ட காலமாக செலுத்தாமல் இருக்கும் சிலர் மீது அதிரடியாக பல்வேறு நடவடிக்கையும் தொடர்கிறது. எனவே மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரியை செலுத்தி மேல் நடவடிக்கையை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என்றனர்.