பாலியல் தொல்லை கொடுத்து சிறுமியை கொன்ற 2 பேர் கைது
- சிறுமியின் பெற்றோர், அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர்.
- சம்பவத்தன்று வீட்டிற்கு முன்பு விளையாடிக் கொண்டிருந்த சிறுமி ஆர்த்தியை நைசாக பேசி சற்று தூரத்தில் உள்ள விவேகானந்தன் வீட்டிற்கு கருணாஸ் அழைத்து சென்றார்.
புதுச்சேரி:
புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலைநகர் பகுதியை சேர்ந்தவர் நாராயணன். இவரது மனைவி மைதிலி.
தம்பதியின் 2-வது மகள் ஆர்த்தி (வயது 9) கடந்த 2-ந் தேதி வீட்டுக்கு வெளியே ஆர்த்தி விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென சிறுமி மாயமானார். அவரை எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் முத்தியால்பேட்டை போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமியை தேடிவந்தனர்.
அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தனர். ஒரு சி.சி.டி.வி.யில் மட்டும் சிறுமி நடந்து செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. அவர் எங்கே சென்றார்? என்ற எந்த பதிவும் கிடைக்கவில்லை.
போலீசார் அந்த பகுதியில் வீடு வீடாக தேடியும் சிறுமி பற்றி தகவல் தெரியவில்லை. 10-க்கும் மேற்பட்டோரை பிடித்து விசாரணை நடத்தியும் எந்த துப்பும் கிடைக்கவில்லை. இதையடுத்து சிறுமியின் பெற்றோர், அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர். வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றவும் வலியுறுத்தினர்.
4 நாட்களாகியும் சிறுமியை பற்றி எந்த தகவலும் கிடைக்காததால், 2 ஐ.பி.எஸ். அதிகாரிகள் தலைமையில் 40 போலீசார் நேற்று முத்தியால்பேட்டை சோலை நகர் பகுதியில் வீடு வீடாக சென்று தேடுதல் வேட்டையில் இறங்கினர்.
அப்போது ஒரு கழிவுநீர் வாய்க்காலில் சாக்குமூட்டை ஒன்று கிடந்தது. சோலை நகரை ஒட்டிய அம்பேத்கார் நகர் பகுதி மாட்டு கொட்டகைக்கு பின்புறம் கழிவுநீர் வாய்க்காலில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து சென்று சோதனையிட்டனர். அப்போது வாய்க்காலில் வேட்டியால் கட்டி மூட்டை ஒன்று கிடைப்பதை பார்த்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அதை பிரித்து பார்த்தனர். அதில் மாயமான சிறுமியின் உடல் இருந்தது. அவரை கொலை செய்து கை, கால், வாயை கட்டி மூட்டையாக வீசியது தெரியவந்தது.
இதனை பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். சிறுமியின் உடலை கண்டு பெற்றோர் கதறி அழுதனர். போலீசார் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பாலியல் துன்புறுத்தல் நடந்ததா? என்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.
இதனிடையே கொலையாளிகளை கைது செய்ய கோரி முத்தியால்பேட்டை மணிக்கூண்டு அருகில் பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர். சந்தேகத்தின் பேரில் பிடித்து வைத்துள்ள 5 நபர்களை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் ஆவேசமாக கூறினர்.
முத்தியால்பேட்டை போலீஸ் நிலையத்துக்குள் மறியல் செய்த பொதுமக்கள் நுழைய முயன்றனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கலைத்தனர்.
இந்த சம்பவம் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
கொலையாளிகளை பிடிக்க போலீசார் அந்த பகுதியில் தீவிர விசாரணை நடத்தினர். இதனிடையே அந்த பகுதியை சேர்ந்த கருணாஸ் (19), விவேகானந்தன் (59) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சம்பவத்தன்று வீட்டிற்கு முன்பு விளையாடிக் கொண்டிருந்த சிறுமி ஆர்த்தியை நைசாக பேசி சற்று தூரத்தில் உள்ள விவேகானந்தன் வீட்டிற்கு கருணாஸ் அழைத்து சென்றார். அங்கு வைத்து சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
அந்த நேரத்தில் வீட்டிற்கு வந்த விவேகானந்தனும் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதில் மூச்சு திணறிய சிறுமி மயங்கி விழுந்தார்.
இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்த 2 பேரும் சிறுமியை கழுத்தை நெறித்து கொலை செய்தனர். பின்னர் சிறுமியின் உடலை வேட்டியில் மூட்டையாக கட்டி வீட்டிற்கு பின்புறம் உள்ள சாக்கடை கால்வாயில் வீசியுள்ளனர்.
இவ்வாறு போலீசார் கூறினார்.
இதுதொடர்பாக 2 பேரிடமும் மேலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.