என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிக களஞ்சியம்
ஒற்றைக்காலில் தவம் புரியும் கோமதி அம்மன்- புற்றுமண் பிரசாதம் தரும் சங்கரன்கோவில்!
- குளிர்ந்த கண்ணன் ஈசன் திருமேனியில் எழுந்தருளியதால், அபிஷேகப் பிரியன் சிவபெருமானுக்கு அபிஷேகம் கிடையாது!
- உடல் உபாதைகளுக்காக நூற்றுக்கணக்கானவர்கள் மாவிளக்கு எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
மூன்று சந்நிதிகள்
சங்கரன்கோவிலில் மூலவராக முதல் சந்நிதியில் சங்கரலிங்கமாகவும், இரண்டாம் சந்நிதியில் சங்கரநாராயணர் வடிவிலும், ஒரே உருவில் வலப்பக்கம் ஈசனாகவும், இடப்பக்கம் திருமாலாகவும் வீற்றிருப்பார்.
மூன்றாவதாக, தனிச் சந்நிதியில் பார்வதி தேவியர் கோமதி அம்மனாக வீற்றுள்ளார். அம்பாள் முன் ஆக்ஞா சக்கரம்! பொதுவாக ஸ்ரீசக்ர பிரதிஷ்டை காலடிகளில் தான் இருக்கும்! ஆனால் இங்கு சன்னிதி முகப்பில் பெரிதாக ஸ்ரீசக்ர அமைப்பு! மன மாச்சர்யங்கள், பேதங்கள், மன நோய்கள் எல்லாம் நீங்கிட, அதில் உட்கார்ந்தும் தியானித்துக் கொள்ளலாம்!
அபிஷேகம் கிடையாது
குளிர்ந்த கண்ணன் ஈசன் திருமேனியில் எழுந்தருளியதால், அபிஷேகப் பிரியன் சிவபெருமானுக்கு அபிஷேகம் கிடையாது! அலங்காரம் மட்டுமே!
அதனால் சந்திர மௌலீச்வரர் என்னும் லிங்கத்தை முன்னே நிறுத்தி, அதற்கு மட்டும் திருமுழுக்காட்டுதல், அன்னாபிஷேகங்கள் உண்டு!
சன்னிதியில் விபூதிப் பிரசாதம், துளசி தீர்த்தம் உண்டு!, வில்வார்ச்சனை, துளசி அர்ச்சனை இரண்டுமே உண்டு! இரண்டையும் இணைக்கும் அம்பாளின் குங்குமார்ச்சனையும் உண்டு!
நோய் தீர்க்கும் புற்றுமண்
ஐம்பூதங்களில் இந்தக் கோயில் நிலம் சம்பந்தமான மண் தலமாகத் திகழ்கிறது. இதனால், இக்கோயிலில் உள்ள 'புற்றுமண்' வேறு எங்கும் கிடைக்காத ஒன்றாகும். மருத்துவ குணமுடைய புற்று மண்ணை உடலில் பூசியும், தங்கள் வயல்கள், வீடுகளில் தெளித்தும் சுகம் காண்பார்கள். இதனால் உடல் நோய்கள், பூச்சிக்கடியின் தாக்கம், சரும நோய்கள் நீங்கும் என்பதும், வயல், வீடுகளில் விஷ ஜந்துக்கள் வராது என்பதும், வயல், வீடுகளின் செல்வம் செழிக்கும் என்பதும் நம்பிக்கை.
கோமதி அம்மன் சந்நிதி முன்பு உள்ள ஸ்ரீசக்கரத்தில் பிணியாளர்கள், செய்வினைகளால் பாதிக்கப்பட்டோர் அமர்ந்து அம்மனை நோக்கி தவம் செய்தால் அவை நீங்கும். அதே பகுதியில் உடல் உபாதைகளுக்காக நூற்றுக்கணக்கானவர்கள் மாவிளக்கு எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
வீட்டிலும் கனவிலும் விஷ ஜந்துக்கள் அச்சுறுத்தல் தென்பட்டாலும், விபத்து போன்றவற்றில் காயம், உறுப்புகளில் பிரச்சனைகள் ஏற்பட்டால், இக்கோயிலில் விற்கப்படும் உலோகத்தினால் செய்யப்பட்ட தகட்டால் ஆன பாம்பு, தேள், பூரான் போன்ற விஷ ஜந்துக்களின் உருவம், மனித கை, கால், மார்பு, தலை போன்ற உறுப்புகளின் தகட்டை வாங்கி உண்டியலில் செலுத்தி வணங்குவதன்மூலம் பாதிப்புக்கள் நீங்கும், நிவர்த்தி கிட்டும் என்கின்றனர்.
பன்னிருநாள் திருவிழா
ஆடித் தபசின் பன்னிரண்டு நாளும், ஊர் மக்கள் தங்கள் வீட்டு விழாவைப் போல் கொண்டாடுகின்றனர்! உலக நன்மைக்காகத் தன் இடப்பாகத்தையே அன்னை விட்டுத் தந்தாள் அல்லவா? அதனால் அவளுக்கென்று தனித்தேர்! அவள் மட்டுமே சிறப்பாக வலம் வருவாள்!
இறுதி நாளன்று, ஆடித் தபசு மண்டபம் மண்டபத்தில் அவள் தவம் நடித்துக் காட்டப்படுகிறது! ஒரு கையில் விபூதிப் பை! ஒரு காலில் தவம்! சங்கர நாராயணர் அவள் முன் தோன்றி வரம் அருளும் காட்சி!
அம்பாளின் தபசுக் காட்சியின்போது பக்தர்கள் பருத்தி, மிளகாய் வத்தலையும், விவசாயிகள் நெல், சோளம், கம்பு, மிளகாய்வத்தல், பஞ்சு, பூ என வயலில் விளைந்த பொருட்களை 'சூறை விடுதல்' என்ற பெயரில் அம்பாள்மீது வீசியெறிந்து நேர்த்திக்கடனைச் செலுத்துகிறார்கள்.
அம்பாளின் வேண்டுதலின்படி சங்கரலிங்கமாக யானை வாகனத்தில் சிவபெருமான் அம்பாளுக்குக் காட்சியருள்வார்.
பக்தர்கள் சுற்றும் ஆடிச்சுற்று
ஆடித் தபசு கொடியேறிய பின் 'ஆடிச்சுற்று' என்ற பெயரில், பக்தர்கள் கோயிலை 101, 501, 1001 என்ற எண்ணிக்கையில் சுற்றி நேர்ச்சை செலுத்துவார்கள். அதிக எண்ணிக்கையில் சுற்ற விரும்புவோர் ஆடி மாதம் முழுவதும் காலை, மாலை என சுற்றி வருவர். ஆடிச்சுற்று சுற்றுவதால், ஒரு காலில் நின்று தபசு காட்சி காணும் அம்பாளின் கால் வலியை தாம் ஏற்பதாக பக்தர்கள் நம்புகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்