ஆன்மிக களஞ்சியம்

ஆடி செவ்வாய் விரதம்

Published On 2023-06-27 11:22 GMT   |   Update On 2023-06-27 11:22 GMT
  • மூத்த சுமங்கலிகள் வழிகாட்ட, இளைய பெண்கள் விரதத்தை தொடங்குவர்.
  • பூஜை முடிந்த உடனேயே வழிபாடு நடந்த இடத்தை தூய்மைப் படுத்திவிடுவார்கள்.

ஆடி மாத செவ்வாய்க்கிழமைகளில் பெண்கள் எண்ணெய் தேய்த்து, மஞ்சள் பூசிக் குளித்து, விரதம் இருந்து அம்மனை வழிபட்டு வந்தால் அவர்களது மாங்கல்ய பலம் கூடும் என்பது நம்பிக்கை.

ஆடி மாத செவ்வாய்க்கிழமைகளில் பெண்கள் ஒளவையார் விரதம் இருப்பர். குறிப்பிட்ட நாளில் இரவு சுமார் 10.30 மணிக்கு மேலே அல்லது ஆண்களும் குழந்தைகளும் உறங்கிய பின்னரோ விரதம் இருக்கும் பெண்கள் ஒன்று கூடுவர்.

மூத்த சுமங்கலிகள் வழிகாட்ட, இளைய பெண்கள் விரதத்தை தொடங்குவர். பச்சரிசிமாவில் வெல்லம் சேர்த்து கொழுக்கட்டை தயாரிப்பர். அந்த கொழுக்கட்டையின் வடிவம் வித்தியாசமானதாக இருக்கும். அன்றைய நிவேதனங்கள் எதிலும் உப்பு போடமாட்டார்கள்.

அனைத்தும் தயாரானதும் ஒளவையார் அம்மனை நினைத்து விளக்கேற்றி பூஜைகள் செய்வார்கள். பிறகு ஒளவையாரம்மன் கதையினை ஒருவர் சொல்ல மற்றவர்கள் பக்தியோடு கேட்பர்.

இறுதியாக விரத நிவேதனங்கள் அனைத்தையும் அந்த பெண்களே உண்பார்கள். இந்த விரதத்தில் ஆண் குழந்தைகள் உள்பட ஆண்கள் யாரும் கலந்து கொள்ளவோ பார்வையிடவோ அனுமதிப்பதில்லை. பூஜை முடிந்த உடனேயே வழிபாடு நடந்த இடத்தை தூய்மைப் படுத்திவிடுவார்கள்.

இந்த விரதம் ஒவ்வொரு செவ்வாயில் ஒவ்வொருவர் வீட்டில் நடத்துவர். இப்படி விரதம் அனுசரித்தால், குடும்ப ஒற்றுமை நிலைக்கும், திருமணம் கைக்கூடும், குழந்தைபாக்கியம் கிடைக்கும்.

Tags:    

Similar News