ஆன்மிக களஞ்சியம்

முருகப்பெருமானே கட்ட வைத்த அதிசயம்... திருப்போரூர் கோவில் வரலாறு

Published On 2023-05-23 10:08 GMT   |   Update On 2023-05-23 10:08 GMT
  • நிறைவாக தராகசுரனை எதிர்கொண்ட முருகப்பெருமான் திருப்போரூரில் அவனது ஆணவத்தை அடக்கினார்.
  • 16-ம் நூற்றாண்டில் சிதம்பர சாமிகள் என்ற மகான் வாழ்ந்து வந்தார்.

Thiruporur Kandaswamy temple

தமிழ்க் கடவுள் முருகன் வீற்றிருந்து அருள் பாலிக்கும் திருத்தலங்களில் எல்லாம் இன்று ''கந்தனுக்கு அரோகரா'', ''முருகனுக்கு அரோகரா'', ''வெற்றி வேல்'', ''வீரவேல்'' போன்ற மெய்சிலிர்க்க வைக்கும் கோஷங்கள் கேட்டபடி உள்ளன.

முருகப்பெருமான் இப்பூலவுகில் அவதாரம் எடுத்ததன் நோக்கமே, அசுரர்களை சம்ஹாரம் செய்து அழிப்பதற்குதான். அந்த அவதார நோக்கம் நிறைவு பெறும் திருநாளாக இன்றைய தினம் திகழ்கிறது.

குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடமாக கருதுவது போல முருகன் வீற்றிருக்கும் இடங்களில் எல்லாம் (திருத்தணி தவிர) இன்று சூரன் சம்ஹாரம் செய்யப்படுவான்.

இந்த சூரன் மாயை, கன்மம், ஆணவம் ஆகிய 3 வடிவங்களில் தோன்றி கடும் அட்டகாசம் செய்து வந்தான்.

திருச்செந்தூரில் சூரபத்மன் எனும் மாயையை முருகன் அடக்கினார். இந்த போர் திருச்செந்தூர் கடலில் நடந்தது. அடுத்து திருப்பரங்குன்றத்தில் அசுரர்களுடன் போரிட்ட முருகப்பெருமான் வினைப்பயன் எனும் கன்மத்தை அழித்தார். இந்த போர் நிலத்தில் நடந்தது.

நிறைவாக தராகசுரனை எதிர்கொண்ட முருகப்பெருமான் திருப்போரூரில் அவனது ஆணவத்தை அடக்கினார். இந்த போர் விண்ணில் நடந்தது. இப்படி முருகப்பெருமான், தனது அவதார லட்சியத்தை திருச்செந்தூர், திருப்பரங்குன்றம், திருப்போரூர் ஆகிய மூன்று தலங்களில் நிறைவேற்றினார்.

இந்த மூன்று தலங்களில் திருச்செந்தூர், திருப்பரங்குன்றம் இரண்டும் அறுபடை வீடு தலங்களாகும். திருப்போரூர் தலம் படை வீடுகளில் ஒன்றாக இடம் பெறா விட்டாலும் அவற்றுக்கு நிகரான சிறப்பும், மகிமைகளும் கொண்டது. சென்னை அருகில் இருக்கும் இத்தலம், மிக மிக தொன்மையானது. பிரளயத்தால் 6 தடவை அழிந்த இத்தலம் 7-வது தடவையாக கட்டப்பட்டுள்ளது.

முருகப்பெருமானே, சிதம்பரசாமி என்பவரை ஆட்கொண்டு, இங்கு தற்போதுள்ள கோவிலை கட்ட வைத்தார். சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு இந்த அதிசயம் நடந்தது. அது பற்றிய விவரம் வருமாறு:-

16-ம் நூற்றாண்டில் சிதம்பர சாமிகள் என்ற மகான் வாழ்ந்து வந்தார். தண்டபாணி சுவாமிகள், சீரடி சாய்பாபா போன்றே இவரது பெற்றோர் யார் என்பது யாருக்கும் தெரியாது.

மதுரை மீனாட்சி அம்மையின் குழந்தை போல இவர் வளர்ந்தார். ஒருநாள் இவர் தியானம் செய்தபோது மயில் ஒன்று தோகை விரித்தாடுவது போன்ற காட்சியைக் கண்டார்.

அதற்கு விடை காண மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று 45 நாட்கள் கடும் தவம் செய்தார். பிறகு மதுரை மீனாட்சி கலி வெண்பா பாடினார்.

இதனால் மனம் மகிழ்ந்த மீனாட்சியம்மை, சிதம்பரசாமிக்கு காட்சி கொடுத்து, ''வடக்கில் யுத்தபுரி என்று ஒரு ஊர் உள்ளது. அங்கு குமரனின் திருமேனியையும், பழைய ஆலயத்தையும் கண்டுபிடித்து புதிய கோவில்கட்டு'' என்று உத்தரவிட்டாள்.

உடனே சிதம்பர சாமிகள் யுத்தபுரி எனப்படும் திருப்போரூருக்கு புறப்பட்டு வந்தார். அந்த காலக்கட்டத்தில் அந்த இடம் பனை மரங்கள் நிறைந்த காடாக இருந்தது.

அங்கு பெண் பனைமரம் ஒன்றின் கீழ் முருகப்பெருமான் ஒரு புற்றுக்குள் சுயம்பு உருவில் இருப்பதை கண்டுபிடித்தார். அதை எடுத்து சென்று தன் குடிலில் வைத்து பூஜை செய்து வந்தார்.

ஒருநாள் அவர் கனவில் பழைய முருகன் கோவில் அமைப்பும், அது பூமியில் புதைந்துகிடக்கும் இடமும் தெரியவந்தது. சோழ மன்னர்களும், பாண்டிய மன்னர்களும் திருப்பணி செய்த அந்த இடத்திலேயே சிதம்பரசாமிகள் புதிய கோவிலை கட்ட முடிவு செய்தார்.

அந்த இடம் அப்போது ஆற்காடு முஸ்லிம் நவாப் மன்னரின் சொத்தாக இருந்தது. மன்னரின் மகளுக்கு தீராத வயிற்று வலி இருந்தது.

அந்த வியாதியை சிதம்பரசாமிகள் குணப்படுத்தினார். இதனால் மகிழ்ச்சி அடைந்த ஆற்காடு நவாப், அங்கு முருகனுக்கு கோவில் கட்ட, 650 ஏக்கர் நிலத்தை கொடுத்து கோவில் கட்ட உதவிகள் செய்தார்.

சிதம்பரசாமிகள் கோவில் கட்டும் தகவல் அறிந்ததும், நிறைய பேர் தாமாகவே முன் வந்து பொருள் உதவி செய்தனர். கோவிலை கட்டி முடித்த பிறகு, அந்த ஆலயத்துக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று சிதம்பர சாமிகளுக்கு குழப்பம் ஏற்பட்டது.

அப்போது ஒரு சிறுவன் அவரிடம் வந்தான். ''என்ன பெயர் வைப்பதில் குழப்பமாக உள்ளதா?'' என்றான். சிதம்பரசாமிகள் ஆச்சரியத்துடன் அந்த சிறுவனை பார்க்க அவன், ''என் பெயர் கந்தன். உங்கள் பெயர் சிதம்பரசாமி. இரண்டையும் சேர்த்து ''கந்தசாமி கோவில்'' என்று வைக்கலாமே என்று கூறியபடி கோவில் கருவறைக்குள் சென்று மறைந்து விட்டான்.

இதன் மூலம் இந்த கோவிலை கட்ட வைத்ததோடு, அதற்கு பெயர் சூட்டியதும் முருகப்பெருமானே என்பதை அறியலாம். இத்தலத்துக்கு ஆதிகாலத்தில் தாருகாபுரி, சமராபுரி, போரியூர், செருவூர், சமரப்பதி, சமதளப்பூர் என்றெல்லாம் பெயர்கள் இருந்தன. அந்த காலத்து மண்டபத் தூண்களில் உள்ள கல்வெட்டுக்கள் மூலம் கி.பி.691-ல் இரண்டாம் நரசிம்ம பல்லவன், 1076-ல் முதலாம் குலோத்துங்க சோழன் இத்தலத்தில் திருப்பணிகள் செய்திருப்பது தெரிய வந்துள்ளது.

மூலவர் சுயம்பு மூர்த்தி என்பதால், முக்கிய பூஜைகள் நடத்துவதற்காக சுப்பிரமணியர் யந்திரம் பிரதிஷ்டை செய்துள்ளனர். கூர்ம (ஆமை) பீடத்தின் மேல் உள்ள இந்த யந்திரத்தில் முருகனின் 300 பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

இந்த யந்திரத்துக்கு திரிசதி அர்ச்சனை, அபிஷேகம் செய்து வழிபட்டால், செவ்வாய் தோஷம் நீங்கும். வியாபாரம் பெருகும் என்பது ஐதீகம்.

கோவில் சுற்றுச்சுவரில் முருகரது ஒரு வடிவமான குக்குடாப்தஜர் எனும் சேவல் வடிவசிலை உள்ளது. இவருக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால் பாஸ்போர்ட், விசா தொடர்பான சிக்கல்கள் தீரும்.

மூலவர் சுயம்பு என்பதால் அபிஷேகம் செய்வதில்லை. புனுகு மட்டும் சாத்துகிறார்கள். இவர் பிரம்மன் போன்று அட்சரமாலை, கண்டிகை கொண்டும் சிவன் போன்று வலது கையால் ஆசீர்வதிக்கும் அபயஹஸ்த நிலை கொண்டும், விஷ்ணு போன்று இடது கையை தொடையில் வைத்து ஊரு ஹஸ்த நிலையிலும் என மும்மூர்த்திகளின் அம்சமாக உள்ளார்.

இதனால் ஐப்பசி மாதம் முருகனுக்கு அன்னாபிஷேகம், மகா சிவராத்திரி நாளில் 4 காலை பூஜை நவராத்திரி 9 நாட்களும் வள்ளி, தெய்வானைக்கு 9 விதமான அலங்காரம் செய்யப்படுகிறது. தமிழ் நாட்டில் எந்த முருகர் தலத்திலும் இத்தகைய வழிபாடு நடத்தும் பழக்கம் இல்லை.

இத்தலத்தில் பனை மரத்தில் செய்யப்பட்ட பாத்திரம் ஒன்றை புனிதமாக கருதி பாதுகாத்து வருகிறார்கள். முருகன் சிலையை கண்டெடுத்த சிதம்பர சுவாமிகள் இந்த பனை பாத்திரத்தில்தான் முருகன் சிலையை வைத்திருந்தாராம்.

கோவில் பிரகாரத்தில் சிவபெருமான், வான்மீகநாதர் என்ற பெயரில் குடும்பத்தோடு உள்ளார். அங்குள்ள அம்பிகைக்கு புண்ணிய காரணியம்மன் என்று பெயர். தீபாவளிக்கு மறுநாள் வரும் விரதமான கேதார கவுரி விரத தினத்தன்று இந்த அம்மனுக்கு இளம்பெண்கள் அதிரசம் படைத்து வழிபட்டால் நல்ல கணவர் கிடைப்பார் என்பது ஐதீகம்.

இத்தலத்தில்தான் அகத்திய முனிவர் பிரணவ பொருளுக்கு அர்த்தம் தெரிந்து கொண்டார். இதனால் இத்தலத்து சன்னதிகள் ஓம் வடிவில் உள்ளன.

ஒரு தடவை பெருமாள், லட்சுமி இருவருக்கும் கான்வ முனிவரால் சாபம் ஏற்பட்டது. அந்த சாபத்தை பெருமாளும், லட்சுமியும் இத்தலத்துக்கு வந்து நிவர்த்தி பெற்றனர். இத்தகைய சிறப்புடைய இத்தலத்தில் விநாயகர் கிழக்கு நோக்கி உள்ளார். அவரை வழிபட்ட பிறகு ராஜகோபுரம் வழியே உள்ளே செல்ல வேண்டும். அதற்கு முன்பாகவே வட்ட வடிவிலான மண்டபத்தில் கொடி மரம், மயில் வாகனம், பலி பீடம் உள்ளது. பலி பீடம் முன்பு பக்தர்கள் உப்பு, மிளகு கொட்டி காணிக்கை செலுத்துகிறார்கள்.

ராஜகோபுரத்தை கடந்து 24 கால் மண்டபம் வழியாக சென்றால் வலது பக்கம் தெய்வானை சன்னதி, இடது பக்கம் வள்ளி சன்னதியை காணலாம். தெய்வானை சன்னதி அருகில் கோவில் கட்ட நிலம் கொடுத்த ஆற்காடு நவாப் படம் வரையப்பட்டுள்ளது. கருவறை எதிரே வெள்ளை யானையான ஐராவதம் உள்ளது.

பக்கத்தில் ஸ்ரீசக்ரம் உள்ளது. நமது மனக்கவலைகள் தீர நாம் மறக்காமல் இந்த யந்திரத்தை வழிட வேண்டும். இங்கு நவக்கிரகங்களுக்கு தனி சன்னதி இல்லை. ஆனால் சூரியன், சனி ஆகிய இரு கிரகங்களுக்கு மட்டும் தனித்தனியாக சன்னதிகள் உள்ளன. இத்தலத்தின் தல விருட்சமாக வன்னிய மரம் உள்ளது. குழந்தை வரம் வேண்டும் பெண்கள் இந்த மரத்தில் தொட்டி கட்டி சென்றால் குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கை.

திருமணம் வரம் கோரியும் இந்த மரத்தில் மஞ்சள் கயிற்றால் முடிச்சுப்போட்டு கட்டுகிறார்கள். அந்த வகையில் இத்தலம் மிகச் சிறந்த பரிகாரத் தலமாக திகழ்கிறது. கோவில் பிரகாரத்தின் ஒரு பகுதியில் கோவிலை கட்டிய சிதம்பர சாமிகளுக்கு தனி சன்னதி உள்ளது. திருப்போரூர் முருகன் மீது 726 பாடல்கள் பாடிய இவர், ஒரு வைகாசி விசாக தினத்தன்றுதான் முருகனோடு இரண்டற கலந்தார். எனவே வைகாசி விசாகத்தன்று முருகன் எதிரே, சிதம்பரசாமி சிலையை வைத்து, அவர் மூலவருடன் இரண்டற கலப்பது போல பாவனை செய்வார்கள்.

ஆண்டு முழுவதும் விழா கோலமாக காணப்படும் இத்தலத்தில் சஷ்டி, கிருத்திகை, பிரதோஷ நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். கந்த சஷ்டி மிகவும் சீரோடும் சிறப்போடும் நடைபெறும்.

Tags:    

Similar News