ஆன்மிக களஞ்சியம்

நலம் தரும் நவகன்னியர்கள்

Published On 2023-10-07 13:00 GMT   |   Update On 2023-10-07 13:00 GMT
  • புத்திர பாக்கியம் இல்லாதவர்கள் குழந்தை பாக்கியம் பெறுவார்கள்.
  • அன்று முதல் நவகன்னியர் மகாமக குளத்தில் குளிப்பதாக ஐதீகம்.

கும்பகோணம் காசி விசுவநாதர் கோவிலில் தெற்கு நோக்கிக் கோவில் கொண்ட நிலையில் நவகன்னியகள் உள்ளனர்.

இவர்களை வழிபடுவதும் அர்ச்சிப்பதும் மகாமக யாத்திரையில் மிக முக்கியமாக செய்ய வேண்டிய காரியமாகும்.

ஒன்பது நதிகளும், ஒன்பது கன்னியராகக் காசி விசுவநாதர் கோவிலில் எழுந்தருளி இருக்கிறார்கள்.

மகாமக வருஷம் குருவின் சிம்மராசிப் பிரவேசத்தில் தொடங்குகிறது.

அன்று முதல் நவகன்னியர் மகாமக குளத்தில் குளிப்பதாக ஐதீகம்.

எனவே அவ்வாண்டில் நவகன்னியருக்குத் தினந்தோறும் தைலக் காப்பு செய்வார்கள்.

இந்தத் தைலக் காப்புக்கு எண்ணெய் கொடுப்பது புண்ணியம் தரும் செயலாகும்.

வார நாட்களில் செவ்வாய்க் கிழமைகளில் நவகன்னியரை வழிபடுவது விசேஷமாகப் புராணங்களில் சொல்லப்பட்டிருக்கிறது.

மகாமகம் தீர்த்தத்தில் குளிப்பவர் அனைவரும் நவகன்னியர்களை போற்றி வணங்குதல் வேண்டும்.

தம் பொருளாதார நிலைக்கேற்ப எண்ணையும், மஞ்சளும், சந்தனமும், குங்குமமும், மணம் பொருந்திய மலர்களும் கொண்டு இவர்களைப் பூஜை செய்ய வேண்டும்.

பால் சாதம் நிவேதிக்க வேண்டும். தட்சிணையுடன் கூடிய தாம்பூலம் தருதல் வேண்டும்.

வீட்டுக்குச் சென்ற பின்னால் ஒன்பது கன்னியரை நினைத்து ஒன்பது சுமங்கலிகளுக்கு உங்கள் சக்திக்கு ஏற்பத் தாம்பூலம் தந்து வணங்க வேண்டும்.

நான்கு செவ்வாய்க் கிழமைகளில் தொடர்ந்து நவகன்னியரை வழிபட்டால்,

* புத்திர பாக்கியம் இல்லாதவர்கள் குழந்தை பாக்கியம் பெறுவார்கள்.

* பருவம் எய்தாதவர்கள் பருவம் எய்தி நல்ல கணவனைப் பெற்று நீடுழி வாழ்வார்கள்.

* கணவனோடு கருத்து வேறுபாடு ஏற்பட்டுக் கணவனைப் பிரிந்து வாழும் பெண்கள் கணவனோடு மனம் ஒத்து வாழ்வார்கள்.

* பெண்கள் வியாதிகளிலிருந்து நீங்குவார்கள்.

என்ற பயன்களைச் சொல்கிறது கும்பகோண மகாத்மியம்.

அருந்ததி, அனசுயை, சாயை, தமயந்தி, சசி, ருக்குமணி ஆகியோர் நவகன்னியரை வழிபட்டுப் பேறு பெற்றவர்கள் என்கிறது திருக்குடந்தைப் புராணம்.

கணவனை இழந்த பெண்கள் நவகன்னியரைப் போற்றிப் பரவினால் அடுத்த ஜென்மத்தில் செல்வ வளமும்,

நல்ல கணவனும் வாய்க்கப் பெற்று நிலைத்த இன்பத்தைப் பெறுவார்கள்.

இப்படி பல பல பலன்கள் தரும் நவகன்னியருக்கு மகாமக ஆண்டில் இயன்ற நாட்களில் தைலாபிஷேகம் செய்வது ஒரு புண்ணிய செயலாகும்.

Tags:    

Similar News