வழிபாடு

அனுமன் ஜெயந்தி விழா: ஆஞ்சநேயர் கோவில்களில் இன்று பக்தர்கள் சிறப்பு வழிபாடு

Published On 2022-12-23 07:25 GMT   |   Update On 2022-12-23 07:25 GMT
  • அனுமனை வழிபட்டால் காரியங்கள் கைகூடும் என்பது ஐதீகமாகும்.
  • அனுமன் சிலைக்கு சிறப்பு அபிஷேகம், லட்சார்ச்சனை நிகழ்ச்சி நடந்தது.

அனுமன் ஜெயந்தியை யொட்டி சென்னை அசோக் நகர் 12 அடி உயர ஆஞ்ச நேயர் கோவில், ஆழ்வார்பேட்டை ஆஞ்சநேயர் கோவில் உள்ளிட்ட அனைத்து ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு தரிசனம் நிகழ்ச்சி இன்று நடந்தது.

ஆஞ்சநேயர் மார்கழி மாதம் மூலம் நட்சத்திரத்தில் அவதரித்தார். ஒவ்வொரு ஆண்டும் இந்த தினத்தில் அனுமன் ஜெயந்தி விழாவாக கொண்டாடப்படுகிறது. அனுமனை வழிபட்டால் காரியங்கள் கைகூடும் என்பது ஐதீகமாகும்.

இன்று அனுமன் ஜெயந்தியையொட்டி சென்னை அசோக்நகர் ஆஞ்சநேயர் கோவில், ஆழ்வார்பேட்டை ஆஞ்சநேயர் கோவில் உள்ளிட்ட அனைத்து ஆஞ்ச நேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு, தரிசனம் அதிகாலை 5 மணிக்கு தொடங்கியது. அனுமன் சிலைக்கு சிறப்பு அபிஷேகம், லட்சார்ச்சனை நிகழ்ச்சி நடந்தது.

அதை தொடர்ந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, வெண்ணெய் சாத்தி, வடை மாலை, வெற்றிலை மாலை அணிவித்து சிறப்பு பூஜை நடந்தது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்த பக்தர்களுக்கு துளசி இலை, தீர்த்தம் பிரசாதமாக வழங்கப்பட்டது.

இதேபோல சென்னையில் உள்ள பெருமாள் கோவில்களில் உள்ள ஆஞ்சநேயருக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தது. 

நங்கநல்லூரில் உள்ள 32 அடி உயர ஆஞ்சநேயர் கோவிலில் அதிகாலையில் நடை திறக்கப்பட்டு ஆஞ்ச நேயருக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தது. நீண்ட வரிசையில் பக்தர்கள் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News