வழிபாடு

விசுவாசத்தை காத்துக்கொள்வோம்!

Published On 2023-04-11 06:33 GMT   |   Update On 2023-04-11 06:33 GMT
  • நம்மை ஆயத்தப்படுத்தி பிறரையும் ஆயத்தம் பண்ணும் செயல்களில் ஈடுபடுவோம்.
  • நீ சமாதானத்தோடு உன் கல்லறையில் சேர்வாய்.

உயிர்த்த இயேசுவோடு வாழ்வை கொண்டாட நாம் உயிர்ப்பிக்கப்பட வேண்டும். பேதுரு தன்னை முழுவதுமாக கழுவ கேட்டுக் கொண்டது போல நாமும் முழுவதுமாக கழுவப்பட்டு உணர்வடைய நம்மை அவரிடம் ஒப்படைக்க வேண்டும்.

கிறிஸ்துவுக்கு முன் (874-853), இஸ்ரவேல் நாட்டிலே ஆகாப் ராஜாவின் காலத்தில் பஞ்ச நாட்களில் எலியாவை கர்த்தராகிய ஆண்டவர் கேரீத் ஆற்றங்கரையிலே காகங்களை கொண்டு போஷித்தார். (1 இராஜாக்கள் 17:1-24).

காகங்கள் அவனுக்கு விடியற்காலத்திலும் சாயங்காலத்திலும் அப்பமும், இறைச்சியும் கொண்டு வந்தன. தாகத்திற்கு அந்த ஆற்றின் தண்ணீரை குடித்தான். தேசத்தில் பஞ்சம் இருந்தபடியினாலும் மழை பெய்யாதபடியினாலும் சில நாட்களுக்குப் பின்பு அந்த ஆறு வற்றிப்போனது. கர்த்தர் எலியாவை சாறிபாத் என்ற கடற்கரை ஊருக்கு அழைத்து வந்தார். இந்த சாறிபாத் யேசபேலின் தகப்பன் ஏத்பாகால் ராஜாவின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்தது. (1 இராஜாக்கள் 16:31).

அங்கே எலியாவை பராமரிப்பதற்கு கர்த்தரின் வார்த்தையை நம்புகிற ஒரு பெண்ணை ஏற்பாடு பண்ணினார். அவளுக்கு ஒரு மகன். எலியா அவளை அணுகி 'எனக்கு அப்பமும் தண்ணீரும் கொண்டு வா' என்று சொன்னபோது அவள், 'நானும் என் குமாரனும் இருக்கிற ஒரு பிடி மாவிலே அடை செய்து சாப்பிட்டு செத்துப் போக தக்கதாக விறகு பொறுக்க வந்திருக்கிறேன்' என்றாள். கர்த்தருடைய வார்த்தையை நம்புகிற ஒரு பெண்ணாக அவளுடைய இருதயத்தை கர்த்தர் அறிந்திருந்தபடியால் அவளை மரணத்தின் பிடியிலிருந்து விடுவிக்க எலியாவை சாறிபாத் ஊருக்கு அனுப்பினார்.

எலியாவின் மூலமாக சாறிபாத் பெண்ணுக்கு சொன்னது போல கர்த்தர் தேசத்தின் மேல் மழையை கட்டளையிடும் நாள் மட்டும் பானையில் மா செலவழிந்து போகவும் இல்லை, கலசத்தின் எண்ணை குறைந்து போகவும் இல்லை. அந்தப்பெண்ணும், அவளுடைய மகனும் சாவின் பிடியிலிருந்து மீட்கப்பட்டனர்.

இவைகள் நடந்த பின்பு வியாதியில் அந்த மகன் விழுந்து அவன் உயிரிழந்தான். அப்பொழுது அந்தப்பெண், 'தேவனுடைய மனுஷனே எனக்கும் உமக்கும் என்ன?, என் அக்கிரமத்தை நினைக்கப்பண்ணவும், என் குமாரனை சாகப் பண்ணவுமா என்னிடத்தில் வந்தீர்?' என்று கேட்டாள்.

எலியாவும் சந்தேகப்பட்டு பஞ்சகாலத்தில் வாழ வழிகாட்டி ஆசீர்வதித்த கர்த்தர் சாவை அனுமதித்து துக்கத்தை வருவித்து விட்டார் என்று சந்தேகப்பட்டு விட்டான். உடனே, எலியா கர்த்தரை நோக்கி கூப்பிட்டு, நான் தங்கி இருக்க இடம் கொடுத்த இந்த பெண்ணின் மகனை சாகப் பண்ணினதினால் அவளுக்கு துக்கத்தை வருவித்தாரோ என்று அந்தப் பிள்ளையின் ஆத்துமா அவனுக்குள் திரும்பி வர விண்ணப்பம் பண்ணினான். அப்படியே கர்த்தர் எலியாவின் சத்தத்தை கேட்டு பிள்ளையினுடைய ஆத்துமா திரும்பி வர கட்டளையிட்டார். அந்தப் பையன் பிழைத்தான். இரண்டாவது முறையாக மரண சங்கிலியிலிருந்து அந்தக் குடும்பம் விடுவிக்கப்பட்டது. (1 இராஜாக்கள் 17: 23,24).

நாம் கர்த்தருடைய வார்த்தையை பற்றிக்கொண்டு அவர் மேல் நம்பிக்கையாய் நம்முடைய அக்கிரமங்களை அவரிடம் அறிக்கையிடும் போது, அவர் மரணத்திலிருந்து நாம் ஜெயம் பெற நம்மை ஆசீர்வதிக்கிறார். இதுதான் உயிர்த்த இயேசுவோடு வாழ்வை கொண்டாடுதலின் பங்கு. சாகாமல் பிழைத்திருந்து (சங்கீதம் 118:17), கர்த்தருடைய செய்திகளை விவரிப்பதற்கு உயிரோடு இருக்கிறவர்கள் தான் கர்த்தரின் இரக்கத்தை நினைவு கூர்ந்து இயேசுவோடு வாழ்வை கொண்டாட முடியும். (சங்கீதம் 6:5).

கிறிஸ்துவுக்கு முன் (640-609) யூதேயா நாட்டிலே, ராஜாவாகிய யோசியா நியாயப்பிரமாண புத்தகத்தின் வார்த்தைகளை சாப்பான் வாசிக்க, கேட்டு, தன்னைத்தானே கர்த்தர் இடத்தில் தாழ்த்தினது நிமித்தம் தீர்க்கதரிசியாகிய உல்தாள் மூலம் (2 இராஜாக்கள்22:20) அவனுக்கு கிடைத்த கர்த்தருடைய வார்த்தை, 'நீ சமாதானத்தோடு உன் கல்லறையில் சேர்வாய்'.

எப்படி யோசியா ராஜா கர்த்தரின் நியாயத்தீர்ப்பு நாள் வருவதற்கு முன்னால் அதாவது, எருசலேம் நேபுகாத்நேச்சாரால் அழிக்கப்படுவதற்கு முன்னால் தன்னுடைய பிதாக்களுடன் சேர்த்துக்கொள்ளப்பட்டனோ (2 இராஜாக்கள் 23:29,30), அதுபோல நாமும் இந்த உலகத்தின் நியாயத்தீர்ப்பு வரும் போது கர்த்தருடைய வருகையிலே கர்த்தருக்கு எதிர்கொண்டு போக (1 தெசலோனிகேயர் 4:15-18) நமக்கென்று கர்த்தர் ஆயத்தம் பண்ணி இருக்கிற ஸ்தலத்திலே (யோவான் 14:3) அவர் மறுபடியும் வந்து நம்மை சேர்த்துக்கொள்ள ஆயத்தப்படுவோம். மற்றவர்களையும் ஆயத்தப்படுத்துவோம்.

ஆதலால் கடைசி எக்காளம் தொனிக்கும்போது நாம் அழியாத புகழ்பெற்ற சக்தி வாய்ந்த, கர்த்தரோடு என்றென்றைக்கும் ஜீவிக்க கூடிய சரீரமாக்கப்படுவதற்கு அதாவது மறுரூபமாக்கப்படுவதற்கு நமக்கு கொடுக்கப்பட்டிருக்கின்ற இந்த ஓட்டத்திலே நீதியுள்ளவர்களாய் விசுவாசத்தை காத்துக் கொள்பவர்களாய் (2 தீமோத்தேயு 4:7,8) நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தரை சந்திக்க அனுதினமும் நம்மை ஆயத்தப்படுத்தி பிறரையும் ஆயத்தம் பண்ணும் செயல்களில் ஈடுபடுவோம். விசுவாசத்தை காத்துக் கொள்வோம் .

முனைவர் இந்திரா கெட்சி டேவிட், நெல்லை.

Tags:    

Similar News