இந்திரனுக்கு சாபவிமோசனம் கிடைத்த ஊர்
- பிரம்மனின் கண்களில் பிறந்தவர் அத்திரி முனிவர்.
- பரந்தாமனை நோக்கி தவம் செய்தனர்.
நாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரிக்கு செல்லும் சாலையில் 5 கி.மீ. தொலைவில், பழையாற்றின் கரையில் அமைந்துள்ளது சுசீந்திரம். இந்த ஊரில் பிரசித்தி பெற்ற தாணுமாலயசாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இந்த கோவில் தொடர்பாக அத்திரி அனுசூயை கதை, இந்திரன் சாப விமோசனம் பெற்ற கதை, அறம் வளர்த்த அம்மன் கதை, கன்னியாகுமரி பகவதிஅம்மன்- தாணு (சிவன்) திருமணம் தடைப்பட்ட கதை என 4 கதைகள் உள்ளன. முதல் இரண்டு கதைகளும் புராணம் தொடர்புடையவை.
அறம் வளர்த்த அம்மன் கதை வட்டார சார்புடையது. திருமணம் தடைப்பட்ட கதை வாய்மொழியாக பேசப்படுகிறது. குழந்தைகளாக மாறினர்
பிரம்மனின் கண்களில் பிறந்தவர் அத்திரி முனிவர். வனவாசத்தின்போது ராமன் இவரது ஆசிரமத்தில் தங்கிச் சென்றார் என ராமாயணம் கூறுகிறது.
அத்திரியின் மனைவி அனுசூயை. இருவருக்கும் நீண்ட நாட்கள் குழந்தை இல்லை. இதனால் பரந்தாமனை நோக்கி தவம் செய்தனர். அப்போது இறைவன் அவர்களிடம் `யாருக்கும் கிடைக்காத பாக்கியம் உங்களுக்கு கிடைக்கும். பொதிகை மலையின் அருகே ஞானகான வனம் உள்ளது. அங்கே நீங்கள் தவம் செய்து பலன் பெறுங்கள்' என்றார்.
அதன்படி இருவரும் ஞானகான வனம் சென்றனர். அந்த சமயத்தில் அத்திரி, இந்திரனின் வேண்டுகோளால் இந்திரலோகம் சென்றுவிட்டார். இதனால் அனுசூயை தனியே இருந்து தவம் செய்தாள். அவளைச் சோதிக்க விரும்பிய மும்மூர்த்திகள் (சிவன், விஷ்ணு, பிரம்மா) ஞானகான வனத்தில் மழையில்லாமல் ஆக்கினர். வனம் வறண்டது. தவம் செய்யக்கூட நீர் இல்லை. அனுசூயை கணவனின் கமண்டல நீரை ஞானகான வனத்தில் தெளித்தாள். மழை பெய்தது.
இப்படி இருக்கும்போது மும்மூர்த்திகள் அனுசூயையைச் சோதிக்க எண்ணி யாசகர்களாக அவரிடம் வந்தனர். அவள் வீட்டின் முன் நின்று யாசகம் கேட்டனர்.அவள் அவர்களை உபசரித்து வரவேற்றாள்.
அப்போது மும்மூர்த்திகள் அவளிடம், 'நீ ஆடையின்றி உணவு படைக்க வேண்டும்' என கட்டளை இட்டனர். இதை கேட்ட அனுசூயை தன் கற்பின் மகிமையால் அவர்களை குழந்தைகளாக்கி தொட்டிலில் கிடத்தினாள். இதையறிந்த மூன்று தேவிகளும் ஞானகான வனம் வந்து தவம் இருந்து அவர்களை மீட்டனர்.
அத்திரி-அனுசூயை வேண்டுகோள்படி மும்மூர்த்திகளும் சந்திரன், தாத்ரேய முனிவர், துர்வாசர் ஆகியோராகப் பிறந்தனர். இத்தகைய சிறப்புடைய தலம் சுசீந்திரம்.
சுசீந்திரம்
இந்திரன் சாபவிமோசனம் பெற்ற கதையும் இந்த கோவில் தலபுராணத்துடன் தொடர்புடையது. அது கவுதமர், அகலிகை, இந்திரன் தொடர்பான கதை. ராமாயணத்தில் இடம்பெற்றுள்ளது. அகலிகைமேல் ஆசைப்பட்டதால் இந்திரன் சாபம் பெற்றான். சாபவிமோசனம் பெற ஞானகான வனத்திற்கு இந்திரன் வந்தான். அவனது தேர் ஞானகான வனத்தின் ஒருபுறம் நின்றது. அதுதான் இன்று தேரூர் என அழைக்கப்படுகிறது. ஐராவதம் யானை மருந்துவாழ்மலைக்கு வந்தது. அது தன் கொம்பால் தரையைக் கீறி ஆற்றை உண்டாக்கியது. அதுதான் கோட்டார் எனப்பட்டது.
இந்திரன் தவம் பலித்தது. தாணுமாலயன் அவன் முன் தோன்றினான். இந்திரன் சாபவிமோசனம் பெற்ற இடமே சுசீந்திரம் ஆயிற்று.
சுசீந்திரம் கோவில் இறைவியாக கருதப்படும் அறம்வளர்த்த அம்மனின் கதை ஒன்று உண்டு. சுசீந்திரம் ஊரை அடுத்த தேரூர் என்ற ஊரில் வாழ்ந்த பள்ளியறை நாச்சியார் என்ற கன்னி தாணுமாலயன் கோவிலுக்கு வந்தாள். கோவிலை சுற்றி வந்தபோது அவள் மாயமாக மறைந்தாள். இறைவன் அவளை ஆட்கொண்டான். இந்த நிகழ்ச்சி கி.பி. 1444-ம் ஆண்டு நடந்ததாக புராணக்கதை கூறுகிறது. இதன் நினைவாக இந்த கோவிலில் மாசிமாதம் திருக்கல்யாணம் நடக்கிறது.
கன்னியாகுமரி அம்மனை போலவே, மகிஷாசூரனை வதம் செய்து சுசீந்திரத்தில் அன்னை ஆதிபராசக்தி, 'முன்னுதித்த நங்கை அம்மன்' எனும் திருநாமத்தில் கோவில் கொண்டிருக்கிறாள். ரம்பன் எனும் அசுரன் அக்னி பகவானை வழிபட்டு, நினைத்த உருவத்தை நொடியில் எடுக்கும் வரம் பெற்றிருந்தான்.
ஒருநாள் காட்டில் அழகிய பெண் எருமையைக் கண்டான். அந்த பெண் எருமை, தன் முற்பிறப்பில் சியாமளா என்ற அழகிய ராஜகுமாரியாக இருந்து சாபத்தினால் எருமையாகியிருந்தாள். ரம்பனுக்கு நினைத்தபோது தன்னை மாற்றிக்கொள்ள முடியும் என்பதால், அவன் ஆண் எருமையாக மாறி அந்த பெண் எருமையுடன் மகிழ்ந்து இருந்தான்.
அந்த உறவால் எருமை தலையுடன் மகிஷாசூரன் பிறந்தான். அவன் பிரம்மாவை நோக்கி கடுந்தவம் செய்தான். அந்த தவத்தின் மூலமாக 'பெண்ணால் மட்டுமே தனக்கு மரணம் வேண்டும்' என வரம் பெற்றான்.
முன்னுதித்த நங்கை
அந்த ஆணவத்தின் காரணமாக பூலோகம் முழுவதையும் வென்று, தேவலோகத்தையும் கைப்பற்றினான். இதையடுத்து மகிஷாசூரனை அழிக்க சிவபெருமான், தம்மில் இருந்து கருநிறத்தில் ஒரு ஒளியை தோற்றுவித்தார். அதனுள் விஷ்ணுவிடமிருந்து தோன்றிய வெண்மை நிற ஒளி சென்று கலந்தது. கூடவே பிரம்மாவிடமிருந்து தோன்றிய சிவப்பு நிற ஒளியும் ஒன்றாகி கலந்தன. அந்த ஒளிப்பிழம்புகளில் இருந்து அன்னை பராசக்தி உதித்தாள்.
பின்னர் மும்மூர்த்திகளான சிவன், பிரம்மா, விஷ்ணு மற்றும் தேவர்கள் வழங்கிய ஆயுதங்களைக் கொண்டு மகிஷாசூரனை பராசக்தி வதம் செய்தாள். வெற்றிக்களிப்பில் அன்னை தெற்கு நோக்கி வந்து ஆனந்தமாய் நிலை கொண்ட திருத்தலமே, சுசீந்திரம்.
கவுதமரின் சாபம் நீங்க இந்திரன், 300 தேவகன்னியரை சாட்சியாக வைத்து வேள்வி செய்து பூஜித்தபோது அவர்கள் முன்பாக ஜோதி ரூபியாக உதித்து நின்று திருக்காட்சி அளித்தாள், அன்னை. இதனால் அவள் 'முன்னுதித்த நங்கை' என்று அழைக்கப்பட்டாள்.
முன்பு ஒரு முறை சுசீந்திரம் பகுதியில் ஆசிரமம் அமைத்த அத்திரி முனிவர், தனது மனைவி அனுசூயைதேவியுடன் அங்கு வசித்து வந்தார். அனுசூயை தேவியின் பொருட்டு மும்மூர்த்திகளும் குழந்தைகளாய் அவதரித்தனர். அவர்களுக்கு பாலூட்டி, தொட்டிலில் இட்டு சீராட்டினாள் அனுசூயைதேவி.
மும்மூர்த்திகளையும் தேடி சுசீந்திரம் வந்தனர் முப்பெரும் தேவிகளான பார்வதி, லட்சுமி, சரஸ்வதி மூவரும். ஆனால் மும்மூர்த்திகளும் குழந்தைகளாய் மாறியதால், தேவியர்களால் அவர்களை அடையாளம் காண முடியவில்லை.
அப்போது நாரத முனிவர் வழிகாட்ட, மூன்று தேவியர்களும் அருகில் இருந்த முன்னுதித்த நங்கை அம்மன் ஆலயத்தின் முன்புறம் உள்ள தீர்த்தக் குளத்தில் நீராடி, ஒரு மண்டலம் நோன்பு இருந்து, முன்னுதித்த நங்கை அம்மனை வழிபட்டு வந்தனர்.
அப்போது அன்னை ஆதிபராசக்தி, முப்பெரும் தேவியரின் முன் உதித்து அருள்பாலித்ததோடு, குழந்தைகளாக இருந்த மும்மூர்த்திகளையும் அடையாளம் காட்டினாள்.
சுசி பீடம்
51 சக்தி பீடங்களில் இத்தலம் அம்பிகையின் பிருகு பீடமாக போற்றப்படுகிறது. இதனை `சுசி பீடம்' என்றும் கூறுகிறார்கள். இந்த தலத்தில் அம்பிகையை `நாராயணி' என்றும், `அகோர தேவி' என்றும் போற்றுகிறார்கள். சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவில் தெப்பக்குளக்கரையின் வடக்கில் முன்னுதித்த நங்கை அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்திரன் விரும்பிய இடமும், அம்பிகையின் பிருகுபீடம் என்று அழைக்கப்படும் சுசி பீடமும் தான் சுசீந்திரம் என்ற பெயர் உருவாக காரணமாக சொல்லப்படுகிறது.