null
உடல் எடையை குறைக்க திட்டமிடுகிறீர்களா..?
- அதிகமாக பசி எடுக்கும்போது நமக்கு பிடித்த ஏதாவது கிடைத்தால் நிறைய சாப்பிடுவோம்.
- உடல் எடையைக் குறைப்பதில் தண்ணீருக்கு மிக முக்கியமான பங்கு உண்டு.
உடல் எடையை குறைக்கும் எண்ணத்தோடு கடுமையாக உடற்பயிற்சி செய்யும் இளைஞர்கள், இந்த விஷயங்களிலும் கவனம் செலுத்தினால் உடல் எடையை எளிதாக குறைத்துவிடலாம்.
தினமும் கீரை சாப்பிடுங்கள்
அடர் பச்சை நிறங்கள் கொண்ட காய்கறிகள் மற்றும் கீரைகள் தினமும் சாப்பிட வேண்டும். அவை நீண்ட நேரம் பசி எடுக்காமலும், வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படாமலும் பார்த்துக் கொள்ளும். குறிப்பாக இவற்றில் மிகக் குறைந்த கலோரியும் அதிகப்படியான நார்ச்சத்துக்களும் இருப்பதால் விரைவில் பசி எடுக்காது. மற்ற எல்லா உணவுகளையும் விட இதில் கலோரி மிக குறைவு.
புரதங்கள் நிறைந்த ஸ்நாக்ஸ்
டயட்டில் இருக்கும்போது எண்ணெயில் பொரித்த உணவுகளை எடுக்கக் கூடாது என்பதில் மட்டும் அதிகமாக கவனம் செலுத்துவோம். ஆனால் ஸ்நாக்ஸாக எடுத்துக் கொள்ளும் உணவுகளிலும் கட்டாயம் புரதங்கள் அதிகமாக இருக்க வேண்டியது அவசியம்.
நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வுடன் இருப்பதால் அடுத்த வேளை எடுத்துக் கொள்ளும் உணவின் அளவு இயல்பாகவே குறையும். அதோடு புரதங்கள் அடங்கிய ஸ்நாக்ஸ் சாப்பிடும்போது அவை மிக மெதுவாக ஜீரணமாகும்.
அதனால் விரைவாக பசி எடுக்காது. குறிப்பாக அரிசி உணவுகள் எடுக்கும் போது ஏற்படும் ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும் பிரச்சனை இதில் கிடையாது. அதனால் மக்கானா, நட்ஸ் போன்ற நார்ச்சத்தும் புரதங்களும் கொண்ட ஸ்நாக்ஸ்களை சாப்பிடுங்கள்.
சாப்பிடும் முன்தண்ணீர் குடிப்பது
உடல் எடையைக் குறைப்பதில் தண்ணீருக்கு மிக முக்கியமான பங்கு உண்டு. அதனால் நாள் முழுக்க தண்ணீர் குடித்துக் கொண்டே இருப்பது நல்லது.
அதேபோல ஒவ்வொரு வேளை உணவுக்கு முன்பாகவும் பசி எடுக்கும்போது நிறைய தண்ணீர் குடிப்பது உடல் எடையை வேகமாக குறைக்க உதவும். சாப்பிடும் முன்பாக தண்ணீர் குடிப்பது நாம் அதிகமாக உணவு எடுத்துக் கொள்ளாமல் பார்த்துக் கொள்ளும்.
அதிகமாக பசி எடுக்கும்போது நமக்கு பிடித்த ஏதாவது கிடைத்தால் நிறைய சாப்பிடுவோம். அதுபோன்ற சமயங்களில் உணவு எடுத்துக் கொள்ளும் முன்பு வெதுவெதுப்பான நீரை நிறைய குடியுங்கள். அது நிறைய சாப்பிடுவதை தடுப்பதோடு கொழுப்பை எரிக்கவும் உதவி செய்யும்.
தாவர அடிப்படையிலான புரதங்கள்
உடல் பருமனாக உள்ளவர்களுக்கு எடையைக் குறைப்பதற்கான டயட்டில் புரத உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்ள வலியுறுத்துவார்கள். பெரும்பாலும் அசைவ உணவுகளில் தான் அதிகமாக புரதங்கள் இருக்கின்றன என்று இறைச்சி, சிக்கன் போன்றவற்றை அதிகமாக எடுத்துக் கொள்வார்கள்.
ஆனால் ஆய்வு ஒன்றில், சிவப்பு இறைச்சி மற்றும் பிற மாமிச வகைகளை புரதத்துக்காக எடுத்துக் கொண்டவர்களைக் காட்டிலும் தாவர அடிப்படையிலான புரத உணவுகளை எடுத்துக் கொண்டவர்களுக்கு வேகமாக எடை குறைவது கண்டறியப்பட்டுள்ளது.
நீங்கள் அசைவ உணவுகளை விரும்பி சாப்பிடுகிறவராக இருந்தாலும் அவ்வப்போது குறிப்பிட்ட இடைவெளிகளில் (வாரத்துக்கு மூன்று நாள்) முழுமையான சைவ உணவுக்கு மாறுங்கள். உங்களுடைய எடை குறைப்பில் உங்களுக்கே நல்ல வித்தியாசம் தெரியும்.
உடற்பயிற்சி அவசியம்
நீங்கள் பின்பற்றும் டயட், எப்படி உங்களுடைய எடையைக் குறைக்க உங்களுக்கு உதவுமோ அதேபோன்று, அந்த எடை குறைப்பை சீராக ஊக்குவிப்பதற்கு மிக அவசியமானது தினசரி உடற்பயிற்சி. அதனால் உடற்பயிற்சியிலும் கவனம் செலுத்துங்கள்.
குறைவான கலோரி உணவுகள் எடுத்துக் கொள்ளும்போது தசைகள் தளர ஆரம்பிக்கும். அவற்றை தடுத்து தசைகளை வலிமையாக வைத்திருக்க உடற்பயிற்சி மிக அவசியம். மேலும் இது எலும்புகளையும் உறுதியாக வைத்திருக்க உதவும்.