உடற்பயிற்சி

72 மணிநேரம் சாப்பிடாமல் இருந்தால்....

Published On 2023-12-03 07:10 GMT   |   Update On 2023-12-03 07:10 GMT
  • நாள் முழுவதும் விரதம் இருக்கும் வழக்கத்தை சிலர் பின்பற்றுகிறார்கள்.
  • விரதம் இருப்பது உடலுக்கு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும்.

உணவு உண்ணாமல் நாள் முழுவதும் விரதம் இருக்கும் வழக்கத்தை சிலர் பின்பற்றுகிறார்கள். அதில் தவறில்லை. ஆனால் தொடர்ச்சியாக அப்படி விரதம் இருப்பது உடலுக்கு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும். அதிலும் சிலர் 3 நாட்கள் உணவு உண்ணாமல் வெறும் தண்ணீரை மட்டும் பருகும் பழக்கத்தை பின்பற்றுகிறார்கள்.

அப்படி சாப்பிடாமல் இருப்பது உடல் எடையை வெகுவாக குறைக்க உதவும் என்று நம்புகிறார்கள். ஆனால் அப்படி இருப்பது ஆபத்தானது. 72 மணி நேர விரதம் உடலில் என்னென்ன மாற்றங்கள், பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதையும் பார்க்கலாம்.

`தண்ணீர் விரதம் எனப்படும் 72 மணி நேரம் உணவு உண்ணாமல் இருப்பது உடலில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும். ஆரம்பத்தில் உடலில் சேமிக்கப்பட்ட கிளைகோஜனை ஆற்றலுக்காக உடல் உறுப்புகள் பயன்படுத்திக்கொள்ளும். ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவதற்கும் வழிவகுக்கும். ஆனால் உணவு உண்ணாமல் விரதத்தை தொடரும்போது உடலில் சேர்ந்திருக்கும் கொழுப்பு வெகுவாக எரிக்கப்படும். அது வளர்சிதை மாற்றத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி எடை இழப்பை ஊக்குவிக்கும். ஆனால் அது ஆரோக்கியமான எடை இழப்பு அல்ல.

72 மணி நேரம் உண்ணாவிரதம் இருப்பவருக்கு 7 ஆயிரம் கலோரிகள் பற்றாக்குறை ஏற்படும். இது உடலில் சுமார் 900 கிராம் கொழுப்பு இழக்கப்படுவதற்கு சமம். அதனால் உடல் எடையை மோசமாக பாதிக்கலாம். சிலருக்கு இந்த செயல்முறை ஒத்துக்கொள்ளாமல் உடல் எடை அதிகரிக்கலாம். எனவே இத்தகைய உண்ணாவிரதங்களின்போது போதுமான அளவு தண்ணீர் பருகுவது, எலக்ட்ரோலைட், வைட்டமின், தாதுக்களை ஈடு செய்யும் திரவ உணவுகளை உட்கொள்வதை உறுதி செய்ய வேண்டும். இல்லாவிட்டால் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டு ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பாதிக்க செய்துவிடும்.

இதுபோன்ற நீண்ட கால உண்ணாவிரத முறைகளை மருத்துவரின் மேற்பார்வையின்றி செய்தால் கடும் ஆபத்துக்களை எதிர்கொள்ள நேரிடும்.

மீள முடியாத சிறுநீரக பாதிப்பு, ரத்த அழுத்தம், சோடியம் பற்றாக்குறை, கால்சியம், மெக்னீசியம் இழப்பு, தசை மெலிந்து போவது உள்பட பல்வேறு உடல்நல கோளாறுகளை சந்திக்க வேண்டி இருக்கும். ஒரு நாள் மேற்கொள்ளும் விரதத்தையே முறையாக கடைப்பிடிக்க வேண்டும். அப்படி இருக்கையில் ஏதேனும் உடல்நல பிரச்சினைகள் இருப்பவர்கள், நோய்களுக்கு மருந்து உட்கொள்பவர்கள் மருத்துவ நிபுணர்களிடம் ஆலோசனை பெறுவது அவசியமானது. குறிப்பாக நீரிழிவு நோயாளிகள் இத்தகைய விரத முறைகளை தவிர்க்க வேண்டும்.

அதே வேளையில் மருத்துவ ஆலோசனையுடன் குறுகிய கால விரதம் இருப்பது புற்றுநோய், இதய செயலிழப்பு, அல்சைமர் மற்றும் நரம்பியல் கோளாறு போன்ற பிரச்சினைகளை தடுப்பதற்கு உதவும்.

மேலும் உடலில் இருக்கும் கெட்ட பாக்டீரியாக்கள் அழிவதற்கும், நல்ல பாக்டீரியாக்கள் வளர்ச்சி அடைந்து நோய் எதிர்ப்பு மண்டலம் வலுப்படுவதற்கும் துணை புரியும். மேலும் இத்தகைய உண்ணாவிரதத்தின் போது கல்லீரல் நொதிகளும் மேம்படலாம். நீண்ட ஆயுளுக்கும், இன்சுலினின் செயல்பாடு மேம்படுவதற்கும் உதவக்கூடும்.

Tags:    

Similar News