முதுகுவலி பிரச்சினையா? இதோ அதற்கான தீர்வு
- நீங்கள் வலிமை உடையவராகவும், சுறுசுறுப்பாகவும் இருப்பது அவசியம்.
- பெண்கள் தினமும் யோகா பயிற்சி செய்வதால் அவர்களுக்கு ஏற்படக்கூடிய ஸ்ட்ரெஸ் குறையும்.
அலுவலகத்தில் வேலை அதிகமாக இருந்தாலும் சரி, வீட்டு வேலையாக இருந்தாலும் சரி பெண்களுக்கு எப்போதும் வேலைகளுக்கு குறைவு இருக்காது. எப்போதும் ஏதாவது வேலை செய்துகொண்டே இருப்பார்கள். வயது முதிர்ந்தவர்களுக்கு போதிய ஓய்வு தேவை என்பதை வீட்டில் உள்ளவர்கள் முதலில் உணர வேண்டும்.
குடும்பத்தில் உள்ள குழந்தைகள், முதியவர்களை சரிவர கவனிக்க வேண்டும். இதற்காகவே பெண்கள் முதலில் உடற்கூறு விஷயத்தில் வலிமை உடையவராக இருத்தல் அவசியம்.
ஆண், பெண் இருவருக்குமே உடற்கூறு வலிமை மிக முக்கியம். 25 வயதிற்கு மேல் நாம் அனைவரும் குடும்பம், வேலை மற்ற விஷயங்களுக்காக நம் உடலை பராமரிப்பதை மறந்துவிடுகிறோம். எனவே நீங்கள் வலிமை உடையவராகவும், சுறுசுறுப்பாகவும் இருப்பது அவசியம். உடலை சீராக வைத்துக்கொள்ள பின்வருவனவற்றை கவனத்தில் கொள்ள வேண்டும்.
நீங்கள் உறங்கும் படுக்கை விரிப்பு அல்லது மெத்தை மிகவும் கடினமாகவோ, மிகவும் லேசானதாகவோ இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இது முதுகு வலி, மூட்டு வலி போன்ற பிரச்சினை வராமல் தடுக்கும். சரியான அளவு தலையணையை பயன்படுத்துங்கள். இதனால் உங்கள் கழுத்து வலி, தோள்பட்டை வலி போன்றவற்றை தடுக்கலாம்.
தூக்கம் மிகவும் முக்கியம். ஆண், பெண் இருவருமே வேலைப்பளு காரணமாக உடல் அசதி, சோர்வு ஏற்படும். சரியான அளவு தூங்கினால்தான் உங்கள் தசை, மூட்டு மற்றும் உடல் சீராகும்.
பெண்கள் முடிந்தவரை நீண்டநேரம் நின்றுகொண்டு வேலை செய்வதை தவிர்க்கவும். நீண்ட நேரம் நிற்பதால் உங்கள் மூட்டில் தேய்மானம் ஏற்படுகிறது. இதனால் மூட்டு வலி வருவதை தவிர்க்கலாம். எத்தனை வேலைகள் செய்தாலும் அதற்கிடையே உங்கள் உடலுக்கான உடற்பயிற்சி செய்வதற்கான நேரத்தை ஒதுக்க வேண்டும்.
ஆண், பெண் இருவருமே ஒரு நாளைக்கு குறைந்தது 30 நிமிடங்களாவது நடைபயிற்சி செய்ய வேண்டும். இதனால் உடல் தசைகள், மூட்டு லகுவாகும். தசை இழுப்பு பயிற்சிகள் செய்வது மிகவும் அவசியம். தினமும் காலையில் எழுந்தவுடன் 10 நிமிடங்கள் செய்வது அவசியம்.
பெண்கள் தினமும் யோகா பயிற்சி செய்வதால் அவர்களுக்கு ஏற்படக்கூடிய ஸ்ட்ரெஸ் குறையும். முதுகு, தசை பயிற்சி செய்வதால் முதுகுவலியை கட்டுப்படுத்தலாம்.
சரியான காலணிகள் அணிவதன் மூலமும் முதுகு, மூட்டு மற்றும் குதிகால் வலிகளை தவிர்க்கலாம். வாரம் ஒருதடவையாவது உங்கள் தசை மற்றும் எலும்புகளை லகுவாக வைத்துக்கொள்ள மசாஜ் செய்வது அவசியம்.
உடற்பயிற்சி தினமும் செய்வதால் உங்கள் தசை வலுப்பெறும். இதனால் எலும்புகள் வலுப்பெறும். உடல் வலிமை அதிகரிக்கும். எந்த அளவிற்கு உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்பதை மருத்துவரின் ஆலோசனைபடி செய்வது உத்தமம்.
உங்கள் மூட்டு, முதுகு, தோள்பட்டை, கழுத்து போன்றவை வலுவாக இருத்தல் அவசியம். இதற்கான உடற்பயிற்சி மிக அவசியம்.
நீண்டநேரம் ஒரே இடத்தில் உட்காருவதை தவிர்க்க வேண்டும். இதனால் உங்கள் தசைகள் இறுகி முதுகு வலி, கால்வலி போன்றவை ஏற்படலாம்.
கம்ப்யூட்டரில் வேலை செய்யும் போது அதற்கான தனி நாற்காலியை பயன்படுத்தவும். இதனால் முதுகுவலி போன்றவற்றை தவிர்க்கலாம்.
நீங்கள் உண்ணும் உணவில் புரதச்சத்து மிகவும் அவசியம். இதனால் தசைகள் வலுவாகும். மூட்டுவலி, முதுகுவலி போன்றவற்றை தவிர்க்கலாம்.
பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் வைட்டமின் டி குறைபாட்டால் கால்ஷியம் குறைவு ஏற்படுகிறது. இதனால் மூட்டுவலி ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் கால்ஷியம் சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வது நல்லது.
முடிந்த வரை உங்களை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ளுங்கள். எண்டார்ஃபின் எனும் ஹார்மோன் சுரந்து உங்களை மகிழ்ச்சியாக வைக்கும். நீங்கள் மகிழ்ச்சியாக இருந்தால் உங்கள் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது சான்றோர் வாக்கு.