சர்க்கரை நோயாளிகள் வாக்கிங் போகும் போது, 8 வடிவ அமைப்பில் நடப்பது நல்லதா?
- கைபேசி உபயோகிப்பதும் தவிர்க்கப்பட வேண்டும்.
- வீட்டின் மொட்டை மாடியில் நடக்கலாம்.
உடல் ஆரோக்கியத்திற்கு தினமும் உடற்பயிற்சி அல்லது நடைப் பயிற்சி செய்வது மிக அவசியம். 8 வடிவம் என்பது கணிதத்தில் இன்பினிட்டியைக் குறிக்கும் குறியீடு. இந்த வடிவத்தின் மீது தொடர்ச்சியாக நடப்பதே 8 வடிவ நடைப்பயிற்சி ஆகும். ஆங்கிலத்தில் இது 'இன்பினிட்டி வாக்கிங்' எனப்படுகிறது.
8 வடிவத்தில் உள்ள மாறுபட்ட திருப்பங்கள் மற்றும் வளைவுகளில் நடப்பதால் இடுப்பு, வயிறு மற்றும் கால்களில் இருக்கும் பல்வேறு தசைகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு, ஒட்டுமொத்த உடல் வலிமையும் மேம்பட உதவுகிறது.
பொதுவாக நாம் நடக்கும்போது எலும்புகளுக்கு மேலிருந்து கீழ் அழுத்தம் வரும். ஆனால் 8 என்ற வடிவில் நடக்கும்போது நாம் வளைந்து நடப்பதால் நடக்கும் திசை மாறி வெவ்வேறு திசைகளில் இருந்து எலும்புகள் மற்றும் தசைகளுக்கு அழுத்தம் ஏற்பட்டு, எலும்புகளுக்கு வலு சேர்க்கிறது.
8 என்ற எண்ணின் வடிவில் நடக்கும் போது காலை நேரத்தில் முடிந்தவரை வெளியிடங்களை தேர்வு செய்து இந்த நடைப்பயிற்சியை மேற்கொள்வது நல்லது. வெளியிடங்களில் நடக்க முடியாத சூழலில் வீட்டின் மொட்டை மாடியில் நடக்கலாம்.
மேலும் செருப்பு அல்லது ஷூக்கள் அணியாமல் வெறும் கால்களில் நடந்தாலே முழுமையான பலன்களை கொடுக்கும். 8 எண் வடிவில் நடக்கும் போது கீழ்க்கண்ட ஆரோக்கிய நன்மைகள் ஏற்படுகிறது:-
உடல் எடை குறைதல், ரத்தச் சர்க்கரை அளவு கட்டுக்குள் வருதல், அஜீரணம் மற்றும் மலச்சிக்கல் பிரச்சினைகள் குறைகிறது. இளமையான தோற்றம் தருவதுடன் கண் பார்வைத்திறன் மேம்படுகிறது, மனஅழுத்தத்தை குறைக்கிறது, மூட்டுகளுக்கு வலு சேர்க்கிறது. 8 போன்ற வடிவில் நடக்கும்போது உடன் நடப்பவர்களிடம் பேசுவதும், கைபேசி உபயோகிப்பதும் தவிர்க்கப்பட வேண்டும்.
அதிக மூட்டு வலி அல்லது கால்களில் சுளுக்கு பாதிப்புள்ளவர்கள், தலைசுற்றல் பிரச்சினை உள்ளவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், புற்றுநோயாளிகள், சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் ஆகியோர் மருத்துவரை கலந்தாலோசிக்காமல் 8 போன்ற வடிவில் நடக்க கூடாது.