அவதூறு பேச்சு: சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்க போலீஸ் ஆலோசனை
- அடிக்கடி சர்ச்சைக்குரிய வகையில் பேசி சிக்கலில் மாட்டிக் கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார்.
- சிறைக்கு சென்று திரும்பிய பிறகும் திருந்தவில்லையா?
சென்னை:
சென்னையை சேர்ந்த தி.மு.க. பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி அடிக்கடி சர்ச்சைக்குரிய வகையில் பேசி சிக்கலில் மாட்டிக் கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார்.
கவர்னர் ஆர்.என்.ரவி, நடிகை குஷ்பு ஆகியோரை பற்றி அவதூறாக பேசிய வழக்கில் கடந்த ஆண்டு சிவாஜி கிருஷ்ண மூர்த்தி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட அவர் சிறையில் இருந்து வெளியில் வந்ததும் தான் பேசிய பேச்சுக்காக மன்னிப்பு கேட்டார். இதையடுத்து சிவாஜி கிருஷ்ண மூர்த்தி மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.
பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, சரத்குமார் பற்றியும் அவரது மனைவி ராதிகா பற்றியும் அவதூறு பரப்பும் வகையில் கருத்துக்களை கூறியுள்ளார்.
பாரதீய ஜனதா கட்சியில் சேர்வது தொடர்பாக சரத்குமார், ராதிகாவிடம் பேசியதை குறிப்பிட்டு சிவாஜி கிருஷ்ணமூர்த்தி சர்ச்சைக்குரிய கருத்தை கூறியுள்ளார். இதற்கு ராதிகா எக்ஸ் வலைதள பக்கத்தில் கண்டனம் தெரிவித்திருந்தார். சிறைக்கு சென்று திரும்பிய பிறகும் திருந்தவில்லையா? என்றும் கேள்வி எழுப்பி இருந்தார்.
இந்த நிலையில் ராதிகா சார்பில் அவரது மேலாளர் நடேசன், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்துள்ள புகாரில், அரசியல் காழ்ப் புணர்ச்சி காரணமாக சரத்குமார் மற்றும் ராதிகா பற்றி அவதூறு கருத்தை கூறியுள்ள சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது கைது நடவடிக்கை பாய் கிறது. அவர் மீது எந்தெந்த சட்டப் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யலாம் என்பது பற்றி சட்ட நிபுணர் களின் கருத்தை போலீசார் கேட்டுள்ளனர். இதன் அடிப்படையில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.