உள்ளூர் செய்திகள்

திருப்பூர் வங்கியில் மேலும் 4 கிலோ நகைகள் பறிமுதல்- கேரள போலீசார் நடவடிக்கை

Published On 2024-10-10 08:42 GMT   |   Update On 2024-10-10 08:42 GMT
  • கடந்த ஆகஸ்டு 23-ந்தேதி திருப்பூரில் இந்த வங்கி கிளையில் 3 கோடி ரூபாய் மதிப்பிலான 5 கிலோ 300 கிராம் அடகு வைத்த நகைகளை மீட்டனர்.
  • கடந்த 2 நாட்களாக டி.எஸ்.பி., தலைமையிலான கேரள போலீசார், திருப்பூரில் தங்கி ஏற்கனவே நகைகள் பறிமுதல் செய்யப்பட்ட வங்கிகளில் மேலும் ஆய்வு நடத்தினர்.

திருப்பூர்:

கேரள மாநிலம், கோழிக்கோடு, வடகரையில் உள்ள பாங்க் ஆப் மகாராஷ்டிரா கிளையில் மேலாளராக பணிபுரிந்து வந்த மாதா ஜெயக்குமார் என்பவர் ரூ.17 கோடியே 50 லட்சம் மதிப்பிலான 26 கிலோ 800 கிராம் போலி தங்க நகைகளை வைத்து விட்டு அசல் நகைகளை கையாடல் செய்தது தெரியவந்தது.

இதையடுத்து கேரள தனிப்படை போலீசார் மாதா ஜெயக்குமாரை, இரு மாதம் முன்பு தெலுங்கானாவில் கைது செய்தனர். அசல் நகைகளை திருப்பூரில் தனது நண்பர் கார்த்திக் என்பவர் பணிபுரியும் டி.பி.எஸ்., வங்கி கிளையில் அடகு வைத்து பணம் பெற்று மோசடி செய்தது தெரிந்தது.

கடந்த ஆகஸ்டு 23-ந்தேதி திருப்பூரில் இந்த வங்கி கிளையில் 3 கோடி ரூபாய் மதிப்பிலான 5 கிலோ 300 கிராம் அடகு வைத்த நகைகளை மீட்டனர். கடந்த மாதம் 11ந் தேதி திருப்பூர் மாநகரில் உள்ள சி.எஸ்.பி., வங்கியின், 3 கிளை மற்றும் காங்கயத்தில் உள்ள ஒரு கிளை என, 4 வங்கியில் இருந்து, 1.75 கிலோ தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.

இந்நிலையில் கடந்த 2 நாட்களாக டி.எஸ்.பி., தலைமையிலான கேரள போலீசார், திருப்பூரில் தங்கி ஏற்கனவே நகைகள் பறிமுதல் செய்யப்பட்ட வங்கிகளில் மேலும் ஆய்வு நடத்தினர். இதில், 4கிலோ நகைகள் கைப்பற்றப்பட்டதாகவும், வங்கி ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

Similar News