உள்ளூர் செய்திகள்

கோவை கார் வெடிப்பு வழக்கை தேசிய புலனாய்வு முகமையிடம் ஒப்படைப்பது தவறான முடிவு- சீமான் எதிர்ப்பு

Published On 2022-10-27 10:30 GMT   |   Update On 2022-10-27 10:30 GMT
  • முறையான விசாரணை நடத்தி, கோர நிகழ்வின் பின்புலத்திலுள்ள உண்மையை வெளிக்கொணர்ந்து, குற்றமிழைத்தவர்கள் எவராயினும் அவர்களைக் கடும் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்த வேண்டும்.

சென்னை:

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

கோவை, உக்கடம் அருகே வாகனத்தில் எரிகாற்று உருளை வெடித்துச் சிதறியதில் ஒருவர் பலியானது தொடர்பான வழக்கு விசாரணையை தேசியப்புலனாய்வு முகமையிடம் ஒப்படைத்திருக்கும் தமிழக அரசின் நடவடிக்கை மிகத்தவறான நிர்வாக முடிவாகும். தேசியப்புலனாய்வு முகமையானது பா.ஜ.க.வின் கிளைப்பிரிவு போல செயல்பட்டு, இசுலாமிய மக்களைக் குறிவைத்து வேட்டையாடுவதாக நாடெங்கிலும் குற்றச்சாட்டுகள் வைக்கப்படும் நிலையில், மாநிலத் தன்னாட்சியென முழங்குகிற திமுக அரசு, தேசியப்புலனாய்வு முகமையின் வசம் இவ்வழக்கை ஒப்படைத்திருப்பது ஏற்கத்தக்கதல்ல. வன்முறைச்செயலில் ஈடுபட்டு, சமூக அமைதியைக் குலைக்க முனைவோர் எவராயினும் அவர்களை சாதி, மத பேதங்களுக்கு அப்பாற்பட்டு, கடும் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்த வேண்டும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்துக்கும் இடமில்லை. அதேசமயம், இவ்வழக்கில் குற்றச்சாட்டப்பட்டுள்ளவர்கள் இசுலாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதாலேயே, அச்சமூகத்தினரையே குற்றவாளிகளாகச் சித்தரிக்கும் போக்கென்பது மிக ஆபத்தானது.

இவ்விவகாரத்தில் முறையான விசாரணை நடத்தி, அக்கோர நிகழ்வின் பின்புலத்திலுள்ள உண்மையை வெளிக்கொணர்ந்து, குற்றமிழைத்தவர்கள் எவராயினும் அவர்களைக் கடும் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News