சட்டவிரோத மது விற்பனையை கண்டித்து உண்ணாவிரதம் இருந்தவர் மீது வழக்குப்பதிவு
- கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் முன்பு வித்ய பிரகாஷ், என்ற வாலிபர் சாகும் வரை உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டார்.
- வித்ய பிரகாஷ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பல்லடம் :
பல்லடம் அருகே பணிக்கம்பட்டி ஊராட்சி சின்னியகவுண்டம்பாளையத்தில் இயங்கி வரும் அரசு மதுபான கடை பாரில் அரசு நிர்ணயித்த நேரத்தை மீறி, இரவு 10 மணிக்கு மேல் சட்ட விரோதமாக கலப்பட மது விற்பனை நடைபெறுவதாகவும், விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் நடைபெற்ற சம்பவத்தை போல சின்னியகவுண்டம்பாளையத்திலும் நடைபெறாமல் இருக்க, சட்டவிரோதமாக நடைபெற்று வரும் மது விற்பனையை காவல்துறையினர் முழுமையாக தடுத்து நிறுத்தவேண்டும் என வலியுறுத்தி நேற்று காலை பணிக்கம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் முன்பு அதே கிராமத்தை சேர்ந்த வித்ய பிரகாஷ், என்ற வாலிபர் சாகும் வரை உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டார்.
இந்தநிலையில் இந்த சம்பவம் குறித்து பணிக்கம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் சுகன்யா கொடுத்த புகாரின் பேரில், பல்லடம் போலீசார் அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்ததாக கூறி வித்ய பிரகாஷ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.